உங்களுடன் கொஞ்சம் . .

கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூ தனது 100-ஆவது பதிவை இன்று இறக்கி வைத்துள்ளது. சற்றே ஆச்சரியமாகவும், மலைப்பாகவும் உணர்கிறேன். பிரதானமாக இது ஒரு கவிதை வலைப்பூ என்பதால் இந்த வேகம் அதிகமோ எனத் தோன்றுகிறது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. ஏனெனில், கவிதை, இலக்கியம் என்று வரும்போது எவ்வளவு அதிகமாக எழுதுகிறோம் என்பதை விட எந்த மாதிரியான எழுத்தைத் தருகிறோம் என்பதுதான் முக்கியம் என்கிறது மனம். ஒரு படைப்பாளியையும், வாசகரையும் அவரவர் நிலைகளில், ஒருசேர உயர்த்துவது எழுத்தின் தரம்தான். இந்தத் தரமே வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே நிகழும் மெல்லிய உறவை மேன்மேலும் வலுப்படுத்தும் என்பதும் என் எண்ணம்.

வலைவெளிக்கு வந்ததிலிருந்து, இந்தக் கவிதை வலைப்பூ பலவிதமான அலட்சியப் பார்வைகளைச் சந்தித்திருக்கலாம்; குறைகூறல், விமரிசனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கலாம்; அவற்றில் உண்மையும் இருக்கலாம்தான். ஆனாலும், அவ்வப்போது லேசான புருவ- உயர்த்துதல்களையும், மெல்லிய புன்முறுவல்களையும் இந்த வலைப்பூ நிகழ்த்தியிருக்கிறது என்கிற உண்மை அடியேனுக்கு ஒரு நிறைவைத் தருகிறது. ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் 3000-த்துக்கும் மேற்பட்ட ‘பார்வை’களை(views) இது தன்பால் ஈர்த்திருக்கிறது என்பதனையும் நான் கவனிக்கிறேன். ஒரேயடியாக புளகாங்கிதம் அடைந்துவிடாமல், ஒரு ஜாக்ரதை உணர்வுடன் பயணிக்க விரும்புகிறேன்.

இந்தப் பக்கங்களில் வெளியான கவிதைகளில் சில ஜப்பான், க்யூபா, காங்கோ நாடுகளில் நான் பணிபுரிந்த காலகட்டத்தில் (2000-2013) எழுதப்பட்டவை. இவற்றில் சில ஜப்பானிலிருந்து வெளியான பொங்கல் மலரிலும், காங்கோ-வாழ் தமிழர் நடத்திவரும் ‘தமிழ்ச்சாரல்’ என்கிற மாத மின்னிதழிலும் வெளியாகியிருக்கின்றன. அவற்றிற்கான குறிப்புகளை நான் அவற்றின் கீழேயே இனி இட்டுவிடுகிறேன்- ஒரு reference-க்காக. சம்பந்தப்பட்ட ஜப்பான், காங்கோ தமிழ் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கே பதிவு செய்கிறேன். மேலும், எனது சமீபத்திய கவிதைகளில் சிலவற்றை, கவிதைகளுக்கான சிறப்பு இணைய இதழான ‘வார்ப்பு’ இதழ் தன் பக்கங்களில் பிரசுரித்துள்ளது. பார்க்கவும்: http://www.vaarppu.com
‘வார்ப்பு’ இதழுக்கு நன்றிகள்.

இப்போது இத்தனை எழுதியிருப்பதன் காரணம், அன்புமிகு வாசக, வாசகியரே – உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளத்தான். நீங்கள் என் எழுத்தை நேசிக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் வாசிக்கிறீர்கள் என்பது புரிகிறது. அது மனதுக்கு ஒரு தெம்பைத் தருகிறது. மேலும் எழுத உற்சாகம் அதனாலும் பிறக்கிறது.

-ஏகாந்தன்
தொடர்புக்கு: aekaanthan@gmail.com