இந்தக் கொடும் பிசாசு வந்திறங்கி, தலைவிரிகோலமாய் ஆடிக்கொண்டிருந்த நிலையில், போன மே-யில் எழுதிவைத்திருந்த ஒன்று கண்ணில் பட்டது இப்போது. புரிகிறது. வேண்டுதலை, வழக்கம்போல் அவன் ஏற்கவில்லை. வேண்டுதல், வேண்டாமை இலாது இருக்கக் கற்றுக்கொள் என்கிறானா? சொல்வான். அவனுக்கென்ன, அழகிய முகம் ..
நம் முகத்தைத்தான் கண்ணாடியில் பார்க்கச் சகிக்கவில்லை. சரி. கிறுகிறுக்க வைத்த போன ஆண்டு, கிறுக்கவைத்த கவிதை:
காலையில் ஒரு கப் காஃபியோடு வழக்கம்போல் நெட்டில் மேய்ந்தேன். நல்ல வேளையாக செய்திகள் எனும் மக்காத குப்பைக்குள் மண்டிவிடாமல், இலக்கியத்தின் பக்கம் இறங்கியிருந்தேன். முதல் நாள் விட்ட விக்ரமாதித்யனின், நகுலனின் நினைவில் அலைகையில். பார்க்க நேர்ந்தது ஒரு கவிதையை. சிங்களம் தந்த கவிதை. ’சிங்களத்துச் சின்னக் குயிலே..’ என்றொரு பாடல்வேறு, ஏடாகூடமாக நினைவில் தட்டுகிறது.
நான் வாசித்த முதல் சிங்களக் கவிஞர். மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல. காலைக் கவிதையின் தாக்கம், உடனே பகிர்ந்தால்தான் சுமை இறங்குமெனக் காதில் கிசுகிசுத்தது :
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
என்னிடம் கூறப்பட்டதைப்போலவே – அதிகாலையில் மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து நகரமொன்றின் தெருவோர மரநிழலில்
வாகனத்தை நிறுத்திய வேளை மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான் மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
ஆத்மாநாமின் மறைவுக்குப் பின், ஞானக்கூத்தன் ஆசிரியரான ‘ழ’ இதழ் ஒன்று வாங்கிப் படித்தேன். ரசித்தேன். ஒன்றிரண்டை வாசகர்களுக்காகப் பகிர்கிறேன்:
இடையில் ஒரு தரம் - ஷாஅ
இடையில் ஒரு தரம் பேனா உதறியதும் பச்சென்று தரையில் ஒட்டிக்கொண்ட வார்த்தைகளை சிதையாமல் எடுத்து உரிய இடத்தில் பொருத்திவைக்க முடியாமல் போவதால் கேட்பாரற்றுக் கிடக்கின்றன இனிவரும் நாளில் போவோர் வருவோர் கால்பட்டுக் கலைந்தும் தூசிபடிந்து மறைந்தும் கழுவிவிடும் நீரில் கரைந்தும் அவை இல்லாமல் போக வாய்ப்புண்டு வார்த்தைகள் கீழே விழுந்ததால் காலியான இடம் நீங்கலாக தொடர்ந்து எழுதி முடித்தாலும் அங்கு கண்டவர் அமர்ந்து ஊர் வம்பு பேசலாம் சண்டை சச்சரவுகளின் மூலஸ்தானம் ஆக்கிவிடலாம் ஏன், பொய்யானதோர் உலகமே புனைந்திடலாம் யார் கண்டார் எனவே ஆரம்பம் முதல் கடைசி வரை முழுமையாகப் படிக்கும் இயல்புடைய எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன் எந்த தேசமானாலும் சரி எந்த மொழியானாலும் சரி அடுத்த கிரகத்துக்கு எடுத்து செல்வதானாலும் சரி நழுவிப்போன வார்த்தைகளையும் கவனமாய் சேர்த்துப் படியுங்களென்று.
**
ஊமை எழுத்து -நகுலன்
பணக்காரர்களுடன் பழகத் தெரிந்திருக்க வேண்டும் அவர்கள் பணக்காரர்கள் மாத்திரம் இல்லை என்ற அடிப்படையில் இதைப் போல் ஒவ்வொரு நிலையில் இருப்பவருடன் அவர் அந்த நிலையில் மாத்திரம் இல்லை என்றவாறு. இது பலரால் இயலவில்லை என்பதனால் தான்.. ”என்பதனால் தான் ?” ஒன்றுமில்லை.
**
திரண்டு வருகிறது ஓர் அலை வந்து அது போனதும் நான் இருக்கமாட்டேன்
- காளி-தாஸ்
**
சொர்க்கவாசி - கோபிகிருஷ்ணன்
யேசு வந்தார் பாவம் ஒழிந்தது காந்தி வந்தார் தீண்டாமை ஒழிந்தது புத்தர் வந்தார் உயிர்வதை ஒழிந்தது சாக்ரடீஸ் வந்தார் மூடச்சிந்தனை ஒழிந்தது மார்க்ஸ் வந்தார் ஆதிக்க வர்க்கம் ஒழிந்தது டால்ஸ்டாய் வந்தார் வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது லிங்கன் வந்தார் அடிமைத்தனம் ஒழிந்தது பெரியார் வந்தார் அறிவிலித்தனம் ஒழிந்தது வேறு யாரோ வந்தார் தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது உல்லாசமாக இருக்கிறேன் காதில் கடுக்கண் போட்டுக்கொண்டு யார் வருகைக்கோ காத்துக்கொண்டு
சுப்ரமணிய பாரதியிலிருந்து, அவருக்குப் பின் வளர்ந்து செழித்த தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றை, ஒரு சிறந்த கட்டுரை நூலாக தமிழ் இலக்கியத்தில் பதித்த ஆளுமை வல்லிக்கண்ணன். நா.பார்த்தசாரதிதான், தான் நடத்திவந்த ’தீபம்’ இலக்கிய இதழில் இதனை ஒரு கட்டுரைத் தொடராக 1977-ல் வல்லிக்கண்ணனை எழுதவைத்தார். 1978-ல் சாகித்ய அகாடமி வல்லிக்கண்ணனுக்கு ’புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற இந்த நூலுக்காக விருது வழங்கி கௌரவித்தது.
2006-ல் மறைந்த வல்லிக்கண்ணன், சிறுகதை, நாடகம், நாவல் என நிறைய எழுதியிருக்கிறார் எனினும் தன் கட்டுரை நூல்கள் சிலவற்றிற்காகக் கவனிக்கப்பட்டவர். பாரதி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோரின் தாக்கத்தில் இளம் வயதிலிருந்தே கவிதைகளை எழுதிவந்தவர். எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இலக்கிய இதழில் இவரது புதுக்கவிதைகள் வெளிவந்தன. அவரே, ‘அமரவேதனை’ என்கிற தலைப்பில் வல்லிக்கண்ணனின் முதல் கவிதை நூலை 1974-ல் ‘எழுத்து பிரசுரமாக’ வெளியிட்டார். அறுபதுகளின் இறுதி, எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கவிதைகளைக்கொண்ட ‘அமரவேதனை’ யை சமீபத்தில் புரட்டியபோது சில, மனம் கவர்ந்தன. வாசியுங்கள் அன்பர்களே:
அறிஞர் ஆந்தை
ஆந்தை ஒன்று
மரத்தில் இருந்தது
அறிஞர் ஆந்தை
அதிகம் பார்த்தது
பார்க்கப் பார்க்க
கூச்சல் குறைத்தது
கூச்சல் குறையவும்
கூரிய காதால்
அதிகம் கேட்டது
அதனால் பின்னர்
உண்மை தெரிந்து
தன்னை அறிந்து
உலகை உணர்ந்தது.
பேச்சை வளர்க்கும்
பெரியவர் பலரும்
ஆந்தையைப் போல
ஆழ்ந்து அடங்கிடில்
அமைதி வளரும்
உலகம் உய்யுமே!
**
பண்பு ஒன்றே !
விளக்கைப்போட்டேன்
கொசுக்கள் ஆய்ந்தன
இனிப்பைக் கொட்டினேன்
ஈக்கள் மொய்த்தன
மிட்டாய் நீட்டினேன்
குழந்தைகள் சூழ்ந்தன
புல்லைச் சிதறினேன்
ஆடுகள் சேர்ந்தன
பணத்தைக் காட்டிடில்
மக்கள் கூடுவர்
பார்க்கப் போனால்..
பண்பு ஒன்றே !
**
அமர வேதனை
சிலுவையில் செத்த
ஏசுவின் புண்கள்
மீண்டும் கொட்டுது ரத்தம்
மீண்டும் மீண்டும்
உயிர்க்கும் நித்தம்
குண்டடிபட்ட
காந்தியின் இதயம்
மீண்டும் கக்குது ரத்தம்
துயரால் சாகும் நித்தம்
உண்மைக்காக
உரிமைக்காக
மனிதருக்காக
செத்த சாக்ரடீஸ், லிங்கன்
புத்தன் வகையரா
அத்தனை பேரின் ஆத்மாவும்
அமைதியற்றுத் தவிக்கும்
என்றும் என்றும்..
நித்தம்
சத்தியம் கொலைபடல் கண்டு
உரிமை பறிபடல் உணர்ந்து
மனிதரை மனிதர்
தாக்குதல், நசுக்குதல்
கொல்லுதல் கண்டு..
மண்ணில் அங்கும் இங்கும்
எப்பவும் போர்வெறி
நரித்தனம் நாய்த்தனம்
பயில்தல் அறிந்து..
மனிதர்
மனிதம் மறந்தது கண்டு..
**
சென்னைக்கு வந்த சிவன்
சென்னைக்கு வந்து சிவமானான்
அன்றொரு புலவன்
சென்னைக்கு வந்தான், சிவமானான்!
சென்னைக்கு வந்தேன், என்னானேன்?
இன்று நான்
சென்னைக்கு வந்து என்னானேன்?
வெண்பொடி போர்த்திய மேனி
சடைபட்ட கூந்தல்
மண்பட்ட ஆடை பூண்டான்
பித்தனெனத் திரியும் சிவமானான்
தமிழைப் போற்றிய புலவன்
ஓட்டல்தோறும்
உணவெனும் பேரில்
கண்ட நஞ்சையே தின்னக் கற்றேன்
வீதிகள் திரியக் கற்றேன்
வெறிநோக்கும் பெற்றேன்
உடலெனும் பேரில்
எலும்புகள் சுமந்து நின்றேன்
எதையும் எண்ணிச் சிரித்தல் கற்றேன்
இவையும் சிவனின் பண்புகள்தானே!
**
யாரே அறிவர்?
ஒரு இல்
ஒரு வில்
எனக் கொள்கைகொண்டு
வாழ்ந்து காட்டினை
ராமா! நின்
ராஜ்யம் இங்கு
வரல் வேண்டுமென
விரும்பினர் பலரே
விரும்புவோர்
இன்றும் உளரே
எனினும்
இன்று நீ
இந்நாட்டிடை வந்திடில்
உன் நிலை என்னாகுமோ
யாரே அறிவர்?
மீண்டும் கானகம்
ஏகிட நேருமோ
இருட்டடிப்பில் ஆழ்வையோ?
அன்றிக்
குண்டடிபட்டுச் சாவையோ..
யாருக்குத் தெரியும்?
ரகரகத் துணைவியர் பலப்பலர்
சுரண்டிப் பிழைத்திட
உற்ற கருவிகள் பலப்பல
எத்தி உயர்ந்திட
நாவலித்தீடு நயம் நிறை
சொற்கள் மிகப்பல பல
கொண்டு வாழ்ந்திடும்
அரசியல் தலைவர்கள், மேதைகள்
வளர்ந்திடும் இந்நாட்டில்
பிழைக்கத் தெரியாப் பித்தென
பரிகசிப்புக்கு உள்ளாவையோ?
ஏ ராமா!
உன் நிலை என்னாகுமோ
யாரே அறிவர் ?
அடியேனின் இன்னுமொரு மின்னூல் அமேஸானில் வெளிவந்துள்ளது:
தாமதத்திற்கு அருந்துகிறேன்
சற்று தாமதமாக(!) வந்திருக்கும் ஏகாந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு.
இந்த மின்புத்தகத்தில் 51 கவிதைகள் உள்ளன. பெரும்பாலும் சிறுகவிதைகள், ஒன்றிரண்டு சற்றே நீண்ட வசன கவிதைகள். சில வலைப்பக்கத்தில் முகம் காட்டியவை. சில புதிதாக வந்திறங்கியவை என அமைந்துவிட்ட தொகுப்பு.
வாசக, வாசகியர் மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாசித்தபிறகு, அமேஸான் பக்கத்தில் சம்பந்தப்பட்ட புத்தகத்துக்குக் கீழே உங்களது ‘customer review’ -வை ’ஸ்டார் ரேட்டிங்’ மூலமாக, அல்லது எழுத்துமூலமாகத் தந்தீர்களானால் நல்லது. நன்றி.
அந்த உன்னதமான புனிதத்தின் ரசத்தைக் குடித்துவிட்டது அவருடைய ஆன்மா. அதன் காரணத்தால் மெய்ஞானிகள், கவிஞர்கள், அரும்காதலர்கள் நிலவும் அபூர்வ உலகில் அது உலவியது. பின்னர் ஒரு நிலைக்குவந்து, பூமிக்குத் திரும்பியது – தான் கண்ட, அனுபவித்த அபூர்வத்தை அழகான வார்த்தைகளில் சொல்வதற்காக.
அவருடைய படைப்புகளை நாம் ஆராய்கையில், சுதந்திரமாக, கட்டுக்கடங்காமல அலையும் மனம் எனும் பெருவெளியின் புனித மனிதனாகத் தெரிகிறார். கற்பனை உலகின் இளவரசனாக, மெய்ஞான உலகின் மாபெரும் தளபதியாக அவரது வாழ்வுத்தோற்றம். மனிதவாழ்வின் மட்டித்தனங்களையும் ஆசாபாசங்களையும் வென்று, உன்னதத்தையும், புனிதத்தையும் நோக்கிய பயணத்திலேயே, கடவுளின் ராஜாங்கத்தை அடைவதிலேயே அவர் முன்னேறியதாக நமக்குத் தெரியவருகிறது.
அல்-ஃபாரித் ஒரு மேதை. மேதமை என்பது எப்போதாவதே நிகழும் ஒரு அதிசயம். தன்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தை, தான் வாழ்ந்த காலத்தின் வாழ்வியல்களை விட்டு விலகிப் பயணித்த மாபெரும் கவி. வெளிஉலகிலிருந்து தன்னை முற்றிலுமாக தனிமைப்படுத்திக்கொண்டு அவர் வரைந்த கவிதைகள், காணமுடியாத ஒன்றின் உன்னதத்தோடு, மேன்மையோடு, கண்டறிந்த பூலோக வாழ்வனுபவத்தை ஒருவாறு இணைக்க முயன்றன.
அல்-முத்தனபியைப்போலே (Al-Mutanabi, a great 10th century poet from Iraq), வாழ்வின் தினசரி செயல்பாடுகளிலிலிருந்து தன் கருத்தை எடுத்துக்கொண்டவர் அல்ல அல் ஃபாரித். அல்-மாரியைப்போல(Al-Maary, classical Arab poet, 11th century) வாழ்வின் புதிர்களில் அவர் லயித்துவிடவும் இல்லை. இந்த உலகத்திலிருந்து தன்னை வெளியே கொணர, அல்-ஃபாரித் தன் புறக்கண்களை மூடிக்கொண்டார். சாதாரண உலகின் இறைச்சல்களிலிருந்து விடுபட, காதுகளைப் பொத்திக்கொண்டார். ஏன்? இந்த உலகைத் தாண்டிய உன்னதங்களைப் பார்ப்பதற்காக, என்றும் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்காத தேவகானத்தைக் கேட்பதற்காக.
Ibn al-Farid, Sufi Poet
இதுதான், இவர்தான் அல்-ஃபாரித். சூரியனின் கதிர்களைப்போலே ஒரு தூய ஆன்மா. மலைகளுக்கிடையே அமைதியாகக் காணப்படும் ஏரியைப்போன்ற மனதிருந்தது அவருக்கு. அவர் வார்த்த கவிதைகள், அவருக்கு முன்னாலிருந்த, பின்னால் வாழ்ந்த கவிஞர்களின் கனவுகளையும் தாண்டிச் சென்றவை. மேற்கண்டவாறெல்லாம் அவதானித்து, அல்-ஃபாரிதின் மேதமையை வர்ணிக்கிறார் கலீல் ஜிப்ரான்.
அரபி மொழியின் மாபெரும் மெய்ஞானக்கவியெனக் கொண்டாடப்படுபவர், இபன் அல்-ஃபாரித் (Ibn al-Farid). தன் வாழ்நாளில் ஒரு சுஃபி துறவி என அறியப்பட்டுப் போற்றப்பட்டவர். 12-ஆம் நூற்றாண்டு எகிப்தில் வாழ்ந்தவர். எகிப்தை வாழ்விடமாகக் கொண்டுவிட்ட சிரிய நாட்டவர்களான பெற்றோர்கள். அப்பாவைப்போல் சட்டநிபுணராக வரப் படித்தார் ஆரம்பத்தில். பின் என்ன தோன்றியதோ தனிமையை நாட ஆரம்பித்தார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள முகட்டம் குன்றுகளுக்கடியில் (Muqattam Hills) சென்று உட்கார்ந்தார். அங்கேயே வாழ்ந்தார். சில வருடங்கள் மெக்கா சென்றிருக்கிறார் அல்-ஃபாரித். அங்கே, புகழ்பெற்ற இராக்கிய சுஃபி ஞானியான அல்-சுஹ்ராவார்தியை (Al-Suhrawardi) சந்தித்திருக்கிறார்.
சமீபத்தில் கிண்டிலைக் குடைந்துகொண்டிருந்தபோது கவிதைத் தொகுப்புகளால் கவரப்பட்டேன். நல்ல கவிதையைப் பார்த்தவுடன் நம்ப விக்கெட் விழுந்துவிடுவது வழக்கம்தானே! கல்யாண்ஜியின் ‘மூன்றாவது முள்’ மற்றும் ஆத்மாநாமின் கவிதை இதழ் ‘ழ’ -15 ஆகியவற்றை வாங்கிப் புரட்டினேன். மற்ற வாசிப்புகளிடையே, கவிதைகளுக்குள்ளும் புகுந்து ‘ரெஃப்ரெஷ்’ பண்ணிக்கொள்வது வழக்கமாகியிருக்கிறது. ரசித்த கவிதைகளில் –
‘ழ’ இதழிலிருந்து :
தோற்றம் -ஆத்மாநாம்
தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும்
தோன்றத் தெரிந்திருக்கவேண்டும்
நிஜவாழ்க்கையில் மட்டுமல்ல
கற்பனை வாழ்க்கையிலும்தான்
நிஜவாழ்க்கையில் தோன்றுவது சுலபம்
ஏனெனில் அங்கு அனைவரும்
தோற்றம் அளிக்கிறார்கள்
டீ கொடுப்பதில்
சாப்பாட்டுக்கு அழைப்பதில்
திருமணங்கள் நடத்துவதில்
ஆபீஸ் போவதில்
சினிமா போவதில்
நாடகங்கள் போவதில்
இசை கேட்பதில்
இப்படிப் பல்வேறாக.
கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம்
அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள்
ஒரு விஞ்ஞானியாக
ஒரு தத்துவவாதியாக
ஒரு சிற்பியாக
ஒரு ஓவியனாக
ஒரு கவிஞனாக
ஒரு இசை ரசிகனாக
ஒரு நாடக இயக்கக்காரராக
ஒரு கூத்துக்காரராக
ஒரு நாட்டிய ரசிகராக
ஒரு திரைப்படக்காரராக -
இவற்றில் நாம் யார்
கண்டுபிடிப்பது கஷ்டம்
ஏனெனில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் உள்ளது
அதன் கண்டுபிடிக்கும் காலத்தில்கூட
நாம் கண்டுபிடிக்கமாட்டோம்
மீண்டும் இவ்வாறு இருக்க..
**
சமூக ப்ரக்ஞை -நிமல. விஸ்வநாதன்
சாலையில்
என் எதிரில் வந்த
நீயும் கவனமாகயிருந்தாய்
நானும் கவனமாகயிருந்தேன்
நல்லவேளை, ஒரு விபத்திலிருந்து
நான் தப்பித்தேன்
**
கல்யாண்ஜி-யின்(வண்ணதாசன்) ‘மூன்றாவது முள்’ தொகுப்பிலிருந்து:
1.
ஒரு நொடிகூட ஆகாது.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியை
சுலபமாய்க் கொன்றுவிடலாம்.
கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற
காலத்துடன் அல்லவா
ஓடிக்கொண்டிருக்கிறது என் கடிகாரம்.
கருணையின் பாடலைப் பாடி அல்லவா
குதித்துக் குதித்துச் செல்கிறது
அந்த மூன்றாவது முள்
**
2.
விருந்தாளியின் பையன்களில் சிறிய பையனுக்கு
கதைகள் சொல்வது என் பொறுப்பாக இருந்தது
அவன் மறந்துவிட்டுப் போன
சிரிப்பு முகமூடி ஒன்று
தலையணைக்குக் கீழ் இருந்து
அதற்குக் கதை சொல்லச் சொன்னது.
உடனடியாக பதில் சொல்லிவிட்டேன்,
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிற,
எப்போதும் இன்னொரு முகத்தை
மூடுகிற ஒன்றுக்கு
கதைகள் அவசியமில்லை என்று
கதைகள் சொல்வதில்லை என்று.
**
விக்ரமாதித்யன் படைத்து 1982-ல் வெளிவந்த முதல் கவிதைத்
தொகுதியான ’ஆகாசம் நீல நிறம்’ என்கிற நூலும் கிண்டிலுக்குள்
நுழைந்திருக்கிறது. நகுலன், ஆர்.சூடாமணி, தஞ்சை ப்ரகாஷ்,
பிரும்மராஜன் ஆகியோரால் ஸ்லாகிக்கப்பட்ட
தொகுப்பு. எட்டிப் பார்த்ததில் கிடைத்த ஒன்றிரண்டு :
1. வாழ்க்கை
பறத்தல்
சந்தோஷமானது
ஆனால்
பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்
**
2. ஏகாதசி
யாசகத்திற்கென்று
ஏழெட்டு வீடுகள் சென்று
இருந்த நிலையைப் பார்த்ததில்
திருவோட்டைத் தூக்கித்
தூர எறிந்தேன்
திரும்பி வருகையில்
**
3.
நீச்சலுக் கென்றே
ஆற்றுக்கு வந்தவனை
உள் வாங்கும் சுழல்
பார்த்தபடி
தன் போக்கில் போகும் நதி
**
*
கவிஞர் ஆத்மாநாம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கவிதைக்கெனப் பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே அவராலும், நண்பர்களாலும் நடத்தப்பட்ட இதழ் ‘ழ’. 1978-லிருந்து 1988 வரை விட்டுவிட்டு காட்சி தந்த இலக்கியப் பத்திரிகை.
ஆத்மாநாமின் கவிதைகளுடன், க.நா.சுப்ரமணியம், கலாப்ரியா, தேவதச்சன், பிரும்மராஜன், காளிதாஸ், ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன், காசியபன், எஸ். வைத்யநாதன், மாலன், ’ஷாஅ’ , சத்யன் போன்றோரின் கவிதைகளும் ’ழ’ -வில் அப்போது வெளிவந்தன.
ஆத்மாநாமின் நண்பரும், எழுத்தாளருமான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், ‘ழ’ இதழ்கள் இப்போது அமேஸான் கிண்டிலில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில், இரண்டு ‘ழ’ இதழ்கள் இலவச வாசிப்புக்கு (இரண்டு நாட்களுக்கு) இப்போது:
‘ழ’ 16 (ஏப்ரல் 1981): ஆகஸ்ட் 16 மதியம் – ஆகஸ்டு 18 மதியம் (12:30வரை)
‘ழ’ 17 (ஜூன் 1981): ஆகஸ்ட் 17 மதியம் – ஆகஸ்ட் 19 மதியம் (12:30வரை)
கவிதை ப்ரேமிகள் கிண்டிலுக்குள் புகுந்து, வாசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த ’போஸ்ட்’!
‘ழ’ இதழ் 15 -ஐ வாங்கிப் படித்துப் பார்த்தேன். க.நா.சு., ஞானக்கூத்தன், காசியபன், கலாப்ரியா, எஸ்.வைத்யநாதன், பிரும்மராஜன் போன்றோரோடு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகளும் படிக்கக் கிடைத்தது நல்ல அனுபவம்.