கர்னாடகத் தலைநகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா

ஆங்காங்கே பார்க்க நேர்ந்த செய்தித் துணுக்குகள் தந்த உந்துதலில், சரி போய் பார்த்துவிடுவோம் என வந்தேன் பெங்களூரின் அல்சூரு (ஹலசூரு) ஏரிப்பக்கம் அன்று. அங்கேதான் பல வருடங்களாக இயங்கி வருகிறது, ஒரு புராணா கட்டிடத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்கம். அதிலே ஒரு வள்ளுவர் அரங்கம். தங்கமுலாம் பூசிய சிலையாக வீற்றிருந்த வள்ளுவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்.  டிசம்பர் 25-ல் ஆரம்பித்து ஜனவரி 1, 2023 வரை இந்த இடத்தில்தான் நடந்தது, அதிசயமாக,  கன்னடவெளியில் ஒரு தமிழ்ப் புத்தகத் திருவிழா.  தமிழ்ச்சங்கம், பெங்களூரிலுள்ள தமிழ் ஆசிரியர் கழகம், தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கம் ஆகியவை முதன்முதலாக இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தகக் கண்காட்சி. தாய்மொழிப் பிரியரான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மெனக்கெட்டு வந்து விழாவைத் துவக்கிவைத்திருக்கிறார் என்பதும் தமிழார்வலர்களுக்கு ஊக்கமளிப்பதே. பெங்களூரின் உயர்நிலைப்பள்ளி/கல்லூரி தமிழ் மாணாக்கர்களுக்கு புத்தகத்திருவிழாவில் நல்ல புத்தகங்கள் வாங்க என,  ரூ.100-க்கு ஒரு கூப்பன் என ரூ.2 லட்சத்துக்கு கூப்பன்கள் கொடுக்கப்பட்டன. மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு போன்ற இஸ்ரோ, பாதுகாப்பு அமைச்சக விஞ்ஞானிகளும், கர்னாடக அரசில் பணிபுரியும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் சேர்ந்து வழங்கிய அன்பளிப்பு இது எனக் கேள்வி.

அல்சூரு ஏரியை வட்டமடித்து, சங்கத்தைக் கண்டுபிடித்ததும் எதிரேயே சங்கத்தின் பிரத்தியேக கார் பார்க்கிங்கும் கிடைத்தது. மகிழ்ந்தேன். உள்ளே நுழையுமுன் சங்கத்தின் இட, வலத்தில் விரியும் ஏனைய கட்டிடங்களை ஒரு க்விக் சர்ச் செய்தேன் ஒரு சின்ன ரெஸ்ட்டாரண்ட் இருந்தால் ஒரு ஃபில்ட்டர் காபிக்குப் பின் உள்ளே செல்லலாமே என்கிற எண்ணத்தில். ம்ஹூம். உள்ளே அதனை எதிர்பார்ப்பதில் தர்மம் இல்லை! சரி, புத்தகம் பார்க்க வந்தோமா, காபி ருசிக்காக வந்தோமா..

25-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குகொள்கின்றன என்று எங்கோ படித்திருந்தாலும், கண்டது என்னவோ 14-15 –ஐத் தான். விழா ஏற்பாட்டாளர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன். ’இந்த வருசந்தான் ஆரம்பிச்சிருக்கோம்.. அடுத்த வருசம் நிறைய பதிப்பகங்கள் வரும் சார்’ என்றார் நம்பிக்கை தெறிக்கும் த்வனியில்.

அரங்கில் நுழைந்தவுடன் எதிரே பிரதானமாக தரிசனம் தந்த வள்ளுவருக்கு ஒரு பௌவ்ய வணக்கம்போட்டுவிட்டு, கண் இடதுபக்கம் நோட்டம்விட ஆரம்பிக்க, முதலில் தென்பட்டது விகடன் பிரசுரம். அவர்களது டாப் செல்லர்ஸ் – பளபள பைண்டிங்கில். பொன்னியின் செல்வன் பிரதானம். மற்றும் பாபாயணம், மஹாபெரியவா, சத்குரு, சுகபோதானந்தா, நம்மாழ்வார், இந்திரா சௌந்திரராஜன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் … பாப்புலர் டைட்டில்ஸ்/ பிரபல கதாசிரியர்கள் உங்களை வரவேற்பதுபோல் முகப்பு டேபிளில். ஸ்டாலின்  பின் வரிசையில் சில புத்தகங்கள் கவர்ந்தன. நா.முத்துக்குமார், வாலி, சுஜாதாவின் சில கட்டுரைத்தொகுப்புகள். கேட்டிராத புது எழுத்தாளர்கள், கவிஞர்கள். மேலும் ஃபிட்னெஸ், பிஸினெஸ், கணினி, மருத்துவம், விவசாயம், சுயமுன்னேற்றம் என வெவ்வேறு வகைமைகளில் நூல்கள்.  ஒரு பக்கத்தில் சிறிய அடுக்கலாகத் தென்பட்டது 2022 விகடன் தீபாவளி மலர். காம்பேக்ட்டாக அழகாக அச்சிடப்பட்டிருந்த மலரை லேசாகப் புரட்டியதில் பட்டுக்கோட்டை பிரபாகர், சு.வேணுகோபால் சிறுகதைகள், போகன் சங்கர், நந்தலாலா கவிதைகள், வண்ணதாசன் கட்டுரை, ஓவியர் புதுக்கோட்டை ராஜாபற்றிய (சாமி படங்கள் வரைபவர்) கட்டுரை, கிரிக்கெட் வீரர் நடராஜனின் பேட்டி.. இப்படி சில எட்டிப்பார்த்தன, ஆன்மீக, சினிமா சங்கதிகளோடு போட்டிபோட்டுத் தோற்றவாறு. ஒருவர் கவுண்ட்டரை நெருங்கி ‘டிஸ்கவுண்ட் உண்டுல்ல?’ என்று சந்தேக நிவர்த்தி செய்துகொண்டு, ஏதும் வாங்காமல் நகர்ந்தார். சில இளைஞர்கள் வாங்கினர். நானும் இரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

தினமலர் ஸ்டாலும் வைத்திருந்தார்கள். அன்றைய நாளிதழ், தினமலர் கேலண்டர் எனப் புரட்டினேன். ’பேப்பர் இலவசம். ஆனா கேலண்டருக்கு 20ரூ. தரணும்!’ என்றார் அவர். ’நான் எப்ப ஒங்ககிட்டே ஃப்ரீயா கேட்டேன்!’ – என்றவாறு கேலண்டருக்கு பணம் கொடுக்கப்போகையில், தினமலர் பதிப்பக நூல்கள் பின்னே அடுக்கியிருப்பதைக் கண்டு அங்கே போய் பார்த்தேன். ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டேன். பணம் கொடுத்துவிட்டு வெளிவந்தேன். கொஞ்சம் மேல்தளத்திலிருந்த சூர்யன் பதிப்பகத்தில் அடுத்ததாக நுழைந்து பார்க்க ஆரம்பித்தபோது, ஒருவர் காதருகில் நெருங்கி ‘நம்ம தினகரன் பதிப்பகம் சார்!’ என்றது ஆச்சர்யம் தந்தது. தெரியும் என்பதாகத் தலையாட்டிவிட்டு மேலும் பார்வையிட்டேன். அசோகமித்திரனின் அந்தக்கால மெட்ராஸ்பற்றிய தொடர் ஒன்று குங்குமத்தில் வெளியாகி, பின்னர் அது சூரியனால் பதிப்பித்து வெளியிடப்பட்டது நினைவுக்கு வர, தேடினேன். தென்படவில்லை. அசோகமித்திரனின் எந்த நூலும் அங்கில்லை என்பது தெரியவர, சோர்வானேன். ஒரு ஸ்டாலில் ஜெயகாந்தன், அகிலன், நா.பா. பார்த்ததாக நினைவு. கு.ப.ரா., தி.ஜா, எம்.வி.வி., தஞ்சை ப்ரகாஷ், ஆத்மாநாம் கிடைத்தால் வாங்கலாம் என நினைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் அல்சூரு வர வழி தெரியவில்லைபோலும்.

’முற்போக்கு’ பதிப்பகம் ஒன்றில் அதற்கான இடதுசாரி கொள்கைசார் புத்தகங்கள். பஷாரத் எனும் பதிப்பகம் இஸ்லாமியக் கருத்துகள், சிந்தனை சார்ந்த நூல்களை வரிசையாக வைத்திருந்தது.

கேள்விப்பட்டிராத சில பதிப்பகங்களின் ஸ்டால்களுக்குள்ளும் போனேன். வெளியே வந்தேன். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

ஒவ்வொரு பாப்புலர் பதிப்பகத்திலும் கல்கி பிரதானமாக ஒளிர்ந்தார். மணிரத்னத்தின் PS-1  எஃபெக்ட்டோ? சுஜாதாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டாரே மனுஷன்! அங்கே என்ன, குண்டுகுண்டாக.. பொன்னியின் செல்வன் ஆங்கில மொழியாக்கம் (மொழியாக்கம் டாக்டர்…… எம்.ஏ) என்றிருந்தது. படித்துப்பார்க்கச் சொன்னாள் கூட வந்திருந்த மகள். ஆங்கில வர்ஷனையாவது வாசிப்போம் என ஆர்வம்போலும். ஒரு பக்கத்தை திறந்து உருட்டினேன் கண்களை. ம்ஹூம்… ஹைஸ்கூல் இங்கிலீஷ். ஒரு சரித்திர நாவலை உணர்வு தாக்காது படிப்பதில் அர்த்தமில்லை. சரிவராது என்றேன் அவளிடம். மேலும் பார்த்ததில், பொன்னியின் செல்வனின் இன்னொரு ஆங்கில புத்தக வரிசை கண்ணில்பட்டது. மொழியாக்கம் வரலொட்டி ரெங்கசாமி. அட.. ஒரு வால்யூமை எடுத்து புரட்டினேன். Pleasant surprise! மொழியாக்கம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது. (வரலொட்டி சில ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருப்பது தெரிந்தது). ஒரு வால்யூம் வாங்கிப் படிக்க மகள் ஆசைப்பட, விற்பவரிடம் ’எவ்வளவு தரணும் இந்த வால்யூமுக்கு? என்று வினவினேன். ‘அஞ்சு உள்ள செட் சார்!’ என்றார். ’அதுசரி, ஒன்னு மட்டும் எடுத்துக்கறேன்’ என்றேன். ‘அஞ்சஞ்சா, செட்டாத்தான் விக்கிறோம். எல்லாம் சேத்துப் படிச்சாதான் சார் கதயே புரியும்!’  விளக்குகிற மூடில் அவர். வாங்குகிற மூட் போய்விட்டது. நகர்ந்தோம்.

அடுத்த ஸ்டாலொன்றில் நிற்கையில், ஆ.. யவனராணி என்றார் குதூகலத்தில் ஒருவர். கடல்புறா கவர்ந்தது அவர்கூடச் சென்றவரை. சாண்டில்ய பக்தர்கள்! மன்னன் மகள், மலைவாசல், ராஜபேரிகை, ஜலதீபம் என அவரது நாவல்கள் நல்ல பேப்பர்/பைண்டிங்கில், பளபளப்பாக ஒரு ஸ்டாலில் முன்னே வைக்கப்பட்டிருந்தன. வேறு தலைப்புகள் பல பின் வரிசைகளில் ஒழுங்காக அமர்ந்திருந்தன.

‘டிஸ்கவுண்ட் கொடுப்பீங்கல்ல!’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஆரம்பத்தில் பார்த்த அதே ஆசாமி கௌண்ட்டரில், வெறுங்கையுடன். சிலருக்கு இப்படியெல்லாம்தான் பொழுது போகிறது போலிருக்கிறது.  இதற்கு மாற்றாக, இரண்டு முதிய பெண்கள், மிகுந்த ஆர்வத்தோடு ஒவ்வொரு ஸ்டாலாக நகர்ந்து புத்தகங்களைப் பார்வையிட்டார்கள். வாங்கினார்கள்.  இளைஞர்கள் சிலரும் தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாங்கிக்கொண்ட மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே சென்றதைக் கவனித்தேன்.

அங்கே.. கூடவந்திருந்த என் மகள் எதையோ அந்த ஸ்டாலில் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே.. தமிழ் படிக்கத் தெரியாதே அவளுக்கு என்கிற சிந்தனையில் அங்கு சென்று பார்த்தால்.. அட, இந்தியா டுடேயா இங்கே! அகதா க்றிஸ்ட்டீ, ஓ.ஹென்றி, ஜார்ஜ் ஆர்வெல், மரியோ பூஸோ, ஹெர்மன் ஹெஸ், ஜோனதன் ஸ்விஃப்ட், ஜோஸப் ஹெல்லர், பாலோ கொயெல்ஹோ போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்களோடு நம்ம நாட்டு கமலாதாஸ், ஆர்.கே.நாராயண், வாஸந்தி, அமர்த்யா சென், ஓஷோ, அமிஷ் போன்றோரின் புத்தகங்களும். என்னது,  வாஸந்தி ஆங்கிலத்திலுமா எழுதியிருக்கிறார்? ஆமா! புத்தகத் தலைப்பு: Karunanidhi. தமிழ்நிலம் தாண்டிய ஏனைய இந்தியவெளி மக்களுக்கும் சில விஷயங்களைச் சொல்லவேண்டுமே. வழக்கமான சில பிரபல தலைப்புகளைத் தாண்டி இப்படியும் சில:  Rebel Sultans, The Seven Husbands, A Thousand Splendid Suns, The First Muslim, Nothing More To Tell, Hating Game, The Love Hypothesis, Badass Habits, The Ikigai Journey..

அவ்வளவுதான். முடிந்தது. வந்திருந்தோர் சிலர்தான் நான் போயிருந்த சமயத்தில் –காலை 11:20 – 13:00.  மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நிறையப்பேர் வருகை தந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அல்சூர் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அளவில் சிறியதுதான். எனினும், பெங்களூர் தமிழர்களின் பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி. இனி வரும் வருடங்களில் விமரிசையாக நடக்கட்டும்.

வெளியே வருகையில் இரண்டு மாமாக்கள், தாங்கள் வாங்கிய சில புத்தகங்கள் அடங்கிய சிறு பைகளுடன் பக்கத்துப் பொட்டிக்கடையில் காபி வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்தார்கள். ஏரிக்கரையை ஒட்டிய பாதையில் ஏரியைப் பார்த்துக்கொண்டு , ஏகாந்தமாய் உணர்ந்தவாறு காபியை ரசிப்பதாய்த் தோன்றியது. என் காரைக் கூப்பிட்டேன் ப்ரூக்ஃபீல்ட் திரும்ப. காரில் ஏறுகையில் நினைவில் தட்டியது: ஸ்டாலொன்றில் வரிசையின் இடையிலே எட்டிப் பார்த்த ஒரு புத்தகம். தலைப்பில் ’சுதந்திரம் என்பது சுக்கா, மிளகா’ என்று காரமாகக் கேட்டது. தெரியலியே… உப்பா, புளியா என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் ஒருவேளை அங்கேயே பதில் சொல்லியிருக்கலாம்…

சரி.. வீடுபோய் சாவகாசமாக வாசிப்போம் வாங்கிய புத்தகங்களை: நினைவு நாடாக்கள் -வாலி, அணிலாடும் முன்றில்-நா.முத்துக்குமார், பரிபூர்ண அருளாளன் -ஆர்.வெங்கடேஷ்.

**

ரமேஷ் பிரேதன்

சென்னைப் புத்தகவிழாவில் வாங்கினேனா, இல்லை ஆன்-லைனில் ஆர்டர் செய்தேனா, நினைவில்லை. எனது அலமாரியில் என்னென்ன தமிழ்ப் புத்தகங்கள்தான் இருக்கின்றன என நானே தெரிந்துகொள்ளவிரும்பி ஒரு காலையில் குடைய ஆரம்பித்தபோது, அந்த ஒல்லிப் புத்தகம் கையில் கிடைத்தது. குண்டுப்புத்தகங்களைக் கண்டு விலகி ஓடுபவன் நான். குண்டாக எது எதிர் வந்தாலும், நன்றாக ஒதுங்கி வழிவிடும் வழக்கம் உண்டு சிறுவயதிலிருந்தே என்னிடம்.

சரி, குண்டுகளை விட்டுக் கொஞ்சம் வெளியே வாருங்கள். இப்போது சொல்ல வந்தது அந்த ஒல்லியை – கவிஞர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் ‘அயோனிகன்’. ஆ…. இப்படி ஒரு கவிஞர் இருப்பதையே மறந்துவிட்டிருக்கிறேனே. திறந்து கொஞ்சம் படிக்க ஆரம்பித்து, சற்றே ஆழ்ந்து மேலும் வாசித்தேன். ஏதேதோ கனவில், தொடரும் நினைவில் இன்றும் வாசிக்க நேர்ந்தபின் எழுதவந்தேன்.

அவனுடைய கதைகதைப்பில் நாகம் நெளிகிறது, சிவன் வருகிறான், கவிஞன் உலவும் வெளியில், அவள் இல்லாமலிருக்க முடியுமா என்ன?  இருக்கிறாள். இருந்தாள். இருப்பாள். கூடவே அவனில் தாக்கம் ஏற்படுத்தும் அப்பாவும், தவிக்கவிட்ட அம்மாவும். போதாக்குறைக்கு இந்த வேற்றுக்கிரகவாசி வேறே.. எதுவும் நிம்மதியாக விட்டுவைக்கவில்லை அவனை. ஃப்ரெஞ்சும் தமிழும் சேர்ந்து கலக்கும் புதுச்சேரியின் கலாச்சார கிச்சடிப் பின்புலம்..

சொல்லிக்கொண்டே போவதை நிறுத்தி, அயோனிகனையே கொஞ்சமாகத் தெளித்துவிடுகிறேன்:

காலங்காலமாகக் கைமாறி கைமாறி வந்த சிவன்

கவிஞர்களாலேயே வளர்ந்து ஆளாக்கப்பட்டவன்

போர் நடந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களிலிருந்தே

கூடைகூடையாய் மண்டை ஓடுகள் சிவனுக்குக் கிடைத்திருக்கும்..

**

வங்காள விரிகுடாவைப் பார்த்தபடி இந்த இரவைக் கடக்கிறேன்

நாளை இறந்தவர்களை நினைவுகூரும் நாள்

நிதானமாக ஒருமுறை சாகவேண்டும்

தனியாகச் சாவதற்கு பயமாயிருக்கிறது

**

என் பசியை ஆற்றியவளைப்பற்றிப் பிறகொருநாள் எழுதுகிறேன்

பெண்ணிடம் ஆண் பிச்சையெடுத்தல் கூடாது என புத்தனும்

காமத்தைப் பெண்ணிடம் யாசிப்பவனே யோக்யன் என ஏசுவும்

சொன்னதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

**

ஆண்மழை பெண்மழை என்பதில் எனக்கு உடன்பாடில்லை

அவள் மழை என்பதைத் தவிர வேறில்லை

நனைந்தால் முளைத்துவிடுவேன்..

**

என்னுடன் நீ நடக்கும்போது

என் நிழலின் தலையை மிதித்துவிட்டாய்

நான் மரித்துப்போனேன்

அவ்வளவே

**

அலையோசை ஓய்ந்தாலும் உளியோசை ஓயாதடி வாலைப் பெண்ணே

சொல்லைக் கல்லாக்கும் மாயம் செய்குவையோ வாலைப் பெண்ணே

**

அம்மாவையும் அப்பாவையும் ஒருசேரப் பார்க்காதவன்

அம்மாவையும் அப்பாவையும் தனித்தனியாகக் கொன்றவன்

என்னுள் விளையும் கவித்துவம்போலக்

கொலைத் தொழில் பழகியவன்

**

பிச்சை கேட்கும் மனநிலையை

நான் எட்டிய தருணம்

அகந்தை சூன்யமுற்று

நிர்வாணமாய் நின்றேன்

**

நீந்தினால் மீன்

மிதந்தால் பிணம்

குளம் இதன் வித்தியாசம் அறியாது

**

போரினால் பைத்தியம் பிடித்து

எங்கே எந்த நாட்டில் எந்த நகரத்தின் இடிபாடுகளில்

எந்தப் பிறவியில் அலைகிறாயோ…

போய் வருகிறேன் என் அன்பே..

Au revoir mon amour, au revoir…

**

கவிதைகளினூடே உரையாய், நடையாய் தன்சரிதம் வேறு… வாங்கிப் படியுங்கள் நண்பர்களே. மேலும் புரியலாம், ஏதேதோ தெரியலாம்.

அயோனிகன் – ரமேஷ் பிரேதன் – உயிர்மை பதிப்பகம்.  ரூ.55.

*****

’சொல்வனம்’ YouTube channel சிறுகதைகளில் ஏகாந்தன்

’சொல்வனம்’ கலை, இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதைகள் – ’பின்னிரவின் நிலா’ மற்றும் ’நிஜமாக ஒரு உலகம்’ – இரண்டும் இப்போது ‘சொல்வனம் யூ-ட்யூப் சேனலில்’ பார்க்க/கேட்கக் கிடைக்கின்றன. நன்றி : சொல்வனம் ஆசிரியர் குழு / சரஸ்வதி தியாகராஜன்.

YouTube லிங்க் :

இணையத்தில் வாசிக்க விரும்புபவர்கள் solvanam.com சென்று வழக்கம்போல் வாசிக்கலாம்.

**

’சொல்வனம்’ இதழில் கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

பிறப்பு: 1913-ல் கார்டிஃப் (Cardiff),  வேல்ஸ்.

வேல்ஸ் (British Wales) பிராந்தியத்தின் கிராமிய வெளியில், வேல்ஷ் ஆங்கிலிக்கன் சர்ச்சில் ஒரு பாதிரியாக இளம் வயதிலிருந்தே பணியாற்ற ஆரம்பித்து, பல வருடங்களாக சர்ச் பணியில் ஆழ்ந்திருந்தவர் ஆர்.எஸ். தாமஸ்.

Welsh Poet R.S. Thomas

வேல்ஸின் சூழ்ந்து படர்ந்திருக்கும் நீல மலைகள், ஆறுகள், அப்பாவி மக்களென இயற்கையின் வண்ணங்கள் அவரில் பெரிதும் வியாபித்துக்கிடந்தன. மெருகேற்றி அவரை உருவாக்கி ஒரு கவிஞனாய் வெளியுலகிற்கு ஒரு கட்டத்தில் காண்பித்தன. மண்ணின் மைந்தனாக இல்லாமல், உலகளாவிய கவிஞனாக நீ இருக்கமுடியாது எனும் ஆங்கிலேயக் கவி ராபர்ட் ஃப்ராஸ்டின் கூற்றை ஆமோதிப்பதுபோல் தன் தாய்மண்ணான வேல்ஸ் நிலத்தை, மனிதர்களை தொடர்ந்து தன் எழுத்தில் வெளிக்கொணர்ந்தவாறே இருந்தார் அவர். பணியாற்றுமாறு நேர்ந்த வேல்ஸ் சர்ச்சின் பணிசூழல், செயல்பாடுகள் ஒருபுறம், மாறா நம்பிக்கையுடன் வந்து சென்ற ஒன்றுமறியா மனிதர்களின் வாழ்வு மதிப்பீடுகள் மறுபுறம் எனவும், பொதுவாக தேசத்தின் கலாச்சாரச் சீரழிவுபற்றிய கவலையும் விரவிக்கிடக்கின்றன அவரது கவிதை வெளியில். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவராக பிரசித்தி பெற்றிருந்த தாமஸ், நோபல் பரிசுக்கெனப் பரிந்துரைக்கப்படலாம் எனும் பேச்சும் இருந்தது ஒரு கட்டத்தில். பிரிட்டிஷ் ராணியின் கவிதைக்கான தங்க மடலை 1964-ல் பெற்றார்.  2000-ல் மறைந்தார்.  

ஆர்.எஸ். தாமஸின் சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவர்பற்றிய என் மேற்கண்ட குறிப்போடு அந்தக் கவிதைகளை ‘சொல்வனம்’ இலக்கிய இதழ் வெளியிட்டிருக்கிறது. நன்றி: ’சொல்வனம்’.

சொல்வனத்தின் நடப்பிதழில் காணப்படும் தாமஸின் கவிதைகளில் மூன்றைக் கீழே தருகிறேன்: ( மற்றவைகளை சோம்பல்படாமல், சமர்த்தாக ‘சொல்வனம்’பக்கம்போய் வாசிப்பீர்களல்லவா ! https://solvanam.com )

அ வ ர் க ள்

அவர்களது கைகளை

என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்

அழுத்தமான கைகள்

அன்பில்லை அவற்றில்,

வலிய வரவழைக்கப்பட்ட

ஒரு மென்மையைத் தவிர.

கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து

வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.

சோகத்துடன் தங்கள் துக்கங்களை

எனது பின்வாசலருகே

கொண்டுவந்து வைத்துவிட்டு

வாயடைத்து நிற்கிறார்கள்.

பகலொளியின் பிரகாசத்தில்

வீசும் காற்றில்

அவர்களைப் பார்க்கையில்,

அவர்களின் கண்களின் ஈரத்தில்

அவர்களின் அழுகைக்கான

காரணம் புரிகிறது

தங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்களோடு

மல்லுக்கு நிற்கிறார்கள் அவர்கள்..

தினமும் வானம் நீரைப் பிரதிபலிக்கிறது

நீர், வானத்தை.

தினமும் அவர்களது போராட்டத்தில்

நான் நிற்கிறேன் அவர்கள் பக்கம்,

அவர்களது குற்றங்களையும்

என்னுடையதாக ஏற்றுக்கொண்டு.

வீட்டிலிருந்து, வாழ்விலிருந்து

நினைவுகளிலிருந்துகூட

அவர்களால் வெளியேற்றப்பட்டுவிட்ட

அவர்களது ஆன்மாவுக்கு,

பின் எப்படித்தான் நான் சேவை செய்வது ?

**

வ ரு த ல்

கடவுளின் கையில்

ஒரு சின்னஞ்சிறு உலகம்.

பார் இங்கே.. என்றார்.

பார்த்தான் மகன்.

எங்கோ வெகுதூரத்தில்,

நீரினுள் பார்ப்பதுபோல்,

வறண்டு வெடித்திருந்த

செந்நிற பூமியைப் பார்த்தான்.

விளக்குகள் அங்கு எரிந்தன.

பெரும் கட்டிடங்கள் தங்கள்

நிழலைப் பரப்பியிருந்தன

பாம்பைப்போல் நெளிந்து மின்னும்

ஆறொன்று ஒளிவீசி ஓடிக்கொண்டிருந்தது

அந்த மலைப்பகுதியின்  குன்றின்மீது

ஒரு மொட்டை மரம்

வானத்துக்கே துக்கம் தந்து நின்றிருந்தது.

பலர் அதனை நோக்கி

தங்கள் மெலிந்த கைகளை

நீட்டியவாறு நின்றுகொண்டிருந்தார்கள்,

காணாமற்போன வசந்தம்

அதன் கிளைகளுக்குத் திரும்பவேண்டுமென

இறைஞ்சுவதுபோல.

அந்த மகன்

அவர்களைப் பார்த்தான்.

என்னை அங்கே போகவிடுங்கள் என்றான்

**


ம ற் றொ ன் று

தூரத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தின்

ஏதோ ஒரு பகுதி ஒரேயடியாகப் பொங்க,

விளக்கில்லாத, துணையேதுமில்லாத

அந்தக் கிராமத்தின் கரையோரத்தில்

சீறும் அலைகள் எழுவதும் வீழ்வதும்,

எழுவதும் வீழ்வதுமான சத்தத்தை

அதிகாலையில் தூக்கமின்றி

படுத்தவாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

சில மணிநேரத்துக்கு, சில நாட்களுக்கு

சில வருஷங்களுக்கு என்றல்ல –

என்றென்றைக்குமாகவும் நமது பிரர்த்தனைகள்

தன் மீது மோதிமோதி விழுந்து நொறுங்குமாறு

இருந்துகொண்டிருக்கும் அந்த மற்றொன்றும்

தூங்காமல்தானிருக்கிறது

என்கிற நினைவும் கூடவே ..

**

‘பதாகை’யில் கவிதைகள்

கீழ்வரும் என் இரு கவிதைகள், ‘பதாகை’ இலக்கிய இதழில் (அக்டோபர் 11, 2021) பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி : பதாகை https://padhaakai.com

காற்றினிலே

தன்வீட்டு வாசலில்
ஒரு அந்திப்பொழுதில்
தனியாக உட்கார்ந்திருக்கிறான்
அந்த வயதான மனிதன்
கண் மங்கி நாளாகிவிட்டது
காது நன்றாகக் கேட்கிறது
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
யுவதிகள் சிலரின் பேச்சுக்குரல்கள்
கேட்க ஆரம்பிக்கின்றன
அவனுக்கு எதிர்த் தெருவில்
அவர்கள் நெருங்க நெருங்க
அந்தக் குரல்களின் கட்டற்ற குதூகலத்தில்
உணர்கிறான் அவர்களின் யௌவனத்தை
உயிர்த்தெழுகிறது ஏதோ அவனுக்குள்
கண்கள் குவிந்து பெண்ரூபங்களைத் துருவ
காதுகளை மென்னொலி அலைகள்
கதகதப்பாய் வருடுகின்றன
சிலிர்த்துக்கொள்கிறான்
மத்தாப்புச் சிரிப்புகள் மெல்ல நடக்க
மயக்கும் குரல்கள் மங்கி மறைய
பெருமூச்சு விடுகிறான்
தளர்ந்த வயோதிகத்தின் கரங்கள்
தழுவிக்கொள்கின்றன அவனை ஆதரவாக

**

ஜீவிதம்

கவிழ்க்கப்பட்ட நிலையில்
விசித்திர மதுக்கோப்பை
இந்த பிரம்மாண்ட ஆகாசம்
அதிகமாக நக்ஷத்திரமும்
மிதமாக சந்திரனும்
கொஞ்சமாக சூரியனுமாய்
கிறங்கவைக்கும் காக்டெய்ல்
களிப்போடு இதழ் பொருத்தி
மெல்ல மெல்ல உறிஞ்சுகிறேன்
கந்தர்வ போதையில்
கரைகிறது காலம்

**

’சொல்வனம்’ இதழில் இரண்டு கவிதைகள்

மேலெழுந்தபோது

குப்பைகூளங்களைத்
திமிறித் தள்ளிவிட்டு
குதூகலமாய் எழுந்து
கொஞ்சமாக உயர்ந்திருந்தது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
தன்னைத் தீண்டப்பார்க்கும்
தென்றலின் விஷம விரல்களை
மெல்ல விலக்கியது செடி
சீண்டும் ஸ்பரிசமேபோல்
தன்மேல் படரும் சூரியகிரணங்களை
காணாததுபோல் இருந்தும்
மெல்ல மெல்ல மேல்வந்து
ஒரு நாள் உன்னைத் தொடுவேன்
எனத் தனக்குள் சொல்லிக்கொண்டது
இவ்வளவையும் நான்
ஆசையாக அள்ளிக்கொண்டிருக்கும்
அபூர்வ வேளையில் நல்லவேளை
யாரும் பின்னால் வந்து நின்று-
இந்தச் செடியின் இலையை
அரைச்சுக் குடிச்சா
இடுப்புவலி போயிரும் சார்
என்று இன்னும் சொல்லவில்லை

**

முகநாடகம்

சரியாக அணிந்துகொள்ளவில்லை
என்பதான திடீர் உணர்வினால்போல்
முகக்கவசத்தை மெல்ல அவிழ்த்து
மீண்டும் போட்டுக்கொள்வதாய்
ஒரு தருணத்தை அமைத்து
எதிரே கடக்கப்போகும்
எனக்குன் தளிர் முகத்தை
காண்பித்து மறைத்த
உன் குறுநாடகம்
கொரோனாவின் பின்புலமின்றி
சாத்தியமாகியிருக்குமா என்ன?

**

என் மேற்கண்ட இரு கவிதைகள் ’சொல்வன’த்தின் நடப்பிதழில் வெளிவந்துள்ளன. நன்றி: சொல்வனம்.

மேலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளுக்கு, சென்று வாசியுங்கள் : https://solvanam.com

ஐந்து கவிதைகள் – ஏகாந்தன்

’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) :

அம்மா  நிலா

மொட்டைமாடிக்குத்

தூக்கிக்கொண்டுவந்து

அம்மா காட்டிய முதல் நிலா

அழகு மிகவாக இருந்தது

இப்போதும் ஒன்று அவ்வப்போது

வந்து நிற்கிறது என் வானத்தில்.

மேலே சுட்டுவிரல் நீட்டிக் காட்டி

கதை சொல்ல

அம்மாதான் அருகிலில்லை.

தானாக எதுவும்

புரிவதில்லை எனக்கும்

**

கணப்பொழுதே ..

தாத்தா தூங்கிண்டிருக்கார்

ரூமுக்குள்ள போகாதே !

அம்மாவின் எச்சரிக்கையை

காதில் வாங்காது

குடுகுடுவென உள்ளே வந்த

குட்டிப்பயல் கட்டிலில் தாவினான்

குப்புறப்படுத்திருந்த என்

முதுகிலேறி உட்கார்ந்து

திங் திங்கெனக் குதித்து

குதிரை சவாரிசெய்தான்

முதுகின்மேலே இந்தச் சின்ன கனம்

எவ்வளவு சுகமாயிருக்கு ..

மனம் இழைய ஆரம்பிக்கையில்

தடாலெனக் குதித்து ஓடிவிட்டான்

குதிரைக்காரன்

**

எங்கெங்கும் எப்போதும்

வெளியூர் போயிருந்த

குடும்பம் திரும்பியிருந்தது

கேட்டாள் பெண் கவலையோடு:

தனியா இருந்தது போரடிச்சதாப்பா?

என்று நான் தனியே இருந்தேன்

என்னுடன் அல்லவா

எப்போதுமிருக்கிறேன்

என்ன சொல்லி எப்படிப்

புரியவைப்பேன் மகளுக்கு ..

**

ஒத்துழைப்பு

ஜன்னலைத் திறந்துவைத்தேன்

மின்விசிறியைச் சுழலவிட்டேன்

சுகாசனத்தில் உட்கார்ந்தேன்

கண்ணை மெல்ல மூடியவாறு

’தியானம்!’ என்றேன்

உத்தரவிடுவதுபோல்.

அப்படியே ஆகட்டும் –  என்றது

முன்னே தன் குப்பைக்கூடையை

திறந்துவைத்துக்கொண்டு

அருகிலமர்ந்துகொண்ட மனம்

**

நிலை

படுக்கையறையின் தரையில்

மல்லாக்கக் கிடந்தது கரப்பான்பூச்சி.

இல்லை, இறந்துவிட்டிருந்தது.

தன்னை நிமிர்த்திக்கொண்டு

ஓடி ஒளிவதற்கான ப்ரயத்தனம்

வாழ்வுப்போராட்டமாக மாறிவிட,

இறுதித் தோல்விகண்டு

உயிரை விட்டிருக்கிறது அந்த ஜீவன்.

நிமிர்ந்து படுத்து நிதானமாகக்

கூரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் –

உயிரோடு இன்னும் நானிருப்பதாக

நம்பிக்கொண்டு

**

எழுத்தின் இளமை

கவிஞன் என்றும் இளமையானவன். ஏன்? அவன் எழுத்து அப்படி. அல்லது அவனது கவிதைகள் அப்படியிருப்பதால், அவனப்படி.

நவீனத் தமிழின் தலைசிறந்த கவிஞருள் ஒருவரான நகுலன் வெகுகாலம் எழுத்துலகில் இருந்தார். ஆனாலும் அப்படி ஒன்றும் அதிகம் எழுதித் தள்ளியவரல்ல. சில கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள். அவ்வளவுதான். இலக்கிய போதையாளர்களைத் தவிர வேறு யாரும் – அரசோ, நிறுவனமோ அவரைக் கண்டுகொண்டதில்லை. இருந்தும் எழுதினார்.. எழுதினார். போய்விட்டார் ஒரு நாள், ஸ்தூல உடம்பைத் தூக்கிக் கடாசிவிட்டு. ஆனால் அவரெழுத்து நின்று ஆடுகிறதே இன்னும். எழுத்தின் – உண்மையான எழுத்தின் – உயிர்ப்பு அப்படி, சாகஸம் அப்படி.

நாட்டில், நல்ல எழுத்துக்கும் தப்பித் தவறி விருது கிடைத்துவிடலாம். கிடைக்காமலே போய்விடும் சாத்யமே அதிகம், குறிப்பாக தமிழ்வெளியில். சுந்தர ராமசாமி, சுஜாதா {பன்முக ஆளுமை, உரைநடை, அறிவியல் புனைவில் – without a doubt, a trend-setter},  ப்ரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், கலாப்ரியா போன்றோருக்கு என்ன பெரிய அங்கீகாரம் கிடைத்தது? இந்த நிலையில் மிகக் கொஞ்சமாக எழுதி, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத நகுலனின் நண்பரான ஷண்முக சுப்பையாவை யாருக்குத் தெரியப்போகிறது? ஆனால் அவர்களின் எழுத்தை வாசிக்க நேர்ந்த தமிழ் இலக்கிய வாசகன் லயித்துக்கிடக்கிறானே.. தொடர்ந்து செல்கிறானே, அத்தகைய ஆளுமைகளின் படைப்புகளைத் தேடி.  என்ன ஒரு மாயம்! இயலின் மகிமை இது. மாறாதது.

கொஞ்ச நாட்களாக ஆத்மாநாம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் என அலைந்துகொண்டிருந்தபோது, ஃப்ரான்சிஸ் கிருபாவின் நிகழ்வு குறுக்கிட்டு மனதைக் கசக்கிப்போட்டது. அதனாலென்ன, மேலும் மேலும் சிந்தனைகள், ஒன்றுக்கும் உதவா செயல்பாடுகளென வாழ்க்கை தொடர்கிறது அதுமாட்டுக்கு.

கவிஞனை எழுத நேர்ந்தால், அவனெழுதிய கவிதையும் கொஞ்சம் சிந்தத்தானே செய்யும்?

சோற்றுக்குப் பள்ளி சென்றேன்

உபரி அறிமுகந்தான்

உயிர் எழுத்து…

-மகுடேஸ்வரன்

**

விதி

அந்திக்கருக்கலில்

இந்தத் திசை  தவறிய

பெண்பறவை

தன்  கூட்டுக்காய்

அலைமோதிக்  கரைகிறது.

எனக்கதன் கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை தெரியவில்லை.

கலாப்ரியா

**

பார்த்தல்

கூடைக்காரி
சிலசமயம்
குடும்பக்காரி
வரும் தெருவில்
டீச்சர் வந்தாள் குடைவிரித்து.

ஒற்றைமாட்டு வண்டியிலே
வைக்கோல் பாய்க்கு
நெளிந்து தரும்

மருத்துவச்சி தேடுகிறாள்
எட்டிப்பார்த்து ஒரு வீட்டை .
விளக்குக் கம்பம்
நடைக் கொம்பாய்
நிற்கும் தெருவில்
பிற பெண்கள்
வந்தார் போனார்..

அவள் வரலே.

ஞானக்கூத்தன்

**

என்னைத்

துரத்திக்கொண்டு

நான் செல்கிறேன்

எல்லோரும்

சிரிக்கிறார்கள்

நகுலன்

**

வழி

வயிற்றுப் பசிதீர்க்க

வராதா என்றேங்கி

மழைக்கு அண்ணாந்த கண்கள்

கண்டுகொண்டன

வானம் எல்லையில்லாதது

பிரமிள்

தரிசனம்

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப்

போய்விட்டார்

ஆயினும்

மனதினிலே  ஓர்  நிம்மதி

ஆத்மாநாம்

***

ஜெ. பிரான்சிஸ் கிருபா – சில கவிதைகள்

அழகான படைப்புகளை அருளியிருக்கும் இளங்கவிஞர். காதல் கவிதைகளை எழுதும் கவிஞர்கள் தமிழில் அற்றுப்போய்விட்டனரா என அங்கலாய்க்கும் விக்ரமாதித்யன்,  தன் கட்டுரை நூலொன்றில் பிரான்சிஸ் கிருபாவின் சில ரொமாண்டிக் கவிதைகளை ஸ்லாகித்துச் செல்கிறார்.

கடவுள் செய்த வெட்டி வேலைகளில்

ஒன்றுதானா

காதல் படைத்ததும்!’

-என்று அவர் எழுதியதைப் படித்துவிட்டாரோ! மேலும் கிருபாவை, ‘புனைவின் கொடுமுடியில் நின்று கூத்தாடும் கவிஞன்’ என்கிறார்.

பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு- Dinamani
J Francis Krupa

கிருபாவின் கவிதைத் தொகுப்புகள்: மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், சம்மனசுக்காடு,  மெசியாவின் காயங்கள் (தமிழினி (2002), வலியோடு முறியும் மின்னல் (தமிழினி(2004) மற்றும் ஒரு புதினம்: கன்னி. சுந்தர ராமசாமி விருது, சுஜாதா விருது (கவிதைத் தொகுப்பு: சம்மனசுக்காடு), மீரா விருது, விகடன் விருது (2007) (கன்னி -புதினம்) – என சில விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக்குழு, குரங்கு பொம்மை, ராட்டினம் போன்ற திரைப்படங்களில் சில பாடல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. பிரான்சிஸ் கிருபாவைக் கொஞ்சம் வாசித்துப்பார்ப்போம்:

வானத்தைத் தோற்றவன்

பறவையொன்றிடம் நான் இன்று

பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு,

வரவில்லை நிலவு.

நூல் பிறையளவு கொடையுமில்லை.

எட்டிக் கூடப் பார்க்கவில்லை

யாதொரு நட்சத்திரமும்.

இப்படிப் பாழடைந்த வானம்

பார்த்ததேயில்லை இதற்கு முன்.

அவமானம் மிகுந்த இரவு

இதுவே கடைசியாக இருக்கட்டும்.

சூதாடக்கூடாது இனி

வானத்தை பூமியில் வைத்து.

**

முரண்பாடு

நேர்மையற்ற வீடுகள்

நிறைய நிறையக்

குறுக்குச் சுவர்களால்

கட்டப்பட்டிருக்கின்றன

ஒவ்வொரு அறைகளுக்கும்

வெவ்வேறு ரகஸியங்களை

ஒதுக்கியிருக்கிறோம்

வரவேற்பறையில் பெரும்பாலும்

மடங்கியே இருக்கின்றன

நாற்காலிகள்.

எல்லா விருந்தாளிகளுமே

தயங்குகிறார்கள்

ஊஞ்சலில் அமர.

அடுத்த வீட்டுக்  கழிவறையில்

அரவமின்றி ப் புழங்குவதிலே பெண்களின்

மொத்த சாமர்த்தியமும் செலவழிகிறது.

பரிமாறப்படும் காபி கோப்பையிலிருந்து

எழுந்து நடனமிடும் ஆவி

விண்ணை நோக்கி நேராய்

ஒரு கோடு கிழிக்க, படும் சிரமத்தை

ருசித்ததில்லை எந்த உதடுகளும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்

நீ வருகிறாய்

நேர்மை பற்றி பேசவும் விவாதிக்கவும்.

ஒரு ஒற்றையடிப் பாதையைக் கூட

நேராய்க் கிழிக்க வக்கற்றவன்தான்

நானும்.

**

கவிஞன்

தோல்வியின் அறிவிப்பு

தோற்கப் போவது

இருவரில் ஒருவர் தான்

நீ பொய்யனானாலும்

உன் கவிதைகள்

பொய்யறியாதவை

ஒழுங்கான பொய்களாக

உன் வார்த்தைகள்

அமைந்திருப்பினும்

ஒழுக்கமற்ற உண்மைகள்

உன் எழுத்துக்குள்

மின்னி மின்னிச் செல்கின்றன

நம்பிக்கையின் நிறத்தை

நீ நிச்சயிக்கிறாய்

அவநம்பிக்கையின் நிறத்தை

நான்

கிளியிலிருந்து பச்சையெடுத்து

புல்லில் வந்து அமர்ந்ததும்

புல்லின் பச்சை கொத்தி

கிளியை நோக்கி பறந்ததும்

எதுவென்று தெரிந்துவிடும்

**

மாயை

ரத்தநாளங்களில் சுத்தமாக
குருதியின் விறுவிறுப்பு குறைந்து
இமைக்கும் துடிப்போய்ந்த
இதயக்கண் வெறிப்பில்
உயிருக்கு நேர் எதிரே
நகர்த்தி வைக்கப்படுகிறது
தலைவாசல் திறந்திருக்கும்
மரணத்தின் மௌனம்

அவிழ்த்தெடுக்கப்பட்ட திசைகள்
குவிந்து கிடந்த மூலையிலிருந்து
விரியும் கம்பளச் சுருள்
முடிவடைகிறது காலடியில்

அள்ளியணைக்கும் ஆர்வம்
பேரன்பாய் பெருகுகிறது
நிழலின் சிரிப்பில்.

**

பெண்


பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே ..

பெண் யார்?

பெற்றுக்கொண்டால் மகள்.

பெறாத வரையில்

பிரகாசமான இருள்.

வேறொன்றுமில்லை.

**

உதவி

கண்ணைக் கசக்கி அழுதபடி

கரையில் நடந்து வரும்

பேசப்பழகாத குழந்தையை எதிர்கொண்டு

‘அம்மா’ எங்கே என்று

அன்பொழுக வினவுகிறார்கள்.

அது தன் இடது கையை

ஆற்றின் மேல் நீட்டுகிறது.

அந்தக் குழந்தையை தூக்கி

ஓடும் நீரில் வீசிவிட்டு போகிறார்கள்

இடது கை செய்தது

வலது கை அறியாது.

**

சித்திரம்

பாத்திரம் கூட அற்ற

பிச்சைக்காரனாய்

சூரியனை எழுப்பும்

குளிர்காலங்களில்

பனித்துளிகளை

நிதானமாகத் தானமிடும்

ஒற்றை விரலே

யாரின் கையுள் நீயிருக்கிறாய்?

தூரிகையின்றி நீ வரைந்த

மகத்தான ஓவியத்தில்

நானிருக்கக்கூடுமா

வண்ணமாகவேனும்.

எழுதுகோலின்றி எழுதிச் செல்லும்

இம் மகாகாவியத்தில்

நான் பெறுவேனா

துளி பாத்திரமேனும்

**

நீண்ட நெடும்கவிதைபோலவே அமைந்துவிட்ட தன் ‘கன்னி’ நாவலின் ஓரிடத்தில் பிரான்சிஸ் கிருபா:

’’இரண்டே இரண்டு விழிகளால் அழுது,  எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!

என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது, எப்படி நான் அழாமலிருக்க முடியும்? கண்ணீரின் ஒரு துளியை அவித்த முட்டையைப்போல் இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை. அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ. நண்பர்களே, தோழிகளே, துரோகிகளே!  ஆறுதலுக்கு பதில் ஓர் ஆயுதம் தாருங்கள்.

கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்று விட்டுப் போகிறேன்..’’

**

என்ன சொன்னேன் ஆரம்பத்தில்.. கிருபாவை இளங்கவிஞனென்றா ? மேலும் சொல்லலாம். சொல்கிறேன்:

கவிஞன் மறைவதில்லை என்றும்.

**

குழந்தையாகப் பேசும் கிருஷ்ணன் நம்பி

என்னதான் அழ. வள்ளியப்பா எழுது எழுது என்று குழந்தைப் பாடல்களை எழுதித் தள்ளினாலும், அதே காலகட்டத்தில் குழந்தைகளுக்காக  சில அருமையான பாடல்களை வரைந்தவர் கிருஷ்ணன் நம்பி. என்ன பிரச்னை என்றால், சசிதேவன் போன்ற வெவ்வேறு பெயர்களில் குழந்தைகளுக்கான சிறுபத்திரிக்கைகளில் விட்டுவிட்டு எழுதிவந்தார் அவர். அவற்றைச் சேர்த்து யாரும் சரியாகத் தொகுக்கவில்லை ஆரம்பத்தில். எப்படியிருந்தும், உயிர்ப்பான எழுத்து வாசகனை விட்டுவிடுமா? 42-ஆவது வயதிலேயே அவர் அகாலமாக மறைந்துவிட்டாலும், அபாரமான சில படைப்புகள் (சிறுகதைகள், கட்டுரைகள் என) அவ்வப்போது தலைதூக்கித் தங்களைக் காட்டிக்கொண்டன. 1965-ல் தமிழ்ப் புத்தகாலயம் அவரது குழந்தைப்பாடல்களை ஒரு தொகுப்பாக ‘யானை என்ன யானை’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, சற்றே கூர்மையான கவனத்திற்கு நம்பியைக் கொண்டுவந்தது.

சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் அவரது அனைத்து படைப்புகளையும் சேர்த்து, ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ எனும் புத்தகத்தைப் பிரசுரித்துள்ளது. கிருஷ்ணன் நம்பி எழுதிய ’விளக்கின் வேண்டுகோள்’ என்கிற இந்தப் பாடல், குறுகுறுக்கிறது அடிக்கடி மனதில். நீங்களும் கொஞ்சம் பாருங்களேன் :

விளக்கின் வேண்டுகோள்

காற்று மாமா.. காற்று மாமா..  கருணை செய்குவீர் !

ஏற்றிவைத்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர் ?

சின்னஞ்சிறு  குடிசை இதை சிறிது நேரம் நான்

பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்

ஏழைச் சிறுவன் என்னை நம்பிப்  பாடம் படிக்கிறான்

ஏழும் மூனும் பத்து என்று எழுதிக் கூட்டுறான்

அன்னை அதோ அடுப்பை மூட்டிக் கஞ்சி காச்சுறாள்

என்ன ஆச்சு பானைக்குள்ளே.. எட்டிப் பாக்குறாள்

படிக்கும் சிறுவன் வயித்துக்குள்ளே பசி துடிக்குது

அடிக்கொரு தரம் அவன் முகம் அடுப்பைப் பாக்குது

காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்டவேண்டாமா

ஆச்சு, இதோ ஆச்சு, என்னை அணைத்துவிடாதீர் ..

**