FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதில் நின்றது க்ரோஷியா !

ஆஹா! மாஸ்கோவில் என்ன ஒரு ஃபைனல். ஃப்ரான்ஸ், எதிர்பார்த்தபடி சிறப்பான ஆட்டம் காண்பித்து, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுவிட்டது.

ஃப்ரான்ஸை ஜெயிக்கவைத்துவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல் க்ரோஷியா ஆடியதாகவே, ஆரம்பத்திலிருந்து மாஸ்கோ மைதானக்காட்சிகள் விரிந்தன! Soccer-ஆ, சும்மாவா! அதுவும் உலகத்தின் அதிரசமான விளையாட்டுத் திருவிழாவின் இறுதிக்காட்சிகளின் அரங்கேற்றம். அதிர்ச்சி, அதிரடி, ஆனந்தமெனக் கலந்துகட்டி அடித்தால்தானே, உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் ரசிகர்களை ஆராதிக்கமுடியும்? சும்மா நேராக ஓடி கோல்போட்டோ, கோல் வாங்கியோ ஆட்டத்தை முடித்தால் அதற்குப்பேர் உலகக்கோப்பையா? அதுவும் ஃபைனலா என்ன?

முதல்பாதியில், கோல்போஸ்ட்டிற்கு வெளியே அனுப்பவதாக எண்ணி மரியோ மாண்ட்ஸுகிச் (Mario Mandzukic) தலையால் முட்டிய பந்து கோல்போஸ்ட்டைத் தாண்டுவதற்குப்பதிலாக, கோல்கீப்பரால் எட்டமுடியா உயரத்திற்குச்சென்று கோலுக்குள் நுழைந்து, க்ரோஷிய அணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்ட்ஸுகிச்சின் பரிதாப முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. ப்ரான்ஸ் ஒரு கோல் என முன்னேற, நிமிடங்களில் க்ரோஷியாவின் இவான் பெரிஸிச் (Ivan Persic), சாய்வான கோணத்தில் ஒரு அழகான கோலடித்து ஸ்கோரை சமன் செய்து க்ரோஷிய ரசிகர்களைக் மிதக்கவைத்தார். அதற்குப் பின் நிகழ்ந்தது அதிர்ச்சி. க்ரோஷிய கோலருகே ஃப்ரான்ஸ் ஃபார்வர்ட் க்ரிஸ்மானின் பாஸை சரியாக ஏற்கமுடியாமல் ப்ளேஸ் மதூதி (Blaise Matuidi) மேலெழும்பித் தவறவிட, பந்து சற்றே பின்னகர, அங்கே அதை வேகமாக வெளியேற்ற முயற்சித்த பெரிஸிச் வேண்டுமென்றே அதைக் கையால் தடுக்கவில்லை. ஆரம்பத்தில் அதனை அலட்சியம் செய்து ஆட்டம் முன்னேற வழிவகுத்துக்கொண்டிருந்த அர்ஜெண்டீனிய ரெஃப்ரீ, ப்ரென்ச் வீரர்களால் பெரிஸிச் கையால் தேக்கியதாக குறிக்கப்பட, குற்றம் சாற்றப்பட, விஏஆர் எனும் வீடியோ மறுநோக்கலுக்கு முடிவை அனுப்பினார். இறுதியில், கையால் தேக்க பெரிஸிச் முயலவில்லை என்றபோதிலும், கையில் லேசாகப்பட்டாலும் பட்டதுதான் என்கிற கணிப்பில் க்ரோஷியாவுக்கெதிராக அந்த பெனல்ட்டி ஃப்ரான்ஸுக்குக் கொடுக்கப்பட்டது. இது ஒரு பார்டர்-லைன் முடிவுதான். இங்கே க்ரோஷியா ஒரு சிறிய நாடு என்றுதான் நடுவர்களால் பார்க்கப்பட்டிருக்கவேண்டும். க்ரோஷியாவின் இடத்தில் இங்கிலாந்தோ, ஜெர்மனியோ, ஸ்பெயினோ இருந்திருந்தால் நிச்சயம் இந்த பெனல்ட்டி கொடுக்கப்பட்டிருக்காது! இந்த முடிவு க்ரோஷிய வீரர்களை மிகவும் பாதித்து அயரச் செய்துவிட்டது என்பது உண்மை. இந்தமாதிரியான அதிமுக்கிய போட்டிகளில், வீரர்களோடு விதியும் சேர்ந்து மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதை ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரே விஷயம் – விதியின் விளையாட்டை மேட்ச் ரெகார்டு புத்தகங்களுக்குள் கொண்டுவரமுடியாது!

இரண்டாவது பாதியில், ஃப்ரான்ஸ் வேகமாக, நன்றாக விளையாடியது. குறிப்பாக அவர்களின் தடுப்பாட்ட வியூகங்கள், எதிர்த்துத் தாக்கிய க்ரோஷியாவை கோல் போட அனுமதிக்கவில்லை. க்ரோஷிய கோல்கீப்பரின் ஆட்டம் சாதாரணம். மேலும் இரண்டு கோல் போட்டது ஃப்ரான்ஸ். இடையில், ஃப்ரான்ஸ் கோல்கீப்பரை தனியாகச் சந்தித்து மடக்கிய மரியோ மாண்ட்ஸுகிச், க்ரோஷியாவின் இரண்டாவது கோலை சத்தமின்றி உள்ளே தள்ளித் திகைப்பூட்டினார். இறுதியில் 4-2 என்ற கணக்கில் கோப்பையை இரண்டாவது முறையாகக் கையகப்படுத்தியது ஃப்ரான்ஸ். வெற்றிபெற்ற அணியின் கிலியன் ம்பாப்பேயும்(Kylian Mbappe), பால் போக்பாவும் (Paul Pogba) அபார ஆட்டம் ஆடினர்.

இறுதிப்போட்டியின் முடிவுக்குப்பின் ஃப்ரான்ஸ் வீரர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, க்ரோஷிய வீரர்கள் முகத்தில் சோகம் தாண்டவமாட, அயர்ந்துபோய் மூலையில் நின்றிருந்தார்கள். க்ரோஷிய அணியை ஒற்றுமையாக, இத்தகைய உயரத்துக்கு அழைத்துவந்த அணியின் மதிப்புமிக்க, அமைதி தவழும் பயிற்சியாளரும் அவ்வாறே முதலில் காணப்பட்டார். பின் நினைவு வந்தவர்போல், முன் வந்து நின்று தன் வீரர்களை அழைத்து, அணைத்து ஆறுதல் சொன்னார். நீங்கள் உங்கள் உழைப்பினால் எவ்வளவோ பெரிய உச்சத்திற்கு உங்களது நாட்டைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையில் பெருமைப்படவேண்டிய தருணம் இது என்று அவர்களுக்கு நினைவுறுத்தி, தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் கோச், ஸ்லாட்கோ தாலிக் (Zlatko Dalic). இந்த உலகக்கோப்பையின் மிகவும் புகழப்பட வேண்டிய பயிற்சியாளர்.

இந்த உலகக்கோப்பையின் தங்கப்பந்து பரிசை (Golden Ball award)பெற்றபோதும், ஈரக்கண்களுடன் நின்றார் க்ரோஷிய கேப்டன் மோத்ரிச். தன் நாட்டிற்கு வெற்றிபெற்றுத்தர இயலாத நிலையில், தனிப்பட்ட பரிசெல்லாம் ஒன்றுமில்லை என்பதான தோற்றம். இறுதிப்போட்டியைக் காணத் தன் நாட்டு ரசிகர்களுடன் இகானமி க்ளாஸில் பயணம் செய்து மாஸ்கோ வந்திருந்தவர் ஒரு க்ரோஷியா விவிஐபி. அந்த நாட்டு பெண் ஜனாதிபதி கொலிந்தா க்ராபர்-கிதரோவிச் (Kolinda Grabar-Kitarović). அவர் சோக ஹீரோவான மோத்ரிச்சை அழைத்துக் கன்னத்தில் தட்டி அணைத்துக்கொண்டார். க்ரோஷியா எத்தகைய நாடு என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை.

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் என்றெல்லாம் கால்பந்தில் உலகப்புகழ் பெற்றுவிட்ட பெரிய பெரிய பெயர்களின், அவர்களின் வீரதீரப் பராக்ரமப் பின்னணியில் ஆரம்பித்தன ரஷ்யாவில், ஃபிஃபாவின் இந்த உச்சரக சேம்பியன்ஷிப் போட்டிகள். 32 நாடுகளில், கவனிக்கப்படாத சிறிய நாடாக, அணியாக ஆரம்பித்த க்ரோஷியா, கேப்டன் லூகா மோத்ரிச் (Luka Modric), இவான் பெரிஸிச்(Ivan Perisic), மரியோ மாண்ட்ஸுகிச்(Mario Mandzukic) மற்றும் இவான் ரேகிடிச் (Ivan Rakitic) போன்ற தேர்ந்த வீரர்களின் கடும் உழைப்பினால் எதிர்பார்க்காத உயரங்களை எட்டிப்பிடித்திருக்கிறது. க்ரோஷியாவின் அமைதி தவழும் கோச் குறிப்பாக இன்று கால்பந்து உலகின் மாபெரும் வீரராக, லூகா மோத்ரிச்சை இந்தக் உலகக் கோப்பை ரசிகஉலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பலவருடங்களுக்கு முன், க்ரோஷியாவின் ஏதோ ஒரு மூலையில், தன் ஏழைத் தந்தைக்குத் துணையாக ஆடுமேய்த்து மலைவெளிகளில் அலைந்து திரிந்த லூகா மோத்ரிச்! இன்று கால்பந்துலகின் சூப்பர்ஸ்டார். மோத்ரிச்சின் சிதிலடமடைந்த சிறுவீடு க்ரோஷியாவின் டூரிஸ்ட்டுகள் விரும்பிப் பார்க்கும் இடங்களுள் ஒன்றாக ஆகியிருக்கிறது. எளிமை, கடும் உழைப்பு, சோதனையிலும் ஆழ்அமைதி ஆகியவற்றிற்குப் பேர்போன மோத்ரிச்சைப்பற்றிய ஆவணப்படத்தையும் ஒருவர் தயாரித்திருக்கிறார் அங்கே. இந்த உலகக்கோப்பைக்கு முன்பே அது வெளிவந்துவிட்டிருந்தது. இனி, ரசிகர்கள் தேடி அதைப் பார்ப்பார்கள்..

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட இந்த கால்பந்து விஷா ஒரு மாபெரும் வெற்றி எனலாம். போட்டிகளுக்கான சிறப்பான மைதான ஏற்பாடுகள், ரசிகர்களுக்கான நவீன வசதிகள், போக்குவரத்து, தங்க ஏற்பாடுகள் என ரஷ்ய அரசும் நிர்வாகங்களும் அதகளப்படுத்திவிட்டார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புட்டினையும் ரஷ்யாவையும் இதற்காகப் பாராட்டி ட்வீட்டியுள்ளார், என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

**

FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா?

மத்திய ஐரோப்பாவின் ஏட்ரியாட்டிக் கடலின் ஓரத்தில் சுமார் 45 லட்சம் மக்களைக்கொண்ட நாடு. 1991-ல் முன்பிருந்த யுகோஸ்லேவியாவிலிருந்து, கடும்போரில் ரத்தம் மிகச்சிந்தி விடுதலைபெற்றபின், குறிப்பாக விளையாட்டில் வீறுநடை போடும் குட்டி நாடு. இருந்தும், முன்னாள் சேம்பியனான ஜெர்மனி, மற்றும் உலக கால்பந்து ஜாம்பவான்களான பிரேஸில், அர்ஜெண்டினா, ஸ்பெயின், ஃப்ரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவற்றிற்கிடையே க்ரோஷியாவை யாரும் ஒரு வலுவான கால்பந்து தேசமாக, ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் நினைக்கவேயில்லை. மிஞ்சி மிஞ்சிப்போனால் இரண்டாவது ரவுண்டு வரை வரலாம் என்பதே பலரின் யூகமாக இருந்திருக்கும். (க்ரோஷியா, சுதந்திரம் அடைந்த எட்டாவது வருடத்திலேயே -1998-ல், உலகக்கோப்பையின் அரையிறுதியில் பிரவேசித்திருந்ததை பலர் மறந்திருக்கக்கூடும்).

ரஷ்யாவில் நடந்துவரும் ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை பலருக்கு விதவிதமான அதிர்ச்சிகளைத் தந்துவருகிறது. சிலரின் ஆணவத்தை சின்னாபின்னமாக்கியது. இன்னும் சிலரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியது. நடப்பு சேம்பியனான, ஜெர்மனி இறுதி லீக் மேட்ச்சில் கொரியாவிடம் உதை வாங்கி ஆரம்பசுற்றிலேயே அலறி ஓடிவிட்டது. லியோனெல் மெஸ்ஸியின் புகழில் நெஞ்சு நிமிர்த்திய அர்ஜெண்டினா, ஆரம்பத்திலேயே எல்லாம் மெஸ்-அப் ஆகி அரண்டு மிரண்டு ஓடியது. ஸ்பெயினும், க்றிஸ்டியானோ ரொனால்டோவை நம்பியிருந்த போர்ச்சுகலும், நெய்மாரின் பிரேஸிலும், பெரிதாக ஒன்றும் சாய்த்துவிடமுடியாமல் மற்ற நாடுகள் பார்த்துக்கொண்டன. போட்டி நடக்கும் நாடான ரஷ்யா, நன்றாக ஆடி, காலிறுதிவரை வந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. அரையிறுதிவரை வந்த பெல்ஜியம் ப்ரான்ஸிடம் தோற்றது. ஒரேயடியாகக் குதித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து, அரையிறுதியில் க்ரோஷியாவிடம் எசகுபிசகாக மிதிபட்டு அழுதுகொண்டே வெளியேறியது.

விளைவாக, நடந்ததோ ஒரு கால்பந்து அதிசயம்! க்ரோஷியாவின் கண்மூடித்தனமான ரசிகர்களையே திக்குமுக்காடவைத்திருக்கும் நிகழ்வு. உலகக்கோப்பைக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் க்ரோஷியா இன்று ப்ரான்ஸுடன் மோதுகிறது. முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே நிலை. அரையிறுதிக்கப்புறம் தங்கள் நாடு திரும்பவிருந்த க்ரோஷிய ரசிகர்கள் தங்கள் தங்கள் டிக்கெட்டுகளை மாஸ்கோவில் மறுபதிவு செய்துவிட்டு ஓட்காவை உறிஞ்சிக் காத்திருக்கிறார்கள், ஞாயிறு ஃபைனலுக்காக!

க்ரோஷிய அணியில் மிட்-ஃபீல்டர்களான லுகா மோத்ரிச் (Luka Modric), இவான் பெரிஸிச் (Ivan Perisic) மற்றும் இவான் ரேகிடிச் (Ivan Rakitic) அசகாய சூரர்கள். மறக்கமுடியாத செண்டர்-ஃபார்வர்ட் மரியோ மாண்ட்ஸுகிச் (Mario Mandzukic). கூடவே அசத்தும் கோல்கீப்பர் டேனியல் சுபாஸிச் (Danijel Subasic). இவர்களது அபரிமிதத் திறமையினால்தான் க்ரோஷியா இன்று மாஸ்கோ ஃபைனலில் பிரவேசித்துள்ளது.

இதுவரை சிறப்பாக ஆடி இறுதியில் நுழைந்திருக்கும் ஃப்ரான்ஸிற்கு உலகக்கோப்பையைக் கைக்கொள்ளும் திறனனைத்தும் உள்ளதெனலாம். இந்த அணியின் கவனிக்கப்படவேண்டிய முன்னணிவீரர்கள் கில்யன் ம்பாப்பே (Kilyan Mbappe), ஆந்த்வா(ன்) க்ரீஸ்மான் (Antoine Griezmann), மிட்-ஃபீல்டர் பால் போக்பா (Paul Pogba) ஆகியோரோடு, கோல்கீப்பர் ஹூகோ யோரிஸ் (Hugo Lloris).

கடந்த ஒரு மாதமாக உலகக்கால்பந்து ரசிகர்களை போதையில் ஆழ்த்தியிருக்கும் ஃபிஃபா உலக்கோப்பை, கடைசியில் யாருடைய கையில்போய் இறங்கும்? தென்னமெரிக்க, மற்றும் மேலை ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இதுவரை சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கும் கோப்பை, சீறும் சிறுத்தையான க்ரோஷியாவிடம் சிக்கிவிடுமா இம்முறை?

**