அந்தநாள் முதல்

முன்னாள் காதலி
பின்னாள் காதலி
இந்நாள் காதலி
என்றெல்லாம் காதலில்
வகைமையில்லை
அப்படியே நேற்று இன்று நாளை என
ஒவ்வொன்றாய் வந்துகொண்டிருந்தால்
அது என்ன கண்றாவியோ
ஆனால் காதலில்லை

**

சர்தார்ஜியின் காதல் !

சர்தார்ஜி பஞ்சாபில் யார் யாரையோ பிடித்து, எப்படிஎப்படியோ மேனேஜ் பண்ணி லண்டன் போய்ச் சேர்ந்தார். அங்குக் கடும் முயற்சிக்குப் பிறகு, ஏதோ ஒரு கம்பெனியில் ஒரு துக்கடா வேலை. சர்தார்ஜிக்கு ஒரே சந்தோஷம். இருக்காதா பின்னே.. லண்டன்லேயே வேல கெடச்சுருச்சுல்ல!

நம்ப சர்தாருக்கு அங்க்ரேஸி (ஆங்கில மொழி) கொஞ்சம் ஆட்டந்தான்! இருந்தாலும், தன்னாலும் இங்கிலீஷ் தெரிந்தவர்களோடு சரிக்குச்சரியா பேச முடியும்னு ஒரு பாவ்லா! ஒரு சவடால்! அடிச்சுவிட்றது உண்டு.

அவரோடு வேலைபார்க்கும் ஒரு இளம் இங்கிலீஷ் அழகியின் மீது சர்தார்ஜியின் பார்வை விழுந்து தொலைத்தது ஒரு நாள். அவளின் அழகு, நடை, உடை பாவனைகளைக் கவனிக்க, கவனிக்க சர்தாருக்கு கொஞ்சம் கிறுகிறுப்பு.! காந்தம்போல் ஈர்க்கப்பட்டார் மனுஷன். அதனால் அலுவலகத்தில் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. அவள் வேலை செய்யும் அறைப் பக்கம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தலையைக் காட்டுவதும், அவள் எதிரே வந்தால் மீசையைத் தடவிப் பார்த்துக்கொள்வது, லேசான சிரிப்பு, அசடு வழியல் எனக் காலம் பரபரப்பாக நகர்ந்தது நம்ப ஆளுக்கு.

ஒரு நாள் ..இரவு. தூக்கம் பிடிக்கவில்லை சர்தார்ஜிக்கு. என்னடா இது, ஒரே பேஜாராப் போச்சே ! இந்த சின்னப்பொண்ணு நம்பள இந்தப் பாடுபடுத்தறாளே. இனிமே தாங்காது..நாளைக்கு எப்பிடியும் சொல்லீற வேண்டியதுதான்!

அடுத்த நாள். வழக்கத்தைவிடத் தன்னை டிப்-டாப்பாக அலங்கரித்துக்கொண்டார். ஒரு தடவைக்கு ரெண்டு தடவைக் கண்ணாடியில் தன் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டார். தலைப்பாகையைச் சரிசெய்துகொண்டார். ஒரு மஜாவான பஞ்சாபிப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு உற்சாகமாக ஆஃபீஸுக்குப் போனார் சர்தார்ஜி.

லன்ச் இடைவேளையில் அவளைச் சந்தித்தார். கொஞ்சம் பேசியபின், சரியான நேரத்தில், முகத்தை மலரவைத்துக்கொண்டு, வாயெல்லாம் பல்லாக ‘ஐ லவ் யூ!’ என்று அவளிடம் சொல்லிவிட்டார் சர்தார்ஜி.

அவளோ ஒரு வெள்ளைக்காரி. அவளுடைய லைஃப் ஸ்டைலே வேறு. இந்த ’லவ் யூ’ எல்லாம் பத்துப் பனிரெண்டு வயசிலிருந்தே பழகிப்போன சங்கதி. பெரிய புல்லரிப்பு ஏதுமில்லை இதில்! காதல், கீதல் என்றெல்லாம் எமோஷனலாகிவிட, அவள் இந்தியப் பெண்ணல்ல..

இவனுக்கு நம்மைப் பிடிக்கிறது போலிருக்கிறது ..அதனால் இப்படி வழிகிறான். நாமும் பேருக்கு ’நீயும் கொஞ்சம் பரவாயில்லடா!’-ங்கற மாதிரி ஒரு ஃபார்மாலிட்டிக்குச் சொல்லிவிடுவோம் என நினைத்து,
”ஐ டூ லவ் யூ!” என்றாள் இங்கிலீஷ் அழகி, லேசான சிரிப்புடன். (I TOO LOVE YOU! – நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்கிற அர்த்தத்தில் அல்ல – எனக்கும் உன்னைப் பிடிக்கிறது என்கிற மாதிரி ஒரு பேச்சுக்கு..)

சர்தார்ஜிக்கு ஒரே சந்தோஷம்! ஆனால், ’லவ் யூ’-க்கு முன்னால் அவள் போட்ட சின்ன இங்கிலீஷ் வார்த்தையால் கொஞ்சம் திகைப்பு, குழப்பம். இங்கிலீஷில் அவருக்குத் தெரிந்த ஒரே ‘டூ-‘ ’’TWO’’தான்! ’’TOO’’ என்கிற இங்கிலீஷ் வார்த்தை ஒன்று இருப்பதோ, அதன் அர்த்தமோ அப்பாவி சர்தார்ஜிக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘’I TWO LOVE YOU’’ என்று அவள் சொன்னதாகப் புரிந்து கொண்டார் நம்ம பிரகஸ்பதி! அட, இவ என்னை ரெண்டு மடங்கு அதிகமா காதலிக்கிறேன்னு சொல்றாளா!

அப்படின்னா இவ காதலுக்கு என் காதல் என்ன மட்டம்னு நெனச்சுட்டாளா? நான் யார்னு இவளுக்குப் புரியவைக்கிறேன் என்று நினைத்து உற்சாகமாக அவளை நெருங்கி,

’’ஐ த்ரீ லவ் யூ !’’ (I THREE LOVE YOU) என்று இளித்தார் சர்தார்ஜி !

**

சர்தார்ஜிக்குப் பிடிச்ச டி.வி. !

சர்தார்ஜி சங்கதிகள் ரெண்டு :

1. சர்தார்ஜிக்குப் பிடிச்ச டி.வி.

இந்தியாவில் கருப்பு-வெள்ளை டி.வி.கள்தான் இருந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். சில கலர் டி.வி.மாடல்கள் அப்போதுதான் மார்க்கெட்டில் வர ஆரம்பித்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் . . . .

டெல்லியில் ஒரு சர்தார்ஜி அவசர அவசரமாக ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கடைக்குள் நுழைகிறார். வரவேற்ற விற்பனையாளரிடம் கேட்கிறார்: “ ஒங்ககிட்ட கலர் டி.வி. இருக்கா?“

விற்பனையாளர்: என்ன சார் இப்படிக் கேட்டுப்புட்டீங்க! எங்ககிட்ட நெறய மாடல் இருக்கு சார்! ஒங்களுக்கு எந்த மாடல் வேணும்?

சர்தார்ஜி: யோவ்! மாடலாவது மண்ணாவது! பச்சை கலர்ல ஒரு டி.வி. எடு பாக்கலாம்!
விற்பனையாளர் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்: `ஐயய்யோ! கால நேரத்துல இவனப்போயி கடைக்குள்ள விட்டுட்டேனே..!`

**

2. குட்டி சர்தாரின் ராக்கெட்டு !

அப்பா சர்தார்ஜிக்குத் தன் பத்து வயதுப் பிள்ளையான குட்டி சர்தாரிடம் அளவு கடந்த பாசம். தன் பிள்ளையைப்போல புத்திசாலி எவனுமில்லை என்கிற நினைப்பு, ஒரு மதமதப்பு! ஒரு இரவு அப்பா சர்தார்ஜியும், குட்டி சர்தாரான மகனும் வீட்டில் சாப்பிட உட்காருகிறார்கள். மனைவி (சர்தாரிணி) உணவு பரிமாறுகிறார்.

சாப்பிடாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான் குட்டி சர்தார். அப்பா சர்தார்ஜி கேட்கிறார்: அடேய், என் செல்லமே! என்னடா தட்டைப் பாத்துகிட்டு ஒரே யோசனை? சாப்பிட்றா!

குட்டி சர்தார் (மகன்): அப்பா! எனக்குக் கொஞ்ச நாளாவே ஒரு சிந்தனை..

அப்பா சர்தார்ஜி (உற்சாகமாகி): சபாஷ்! சொல்லுடா! நீ இப்பிடி ஏதாவது கெட்டிக்காரத்தனமா சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும்டா..!

குட்டி சர்தார்: கண்ணுக்குத் தெரியாத செவ்வாய்க் கிரஹத்துக்குப்போயி ராக்கெட் விட்டு டயத்தை வேஸ்ட் பண்றானுங்களே… கண்ணுக்குப் பளிச்சுன்னு தெரியற சூரியனுக்கு ஒரு ராக்கெட் விட்டா என்ன? சட்டுனு போயிச் சேர்ந்திரலாம்ல!

சர்தார்ஜி: குஷியாகி, செல்லமாகப் பையனின் முதுகில் தட்டி “பொடிப்பயலே! என்னடா இப்பிடிக் கேட்டுப்பிட்டே! பகல்ல பாக்குறீல்ல..சூரியன் எவ்ளோ சூடா தகிக்குது . அதுகிட்ட ராக்கெட்டு போச்சுன்னா அது எரிஞ்சு சாம்பலாப் போயிரும்டா!

குட்டி சர்தார்(யோசனையுடன்): அப்டின்னா, இப்பிடிச் செஞ்சா என்ன? சூரியனுக்கு ராத்திரியில ராக்கெட் விடலாம்ல!

சர்தார்ஜி (குழப்பத்துடன்): டேய், புத்திசாலிப் பயடா நீ! எனக்கே இப்பிடியெல்லாம் தோணாமப் போயிருச்சே!

**

சர்தார்ஜியும் இங்கிலீஷும் !

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சர்தார்கள் அல்லது மரியாதையாக சர்தார்ஜிகள் என்றழைக்கப்படும் சீக்கியர்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இவர்கள் வசித்தாலும் பஞ்சாப்தான் இவர்களது தாய்மாநிலம். வீரத்திற்குப் பேர்போனவர்கள். இந்திய ராணுவத்தின் சீக்கியப்படை பிரிட்டிஷ் காலத்திலிருந்தே வீரதீரச் செயல்களுக்குப் புகழ்பெற்றது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கொடியின் கீழே ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்டவர்கள். கடும் உழைப்பாளிகள். பஞ்சாபில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள். சீக்கியர்கள் முரட்டு சுபாவம் உடையவர்களாகத் தோன்றினாலும், பழகினால் ஆழ்ந்த நட்புக்குரியவர்கள். அன்புக்குக் கட்டுப்படுபவர்கள். பொதுவாக உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள்.

இவர்களிடம் இன்னொரு சுவாரஸ்யமான குணமும் உண்டும். தங்களைத் தாங்களே கிண்டல் செய்துகொள்ளும் குணம். மற்றவர்கள், குறிப்பாக நன்கு பழகியவர்கள் தங்களை உரிமையோடு நாலுபேருக்கு முன்னே கேலி செய்தாலும் அதை விளையாட்டாக ஏற்றுக்கொள்வார்கள். ஒரு அசட்டுத்தனம் கலந்த நகைச்சுவை உணர்வு, பொதுவாக அவர்களிடம் காணப்படுகிறது. சில சமயங்களில் அசட்டுத்தனமாகவோ, அப்பாவித்தனமாகவோ ஏதாவது இடக்குமுடக்காகப் பேசி வம்புகளில் மாட்டிக்கொள்வதுண்டு. அல்லது பொது இடங்களில் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகி வழிவதுண்டு. இவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் `நார்மல்`. ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதனைக் கடந்துவிடுவார்கள். நாமும் இவர்களை `லைட்`டாக எடுத்துக்கொள்ளப் பழகிவிடுவோம். மொத்தத்தில் சமூகச் சந்திப்புகளில் இவர்கள் lively characters!

இவர்களுடைய அசட்டுத்தனங்களைப்பற்றி, அப்பாவி வழியல்கள்பற்றி வடநாட்டில் கிண்டல் கதைகள்/ஜோக்குகள் நிறைய உலவுகின்றன. அவைகளைப் பிரபலப்படுத்துபவர்களும் சிலசமயங்களில் இவர்களேதான்! இவற்றில் ஒன்றிரண்டை பார்க்கலாமே.

சர்தார்ஜியும் இங்கிலீஷும் !

சர்தார்ஜிகளுக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக்கு! இந்தப் பின்புலத்தில் இந்தக் கதை:
பஞ்சாபில் ஒரு ஆரம்பப்பள்ளிக்கூடத்தை ஆய்வுசெய்ய ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார். பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்தித்தபின் பள்ளிக்கூடத்தை ஹெட்மாஸ்டருடன் சேர்ந்து பார்வையிடுகிறார். வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்தாவது வகுப்பில் ஒரு சர்தார்ஜிதான் ஆங்கில ஆசிரியர். பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார். இன்ஸ்பெக்டரும் தலைமை ஆசிரியரும் (அவரும் ஒரு சர்தார்ஜிதான்!) மறைந்திருந்து கவனிக்கின்றனர்.

சர்தார்ஜியான இங்கிலீஷ் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்: NATURE
`நேச்சர்` என்று இங்கிலீஷில் எழுதிவிட்டு அதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்குகிறார்:
”Na tu re . ந.. டூ.. ரே ! நட்டூரே.. திருப்பிச் சொல்லுங்கடா பசங்களா..! நட்டூரே !”. மாணவர்கள் திருப்பிச் சொன்னார்கள்: ‘நட்டூரே!`

இன்ஸ்பெக்டருக்கு ஒரே அதிர்ச்சி. என்ன! `நேச்சர்` என்கிற ஆங்கில வார்த்தையை ‘நட்டூரே` என ஆசிரியர் தப்பாக உச்சரிக்கிறார். அப்படியே சொல்லியும் கொடுக்கிறாரே! ஹெட்மாஸ்டரைக் கோபமாக பார்த்து “யோவ்! என்னய்யா இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கறான் இந்த வாத்தியாரு! வாரும் உமது ரூமிற்குப் போகலாம். இந்த ஆசிரியரை அங்கே கூப்பிட்டு ஒரு விடு விடுய்யா!“ என்று சீறிவிட்டு ஹெட்மாஸ்டரின் அறைக்குத் திரும்புகிறார்.
ஹெட்மாஸ்டரின் அறைக்கு அழைக்கப்பட்டார் அந்த சர்தார்ஜி-இங்கிலீஷ் ஆசிரியர். தலைமை ஆசிரியரும் ஒரு சர்தார்ஜிதானே. அவர் இங்கிலீஷ் ஆசிரியரான சர்தார்ஜிக்கு, வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் முன்னால் கடும் எச்சரிக்கை விடுத்தார்: ‘’ஒங்களத் திருத்திக்குங்க! சரியா, முறையா இங்கிலீஷ் பாடம் எடுங்க! இல்லாட்டி ஒங்களுக்கு ’’ஃபுட்டூரே’’-யே இல்லாம செஞ்சிருவேன்..ஜாக்கிரதை !“

இதைக்கேட்ட இன்ஸ்பெக்டருக்குத் தலை சுற்றியது. அந்த சர்தாஜிக்கிட்டே (இங்கிலீஷ் ஆசிரியர்கிட்டே), இந்த சர்தார்ஜி -தலைமை ஆசிரியர்-இப்போ என்ன சொன்னாரு.. யோசித்தார். புரிந்தது! ‘’Future’’ என்கிற இங்கிலீஷ் வார்த்தையை ஃப்யூச்சர்’ என்று உச்சரிப்பதற்கு பதிலாக “ஃபுட்டூரே’’ என்று சொல்கிறார் தலைமை ஆசிரியர்! “ஒங்களுக்கு ஃப்யூச்சரே (எதிர்காலமே) இல்லாம செஞ்சிடுவேன்“ என்பதற்குப் பதிலாக “ ஃபுட்டூரே“-யே இல்லாம செஞ்சிடுவேன்“ என்கிறார். ஹெட்மாஸ்டரோட இங்கிலீஷே இந்த லட்சணத்தில இருந்தா, யாரைச் சொல்லி என்ன புண்ணியம்! ஹே, ராம்! எங்கடா வந்து நம்ம மாட்டிக்கிட்டோம்!’’ என்று தலையில் அடித்துக்கொண்டார் ஆய்வுக்கு வந்திருந்த அந்த இன்ஸ்பெக்டர்.

(இந்தக் கதையை எனக்குச் சொன்னதே டெல்லியில் ஒரு சர்தார்ஜி-நண்பர்தான் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள் !)
மேலும் சில சர்தார்ஜி ஜோக்குகள் அடுத்த பதிவில்…

**

ஹ்ம்..! ஒங்க பேரு ?

நாடு ரொம்பத்தான் வேகமா முன்னேறிகிட்டிருக்கு. எதத்தான் ஆன்–லைனில் ஆர்டர் செய்வது என்கிற விவஸ்தையே ஜனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஏகப்பட்ட ஆன்–லைன் சேல்ஸ் கம்பெனிகள், மழைக்குப்பின் முளைவிட்டு மண்டும் காளான்கள் போலப் புறப்பட்டிருக்கின்றன. போட்டிபோட்டுக்கொண்டு தூசி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடுக்கும் ராமதூதர்களாய், டூ-வீலரில் அலைந்து திரிந்து, நம் வீட்டுக் கதவுகளில் மோதி, தலையைக் கோதி நிற்கும் இளைஞர்கள். ஒரு தேசம் என்பதற்கான மரபுவழி அடையாளமான, மக்கள், இனம், சமூகம், மொழி, கலாச்சாரம் என்கிற சிந்தனை வடிவமெல்லாம் கலைந்துக் காலவதியாகி நாளாகிவிட்டது. நாடே ஒரு மாபெரும் இயந்திரமாக இரவு, பகலாக எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், டெல்லி போன்ற மெகாநகரத்தில் இப்பவெல்லாம் நம் வீட்டிலேயேகூட, சும்மா அமைதியாகக் கொஞ்ச நேரம் விழுந்து கிடப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. அரைமணி-முக்கால் மணிக்கு ஒருமுறை காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்து பார்த்தால் தமிழ்ப் படத்தில் புதுசா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வில்லன் போல் ஒருவன் நின்றிருப்பான் கையில் கடுதாசோ, கவரோ, பாக்கெட்டோ, ரெஜிஸ்டரோ- என்ன கன்ராவியோ? ஒருமுறையான பயிற்சி இல்லாத, வீட்டிலுள்ள பெண்களை, பெரியவர்களை எப்படி அணுகவேண்டும், பேச வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத ஜன்மங்கள். தினம்தினம் ஏதோ ஒரு வகையில், இந்த பேஜார்ப் பயல்களை tackle செய்துதான் ஆகணும்!

குறிப்பாக, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தர்மபத்தினி வெளியே சென்றிருக்கும் நேரத்தில், வீட்டில் தனியாகக் கொஞ்சநேரம் இருக்கலாம், பிடித்தமான பழைய பாடல்களை அசைபோடலாம் என்றெல்லாம் கற்பனைப் படகில் சவாரி செய்துகொண்டிருப்பவர்தான் நீங்கள் என்றால், உங்களைப்போன்ற வடிகட்டின அசடு வேறு யாருமில்லை. இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் காலை நேரம். ஒரு Black Coffee-ஐப் போட்டு கப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, தனியாக இருப்பதின் அலாதியான சுதந்திரத்தை அனுபவிப்பதாக பாவித்துக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நெட்டில், ஆழ்வார்கள், ஞானிகள், ஆண்டவன் என ஆனந்தமாயிருந்தேன். பொறுக்குமா அவனுக்கு? அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்தால், `என்ன இது! சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா? பாண்ட்டு, ஷர்ட்டு, ஒரு கையில் பாட்டில், இன்னொரு கையில் ஏதோ ஒரு ரெஜிஸ்தர்!

கதவைத் திறந்த என்னைப் பார்வையால் அளவிட்டான். `வீட்ல கூலர் எங்க இருக்கு?’ என்றான்
என்னமோ என் வீட்டில் கூலரை வைத்துக்கொண்டு, இவன் பாட்டிலோடு பாட்டுப் பாடிக்கொண்டு எப்ப வருவான்னு ஏங்கிகிட்டு நான் இருக்கிற மாதிரி!

`எதுக்கு`? கேட்டேன்.

பாட்டிலை (உள்ளே வெண்மையான திரவம்) ரஜினிகாந்த் ஸ்டைலை ஞாபகப்படுத்தும் வகையில் சுழற்றிக்கொண்டே, வேறெங்கோ பார்த்துக்கொண்டு `கொசு அதிகமாயிருச்சு. மருந்து அடிக்கணும்!`

நம்ம ஆரோக்யத்திலதான் இவன்களுக்கு என்ன அக்கறை…அடடா! கேஜ்ரிவால் சர்க்காரா நடக்குது.. ஹ்ம், பரவாயில்ல!

`கூலர் இந்த வீட்ல இல்லப்பா!` என்றேன்.

`நெனச்சேன் அப்பவே! ஒங்கிட்ட இதல்லாம் எங்க இருக்கப்போகுது?` என்பது மாதிரி என்னை அலட்சியம் செய்து, எதிர்வீட்டில் கொசுவடிக்க ஆயத்தமாகி பெல்லடித்தான்.

ஹூம்..! வந்துர்ரானுங்க கால வேலைல காரணத்தோட! உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா? மறுபடியும் இந்த பாழாய்ப்போன காலிங் பெல்.
கதவைத் திறந்தவுடன் முகத்தில் கடுகடுப்புடன் ஒரு பார்வை. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. நகரத்தையே கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் இந்த வெயில் யாரையும் எளிதாகச் சூடேற்றிவிடும்.

அவனிடமிருந்து பாய்கிறது கேள்வி: ”ஹ்ம்! ஆப் கா நாம்?” (ஒங்க பேரு?). அவன் கேட்ட விதமும் தொனியும் `ஏதோ, எனக்குப் பெயர் வைத்ததின் மூலம் எங்கப்பா பெரிய தவறு செய்துவிட்டார்` என்று சுட்டிக்காட்ட வந்தவன்போல் இருந்தது. என் வீட்டு வாசலில் நின்று என்னையே உருட்டிப் பார்க்கிறான்..இவனையெல்லாம்…! பதில் ஏதும் சொல்லாமல் கையை நீட்டினேன். ஒரு கவரை அலட்சியமாக அதில் திணித்தான். அப்போலோ ஹாஸ்பிடல் க்ரூப்-பிலிருந்து வந்திருக்கிறது. ஏதோ மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பேப்பர் போலும்.

இது எதற்கு என்னிடம் வந்திருக்கிறது? நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு? அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே? அவருடைய ஸ்டைலே வேறதானே? வழியே தனி வழியல்லவா! நான் சிந்தனைவண்டியை நகர்த்திக்கொண்டிருக்க, அவன் பொறுமையில்லாமல் `பேரச்சொல்லுங்க!` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது! நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன்? எனது கோபம் டெல்லி மதியத்தின் 45 டிகிரியை நேரடியாக வம்புக்கு இழுத்தது.

”இத எடுத்துக்குட்டு இங்க வந்து பெல்லடிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றேன் அதிசூடாக.

என் சீற்றத்தை எதிர்பார்க்காதவனாய் சற்றுத் தடுமாறி, `இது ஒங்களுக்குத்தான் சார்!` என்று மேலும் கடுப்பேத்தினான். ஒண்ணு-ரெண்டு பத்துக்குமேல கத்துக்காமலேயே வேலக்கு வந்துட்டானா?

தலைக்குமேல் காண்பித்துக்கேட்டேன் (நிலைப்படிமேலே “70-B” என்று என் வீட்டு எண் கம்பீரமாக நின்றது) : “இது என்ன நம்பர்-னு புரியுதா? “

அவன் செம்மறி ஆடுபோலே தலையாட்டி “70-B சார்!” என்றான்.

“இந்தக் கவர் 70-B -க்குத்தான் வந்திருக்கா?” முகத்தில் இடிக்காத குறையாக அவன் முன்னே நீட்டி நாகப்பாம்பாய்ச் சீறினேன்.

பதறிப்போய் வாங்கிப் பார்த்தான். “கேதார் நாத் பாண்டே, 71-B” … என்றிருந்ததை அப்போதுதான் பார்த்திருக்கிறான்.
“சாரி சார்!” என்று வழிந்துவிட்டு, ஒன்றும் ஆகாததுபோல திரும்பி, எதிர்த்த வீட்டு பெல்லை அமுக்கினான்.

நான் கோபம் தணியாமல், ”இந்தமாதிரி வீட்டு நம்பரைக்கூடப் பார்க்காமல் யார் வீட்டுக் கதவையாவது தட்டி, ஒருத்தரோட முக்கியமான டாக்குமெண்ட்டை வேறு ஒருத்தர்ட்ட கொடுத்துட்டுப் போறதுதான் கூரியர் டூட்டியா? இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம்?” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். அதற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்!” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி! உள்ள போயிருங்க சார்.` என்பது போன்ற கெஞ்சல்!

சரி, ஒழி! என்று அவனை எதிர்த்தவீட்டுக்காரரிடம் ஒப்படைத்து உள்ளே வந்தேன். டேய், பசங்களா! இன்னிக்கு இது போதும்டா. வீட்ல கொஞ்சம் நிம்மதியா மனுஷன இருக்கவிடுங்க..ஒங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தேன். ஆறிப்போயிருந்த கொசுறுக் காஃபியை எடுத்து ஆயாசத்துடன் வாயில்
விட்டுக்கொண்டேன்.

**