கொட்டவா.. இன்னும் கொட்டவா ?

வருஷத்தில் பாதிநாள் தண்ணீர் தண்ணீர் என்று தவிக்கிறோம். மீதி நாட்களில், தண்ணீரில் மூழ்கியே செத்துவிடுகிறோம் !

இது என்ன, ஏதாவது புதுப்பட வசனமா? இல்லை சஞ்ஜிப் பானர்ஜியும், ஆதிகேசவலுவும் சேர்ந்து அலறிவைத்தது. எந்தத் தேள் கொட்டியது? யார் இந்த மஹானுபாவர்கள்? மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜுகள்தான். பொறுக்கமுடியவில்லை போலிருக்கிறது. வாயிலிருந்து கொட்டிவிட்டது வார்த்தை. ஹைகோர்ட்டு வளாகத்திலும் தண்ணி புகுந்துவிட்டதோ என்னவோ? ஆக்‌ஷன் எடுக்காவிட்டால்.. நீதி அரசர்கள் சென்னை கார்ப்பரேஷனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். கார்ப்பரேஷன் என்பதென்ன, பொட்டிக்கடைதானே.. பெருவணிகமான அரசுக்கு எச்சரிக்கை விடுத்துப்பார்ப்பதுதானே?

In Chennai, rains stop, but problems continue to persist - Rediff.com India  News

சமூகநீதிக்குப் பேர்போன அரசு என்ன சொல்கிறது? ’சமரசம் உலாவும் இடம்.. நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே..!’ – என வெள்ளக்காடாய் மாறிவிட்ட சென்னையின் கோலாகலத்தைப் பார்த்து, கோவிந்தராஜன் மாதிரிப் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறதா? அது சொன்னது இது: மழையோ, வெள்ளமோ எங்களுக்கு அதெல்லாம் தெரியாது; முன்னாடி ஆண்டவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்..

கொட்டிக்கொட்டிப் பேசி.. கதிகலங்கவைக்கும் வானம்.

கார் மிதக்குது, கட்டடம் மிதக்குது,  ஊரே மிதந்து ஓடமா ஆடுது.

இப்படியே போனா..

விடிஞ்சிரும் !

**

கிரிக்கெட்: சென்னை டெஸ்ட்டின் நடுவே..

இந்தியாவின் கடந்த மாத ஆஸ்திரேலிய சாதனைகளைக் கொஞ்சம் மறந்துவிட்டு எதிர் நின்று ஆடும் எதிரியைக் கவனிப்போம். ஜோ ரூட். இங்கிலாந்து கேப்டன். தன் கேரியரின் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். சில வாரங்கள் முன் ஸ்ரீலங்காவிற்கு எதிராக 228, 186  என ஸ்கோர்கள். இந்தியத் தொடரில் முதல் மேட்ச்சிலேயே 218 ! அதகளம். இருந்தும் கோஹ்லியைப்போல் அட்டகாச ஆர்ப்பரிப்புகளையோ, முக விசேஷங்களையோ காண்பிக்காமல் அமெரிக்கையான இரட்டை சதம். இவர் பேட்ஸ்மன்!

எதிர்பார்த்ததைப்போலவே கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. முதலில் ஆடுகின்ற இங்கிலாந்து ரூட்டின் அபார இன்னின்ஸின் துணையோடு 555/8. இஷாந்த், பும்ரா, அஷ்வின் dead pitch-லும் நன்றாக வீசினார்கள். நதீமுக்கும், சுந்தருக்கும் சோதனைக்காலம். ரூட் சொன்னபடி இங்கிலாந்து 600+ வரலாம். அதற்குப்பின் இந்தியா ஆடுகையில், இதுவரை பேட்டிங் பிட்ச் ஆக இருந்த சேப்பாக், நிச்சயமாக பௌலிங் பிட்ச்சாக மாறிவிடும்! இந்தியர்கள் ஆர்ச்சர், ஆண்டர்சனிடம் அடி வாங்கி, இங்கிலாந்தின் கத்துக்குட்டி ஸ்பின்னர்களுக்கெதிராகக் கட்டைபோட முயற்சித்து, திணறித் திக்கி, விக்கெட்டுகளைப் பறிகொடுத்து…  கதைபோகும் போக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் வெற்றி அல்லது, சேப்பாக்கின் 3,4,5 நாள் பிட்ச்சில் இந்தியா சிரத்தையாகத் திறமையாக பேட்செய்ய முடிந்தால், ’டிரா’வுக்கு சான்ஸ்.  

ஒரேயடியாக gloomy picture அல்ல.. இந்திய பேட்டிங்கில் யாராவது ஓரிருவர் ஒழுங்காக ஆடிக் காண்பிப்பார்கள் என நம்புவோம்!

In terms of individual milestone,  Ishant Sharma is approaching 300 test wickets, which is remarkable.

**

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் .. மோதலே வாழ்க்கை!

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே சிதறடித்துத் திரும்பியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபோதையில் இன்னும் இருக்கக்கூடும். நிறைய குளிர்நீர் பருகி, தலையிலும் கொஞ்சம் ஊற்றிக் குளிர்வித்துக்கொண்டு அவர்கள் சேப்பாக் ஸ்டேடியத்திற்குள் நுழைவது உசிதம். அங்கே வேறொரு எதிரி, பலமானவனே,  முஷ்டியை உயர்த்திக் காத்திருக்கிறான். இந்தியாவில் நடைபெற உள்ள 4 டெஸ்ட்டுகள். உலகக்கோப்பைக்கான போட்டிகள் என்கிற அழுத்தமும் இரு அணிகளின் மீது. அதீத கவனத்துடன் இந்தியா சென்னையில் துவங்கினால்தான்,  முன்னேறலாம்.  தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலியா விலகிவிட்டபடியால் (கொரோனா பயம்), டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனலில் நுழைவதற்கான வாய்ப்பு அதற்கு அரிதாகிவிட்டது. ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ’முதல் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப்’ இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து தகுதி பெற்றுவிட்டது. அதைச் சந்திக்கப்போகும் அணி இந்தியாவா, இங்கிலாந்தா என்பதே இப்போது கேள்வி.

இங்கிலாந்து அணியில்  ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (Jos Butler), டான் லாரன்ஸ் (Dan Lawrence), பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) என சுழல்பந்துவீச்சைச் சரியாக ஆடும் வலிமையான பேட்ஸ்மன்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர், க்றிஸ் வோக்ஸ் (ஐபிஎல் அனுபவமும்), ஸ்டூவர்ட் ப்ராட் (Stuart Broad) ஆகிய பௌலர்கள் கடைசிவரிசையில் நின்று ரன் சேர்க்கும் திறனும் உடையவர்கள். England’s tail could be long. Going to be quite a headache for Indian bowlers.  இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தால், முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 400+ க்கு கொண்டு செல்ல முயற்சிக்கும். நமது வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்களின் கையில் (கூடவே இந்திய ஃபீல்டர்கள் கையிலும்) இருக்கிறது, இங்கிலாந்து எவ்வளவு தூரம்  சென்னையில் ஆட்டம்போடமுடியும் என்பது.  

Washington Sundar

4 மேட்ச் டெஸ்ட் தொடரில் இந்திய அணி – குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட்டில் (5-9/2/21) இறங்கி ஆடப்போகும் 11-  எப்படி இருக்கும்? காயம் போன்ற ப்ரச்னை ஏதும் குறுக்கிடவில்லையெனில், முதல் 6 பேட்ஸ்மன்கள் ரெடி: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் (Shubman Gill), புஜாரா, கோஹ்லி, ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர். (ஹர்தீக் பாண்ட்யா ஆடுவாரா, இடமிருக்குமா என்பது சந்தேகம். ஏனெனில், காயத்திலிருந்து விடுபட்டிருக்கும் அவர் இப்போது பௌலிங் போடுவதில்லை).  7-ல் Allrounder/Offspinner அஷ்வின்,  9-ல் இடதுகை ஸ்பின்னர்/chinaman bowler குல்தீப் யாதவ். 10, 11-ல் வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprit Bumrah). கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்.

Allrounder Axar Patel

இந்தியாவின் டாப் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாதான் காயம் காரணமாக வெளியே உட்கார்ந்திருக்கிறாரே. என்ன ஒரு கஷ்டம்! அதனால், 8-வதாக இறங்கப்போகும் ஆல்-ரவுண்டர் யார் என்பதே கோஹ்லியின் தலையைப்போட்டு அரிக்கும் கேள்வி.  ’நான் பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன். துணைக் கேப்டனாக பின்னால் நின்றுகொள்வேன்’ என்கிறார் ரஹானே. கோஹ்லி, சாஸ்திரி ஜோடியின் முடிவு என்னவாக இருக்கும்?  ஆஸ்திரேலியாவுக்கெதிராக பேட்டிங்கிலும் நொறுக்கித் தள்ளிய ஆல்ரவுண்டர்கள் ஷர்துல் டாக்குர் (Shardul Thakur), வாஷிங்டன் சுந்தர் -இருவரில் ஒருவர்? அல்லது முதன்முதலாக டெஸ்ட் ஆடவிருக்கும் குஜராத்தின் 27-வயது ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்?

இங்கிலாந்து அணியில் 3 இடதுகை பேட்ஸ்மன்கள் இருப்பதால், இடதுகை ஸ்பின் பௌலர்களை களத்தில் இறக்கி நெருக்க, இந்தியா எத்தனிக்கும். (சமீபத்தில் ஸ்ரீலங்காவின் இடதுகை ஸ்பின்னர் எம்புல்தேனியாவை (Lasith Embuldenia) சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது கவனத்திற்கு வந்திருக்கிறது). முதல் சாய்ஸ் இடதுகை சுழல்- குல்தீப் யாதவ். இன்னொரு இடதுகை ஸ்பின்னரை கோஹ்லி விரும்பினால்,  அக்‌ஷர் பட்டேல் உள்ளே வருவார்.  அஷ்வின், குல்தீப் என இரு ஸ்பின்னர்கள் போதும். ஐந்தாவது பௌலராக ஒரு மீடியம்-பேஸரே சரி என முடிவெடுத்தால், ஷர்துல் டாக்குர் அணிக்குள் வருவார். ஆஸ்திரேலியாவில் தூள்கிளப்பிய முகமது சிராஜை பெஞ்சில் உட்காரவைப்பதும் சரியில்லைதான். டாக்குர் பௌலிங்கோடு, தன் பேட்டிங் திறனையும் ப்ரிஸ்பேன் டெஸ்ட்டில்  வெளிச்சம்போட்டுக் காண்பித்தவர். அந்த அளவுக்கு  சிராஜால் முடியாது என்பதால், டாக்குரை கோஹ்லி தேர்ந்தெடுக்கலாம்.

நாளை (5 th Feb)காலை 9 மணிக்கு டாஸிற்குப் பிறகுதான் இறுதி 11 தெரியவரும். யார் யார் இந்திய அணிக்குள்ளே வந்தாலும், ஒரு தேர்ந்த அணியாக சேர்ந்து ஒழுங்காக ஆடி இங்கிலாந்தைக் காலிசெய்யவேண்டும். அதற்கு, கோஹ்லியின் கேப்டன்சி ரஹானேயின் பக்கத்திலாவது வரணும். ரசிகர்களில் பலர், அடடா.. ரஹானே கேப்டனாகத் தொடரக்கூடாதா.. என்றும் நினைக்க ஆரம்பித்திருப்பார்கள்!

**

விட்டு விளாசிய விண்டீஸ் !

 

நேற்று (15/12/19) சென்னையில், வெஸ்ட் இண்டீஸ் தன் பழைய ஸ்வரூபத்தைக் காண்பித்து இந்தியாவை மிரட்டியது. கரன் போலார்ட் (Kieron Pollard) தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி உயிரூட்டம் பெற்றுவருகிறது – குறிப்பாக short format -களில், என்பதில் சந்தேகம் தேவையில்லை.

வெகுநாட்களுக்குப் பின் சென்னைக்கு வந்தது சர்வதேச கிரிக்கெட். சில நாட்களாகவே மழையின் தாக்கத்திலிருந்தது சென்னை. சேப்பாக் மைதானத்திலும் ஒரே கொட்டாகக் கொட்டி, ரசிகர்களின் மானத்தை வாங்குமோ என அஞ்சியிருந்த நிலையில்,  வருண்தேவ் அப்படியெல்லாம் ஒன்றும் விஷமம் செய்யாமல் விலகியே இருந்தான்!  அவன் கருணையே கருணை.. ஒரு கடுமையான ஒரு-நாள் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க முடிந்தது. முடிவு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டபோதிலும்.

வெஸ்ட் இண்டீஸினால் முதல் பேட்டிங்கிற்கு அனுப்பப்பட்ட இந்தியா, சேப்பாக்கின் ஸ்லோ பிட்ச்சில், தன் இஷ்டத்துக்கு ஷாட் அடிக்கமுடியாமல் தடுமாறியது. முதலில் ராகுலையும், அடுத்து கேப்டன் கோஹ்லியையும் தூக்கிக் கடாசினார் வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரெல்  (Sheldon Cottrell). அவுட் ஆக்கியபின் ஒரு சல்யூட் அடித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். அவரது கொண்டாட்ட ஸ்டைல்! நின்று ஆடமுயன்ற ரோஹித் ஷர்மா, 36 ரன்களே எடுத்து ஜோஸஃபின்  (Alzarri Joseph) துல்லிய வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்துத் திரும்பினார். ஃபார்மில் இல்லாததால், எல்லோருடைய வாயிலும் விழுந்து புறப்படும் இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மன் ரிஷப் பந்த் இப்போது க்ரீஸில் ! கூடவே வலதுகை டாப்-ஆர்டர் பேட்ஸ்மன் ஷ்ரேயஸ் ஐயர். பெரிசுகள் வேகமாக விழுந்துவிட்ட இக்கட்டான சூழலில், இருவரும் ஒருவருக்கொருவர் கலந்துபேசி, எழும்பாத வேகப்பந்துகளுக்கெதிராக வியூகம் அமைத்து, நிதானமாக நின்று ரன் சேர்த்தது ரசிகர்களுக்குக் குஷியூட்டியது. நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தபின், முதலில் ஐயர் (70), பிறகு பந்த் (71) வெஸ்ட் இண்டீஸினால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.  தல தோனியின் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் பந்த்! பந்த்! எனக் கோஷமிட்டது ரிஷப் பந்திற்கு ஆச்சரிய அனுபவமாயிருந்திருக்கும்.

இந்த நிலையில்,  ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (Shivam Dube)-ஐ கோஹ்லி இறக்கியிருக்கலாம். ஆனால் அனுபவசாலியான கேதார் ஜாதவை அனுப்பினார். சரியான முடிவு. ஜாதவ், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து ஒன்று, இரண்டு என விரட்டி ரன் சேர்த்ததால் ஸ்கோர் கௌரவமான நிலைக்கு வந்து சேர்ந்தது. கேதார் விழ, கூடவே ஜடேஜா ஒரு சர்ச்சையான ரன் -அவுட்!  முதலில் நாட் அவுட் என்ற தென்னாப்பிரிக்க அம்பயர்  ஷான் ஜார்ஜ், போலார்டின் அழுத்தத்தில் மூன்றாவது அம்பயரிடம் போக, கோஹ்லி கொதித்தார்! ஆனால் அவுட் அவுட்தானே.. ஒரு சமயத்தில் 240-ஐத் தாண்டாது என்றிருந்த நிலை. 287 / 8 என்பது, இந்தியா இந்த பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸைக் காலிசெய்யப் போதுமானது என்பதே அனைவரின் யூகமும். ஆனால்..  நேற்று நடந்தது வேற !

Shimron Hetmyer

 வெஸ்ட் இண்டீஸ் மாலை-இரவுப் பகுதியில் ஆட ஆரம்பிக்கையில்,  நிலைமை மாற்றம் கண்டது. ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் வெஸ்ட் இண்டீஸின் அனுபவம் குறைந்த பேட்ஸ்மன்களை அடித்துத் தூக்கிவிடுவார்கள் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ற ஃபீல்டிங் வியூகங்களும் அமைக்கப்பட்டு ஆடினர்.  ஆரம்பத்தில் சுனில் ஆம்ப்ரிஸ் (Sunil Ambris) தீபக் சாஹரின் (Deepak Chahar) மந்தகதிப் பந்தில் காலியானாரே தவிர, அடுத்து நின்ற ஜோடி உஷாரானது.  வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 3-ஆன ஷிம்ரன் ஹெட்மயரும் (Shimron Hetmyer) , க்ரீஸில் இருந்த ஷாய் ஹோப் (Shai Hope) -உம் சேர்ந்து, இலக்கை நோக்கிய பாதையை சீர்செய்துகொண்டு ஆடினர். இருவரும் பேட்டிங்கில் நேர்-எதிர் அணுகுமுறை கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஹோப், வழக்கம்போல் sheet anchor ரோலில் , அவசரம் காட்டாது, பௌண்டரி தவிர்த்து,  ஓடி, ஓடி ரன் சேர்த்தார். ஆனால், ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹெட்மயர், விரைவிலேயே மூன்றாவது, நாலாவது கியருக்கு மாற்றினார் வண்டியை. ஒரு பக்கம் குல்தீப் யாதவ், மறுபக்கம் ஜடேஜா என ஸ்பின் போட்டு ரன் கொடுக்காமல் நெருக்கப் பார்த்தார் கோஹ்லி. ஹெட்மயரிடம் அவருடைய பருப்பு வேகவில்லை. ரன் கொடுக்க மறுத்து இறுக்க முயன்ற ஜடேஜாவின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராகத் தூக்கி சிக்ஸர் விளாசினார் ஹெட்மயர். அடுத்த பந்திலும் அசராமல் ஒரு மிட்-விக்கெட் ஸிக்ஸ்! கூட்டம் மிரண்டது. என்னடா ஆச்சு இன்னிக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு! கோஹ்லியின் நெற்றியில் கவலைக் கோடுகள். முகமது ஷமியையும், தீபக் சாஹரையும் மாற்றி மாற்றி நுழைத்து, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிக்கொண்டிருந்த ஹோப்-ஹெட்மயர் ஜோடியைப் பிரிக்கக் கடும் முயற்சி செய்தார் இந்தியக் கேப்டன். வேகம் காட்டிய ஷமியையும் அனாயாசமாக பௌண்டரி விளாசி, தான் ஃபார்முக்குத் திரும்பிவிட்டதை உறுதி செய்தார் ஹெட்மயர். இந்திய அணிக்கு வயிறு கலங்கியது.  பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் போலார்ட் மற்றும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குதூகலமாகினர். ரசிகர்கள், இந்திய பௌலர்கள் அடிவாங்கியதால் முதலில் அயர்ந்தாலும், பின் பகுதியில் இளம் ஹெட்மயரின் ஆக்ரோஷ பேட்டிங்கை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்த பக்கம், பொறுமையே உருவாக ஷாய் ஹோப், பௌண்டரி, சிக்ஸர்களை மறந்தும்கூட அடித்து அவுட்டாகிவிடக்கூடாது என, ஒன்று, இரண்டு என்று சென்னையின் இறுக்கமான இரவில் ஓடி, ஓடி வியர்த்துக்கொண்டிருந்தார். ஆவேசமாக பேட்டை சுற்றிக்கொண்டிருந்த ஹெட்மயரின் ஜெர்ஸியும் தொப்பலாக வியர்வையில் நனைந்து பளபளத்தது. இடையே புது பேட் மாற்றிக்கொண்டு இந்திய பௌலிங் மீதான தன் தாக்குதலைத் தொடர்ந்தார் அவர்.

களத்துக்கேற்ற வியூகமும், அசாத்திய திறமையும் காண்பித்த பேட்டிங்கை, வெஸ்ட் இண்டீஸிடமிருந்து கேப்டன் கோஹ்லி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் அடிக்கடி விழித்துக்கொண்டிருந்ததில், முகவாயைத் தடவிக்கொண்டிருந்ததில் தெரிந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபேயை அவர் பௌலிங்கில் செலுத்தியபோதெல்லாம் வெஸ்ட் இண்டீஸிடமிருந்து பௌண்டரிகள், சிக்ஸர்கள் அலட்சியமாக எகிறின. போதாக்குறைக்கு ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள்.. யாரு? ஹெட்மயர்தான்! இந்த வேகத்தில் தொண்ணூறுகளுக்குள் வந்த ஹெட்மயர், தன் இயல்பான ஆவேசத்தைக் கொஞ்சம் அடக்கி சிங்கிள், சிங்கிளாகத் தட்டி நூறைக் கடந்து பேட்டை உயர்த்திக் காட்டினார் பெவிலியன் பக்கம். 106 பந்துகளில் 139 ரன். அவர் அவுட் ஆகையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தது. அடுத்து வந்த பூரன் (Nicholas Pooran) சிங்கிள்களில் ஆரம்பித்து நிதானம் காட்டியது, வெஸ்ட் இண்டீஸின் அதிஜாக்ரதை அணுகுமுறையைக் காண்பித்தது. பரபரப்பு ஏதுமின்றி ஆடிய ஹோப், ஷிவம் துபேயின் ஒரு ஓவரில் வெடித்தார். சிக்ஸர், தொடர்ந்து பௌண்டரி. சதமும் கடந்து அசத்தினார். இறுதியில் பௌண்டரிகளில் இலக்கைக் கடந்தார் பூரன். வெஸ்ட் இண்டீஸ் 291 எடுத்தது, இரண்டே இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து.  போலார்ட் & கோ. ஆர்ப்பரித்து உள்ளே வர,  சோர்வோடு பெவிலியனுக்குத் திரும்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் எதிர்பாராத தோல்வி…

வெகுகாலத்திற்குப் பின் வெஸ்ட் இண்டீஸ், பழைய வெஸ்ட் இண்டீஸ் அணிபோல், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் கலந்து சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்தது. அடுத்த மேட்ச்சில் (விசாகப்பட்டினம், டிசம்பர் 18), கோஹ்லி பதிலடிகொடுக்கும் வேகத்தில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்துவீச்சில் மாறுதல் இருக்கும். சுழலில், யஜுவேந்திர சாஹல் உள்ளே வருவார் எனத் தோன்றுகிறது.

**

மனித நேயம்

சமீபத்திய சென்னை வெள்ளம் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களால், எந்த ஒரு பெருநகரத்தையும் இயற்கையால் எளிதில் புரட்டிப்போட்டுவிடமுடியுமே என ஃப்ரான்ஸ் அரசையும் கவலைகொள்ள வைத்தது. பாரிஸில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், இயற்கையே மனிதனுக்கு எதிராக பெரிதாகக் கிளம்பிவிட்டால் என்னாகும் மானிடர் வாழ்வு என உலகத் தலைவர்களை மிரளவைத்தது. பெருநகர சொகுசு வாழ்வை நொடியில் சிறிசாக்கிச் சின்னாபின்னம் செய்தது.

ஆனால், பேரழிவின் நடுவில் எங்கோ மறைந்து கிடந்த மனிதம் சிலிர்த்தெழுந்து நின்றது. கூப்பிட்ட கூக்குரலுக்கு ஓடோடி வந்தது. பேதமேதும் பாராட்டாது நீரில் இறங்கி நெருப்பாய்ப் பணி செய்தது. நாமெல்லாம் இதுகாறும் மறந்துவிட்டிருந்த, ஒடிந்தவருக்கு உதவும், தொய்ந்தவரைத் தோளில் சாய்த்துக்கொள்ளும் மனித நேயம் பிரகாசமாய் ஒளிவிட்டது சென்னையில். இத்தகைய நெகிழ்வான பின்னணியில் கவிதை ஒன்று -என் வழக்கத்துக்கு மாறாக சற்றே நீளமானது- எழுந்தது. நேற்றைய (14-12-15) தினமணி வெளியிட்டது (நன்றி:தினமணி). கீழே :

மனித நேயம்

மாறிக் கொண்டிருக்கும் காலம் தினமும்
மாற்றியது தன் வீச்சில் அனைத்தையும்
மாறினான் மண்வாழ் மனிதனும்
தான் தன் வீடு பெண்டு பிள்ளை
தவிர்த்து எதுவுமில்லை அவனுக்கு உலகில்

பகலிரவு நேரம் பாராமல்
பணம் சேர்க்கும் எந்திரமானான்
எண்ணத்தில் வேறெதுவுமில்லை
எதிரே வருபவர் தெரிவதில்லை
காசு காசு காசு என்கிற
காயத்ரி ஜெபத்தைத் தவிர
பேசுவதற்கு விஷயமில்லை
பெருமைப்பட ஏதுமில்லை
அடுத்தவன் வாழ்ந்தாலென்ன
அடியோடு அழிந்தால்தானென்ன
சுயநலம் எனும் கோரப் பயிரின்
விளைநிலமாய் மாறிவிட்டான்

காலந்தாண்டிய பெருவெளியில்
கால்நீட்டிக் கண்ணயர்ந்திருந்த கடவுள்
விழித்தது திடீரென ஒரு நாள்
விண்ணதிர்ந்து பொங்கியது
பேய்மழையாய் மண்மீதிறங்கி
பெருவெள்ளமாய்க் கிழித்தோடியது
கண்வரை வெள்ளநீர் எகிர்ந்துயர
விண்பார்த்து அலறினான் மனிதன்
மண்மீதில் செய்துவிட்டான் பல பாவம்
மண்டையைப் பிய்ப்பதில் என்ன லாபம்

இருந்தும் நாட்டில் நல்ல உள்ளம்
எங்கெங்கோ மூலையில்
இருக்கவே செய்தது
இடரிலிருந்து மீட்கும் சுடரென
எழுந்தோடி வந்தது விரைந்து
வெள்ளநீர் கண்டு
உள்ளம் கலங்கிடாமல்
பணிவிடை பலசெய்து
பாதித்த பாமரர்களுக்கு
பாங்காய் உதவி மகிழ்ந்தது

அழிந்துவிட்டதோ மனிதரிடையே
அன்பும் பாசமும்
அளவிலா நேசமும்
வாடிய முகம் கண்டு
ஓடிவரும் நற்பண்பும்
என்றெல்லாம் எண்ணி எண்ணி
இளைத்திருந்த வேளையில்
இடையிலே புகுந்து உலுக்கிப்போட்ட
இயற்கைப் பெரும் சக்தியே
மனித நேயம் மாசற்ற உயிரன்பின்
மாண்புதனை மீண்டும் நினைவுறுத்தி
மனிதரை மாபெரும் இடரிலிருந்து
மீட்டு நிமிர்த்துவிட்டாய் நீ, வாழ்க !

–ஏகாந்தன்

**