”எல்லாம் சரியாப்போச்சுன்னா…

.. (அப்பறமா) உங்கள இங்க சந்திக்கிறேன்!” (Sab theek raha tho.. miljaunga yahi pe..) -ஒரு பிரபலப் புள்ளி சொன்னதாகப் படித்தேன் காலைவேளையில். யாரிது குழப்பம்? என்ன சொல்லுது?

Bhuvan Bam

பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என மனதில் கற்பனை ஓவியம் தேவையில்லை. சொன்னது ஒரு ஆண்.  Influlencer ! (இன்னும் என்ன என்ன வார்த்தைகள் வருமோ ஆண்டவா..). புவன் பாம் (Bhuvan Bam) – இந்தியாவின் டாப்  யூ-ட்யூபர் (Youtuber). காமெடியன், பாடகன், இசையமைப்பாளன் என சிலவருடங்களாக யூ-ட்யூபில் பன்முக ஆர்ப்பாட்டம்.  ரொம்பப் பாப்புலர்! நெட்டிஸன்கள் புவனை பாலிவுட் நடிகை ஆலியா பட் (Alia Bhatt)-இன் ‘ஆண்-வர்ஷன்’ எனக் கலாய்க்கிறார்கள். இது புவனை அசைத்து, அவர் ஆலியாவுக்கான மெஸேஜில் ‘ஆலியா! நீங்கள்தான் என் ‘க்ரஷ்’! ஒரு காஃபி சாப்பிடலாம். வரமுடியுமா!’ என்று ட்வீட்டியிருந்திருக்கிறார். புவனின் மொத்த வருமானம் 2020-கணக்குப்படி உத்தேசமாக 2.9 மில்லியன். ரூபாயல்ல, அமெரிக்க டாலர்! பாம் டெல்லியில் கல்லூரி முடித்த ஒரு மஹாராஷ்ட்ர இளைஞன்.

பேசவந்தது பாமின் புகழ், வருமானம்பற்றியல்ல. அவர் சொன்ன விஷயம். விதம். அப்படி ஆகிவிட்டிருக்கிறது, நாட்டில், உலகில் நிலமை. ’கொஞ்ச நாட்களாகவே உடம்பு சரியில்லை. சோதித்ததில் ‘பாஸிட்டிவ்’! என வந்திருக்கிறது’ என்கிறார் மெஸேஜில். இந்த ‘பாஸிட்டிவ்’-தான் இந்த வருடத்தின் மோசமான, ’நெகட்டிவ்’. ஆண்டு 2020 பிறந்த நேரம் அப்படி! ஆஸ்பத்திரிக்குப் பயந்துகொண்டே போய் அங்கு ‘பாஸிட்டிவ்’ என வந்துவிட்டால் பலருக்கு முகம் சுண்டிவிடுகிறது, குடல் சுருங்கிவிடுகிறது. உயிர்ப்பயத்தின் தாக்கம். ஏகப்பட்டோரை பலிவாங்கி வெற்றிநடை போடுகிறதே இன்னும் இந்த வைரஸ். எந்த அரசாலும், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு பதில் சொல்லமுடியவில்லையே இதற்கு. ‘பொது’ ஜனம் (வைரஸுக்கு முன்னே பிரபலங்களும் சமம்) – என்ன  செய்யும்? பீதியிலேயே பாதி மேலே போய்விடுகிறது . கொஞ்சம்பேர் தப்பித்தும் வந்துவிடுகிறார்கள்தான் – badly thrashed, perennially injured. இப்படி ஒரு காலன், காலத்திற்கேற்ற கோலன்.

ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற சில மேலைநாடுகளில் ‘லாக்டவுன்’ இரண்டாவது சுற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு சில தேசங்கள் அறிவிப்போமா வேண்டாமா எனக் குழம்பிக் கிடக்கின்றன. எத்தனை ஊர்களில் எத்தனை சாவு விழுந்தாலும், எனக்கு ஒன்றும் ஆகாது.. அது மற்றவர்களுக்குத்தான் என்பதாக பலர் அலட்சியமாக, சுயபாதுகாப்பின்றி சுற்றி, சுற்றிவருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஏனைய மெத்தப்படித்த, ‘முன்னேறிய’ சமூகங்களின் கதியும் இதுதான். நாம் மார்க்கெட்டுகளில் உரசிக்கொள்வோம். அவர்கள் Bar-களில் உரசிக்கொள்வார்கள், பீச்சுகளில் படுத்து உருளுவார்கள். சின்னச் சின்ன வித்தியாசங்கள்.

தத்துவார்த்தமாகப் பார்த்தால்… எதுவும் சொல்லி, எதுவும் ஆகப்போவதில்லை. அழிவோ, ஆக்கமோ, நடக்கவேண்டியதே உலகில் நடக்கும் எப்போதும். இதில் நல்லது, கெட்டது என வகைப்படுத்த முயற்சிப்பதால், தலையைப் பிய்த்துக்கொள்வதால் என்ன ஆகிவிடப்போகிறது – ஒரு பெரும்நிகழ்வின் முழுப் பரிமாணமும் தெரியாதபோது ? அப்படியே தெரிந்துவிட்டாலும்..

**

 

அடங்காத பேய் !

சுமார் 4 மாதங்கள். ஒரே பேயாட்டம். ஒரே ஒரு நாட்டில், ஒரு லட்சத்திற்கும் மேல் பரிதாப மரணங்கள். பரிதாபம் ஏனெனில், தொற்று என ஒட்டிக்கொண்டிருக்கும் வியாதிக்கு ஒரு முறையான மருந்தில்லை, மாயமில்லை. பரிதவித்து, பரிதவித்து மனிதர்களின் சாவு. உலகின் எந்த நாடாயிருந்தாலென்ன? ஒரு நோய்க்கு, ஒரு லட்சம் பேரை இவ்வளவு குறைந்த காலகட்டத்தில் பலிகொடுத்திருக்கிறதா சமீப காலத்தில்? இல்லை. இப்படியான ஒரு கொடுமையான, ஆபத்தான உலகில் தற்போது வாழ்கிறோம் நாம்.

கொரோனா எங்கிருந்து புறப்பட்டது என்கிற அசட்டுத்தனமான ஆராய்ச்சி இன்னமும் தேவையில்லை. எங்கும் வீடுகள் பற்றிக்கொண்டு எரிகின்றன. எவன் தீயை வைத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஓரமாக நின்றுகொண்டு ஆனந்தமாக பீடிபிடித்துக்கொண்டிருக்கிறான் அவன். அந்த விபரீதம் ஒரு பக்கம். ஒரு நோய், தீநுண்மியால் கிளப்பட்ட நோய், கட்டுக்கடங்காமல் இன்னும் உலகெலாம் உலவி வருகிறதே அது எப்படி? சாவுகள் ஓரளவு குறைந்துவிட்டிருந்த நாடுகளும், திடீரென மீண்டும் பலிக்கணக்கு ஏறிவருவதைக் கண்டு பீதியில் இருக்கின்றன. கடுமையாகப் போராடி, நோயை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்த தென்கொரியா, மற்ற சில ஐரோப்பிய நாடுகளைப்போல, லாக்டவுனை சற்றே தளர்த்திப் பார்த்தது. ஓரிரண்டு வாரம் கூட ஆகவில்லை. மீண்டும் சாவுக்கணக்கு திறந்துகொண்டது. லாக்டவுன், சமூகவிலகல் நடவடிக்கைகளைத் திரும்பவும் நேற்று (28/5/20) கொண்டு வந்திருக்கிறது தென் கொரியா. வேறு வழி தெரியவில்லை.

கோவிட்-19 என்றொரு கொடும்நோய்- இதைவிட விஞ்ஞானத்திற்கு, மனித அறிவிற்கு எந்த பயங்கர சவாலும் இந்த நூற்றாண்டில் அமைந்ததில்லை. ஒவ்வொரு நாளும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள் விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள். இதுவரை உலகின் அதிபுத்திசாலியாக, அசுரசக்தியாகக் காட்சியளித்த அமெரிக்கா, சில மாதங்களிலேயே இப்படியொரு சாவு எண்ணிக்கையை சந்தித்ததும் ஆடிப்போய்விட்டது. எழுந்து நிற்கப் பார்த்து, கீழே, கீழே விழுகிறது. ‘மரண அடி’ என்பது இதுதானோ? ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் எல்லாம் இன்னும் மூச்சுத்திணறியவாறுதான் காலம் தள்ளுகின்றன. தென்னமெரிக்காவில் ப்ரஸீலின் (Brazil) நிலை பரிதாபம். ஒன்றும் கட்டுக்குள் வரவில்லை, ஒன்றும் செய்யமுடியவில்லை அரசாங்கத்தால் அங்கே – சுகாதார அமைச்சர்கள் ராஜினாமா செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர.

நாலுமாதமாக வெவ்வேறு நாடுகளில் ஆராய்ச்சியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறதே – இந்த சனியனுக்கு ஒரு vaccine கண்டுபிடிக்கவென. என்னதான் ஆயிற்று? ஒரு முன்னேற்றமுமில்லையா? அமெரிக்க நாளேடான வாஷிங்டன் போஸ்ட்-இல் இரண்டு நாள் முன்பு ஒரு தொற்றுநோய் நிபுணர் சொல்கிறார்: ’’ஆமாம், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. ப்ளீஸ் ..’’ அழாத குறையாக, அதே சமயத்தில், சில மேதாவிகள் போல், இதுவரை ஏதோ வெட்டிச் சாய்த்துக்கொண்டிருப்பதுபோல் புருடா விடாமல், உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார் அந்த நிபுணர். ’நான் ஒரு நிபுணன் தான். ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை’ என எல்லோர் முன்னிலையிலும் ஒத்துக்கொள்ள அபார தொழில்நேர்மை, மனோதைர்யம் வேண்டும். இருக்கிறது அவருக்கு. உயர்ந்த கண்டுபிடிப்புகள் இத்தகைய நேர்மையாளர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன உலகில். இன்னமும் வரும், காலம் தாமதமானாலும்.

**

கொரோனா : தனித்திருத்தல், பொதுநல ஏற்பாடுகள்

தாய்நாட்டைப்பற்றிய அக்கறையுடைய ஒவ்வொரு இந்தியனும், இந்த ஆபத்தான சூழலில் வீட்டுக்குள்ளேதான் இருக்கவேண்டும். கொடும் நோயொன்றின் கொட்டத்தை அடக்க இப்படித்தான் இருக்கவேண்டியிருக்கிறது. இயங்கவேண்டியிருக்கிறது. இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெய்ன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி எனப் பல தேசங்களிலும் இதுவே நோய் பரவாமல் தடுக்க பிரதான வழியெனக் கண்டுபிடித்து அமுல்படுத்தியிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையும் இதுதான். இந்தியாவிலும் ’தனித்திருத்தல்’ (social distancing) அறிவுறுத்தப்பட்டு, நாடு முழுவதுமான லாக்-டவுன் செயல்படுத்தப்படுகிறது. எதற்கெடுத்தாலும் கூச்சல், கூப்பாடு என காலங்காலமாகப் பழக்கப்பட்டுப்போன ஒரு சமூகத்தில் இதனை சரியாக, உடனடியாக செயல்படுத்துவதில் அரசு இயந்திரங்களின் நிர்வாக சிரமங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. மக்களுக்காக லாக்-டவுன் முழுமையாக அமுல்படுத்தப்பட, மக்களின் பூரண ஒத்துழைப்புதான் தேவையே. அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கெதிராக காந்தி நடத்திய தீவிர ‘Civil Disobedience Movement’ போல, இப்பொழுது ஒரு ‘Civil Obedience Movement’ – ’மக்கள் ஒத்துழைப்பு இயக்கம்’ அத்தியாவசியமாகிறது தாய்நாட்டின் நலனுக்காக. முகம் சுழித்தும், விமரிசித்தும் எந்தப் பயனுமில்லை. ஆங்காங்கே தலைகாட்டும் சில எதிர்ப்பாளர்களுக்குப் புரியவேண்டும். மறுக்க வாய்ப்பு தரப்படாது. அடிவாங்கும் முன்பே அறிந்துகொண்டால் அல்லல் இல்லை!

பாதிக்கப்பட்ட மற்ற எல்லா நாட்டினரும் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் இந்நேரத்தில் நாமும் சந்திக்கிறோம், வேறு வழி இல்லாததால். இத்தகைய ‘லாக்-டவுன்’ காலத்தில், உணவு, மருந்து, சமையல் வாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சரிவரக் கிடைக்க, அதன் சப்ளை-செயின் ஒழுங்காக இயங்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயல்கின்றன. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடினநிலையினால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வேலைக்கு வர முடியாதவர்களுக்கு முழுசம்பளத்துடன் விடுமுறை தர, தனியார் கம்பெனிகளுக்கான அரசின் உத்தரவுகள் போயிருக்கின்றன. அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் விதமாக, மஹிந்திரா, ரிலையன்ஸ், டாடா போன்ற சில பெரும் தொழில்நிறுவனங்கள் ஏழைத்தொழிலாளர்களுக்கு மருத்துவ சலுகைகளோடு, இரண்டு மாத அட்வான்ஸ் சம்பளம் தர இணங்கியிருக்கின்றன.

பிரதமந்திரியின் ஏழைகள் நலத் திட்டம் (PM’s Garib Kalyan Yojana) மூலமாக 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பொதுமக்களுக்கான பல நலத்திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (26/3/20) அறிவித்திருக்கிறார். இதன் கீழ், விளிம்புநிலைத் தொழிலாளர்கள் மற்றும் 15000 ரூபாய்க்கும் குறைவாக மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மூன்று மாத பிராவிடெண்ட் நிதிக்கான தொகையை மத்திய அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். தொழிலாளர் நல நிதியாக, கட்டுமானத்தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.31000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. நாடெங்குமுள்ள 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இது பலன் தரும். வாழ்வுகாக்கும் சிறப்புப் பணியிலிருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எனப் பிரத்தியேகமாக ரூ.15000 கோடி ரூபாய் செலவில் பலதிட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் ‘உஜ்வாலா திட்ட’த்தின் (‘Ujjwala Yojana 2020’)கீழ், ஏழைப்பெண்களுக்கென மூன்று மாதங்களுக்கு இலவச ’சமையல் வாயு’ வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இனாமாக வழங்கப்படும். மேலும் விவசாயிகள், உதவித்தொகை பெறும் ஏழை முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான மாதாந்திர பண உதவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ATM-பணம் எடுத்தலுக்கான கட்டணங்களுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி, மாநில அரசுகள் தங்கள் நிதியிலிருந்து மாதாந்திர ரேஷன் உணவுப்பொருட்களோடு, குடும்பத்துக்கு ஆயிரம்/இரண்டாயிரம் என பணமும் இனாமாகத் தருகின்றன. இப்படி வரிசையாகப் பல பொதுநல நடவடிக்கைகள் மத்திய/மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு நாட்டில் செயல்பாட்டில் வந்துகொண்டிருக்கின்றன.

Mylab’s Corona testkit
Pic courtesy: ANI
கொரோனா வைரஸ் தாக்கத்தை தாமதமின்றி, துல்லியமாகக் கண்டுபிடிக்கும் சோதனைகளுக்காக இதுவரை அரசாங்க சோதனைச்சாலைகளே பயன்படுத்தப்பட்டுவந்தன. நாடெங்கும் பரவிவரும் தொற்றுநோயின் அறிகுறிகளை அறிவதற்கான சோதனைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இந்திய அரசு இரண்டு தனியார் நிறுவனங்களின் திறன் மிக்க கிருமி-சோதனைச்சாலைகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. National Institute of Virology, Drug Controller of India ஆகிய இந்திய அரசின் அறிவியல் கழகங்களால் தரமறியப்பட்ட அவைகள்: அல்டோனா டயக்னாஸ்டிக்ஸ் (Altona Diagnostics) என்கிற ஒரு ஜெர்மன் கம்பெனியும், மைலாப் (Mylab) எனப்படும் புனேயிலுள்ள ஒரு இந்திய கம்பெனியுமாகும். ’மைலாப்’ தயாரித்த ’சோதனைக் கருவி’யை டெல்லியிலுள்ள இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (Indian Council of Medical Research (ICMR, Delhi) மேலும் ஆராய்ந்து, அதன் பயன்பாட்டிற்கான அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனைப் பெருமளவில் வாங்கி மாநிலங்களுக்கு விநியோகம் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறந்த சோதனைக்கருவி என்பதோடு, இதன் விலை (ரூ.1200), வெளிநாட்டிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் சோதனைக் கருவிகளின் விலையில் நாலில் ஒரு பங்கே என்பது கூடுதல் தகவல். கொரோனா நெருக்கடியை கடுமையாக எதிர்கொள்ள உதவியாக, இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் சோதனைக் கருவிகளைத் தன்னால் உற்பத்தி செய்ய இயலும் என்று அரசுக்குத் தெரிவித்திருக்கிறது மைலாப்.

இப்படிப் பலவேறான மக்கள் பணிகளை தனியார் துறை வாயிலாகவும், அரசுத் துறைகள் மூலமாகவும் முடுக்கிவிட்டுள்ளது இந்திய மத்திய அரசு. மாநில அரசுகளும் கூடுமானவரை அவ்வாறே. இவையெல்லாம் ஜனங்களின் ஒட்டுமொத்த நலனுக்காகத்தான் என அனைவரும் தீர்க்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல பலன் அனைவருக்கும் விரைவில் கிடைக்க, குடிமக்களின் மனமார்ந்த ஒத்துழைப்பே முக்கியம். இது ஒரு பெரும் தேசீய இயக்கமாக நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். இதனைத்தான் இந்தியப் பிரதமர் தன் டிவி உரையில், உலக சுகாதார நிறுவன ((WHO) அறிக்கைகளையும் மேற்கோள்காட்டி வலியுறுத்தியிருக்கிறார். பிரதமர் மக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுப்பதாகத் தோன்றினாலும், நெருக்கடி நிலையில் அது அரசாங்கத்தின் உத்தரவு என்பது சந்தேகமறப் புரிந்துகொள்ளப்படவேண்டும். தப்பிப் பிழைக்க வேறு மார்க்கமில்லை. Just obey and follow the instructions dear citizens; Stay indoors in your own interest. ஒன்றுபட்டால்தான் வாழ்வு. ஊளையிட்டு எதிர்த்தால், ஓரத்தில் விழுந்துகிடக்க நேரும் – நோயின் கடுமை அப்படி.

**

பொறுப்பற்று அலையும் COVIDIOTS !

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாட்டிலும், உலகெங்கும். நாட்டின் தரைவழி எல்லைகளை மூடி, வெளிநாட்டு விமான வருகைகளை நிறுத்தி, தொடர்ச்சியாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துகளை ரத்து செய்து, மாநிலங்களும் தங்களுக்கிடைய எல்லைகளை மூடி, பொதுப்போக்குவரத்தை நிறுத்தி, இந்திய ரயில்வேயும் தன் மாபெரும் ரயில் சேவையை நிறுத்தி, இப்படி எத்தனை எத்தனையோ செயல்பாடுகள், அமுல்படுத்தப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகள். கூடவே இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், சோதனைகள், நோய் ஆய்வுச்சாலைகள், நாடெங்கும் லட்சணக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மருத்துவப் படுக்கைகள். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அவசரநிலையில் உண்மையில் இயங்குகின்றன. ஆனால் எல்லா நன்முயற்சிக்கும், பொதுமக்களிடமிருந்தும் 100 சதவிகித ஒத்துழைப்பும் தேவை அல்லவா?

வெளிநாட்டிலிருந்து ஓசைப்படாமல் நுழைந்துவிட்டவர்களை, ‘ஹோம் க்வாரண்டைன்’ என கையில் மையால் ஸ்டாம்ப் செய்து அனுப்பியும், வீட்டில் மூடிக்கொண்டு கிடக்காமல், ஊர் ஊராக அலையும் பொறுப்பற்ற ஜென்மங்களை போலீஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டிப் பிடித்துவருகிறது. ஒரு உலகளாவிய மெடிக்கல் எமர்ஜென்சி நிலையில், நாட்டில் வேகமாகப்பரவும் விசித்திரக்கூறுகளை உடைய ஆபத்தான ஒரு நோயை, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதின் மூலமே (Social distancing) ஒவ்வொருவரும் எதிர்க்கவேண்டும். தன்னை, தன் குடும்பத்தை, வாழும் சமூகத்தைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என எத்தனை முறைதான் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து, நாட்டின் பிரதமர், முதல் அமைச்சர்கள் மூலம் அறிவிப்பது, கேட்டுக்கொள்வது. மருத்துவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், மீடியா வழியாகவும் விளக்குவது? விதவிதமாக, குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் சொல்லிக்கொடுப்பது? கடந்த வாரங்களில் இப்படி ஒரு massive public exercise, விழிப்புணர்வு இயக்கமாக நாடெங்கும் செயல்படுத்தப்பட்டும், எல்லோருக்கும் நிலைமையின் தீவிரம் இன்னும் புரியவில்லை போலிருக்கிறதே. குறிப்பாக பீஹார், உபி போன்ற மாநிலங்களில் பலருக்கு ஏறமாட்டேன் என்கிறதே மண்டையில்? மண்டையைப் போட்டபின் என்னத்தைப் புரிந்துகொள்வார்கள் இவர்கள்?

ஊரடங்கை மீறியவர்களுக்கு குஜராத் போலீஸ் தண்டனை!
ஊரடங்கு, ’லாக்டவுன்’(lockdown) சமயங்களில், அனுமதிக்கப்பட்ட சொற்ப நேரத்தில் கடைக்குச் சென்று அத்தியாவசியப்பண்டங்களை வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொண்டால் தப்பில்லை. ஒருவாரத்திற்காவது காய்கறி, உணவுப்பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வது குடும்பங்கள் விஷயத்தில் வழக்கம்தான். ஆனால், மாஸ்க், ஸானிடைஸர், டிஷ்யூ, டாய்லெட் சோப், குனைன் மருந்துகள், யூகலிப்டஸ் ஆயில் என ஒரேயடியாக ஸ்டோர்களிலிருந்து கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக்கொண்டு வீட்டில் அடுக்கி அழகுபார்ப்பது, முட்டாள்தனம் அல்லாமல் வேறென்ன? அதேபோல், ’வெளியே போகக்கூடாது, வீட்டிலுள்ளேயே கிடந்து உன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்க உதவி செய்’ எனப் பச்சையாகச் சொல்லப்பட்டபோதும், உத்தரவிடப்பட்டபோதும், அவ்வப்போது நைசாக வீட்டிலிருந்து வெளியே நழுவுவது, நாலைந்து பேராக முடிச்சு, முடிச்சாக மூலையில் நின்று கதைப்பது, இளிப்பது, டூவீலர், கார்களில் ஊர்வலம் செல்ல முயற்சிப்பது என்பதெல்லாம் கேவலமான, பொறுப்பற்ற செயல்களல்லவா? சமூகவிரோதச் செயல்கள் என அரசுத்துறைகளால் இவை வகைப்படுத்தப்படும். தண்டனை கிடைத்தால் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி முட்டாள்களாக நடந்துகொள்ளும் ஆசாமிகளைக் குறிப்பிட, ஒரு புதிய ஆங்கில வார்த்தை சிருஷ்டிக்கப்பட்டுவிட்டது ட்விட்டர் உலகத்தில். Covidiot ! கோவிடியட். எப்படி இருக்கு! ‘கோவிட்-19’ வியாதியின் ஆபத்து நிலையிலும், முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் மூதேவிகளைக் குறிக்கும் சொல். Covid+idiot. இத்தகைய கோவிடியட்-கள் பிரதானமாக உலவும் பிரதேசங்கள் பீஹார், உ.பி.போன்றவை எனத் தெரியவருகிறது. பெங்களூரிலும் சில இடங்களில், ஊரடங்கி இருக்காமல், இரவில் மக்கள் உல்லாசமாகத் திரிந்ததாகவும் செய்தி இப்போது உலவுகிறது. அநாகரீகம். அவமானம்.

**

அந்த ஐந்தாவது மூர்க்கன் ?

ஏழெட்டு வருட நீதிப் போராட்டத்தின் இறுதிக்கட்டமாக, டெல்லியில் ஒரு குளிர்கால இரவில், மருத்துவ மாணவி ஒருத்தியை ஓடும் பஸ்ஸில் அவளது நண்பனுக்கு எதிரிலேயே கோரமாக சீரழித்த டிரைவர் உட்பட்ட ஆறு காமக்கொடூரர்களில் நால்வரை, ஒருவழியாகத் தூக்கில்போட்டுவிட்டு கைகளை ‘ஸானிடைஸ்’ செய்துகொண்டது நாடு (மார்ச் 20, 2020). (ஏற்கனவே, கைது செய்யப்பட்ட சிலமாதங்களிலேயே டெல்லியின் திஹார் சிறையில் முக்கிய குற்றவாளி எனக் கருதப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்துகொண்டான்.)

குற்றம் என்று ஒன்று நிகழ்த்தப்பட்டால்- அதுவும் கொலைக்குற்றம், பெண்ணிற்கு எதிரான குற்றம் என்று வந்தால்- குற்றவாளி  உடனே பிடிக்கப்பட்டு, உச்சபட்ச தண்டனை தரப்படுவது, அதுவும் இழுத்தடிக்கப்படாமல் உடனே நிறைவேற்றப்படுவதே எந்த ஒரு  சமூகத்தின் நலத்திற்கும் உகந்தது. ’க்ரிமினல் கேஸ்’ என ஆரம்பித்து அதுமாட்டுக்கு நடந்துகொண்டே இருந்து, முதலில் அரண்ட, நடுங்கிய குற்றவாளிகளே போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒரு பொழுதுபோக்காக ’எஞ்ஜாய்’ செய்யும்படி  ஆகிவிட்டால், பொதுமக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுத்து சிறையிலேயே ’நிம்மதியாக வாழ’ ஆரம்பித்துவிட்டால் – நாட்டின் நீதித்துறை உள்நாட்டிலும், சர்வதேசவெளியிலும், சிரிப்புக்குள்ளாகும். நாட்டில் கொடும் குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்கும். தர்மம்  தலைதெறித்து ஓடும். தொடர்ந்து சீரழிக்கப்படுபவர்கள், நாசமாகிறவர்கள் பாதுகாப்பில்லாத அப்பாவிப் பெண்களாகவோ, சிறுமிகளாகவோதான் பெரும்பாலும் இருப்பார்கள். இத்தகைய கேவலமான சமூகச் சூழலின் இடையே, நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் திட்டமிட்டு, கதைத்து,  என்ன பிரயோஜனம்? பெண்ணுக்குப் பாதுகாப்புத் தர இயலாத ஒரு  சமூகம் வளருமா? வாழுமா?

நிர்பயா மற்றும் இதுபோன்ற வழக்குகளைப்பற்றி சிந்திப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ மிகவும் மனச்சோர்வு தரும் விஷயம். இருந்தாலும் நாடெல்லாம் சாமானியக் குடிமக்களின் மனதில் பற்றி எரியும், நீங்காத துக்கம் தரும் ஒரு விஷயத்தை அலட்சியம் செய்யவும் முடியவில்லையே. இந்திய மக்களில்  பலர் 20 மார்ச் காலைவேளையில் மகிழ்ச்சியடைந்தனர் என்பதைவிட, ஒருவாறான நிம்மதி அடைந்தனர் எனச் சொல்லலாம். ட்விட்டர், முகநூல், வாட்ஸப் தடதடத்துகொண்டிருக்கின்றன. ஒரு புதிய ஹேஷ்டேக் வந்துவிட்டது. பெருங்குற்றமொன்றில் பங்காளியாக இருந்துவிட்டு அந்த ஐந்தாவது அயோக்யன்,  எப்படித் தப்பிக்கலாம்? – எனக் கேள்விமேல் கேள்வியாக, குடைய ஆரம்பித்துவிட்டது.

2015-ல் வந்த செய்தி

அந்த ஒருவன், ஆறு பயங்கரக்குற்றவாளிகளில் ஒருவன் (கொடூரத்திலும் கொடூரமானவன் என்றன ஆரம்ப விசாரணைக்குப் பின்வந்த செய்திகள், விபரங்கள் விகாரமானவை, தவிர்ப்போம்), நாலுபேரோடு சேர்த்து ஐந்தாவது ஆளாக தூக்குத்தண்டனை பெற்றிருக்கவேண்டியவன், தப்பித்து ’இருக்கிறான்’. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர்  மீடியாவில் பேசப்படாமலேயே மூடிமறைக்கப்பட்ட அவனது பெயர் முகமது அஃப்ரோஸ். உ.பி.-யைச் சேர்ந்தவன். டெல்லிக்குப் பிழைப்பதற்காக வந்த ஏழையாம். குற்றம் செய்தான். தப்பித்துவிட்டான். எப்படி? இப்படி ஒரு கீழ்த்தரமான குற்றம் செய்த நாளன்று அவனது வயது 18 வருடங்களுக்கு சிலமாதங்கள் குறைவாக இருந்ததாக சில அதிகாரிகளால் பின்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டது’ (2013). பாவப்பட்ட ‘பையன்’ என அறியப்பட்டு, இரக்கம் மிகக்கொண்டு, அவனது கேஸ் ‘இளம்வயதினர்க்கான நீதிமன்ற’த்திற்கு (Juvenile Justice Board)  மாற்றப்பட்டது. அங்கே ‘போனால் போகிறான் சின்னப்பையன், ’ என அவனுக்கு மூன்று வருடம் ‘சீர்திருத்த வாசம்’ தண்டனையாக வழங்கப்பட்டது. சிறு, சிறு குற்றங்கள் செய்து ’உள்ளே’ வந்திருந்த மற்ற சிறார்களுக்கு, இவன் ‘பாடம்’ எடுத்திருப்பானோ, என்னவோ? நிர்பயா குற்றவாளிப் ‘பையன்’ ஒருகட்டத்தில் ’மனம் திருந்திவிட்டதாக’ கருதப்பட்டு, 2015-ல் விடுவிக்கப்பட்டான். நிர்பயாவின் பெற்றோரோடு, பொதுமக்கள் இயக்கங்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அரசியல்வாதிகளில் அவனது விடுதலையைக் கடுமையாக எதிர்த்தவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி. ’அவனது ‘கதை’ வேறுமாறானது, ‘சிறார் சீர்திருத்தக் கேஸ்’ இல்லை அது’ என சில சான்றுகளுடன் மத்திய அரசுக்கு மனுகொடுத்தார்.  புதிதாகப் பதவிக்கு வந்திருந்த மத்திய அரசு அவனை விடுவிக்கக்கூடாது எனக் கோர்ட் சென்றது. ஆனால்,  ’ஏற்கனவே சிறார்கள் நீதிமன்றத்தினால் மூன்று வருட ‘சீர்திருத்தத்தை’ தண்டனையாகப் பெற்றவன். ’தண்டனை’ முடிந்து அவன் வெளியேறுவதைத் தடை செய்யமுடியாது!’ என்றது டெல்லி ஹைகோர்ட். வெளியே அவிழ்த்துவிடப்பட்டான் ‘அப்பாவிப் பையன்’.

அப்பறம்? இங்கேயும் கொஞ்சம் : அவன் -முகமது அஃப்ரோஸ் (2015-ல்  21 வயது)- எப்போது வெளியே வருவான் என வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் ஒருவர். யாரப்பா அது? பிரிவு தாங்கமுடியாத பாசத் தந்தையா, தாயா? கூடப்பிறந்தவரா?  இல்லை, டெல்லியின் முதலமைச்சர் அண்ணாச்சி கேஜ்ரிவால். குற்றவாளியை  அழைத்து, அவனுக்கு ரூ.10000 அன்பளிப்பு செய்தது டெல்லி அரசு. பொதுமக்களிடமிருந்து கடும்எதிர்ப்பு வர, ஒரு ‘தொண்டு நிறுவனத்திடம்’ அவனை ஒப்படைத்து தையல் மெஷின் போன்றவைகளை வழங்கவைத்தது கேஜ்ரிவால் அரசு. ஏழையாம், திக்கற்றவனாம், எங்கே போவான், ‘டெய்லரிங் கடை’ வைத்துப் பிழைக்கட்டும்!’ என்பது தரப்பட்ட விளக்கம். நிர்பயா பெற்றோரோடு சேர்ந்து மக்களும் வெகுண்டெழ, தொண்டு நிறுவனம் டெல்லி அரசின் ஆலோசனைபேரில் வேறு ஏற்பாட்டைச் செய்தது.

அவனுக்கு யாரிடமிருந்தும், ஏதும் தீங்கு நிகழ்ந்துவிடக்கூடாதே? பாதுகாப்பாக வாழ ஒரு ’வழி’ செய்து கொடுக்க, பெயர் குறிப்பிடப்படாத அந்த ’தொண்டுநிறுவனம்’ அவனை டெல்லியிலிருந்து தூரத்துக்கு தள்ளிக்கொண்டு வந்தது. பாதுகாப்பான இடம்? ஆமாம். வேறு எது, நம்ம தென்னிந்தியாதான். நம்மவர்கள்தானே போக்கில்லாதவர்களுக்கும், போக்கிரிகளுக்கும் வாழ்வு கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள். இங்கே எங்கோ ஒரு நகரத்தில் -அது சென்னையாகவோ, பெங்களூராகவோ இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை- கொண்டுவந்து விட்டார்கள். சும்மா அப்படியே அல்ல. அவனது ’டெல்லி ரெகார்ட்’ வெளியே தெரியாதபடி, பெயரை, அடையாளத்தை மாற்றி ! ’தொண்டு’ நிறுவனம் என்றால் சும்மாவா? ’சப்பாத்தி, புரோட்டா செய்ய வடநாட்டுக்காரன் இருந்தால் தேவலையே’ – எனத் தேடிய உணவகத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டிருக்கிறார்கள். முதலாளிக்கும் ‘அவன்’ யாரென்று சொல்லப்படவில்லை! ’ஒரு தென்னிந்திய ரெஸ்ட்டாரண்ட்டில், பாதுகாப்பான வாழ்க்கை அவனுக்கு அமைத்துத் தரப்பட்டுவிட்டது. அனாமதேயமாக, ஆனந்தமாக வாழ்கிறான், இப்போது 23 வயதாகிவிட்ட அவன்’- என்கிறது 2017-ல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

இப்போது பார்த்து,  சிலர் கிளம்பியிருக்கிறார்களே, அந்த ஐந்தாவது மூர்க்கன் எங்கே, அவன் எப்படித் தப்பிக்கலாம் என்று …

**

உனக்குப் பின்னே நான் !

காலைவணக்கம், Good morning, ஸுப்ரபாத் என்று விசிறிவிடும் விதவிதமான அச்சுபிச்சு  வாட்ஸப் மெஸேஜ்களுக்கிடையே, காலையில் ஒரு வித்தியாசமான மெசேஜ் வந்தது. ஒரு ’பெற்றவளின்’  விடிகாலை ஞானமோ அல்லது உள்முகிழ்த்த பெருமையோ, ஏதோ ஒன்று: ’ஒரு பிள்ளையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் பின், தீவிரமாக இயங்கும் அம்மா உண்டு’ என்று சொல்லி ஒரு அம்மா-பிள்ளை படத்தோடு சிரித்தது அந்த வாட்ஸப். கூடவே குட் மார்னிங் என்றுவேறு சொல்லிவைத்ததா எனப் பார்த்தேன். இல்லை. நல்லது. இத்தகைய மெசேஜ்களை பார்த்துப் பொதுவாக நகல்வதே வழக்கம். இங்கே அப்படிச் செய்யாமல், ஒரு சிறிய பதில் போட்டேன், எங்கள் குடியிருப்பு வளாகத்திலேயே வசிக்கும், சமீபத்தில்தான் அறிமுமாகியிருந்த அந்த இளம் தாய்க்கு. அவளும் பதிலுக்கு ‘புன்னகை எமோஜி’ ஒன்றை அனுப்பித் திருப்தியாகியிருந்தாள். என் பதிலில் கொஞ்சம் கோபப்படுவாளோ என்று சந்தேகித்திருந்தேன்!

தன் மகன் அல்லது மகளுக்காக, அவர்களின் படிப்பு, மேற்படிப்பு போன்றவைகளில் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக இந்திய அம்மா, அப்பாக்கள் ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். நிறையப் பேசுகிறார்கள். நிறைய செய்யப் பார்க்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் அப்படியான – பெற்றோரின் எதிர்பார்ப்புக்கேற்ற- முன்னேற்றத்தைக் காண்பிப்பதில்லை என்றபோதிலும். சிலசமயங்களில், அதிகம் அலட்டிக்கொள்ளாத சில பெற்றோர்களின் பிள்ளைகள் தடதடவென்று படிப்பிலும், விளையாட்டு, இசை போன்றவைகளிலும் மேலேறுவதைக் கவனிக்கமுடிகிறது. பெற்றோர்கள் பெரிதாக உந்திவிடவில்லை இங்கே. இருப்பினும், எவன் முன்னே வர வேண்டுமென இருக்கிறதோ, அவன் வந்துவிடுவான். எது நடக்கவேண்டுமோ, அது நடந்துவிடும். அதுதான் நடக்கும். இதையே, வடக்கத்திக்காரர்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்: ஜோ ஹோனா ஹை, ஓ ஹோ ஜாயேகா!

சுற்றுமுற்றும் கவனிக்கையில் ஒன்று அடிக்கடி படுகிறது. சில, பல இளம் தாய்மார்களின் ஆர்வம் தோய்ந்த அதீத கவனம், தங்களின்  மகனின் பேரிலேதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்குழந்தையின்மேல் அவர்களுக்குப் பாசமில்லை என அர்த்தமில்லை. ஆனால் அசையாத கவனமும், அடிக்கடி தலைகோதிவிடுதலும், தட்டிக்கொடுத்தலும், கன்னத்தை இழைப்பதும் இத்தியாதி சுகங்களெல்லாம் ஆண்பிள்ளைக்குத்தான். எங்கள் வளாகத்திலேயே இந்த தரிசனம், குழந்தைகள் காலையில் பள்ளிக்கூட பஸ்களுக்காக காத்திருக்கும் வேளையில் அடிக்கடி காணக் கிடைக்கிறது. அதனால் அந்தப் பையன் படு ஸ்மார்ட், வகுப்பில் இவன் தான் டாப் என்றெல்லாம் நினைக்கவேண்டியதில்லை. சராசரிக்குக் கொஞ்சம் மேலே இருப்பான். அவ்வளவுதான். அவனைத் தூக்கி மேல் நிறுத்த, உச்சியில் வைத்து அழகு பார்க்க,  அம்மாக்களின் அயராத முயற்சி. ஆனால், இதில் ஒரு பகுதியைக்கூட, அந்தப் பையனோடு பள்ளி செல்லும், அவன் சகோதரியிடம் காட்டுவதில்லை இந்தத் தாய். பெண் குழந்தையிடம் அத்தகைய ஆர்வமோ, கனிவோ காட்டப்படாமல் இருந்தாலும், அதுகள் தாங்களாகவே நன்றாகப் படிப்பதை, நன்னடத்தை, பொறுப்புணர்வு காட்டுவதை, தங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொண்டு முன்னேறுவதை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆனால், படிப்பில் பெண் குழந்தைகளின் பர்ஃபார்மன்ஸ், தங்களை சரியாக நடத்திக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் ஆகியவை இத்தகைய தாய்மார்களுக்கு ஏனோ, கிளுகிளுப்பூட்டுவதில்லை ! டெல்லியில் வசிக்கும்போதும் இதைக் கவனித்து, ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ஒரு வட இந்தியத் தாயிடம் இதுபற்றி லேசாக விஜாரித்தபோது(!), அவர் சொன்ன பதில் திடுக்கிடவைத்தது: ‘அரே! லட்கியோம் மே க்யூன் த்யான் தேனா ஹை!’ (அட, சிறுமிகள்மீது ஏன் அக்கறை காட்டவேண்டும்?); அவர்கள் இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவர்கள்தானே!’ அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச மனமில்லை. ஸ்டைலாகத் தலைவாரி, ஸ்கூல் யுனிஃபார்ம், சாக்ஸ், ஷு-வென மிடுக்காக பக்கத்தில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் அந்த அழகு சிறுமியைக் கவலையோடு பார்த்துவிட்டு நகர்ந்தேன்.

எனக்கு மெசேஜ் அனுப்பிய அந்தப் பெண், அப்படிப்பட்டவளல்ல. அவளுக்கு இரண்டும் பெண் குழந்தைகள் என்பதும் காரணமோ! இருக்காது. நன்கு படித்த, ஓரளவு மனப்பக்குவமும் தென்படும் பெண்தான் அவள். சரி, பிள்ளையின் அதீத முன்னேற்றத்தின் பின்னணியில், தீவிரமாக இயங்கும் தாயுண்டு என்றவளுக்கு என்ன பதில் சொன்னேன் வாட்ஸப்பில்? இப்படி: ’ஆனால், ஒன்றை நினைவில் கொள்க. உங்கள் குழந்தை என்பது நீங்களேயல்ல! அது, கடவுளால் அழகாகச் செதுக்கப்பட்டு உங்களிடம் விடப்பட்டிருக்கும் புத்தம்புது ஜீவன்!’ ஆங்கிலத்தில் அனுப்பினேன். பின்னே?  பெங்காலிப் பெண்ணுக்குத் தமிழில் சொல்லமுடியாதே?

**

மேதமையின் பேதமை

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா? இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ராமானுஜம் அளவிற்கு ஒப்பிடமுடியாதெனினும், சுதந்திர இந்தியாவில் கணித மேதைகள் எனப் புகழ்பெற்றவர்கள் என இருவர்  குறிப்பிடப்படுவர். ஒருவர் புகழ்பெற்ற பெண் – சகுந்தலா தேவி. கணிதத்தோடு ஜோஸ்யத்திலும் கொஞ்சம் விளையாடியவர். இன்னொருவர் அவருக்கிருந்த மேதமைக்கேற்றவாறு கவனிக்கப்படாமல் குறிப்பாகக் கடைசி நாட்களில்,  குடத்திலிட்ட விளக்குபோல் கேட்பாரற்று  ஒரு மூலையில் வாழ்ந்த வசிஷ்ட நாராயண் சிங் எனும் கணித அறிஞர்.

யாரிந்த வசிஷ்ட நாராயண் சிங்? பீஹாரில் பசந்த்பூர் எனும் குக்கிராமத்தில், ஒரு ஏழைக் குடும்பத்தில் 1942-ல் பிறந்து, வறுமையின் காரணமாக இளம் பிராயத்தில் தடுமாறியவர். அவரது கணிதத்திறன் யாரும் அறியாத ஒன்றாக அவரிடமே பதுங்கிக் கிடந்தது. ஏழைக்கு என்ன சிறப்பு? சொன்னாலும் எவன் கேட்பான்? யாரும்  கேட்கமாட்டார்கள். நம்பமாட்டார்கள். அப்படிப்பட்ட அசட்டுச் சமூகத்தில் வளர்ந்துவந்தான் சிறுவன் நாராயண் சிங். எப்படியோ ஆரம்பப் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்து, ராஞ்சியில் உள்ள அந்தக்காலத்தில் நல்லபேர் வாங்கியிருந்த ஒரு அரசுப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். கடுமையாகப் படித்திருக்கிறான் பையன்.  அங்கேதான் அவனுக்குள் பம்மியிருந்த சிறப்பு கணிதத்திறன் உற்சாகித்து, வெளியில் தலைகாட்டியது. மெட்ரிகுலேஷனிலும், இண்டர்மீடியட் வகுப்பிலும், முதலாவதாகத் தேறினான் நாராயண் சிங். ’கௌன் ஹை ஏ காவ்(ன்)வாலா!’ – யாரிந்த கிராமத்துப்பயல் ! – என்று உற்றுப்பார்த்தனர் மற்றவர்.  யார், யாரோ உதவிசெய்ய, பீஹார் தலைநகர் பாட்னாவில் ’பாட்னா சோஷியல் காலேஜ்’ என அழைக்கப்பட்ட, ஒரு நல்ல கலைக்கல்லூரியில் கணிதம் (ஹானர்ஸ்) பட்டவகுப்பில் சேர்ந்து படித்தான் நாராயண் சிங். அவனைப் பெற்ற,  படிப்பறிவில்லா கிராமம், பட்டணத்திலிருந்து அவனது கல்விபற்றி  வந்த செய்திகளை இப்போது கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்தது.

1961 -இல் பாட்னாவின் ’பீஹார் காலேஜ் ஆஃப் இஞ்ஜினீயரிங்’ (தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT, Patna)-இல் ஒரு கணித வல்லுநனர் கலந்தாய்வு, கூட்டம் நடந்தது. அதற்கு ஒரு உயர்கணிதம் பயிலும் மாணவன் என்கிற நிலையில் தன் கல்லூரியிலிருந்து ஒரு பார்வையாளராக அனுப்பப்பட்டான் மாணவன் நாராயண் சிங். பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்ட கற்றோரின் சிறப்பு அரங்கில் பிரபல அமெரிக்க கணித மேதையான பேராசிரியர் ஜான் கெல்லி-யுடன் ( Prof. John Kelly, University of California, Berkeley (UCB)), யாரோ ஒரு புண்ணியவான் நாராயண் சிங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறார். துறுதுறுவென்றிருந்த மாணவனைப் பார்த்த ஜான் கெல்லி, ஐந்து கடுமையான கணக்குகளை சிங்கிடம் கொடுத்து, ’போடு இதையெல்லாம், விடை எழுது பார்க்கலாம்’ என்றிருக்கிறார். விறுவிறுவென அந்த ஐந்து கணக்குகளையும் போட்டு விடை காண்பித்தான் நாராயண் சிங். அதோடு விட்டானா? இதை வேறு சில வழிகளில் போடலாம், இதே விடையைக் கொண்டுவரலாம் என்றிருக்கிறான். நொடிகளில் செய்தும் காட்டியிருக்கிறான். ஆ.. இப்படி ஒரு பயலா இந்த நாட்டில்..! அசந்துபோனார் அமெரிக்க ப்ரொஃபஸர்! அதோடு நிற்காமல், அமெரிக்கா திரும்பியதும், தான் பணியாற்றிய கலிஃபோர்னியா பல்கலையின் (UCB) ’Summa cum laude’ எனும் கணித PhD படிப்பில் தன் மேலான சிபாரிசுடன் நாராயண் சிங்கிற்கு இடம் வாங்கிக்கொடுத்துவிட்டார் ஜான் கெல்லி.

நாராயண் சிங்கிற்கு அவரது முழுத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதற்கான நேரம், வசதிகள். கடுமையாக உழைத்தார் சிங்.  1969-ஆம் வருடம், ‘Reproducing Kernels and Operators with a Cyclic Vector’ (Cycle Vector Space Theory) – எனும் உயர்கணிதப் பிரிவில், பி.ஹெச்.டி. பட்டத்தை வசிஷ்ட நாராயண் சிங்கிற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்தது. அதைத் தொடர்ந்து அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார். தொடர்ச்சியாக. அமெரிக்க விண்வெளிக் கழகமான நாஸா, நாராயண் சிங்கை அழைத்து,  அவரை தன்னோடு ஒரு ஆய்வுத்திட்டத்தில் இணைத்துக்கொண்டது. சில வருடங்கள் நாஸாவில் பணிபுரிந்த நாராயண் சிங்கிற்கு, முழுநேர ஆய்வாளர் பொறுப்பை நாஸா வழங்க முயற்சித்ததாம். ஆனால் தான் இந்தியா திரும்ப விரும்புவதாக சொல்லி மறுத்த சிங், தாய்நாடு திரும்பிவிட்டார். முதலில் ஐஐடி, கான்பூர் (உ.பி)-யிலும், பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் (Tata Institute of Fundamental Research, Bombay) மற்றும், இந்திய புள்ளியியல் கழகம், கல்கத்தா (Indian Statistical Institute, Calcutta) ஆகியவற்றிலும் சிறப்புப் பேராசிரியராக  பணியாற்றினார் வசிஷ்ட நாராயண் சிங்.

எழுபதுகளில், நாராயண் சிங்கின் அகவை முப்பதுகளில், அவரது மேதமை உச்சத்தில் இருந்தது. 1974-ல், நாராயண் சிங்கின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை ஒன்று ‘Quantum Mechanics and Optimisation Theory’-பற்றி, வெளியாகியிருந்தது. அப்போது உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ’சார்புக்கொள்கை’ (Theory of Relativity)-யிலிருந்து வெகுவாக மாறுபட்டு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார் நாராயண் சிங். அந்தக் காலகட்டத்தில்தான் உள் மன ரீதியாக அவருள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அவ்வப்போது சில விசித்திர உணர்வு வெளிப்பாடுகளும் அவரிடம் காணப்பட்டன; அல்லது அவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்பட்டன.

அவரினுள் இடையறாது பொங்கிக்கொண்டு, வெளிவரக் குறுகுறுத்துக்கொண்டிருந்த கணித மேதமை, ஒரு புறம். மனதின் வேறொரு ஆழடுக்கிலிருந்து அவ்வப்போது வெளிப்பட்ட, புரிந்துகொள்ளமுடியாத  நடத்தைகள், கோப வெளிப்பாடுகள் என எதிராக்கங்கள் தலைகாட்ட, கூட இருந்தவரையும் குழப்பின. இந்த நிலையில்  அவரது இளம் மனைவிவேறு, துக்கத்திலிருந்தார். என்ன பிரச்னை? நாராயண் சிங் அமெரிக்காவிலிருந்தபோது அவரைக் கல்யாணம் செய்துகொண்ட வசதியான வீட்டுப் பெண். கணவருக்கு அமெரிக்காவில் வேலை. அங்கேயே செட்டில் ஆகி சுகபோகமாய் வாழலாம் என வசந்தகாலக் கனவுகள். இந்த மனுஷன் என்னடா என்றால், அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டான். தாய்நாட்டில்தான் பணிசெய்வானாம். பைத்தியம்.. இவனைக் கட்டிக்கொண்டு நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு நகை, நட்டு உண்டா? சொத்து, சுகம் உண்டா? நாளெல்லாம் ஒக்காந்து கணக்குப் போட்றானாம்.. கணக்கு.. ம்ஹ்ம்… அவளது ஓயா எரிச்சல். வெறுப்பின் உச்சத்தில், அந்தப் பெண் ஒருநாள், இவரது கணித ஆய்வுக்கட்டுகளை எடுத்து வீட்டின் பின்புறம் வைத்தாள். கொளுத்தினாள். போய்விட்டாள். நாராயண் சிங்கிற்கு அடுத்த நாள் மனைவியைக் காணாத கடும் அதிர்ச்சி. அதற்குமேலும், தன் ஆய்வுக் கட்டுரைகள், கணித ஃபார்முலாக்கள். இங்கேதானே கிடந்தது..எங்கே போச்சு அந்த கட்டு ? மனம் பிறழாமல் என்ன செய்யும்  மனிதனுக்கு? சில வருடங்களில் அவரது தந்தையின் மறைவும் தொடர,  துக்கச் சுழல் அவரை அணைத்து, அணைத்து ஏதோ ஒரு ஆழத்திற்குள் உள்ளிழுத்தது. இந்தக் கட்டத்தில் சிங்கின் இயல்பு வாழ்வு பெரிதும் நிலைகுலைந்து கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக ஆகிவிட்டார்.

Schizophrenia எனச் சொன்னார்கள் மருத்துவ நிபுணர்கள். அடிக்கடி மருத்துவமனை, வீடு, மருத்துவமனை என அலைக்கழிக்கப்பட்டார் சிங். மேதை என்கிற உச்சத்திலிருந்து சீக்காளி என்கிற பரிதாபநிலை வாழ்வின் வேண்டாத எதிர் துருவமாய் அவரை மிரட்டியது. துவட்டிப்போட்டது. அவரை சார்ந்த வெகுசிலரையும் அதிரவைத்தது. தூரத்தே செல்லவைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை. மனநிலை மருத்துவம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. சிலவருடங்களுக்குப்பின்  வீட்டுக்கு அனுப்பப்பட்டார். உடல் நலம் வெகுவாகக் குன்றிப்போய்விட்டிருந்தது. இடையிலே (1988) தன் தம்பியொடு ஒரு ரயில் பயணித்திலிருந்த நாராயண் சிங் எங்கோ இறங்கிச் சென்றவர்தான். காணாமற்போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள். பின் பீஹாரின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் கிழிந்த சட்டையும், பரட்டைத் தலையுமாய் ஒரு பிரேதம்போல் அவர் உலவிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து (1992), வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். மீண்டும், மீண்டும் மனநல மருத்துவமனை. பேர்தெரியா மருந்துகள். நான்கு வருடங்கள் பெங்களூரிலுள்ள சிறப்புமிகு ஆய்வுகேந்திரமான NIMHANS-ல் அரசு உதவியுடன்

சிகிச்சையில் இருந்திருக்கிறார். குணம் தெரிந்திருக்கிறது. அவரது குடும்பத்தினால் தொடர்ந்து அவரை பெங்களூரில் வைத்துக்கொண்டிருக்கமுடியாது என, திருப்பி  அழைத்துச் சென்றுவிட்டார்களாம்.

பீஹாரில் அவரது கிராமத்தில் அம்மாவுடனும், தம்பி குடும்பத்தினருடனும் வசித்து வந்தார் சிங். சில சமயங்களில் இயல்பு நிலை. பேச்சு, தொடர்ந்த சிந்தனை, எழுத்து. வேறு சில சமயங்களில் சொல்லவொண்ணா மனத் தடுமாற்றம் என வருடங்கள் வலியோடு நகர்ந்தன. லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் அவ்வப்போது வந்து பார்த்து இதை, அதைச் செய்கிறேன் என்று சொல்லிச் சென்றார்கள். ஏமாற்றமே மிஞ்சியது. வாஜ்பாயி அரசின் முன்னாள்  அமைச்சர் ஷத்ருகன் சின்ஹா அந்தக் குக்கிராமத்துக்கு வந்து நாராயண் சிங்கை பார்த்ததில், நல்லது கொஞ்சம் நடந்தது. நாராயண் சிங்கின் சகோதரர் பையனுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தில் ஒரு வேலை தரப்பட்டது. அதன் காரணமாக,  குறைந்த பட்ச விலையில் நாராயண் சிங்கிற்கு மருந்துகள் வாங்க முடிந்திருக்கிறது. இருந்தும் மாதாமாதம் 1200 ரூபாய் மருந்துக்கே செலவாகிறது எனக் கஷ்டப்பட்டிருக்கிறது அந்த ஏழைக் குடும்பம். இவ்வளவு பெரிய கணித மேதைக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் என பீஹார் அரசு ஏதோ கொஞ்சம் வழங்கியிருக்கலாம். அப்படியெல்லாம் சிந்திப்போர் அரசாங்கத்தில் இல்லை. தனிப்பட்டோரிடமும் தாட்சண்யம் இல்லை.

அவருக்கும் தன் கிராமத்தில் என்னதான் இருந்ததோ, அதைவிட்டுப் பிரிய மனமில்லை. மேற்கொண்டு கவனிப்பாரின்றி மூலையில் கிடந்தார் நாராயண் சிங். வயதான மெலிந்த உடல், தலையில் குரங்குக் குல்லாய் என,  ஒரு சராசரி கிராமத்தானாக அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்க, அவரது முதுமையும் அவரை ஆட்கொண்டிருந்தது. அவ்வப்போது ஏதேதோ சிந்தனையில், அவசரமாக வீடு திரும்பி காகிதத்தில் வேகவேகமாகக் கிறுக்கிவைப்பார். மூலையில் காகிதக் கட்டு.. முகவரியில்லா மேதமை.

எப்போதாவது யாராவது அவரைப்  பார்க்க வந்தால், பேச்சின் ஊடே கேட்பாராம். ’பேனா கொண்டு வந்திருக்கியா?’ (பீஹார் போன்ற ஒரு மாநிலத்தில், அதுவும் கிராமத்தில் பேனா, பேப்பர் என்பது பேரதிசயம் என அறிக). வந்தவர் தற்செயலாக பேனா வைத்திருந்து அதை அவரிடம் கொடுத்தால், வந்தவரின் உள்ளங்கையில் ஏதோ கணித ஃபார்முலா ஒன்றை எழுதிக் காட்டுவாராம் நாராயண் சிங். வந்தவருக்கு ஒன்றும் புரியாது. ஆனால் ஒரு  சந்தோஷம் – பெரிய கணித மேதை தன் கையில் ஏதோ எழுதியிருக்கிறார் என! பிறிதொரு சமயம் யாராவது வந்து பேச ஆரம்பித்தால், தன் தம்பியிடம் சொல்வாராம் நாராயண் சிங். ’போகச்சொல்லு இவனை. ஏதோ எண்டர்டெய்ன்மெண்ட்டுக்காக வந்திருக்கான்..’ அந்த அதிர்ச்சியில் சில நல்லவர்களும் படபடத்து வெளியேறியிருக்கிறார்கள். மனம் கேட்கமாட்டாமல், மீண்டும் சிலர் தயங்கியவாறு அவரது வீட்டுக்கு மரியாதை நிமித்தம் வந்தபோது, நாராயண் சிங் ஒன்றும் நடக்காததுபோல் பேசிக்கொண்டிருப்பாராம். பின்னர் வந்தவரிடம் கேட்பாராம்: ’கேமரா இருக்கா ஒங்கிட்ட! என் தம்பியோடு என்னை சேத்து ஒரு ஃபோட்டு எடுத்துக்கொடேன்..!’  தம்பியின் தோளில் கைபோட்டுக்கொண்டு போஸ் கொடுப்பாராம். அப்போது அவரைப் பார்த்தால் மனநிலை குலைந்தவர்போல் தோன்றியதில்லையாம். அவரது வயசான அம்மாவோடு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு நண்பர் நாராயண் சிங்கின் சமீபத்திய வாழ்க்கைபற்றி கேட்டபோது அவர் சொல்லியிருக்கிறார். ”அவன் இப்போ சாதாரணமாத்தான் இருக்கிறான். தினமும் காலையில் கீதை படிப்பான். மாலையில் கொஞ்சம் ராமாயணம். இடையிடையே மூலையில் உட்கார்ந்துகொண்டு,  பேப்பரில் எதைஎதையோ எழுதிக்கொண்டே இருக்கிறான். என்ன எழுத்தோ.. என்னமோ.. ஏதோ..?  யாருக்குப்  புரியுது இதெல்லாம்.” என்று அங்கலாய்த்திருக்கிறார் அந்த மூதாட்டி. இப்படி பலவேறாக மாறுபட்ட மேதமையின் மனநிலைகள். துணைக்கு என ஓயாத மருந்துகள், மாயங்கள். ஒரு சிந்தனையாளனின் கடைசிகாலம்.

சமீபத்தில் பாட்னா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில் வசிஷ்ட் நாராயண் சிங் காலமானார். அவரது குடும்பத்தினர் என்று சிலர் மருத்துவமனை வாசலில் அன்று, அவரது பூத உடலை வைத்துக்கொண்டு ஆம்புலன்சிற்காக இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது திடீரென வீறிட்டது அரசு அறிவிப்பு. ‘பீஹாரின் மறைந்த கணித மேதை வசிஷ்ட் நாராயண் சிங், அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுவார்!” இருக்கும்போது அவரைக் கொண்டாடாத, போற்றாத, உதவிகளை ஒழுங்குமுறையாகச் செய்யாத அரசாங்கம், அவருக்கான இறுதி வழியனுப்புதலை மாலை, மரியாதைகளுடன் நிறைவேற்றி தன் பாவமூட்டையிலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டது. சமூகம் ?

**

வனம் படைத்தவன்

 

இந்தியாவின் வடகிழக்கின் ‘ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர். அதன் தலைநகரான இம்பாலுக்கு வடக்கே இம்பால் பள்ளத்தாக்கைத் தாண்டிப் படர்கிறது லாங்கோல் மலைத்தொடர். இதனைச் சுற்றிலும் இருந்த அடர்ந்த காடுகளில் புலிகள், சிறுத்தைகள், ஓநாய்கள், மலைப்பாம்புகள் மற்றும்  அபூர்வமான வனவிலங்குகளும் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. காலப்போக்கில், விலங்குத் தோலிற்கென வேட்டையாடுபவர்களும், மரங்களை வெட்டிக் கடத்துபவர்களுமெனக் கூட்டாக இத்தகைய அரும் காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவந்தார்கள். அதட்டிக் கேட்பாரில்லை. இம்பால் நகரமும் தன்னைப் பெருக்கிக்கொள்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, இயற்கைப் பொலிவை இழந்து ஏனைய நவீன நகரங்களின் பாணியில் பயணித்தது. சுற்றியிருந்த பள்ளத்தாக்கு நகரமயமாதலின் கடும் தாக்கத்தில் ஒரு பகுதி குப்பைக்கிடங்குகள்,  மறு பகுதி கொஞ்சம் விளை நிலமாகவும் உருமாறியிருந்தது. இருந்தும், இம்பால் பள்ளத்தாக்கருகில் இருந்த கிராமங்களைச் சுற்றி சிறு சிறு வனங்கள் ஓரளவுக்கு இருந்தன.

மோய்ராங்க்தம் லோயா (Moirangthem Loiya), இம்பால் நகருக்கு வடக்கே லாங்கோல் மலைத்தொடர் சூழ்ந்து நிற்கும் கிராமம் ஒன்றில் மரங்களும் செடிகொடிகளுமாய், இயற்கையின் அணைப்பில் இளம்பிராயத்தில் வாழ்ந்தவர். சின்னப்பிள்ளையாக சுற்றிவந்த காலத்திலேயே, மரங்கள் என்றால் அவருக்கு உயிர்.  கல்லூரிப் படிப்பிற்காக இம்பாலுக்கு சென்ற லோயா, பட்டப்படிப்பை முடித்தார். வேலை ஒன்றும் அவருக்கு நகரிலே கிடைத்து, வேலை பார்க்க ஆரம்பித்திருந்தார்.  தன் கிராமத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என ஒரு முறை சொந்த கிராமம் வந்தார் லோயா. அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிரவைத்தது. சிறுகிராமங்களைச் சுற்றி மண்டியிருந்த அழகழகான மரங்கள் எல்லாம் எங்கே போயின? எத்தனை விதமான, எத்தனைப் பழைய மரங்கள்.. மரங்கள் செழித்திருந்த பகுதியெல்லாம் மறைந்துபோய், அந்த இடங்களில் சிறு சிறு புதர்கள்தாம் ’நானும்  பச்சையாத்தான் இருக்கேன் பாரு’ என்று சீண்டுவது போல் திட்டுத் திட்டாக அங்குமிங்குமாக  நின்றன. என்னப்பா ஆச்சு.. எங்கே போச்சு மரமெல்லாம் என்றால் கிராமத்தில் ஒருத்தனை ஒருத்தனைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். பெரும்பாலும் ஏழை மக்கள். என்ன நடந்திருக்கும் எனப் பெரிதாக யூகிக்கவேண்டியதில்லை. வயிற்றுப்பிழைப்பிற்காக ஊர் ஜனங்களே விறகுவெட்டி விற்றுப் பிழைக்கிறேன் என,  காட்டுப்பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் காவுவாங்கிவிட்டார்கள்.என்ன செய்வது? நாலு வருஷத்தில் நாசமாய்ப்போன  வனம், லோயாவின் மனதில் பெரும் இழப்புணர்வை எழுப்பியது. தாங்கமுடியாத துக்கம். தான் படித்துப் பட்டம் வாங்கிய சந்தோஷமெல்லாம் கணத்தில் காணாமல் போனது.

மணிப்பூர் காட்டினுள் லோயா

ஏற்கனவே மணிப்பூரின் பெருவனங்கள் அழிந்துவிட்டன. இப்படி நமது மண்ணைக் காயப்போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சுற்றுச்சூழலைப்பற்றிக் கவலைப்பட, பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள இங்கே ஆள் இல்லை என்று தெரிகிறது. வேலை தேடி வெளியூர் சென்றுவிட்டால், நம்ப ஊர் நாசமாகப் போகும். சொந்த பூமியை அழியவிட்டுவிட்டு, வெளியூரில் போய் நாம் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால்தான் என்ன என்று அரற்றியது அவர் மனம்.  தன்னை வளர்த்து உயர்த்திய பூமியை அனாதையாக விட்டுவிட்டு அயல் பிரதேசத்தில் போய் நிம்மதியாக வாழமுடியாது. ஏதாவது செய்தே ஆகவேண்டும் எனும் சிந்தனை மனதில் உருவாகி, மேலும் வளர்ந்தது. மீண்டும் பச்சையும் செழிப்புமாய் மாறவேண்டும் இந்த பூமி..   அழிந்துவிட்ட காட்டை நினைத்துப் புலம்பித் திரியாமல், செயலில் உடனே இறங்கினார் இளைஞனான லோயா.

இம்பால் நகரத்தில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு தன் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்.  தன் கையே தனக்குதவி என்று துவங்கி, இருக்கிற கொஞ்சநஞ்ச பணத்தை வைத்து நல்லவகை மரக்கன்றுகளாக வாங்கிவந்து  நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஒத்தாசைக்கு கிராமத்து ஆட்கள் சிலரைக் கூப்பிட்டார். அவர்கள் உதவத் தயங்கினார்கள். ’என்ன சொல்றான் இவன்?  படித்தபிள்ளை செய்யற வேலையா இது’ என ஊரில் சில அசடுகள் சிரித்தன. கவலைப்படவில்லை லோயா. ஊர்ப்பெரியோர்களிடம் அவ்வப்போது பேசினார். தன்னால் அழிந்த காட்டைத் திருப்ப முடியும். தனக்கு ஊர்க்காரர்களின் துணை வேண்டும் என்றார். ஒத்துழைக்க இணங்காத சிலர், ’போப்பா! டவுனுக்குப்போ.  ஏதாவது வேலயில சேர்ந்து பொழக்கிற வழியப் பாத்துக்க!’ என்று புத்திமதிவேறு சொல்லி விலகினார்கள். விடவில்லை லோயா. ஊரில் வெறுமனே உலவிக்கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துப் பேசினார். காணாமல் போய்விட்ட வனத்தை மீண்டும் உருவாக்கினால்தான் நமக்கெல்லாம் நல்லது என விளக்கினார். ஊர் வாலிபர்கள்  நெருங்கிவந்தனர். ஊருக்கு நல்லது செய்யப் பார்க்கும் படித்த மனிதனான லோயாவின் முனைப்பைக் கண்டு வியந்தனர். லோயாவுக்கு நண்பர்களாயினர். தங்களையும் இந்த நற்பணியில்  ஈடுபடுத்திக்கொண்டனர். புதிதாக நட்ட கன்றுகள் பட்டுவிடாமல் தினம் தினம் நீர் ஊற்றி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி அடையும்வரை அவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவைத்தார். கூடவே வெளியாட்கள் – மரம் கடத்துபவர்கள், வேட்டைக்காரர்கள் நுழைந்து, இருக்கிற பச்சையையும் நாசம் செய்துவிடாமல், ஊர்க்காரர்கள் கட்டுக்கோப்பாக இருந்து பார்த்துக்கொள்ளுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  மரங்களையே சதாகாலமும் மனதில் நிறுத்தி, தன் வாழ்நிலத்தைத் தன் நண்பர்களுடன் சுற்றிச் சுற்றி வந்தார் லோயா. இம்பால் வனத்துறை அதிகாரிகளின் நட்பும் கிடைத்தது. லோயாவின் நற்சிந்தனையையும், வனத்தை மீட்டெடுக்கக் காட்டும் தீவிரமுனைப்பையும் அறிந்துகொண்ட  வனத்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள். கூடவே, மிகவும் அபூர்வமான மரவகைகளை அவருக்குக் கொடுத்து ஊக்குவித்தனர். ஆசையோடு எடுத்துப்போய், தக்க இடம் பார்த்து, தகுந்த இடைவெளிவிட்டு ஊன்றிவைத்தார். எடுத்த காரியத்திலேயே கண்ணும் கருத்தும் அவருக்கு இருந்தது. வருடங்கள் நகர்ந்தன. அவர் வைத்த மரக்கன்றுகள் மெல்ல, மெல்ல உயர்ந்து சிறு மரங்களாகின. காற்றிலாடி அசைந்து அழகு காட்டின. லோயாவின் மனச்சோர்வு அகல ஆரம்பித்தது. கூடி உழைத்த இளைஞரும் உற்சாகம் பெற்றனர். நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை வலுப்பெற்றது. கிராம மக்களிடமிருந்து மேலும் மேலும் ஆதரவு பெருகியது.

இப்படியாக, மொத்தம் 18 ஆண்டுகள் ஆயிற்று லோயோவுக்கு, கிராம மக்களை ஒன்றிணைத்து உழைத்து, ஒரு  வனத்தை உருவாக்க. இந்த 18 ஆண்டுகளில் லோயா தன் கிராமத்தை, அதன் சுற்றுவெளியைவிட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. பக்கத்தில் ஏதேதோ சிறுசிறு வேலைகளை வயிற்றுப்பிழைப்புக்காக பார்த்துக்கொண்டு காடு வளர்த்து உருவாக்கிவிட்டார் மனுஷன்! மாநில வனத்துறையே  அசந்துபோனது. கிராமத்து மனிதன் என்பவன் இப்படியல்லவா இருக்கவேண்டும் என சிலாகித்துப்பேசினர்.

லாங்கோல் மலைத்தொடரின் கீழ்ப்பகுதியில் ராப்பகலாகப் பாடுபட்டு லோயா  எழுப்பிய காடு, ’ புன்ஷிலோக் (Punshilok) இயற்கை வனப்பகுதி’ என இப்போது அழைக்கப்படுகிறது . மலைத்தொடரின் பின்னணியில்  300 ஏக்கர் பரப்பு,  பச்சைப்பசேல் எனக் காண்போரை மயக்கிக் காட்சி தருகிறது. காட்டில் நாட்டு மரங்களோடு,  250 அபூர்வவகை மரங்களும் உயர்ந்து படர்ந்து நிற்கின்றன. அவற்றில் மூங்கில் மட்டும் 25 வகைகள்! சிறிதும் பெரிதுமாக வண்ணப் பறவைகளின் கூட்டம் பக்கத்துப் பிரதேசங்களிலிருந்து பறந்துவந்து இந்த வனத்தைக்கண்டு சுகிக்கின்றன. தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன, குரங்கு,  நரி, முயல், கீரி, தேவாங்கு, ஓணான், உடும்பு,  பாம்பு  போன்ற சிறு விலங்குகளுக்கும் வாழ்வாதாரமாக இந்த வனம் மாறிவிட்டது.  தான் பிறந்துவளர்ந்த மண்ணிற்காக, 18 வருட தவ வாழ்க்கையல்லவா வாழ்ந்திருக்கிறார் லோயா.

ஏதோ பாடுபட்டு, ஒரு காட்டை உருவாக்கிவிட்டோம் எனத் திருப்திப்பட்டு ஒதுங்கிவிடவில்லை; தன் வேலையை நிறுத்திவிடவில்லை அவர். இளைஞர்கள், நண்பர்களைக் கொண்டு தன்னார்வக் குழு அமைத்து மணிப்பூரின் மற்ற பகுதிகளிலும் இழந்த வனங்களை மீட்க, சிறுகாடுகளைப் பெருக்க முயற்சித்து  அலைகிறார் லோயா. மணிப்பூருக்குக் கிடைத்த மாமனிதன் அல்லவா?

**

நகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது

 

 

முதுகிலேறிய  பையும்

மொபைல்திரையில் கண்ணுமாய்

முறுவலித்தோ முணுமுணுத்தோ

முன்னால் ஊரும் வாலிபங்கள்

முறுக்கோடு நடந்துபார்க்கும் பெரிசுகள்

முக்குகளில் முட்டவரும் ஆட்டோக்கள்

பஞ்சவர்ணப் பளபளப்பாய்க் கார்கள்

பிஞ்சுமுகங்களை அள்ளிக்கொண்டு

மஞ்சள் பஸ்களின் பள்ளிக்கூட பவனி

குறுக்குமறுக்குமாய் டூ-வீலர்ப் பிசாசுகள்

குப்பையை நாசூக்காகப் பெருக்கித் தள்ளும்

மாநகராட்சியின் வேலைக்கார யுவதி

வியப்போடு பார்த்துக்கொண்டு ஓரத்தில்

வெறுங்காலோடு நிற்கும் அவள் குழந்தை

**

முன்னமே எழுந்துவிட்டதனால்..

காலையில் முன்னமே எழுந்துவிட்டால், முந்திக்கொண்டு வந்து விழுகிறதே வார்த்தைகள்.. ம்.. சரி.. மூன்றுதான் :

 

இடமாறுகேட்டல் பிழை ?

 

நல்லவற்றின் மீது ஆசைப்படவேண்டும்

கெட்டதைக் கண்டால் கோபம் வரவேண்டும்

சொல்லிச் சென்றாரே மகாபெரியவர்

காதில் சரியாக விழலியோ ஜனங்களுக்கு

நல்லவற்றைக் கண்டாலே கடுப்பும்

கெட்டவைகளின் மேல் தீரா மோகமும்

தட்டாது உண்டாகிறதே இதுகளுக்கு?

 

**

டேய்.. ஏண்டா இப்படி ?

 

கிட்டாதாயின் வெட்டென மற !

பட்டெனப் போட்டாளே ஒரு பாட்டி

படிக்கவில்லையோ ஒருவேளை – இப்படி

அரிவாளைத் தூக்கிக்கொண்டு

அலையறதுகளே அறிவில்லாமல் ?

 

**

கரைந்து கரைந்து நெஞ்சம் ..

 

பறந்துவந்து உட்காரும் காகம்

பரபரக்கிறது கரைகிறது சத்தமாய்

ஏதேதோ சொல்கிறது அவசர அவசரமாய்

பாவிக்குப் புரியவில்லையே

பறவையின் பாஷை ?

 

**