99 Songs

தொண்ணூற்றி ஒன்பது பாடல்கள்? ஏன் ஒன்னு கொறஞ்சு போச்சா? – என அசட்டுத்தனமாகக் கேட்கவேண்டாம். ஏப்ரல் 16-ல் திரையரங்கிற்கு வரவிருக்கும் (கொரொனா சனியன் வேற!) ஒரு romantic musical  படத்தின் பெயர் இது. கதை? நூறு பாடல்களை  அந்த வாலிபன் எழுதவேண்டுமாம்.. சிலதையாவது பாடிக் காண்பிக்கவேண்டியிருக்குமோ.. அப்போதுதான் காதலியை அடையலாமாம். என்ன ஒரு வில்லத்தனமான கண்டிஷன், அதுவும் இந்தக் காலத்தில்! ஸ்டார்பக்ஸின் குளுகுளுவில் உட்காரவைத்து, குக்கீஸோடு ஒரு கப்புச்சினோ வாங்கிக் கொடுத்தால், அல்லது ஹாக்கி போக்கி (Hokey Pokey), கொரமங்கலாவுக்கு அழைத்துப்போய், மூலையில் உட்காரவைத்து ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து அவள் அழகை அருகிருந்து தரிசித்தால்.. போதாதா? காதலி மயங்கமாட்டாளா, கிடைக்கமாட்டாளாமா? ஒருவேளை சராசரித் தமிழ்ப்பெண்ணோ? ஃபேமஸ் தியேட்டர் ஒன்றின் பக்கம் தள்ளிக்கொண்டுபோய்.. ஒரு விஜய் படம் அல்லது அஜீத் படம்? என்ன, இதெல்லாமும் பிடிக்காதாமா.. என்ன ஒரு கஷ்டம்? 100 பாடல்களை முதலில் எழுதிக் காமிடா நீ.. என்றால் என்ன அர்த்தம்? ஹீரோவைக் களேபரப்படுத்தித் திக்குமுக்காடவைக்கத் திட்டமா?

சங்கீதப்பைத்தியமான அந்த வாலிபன் பக்குவப்படப் பக்குவப்பட, அவனது பாடல்களும் மாற்றம் காண்கின்றன. அவன் தரும் இசையும். காதலி எப்படி எதிர்கொள்கிறாள்? பெயருக்கேற்றபடி துள்ளும் பாடல்களோடு காதல் கதை என்பது நிச்சயம். எஹான் பட் (உச்சரிப்பைக் கவனிக்கவும்: Ehan Bhat) என்கிற, முதன்முறையாக, திரையில் எட்டிப் பார்க்கப்போகும், குரல் கொடுக்கும் காஷ்மீரி இளைஞன் ஒருவன் நாயகன்!

Ehan Bhat with A.R. Rahman
ரஹ்மானுடன் எஹான் பட்

ரஹ்மானின் திட்டத்தில் தான் வந்ததெப்படி. பாடகர் எஹான் பட் : ”கூச்ச சுபாவமுள்ள ஒரு காஷ்மீரி இளைஞன் நான். ஏதோ ஆடிஷன் எனக் கூப்பிட்டார்கள். ஐந்தே நிமிடம்தான். போகச்சொல்லிவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரெனத் தகவல் – நீ தேர்வாகிவிட்டாய், வா, சென்னைக்கு. ரஹ்மான் சாரின் ப்ராஜெக்ட் எனக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்! காலை 10 மணிக்கு வரச்சொன்னார்கள். 9 மணியிலிருந்தே அவரது ஸ்டூடியோ வாசலில் நடுக்கத்தோடு அன்று உட்கார்ந்திருந்தேன். சற்றுநேரத்தில் உள்ளே கூப்பிட்டனுப்பினார்கள். அங்கே ரஹ்மான் சாரும், (இயக்குனர்) அஷுதோஷ் கௌவாரிகரும் இருந்தார்கள்.”

”ரஹ்மான் சார் அதிகம் பேசமாட்டார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். நானோ இதற்கெல்லாம் புதுசு. கூச்சம். தயக்கம் எல்லாம் எனக்குள். ஆனால்.. சாருக்கென்ன? அவருக்குமா கூச்சம்? ரஹ்மான் சார் மெல்ல என்னைப் பார்த்தார். பின் சுவரைப் பார்க்க ஆரம்பித்தார். நானும் தயக்கத்தோடு அவரை ஏறிட்டு நோக்கினேன். சுவரைப் பார்த்தேன்!  ’அரேஞ்சுடு மேரேஜு’க்காகப் பெண் பார்க்கப் போய் விழிப்பதாய் உணர்ந்தேன்.. நெளிந்தேன். ஒரே குழப்பம். டென்ஷன்..” என்கிறார் பட்.

Edilsy Vargas images
நாயகி !

அதெல்லாம் சரி.. ஹீரோயின்?  எடில்ஸி வர்காஸ் (Edilsy Vargas) ! அமெரிக்க மாடல் அழகி. ஏற்கனவே Lotoman, La Soga, Pimp Bullies போன்ற படங்களில் ’நடித்த’ அனுபவம் உண்டாமே.. சில டிவி நிகழ்ச்சிகள்/ கமர்ஷியல்களும் வந்திருக்கிராரம்.. ம்ம்… இவருக்கு முன்னாடி நம்ம கத்துக்குட்டிப் பையனை நிறுத்தி அழகு பார்க்கலாமா! அப்படித்தான் செய்திருக்கிறார் ரஹ்மான். ஜோடி எப்படி, படம் எப்படி எனப் படம் பார்த்தால்தான் சொல்லமுடியும்..

ரஹ்மான் என்ன சொல்கிறார் : ”பத்துவருடத்திற்கும் மேலாக மனதில் இருந்தது இது. ஒரு புதிய குரலை அறிமுகப்படுத்துவது, புதுவிதமாக -ஸ்டீரியோ-டைப் தமிழ்/பாலிவுட் படங்களிலிருந்து வேறுபட்டு ஒன்றைத் தயாரிப்பது, இசை தருவது, திரைக்குக் கொண்டுவருவது.. மக்கள் எப்படி வரவேற்பார்கள்?  சொல்வது கடினம். வென்றால் மேலே.. இல்லையென்றால் நான் காலி!”

**

நடிக்கவிடமாட்டீங்க ? சரி..

சுதந்திரத்துக்கு முன்னான காலகட்டத்தில், நாட்டில் இருந்த பல திறன்வாய்ந்த நாடக நடிகர்களில் ஒருவர். அந்தக்காலத்தின் புகழ்பெற்ற Boys நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இளம் வயதிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து நாடக உலகையே, தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் திருப்பிப் போட்டவர்! அருமையான கலைஞர். இப்படிப்பட்ட திறமையை வைத்துக்கொண்டு சினிமா உலகிற்குள் நுழையாதிருக்கமுடியுமா? நுழைந்தார், அந்தக் காலத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்த ‘பேசும்படங்களிலும்’ (அதற்கு முன் ’வாய்பேசாத’ படங்கள்தான் ஒடிக்கொண்டிருந்தன எனத் தனியாகச் சொல்லவேண்டுமா!) பிரவேசித்து, திறமை காட்டிய தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க பங்களிப்பாளர்.

’அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1941) படத்தில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கிறார். 1952-ல் வெளியான புகழ்பெற்ற ‘பராசக்தி’ படத்தில் இளம் சிவாஜிகணேசன், கருணாநிதியின் வீரதீர, காரசார வசனத்தில் வெடித்துக்கொண்டிருக்க, நிமிர்ந்த நெஞ்சோடு  பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாக்யம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது! பலபடங்களில் வில்லன் வேலை. அதில் மெச்சப்பெற்ற சில பங்களிப்புகள் உண்டு.

அட, யாரப்பா அது? கே.பி.காமாட்சி ! முழுப்பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஒரு கட்டத்தில் ’நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்..’ எனச் சொல்லிவிட்டதோ தில்லுமுல்லுத் திரையுலகம்…  நடிக்க வாய்ப்புகள் மேலும் வரவில்லை. மூடிக்கொண்டு அழுபவரா காமாட்சி? வாடி விழுந்துவிடுவாரா? நடிக்கத்தானே வாய்ப்பில்லை? பாட்டு எழுதலாம்ல.. முன்னாடியே சில பாடல்களைத் சினிமாத்திரைக்காக எழுதியிருக்கிறோமே – எனத் தெளிந்து ஸ்டூடியோவைச் சுற்றிவந்திருக்கிறார் மனுஷன். மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் சிறந்தவர் காமாட்சி. அவ்வப்போது வாய்ப்பு கிடைக்க, மனதை மயக்கும் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த கவிஞராக உருமாற்றம் பெற்றார். அப்போது எழுத ஆரம்பித்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம், கே.பி.காமாட்சி சுந்தரத்தை ஆசானாகக் கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

அந்தக்காலத்திலேயே ‘பழையபாட்டு’ எனக் கருதப்பட்ட சில ரம்யமான பாடல்களை ஆல் இந்தியா ரேடியோ, ரேடியோ சிலோனின் கைங்கர்யத்தில் அனுபவித்திருக்கிறோம் – இசைக்காக மட்டுமல்லாது அவற்றின் எழில்கொஞ்சும் வார்த்தைவடிவத்திற்காகவும். ஆனால் எழுதியவர் காமாட்சி சுந்தரம் எனத் தெரிந்திருக்கவில்லையே! கீழே கொஞ்சம் பாருங்கள்..

’வாழ்க்கை’ (1941) படத்தில் இந்தப் பாடல் : “உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோபம் கொள்ளுவதேன்!”

‘பராசக்தி’(1952)-யில் வரும் :

“ஓ! ரசிக்கும் சீமானே !
வா, ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்..!
அதை நினைக்கும்பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் !”

‘எதிர்பாராதது’ (1954) படத்தில் வரும் ”சிற்பி செதுக்காத பொற்சிலையே..!”

’அமரதீபம்’(1956) படத்தில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் சேர்ந்து, புகழ்பெற்ற இசையமைப்பாளரான T. சலபதி ராவின் இசையில் உருகும் ”தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு..”
எனக் கொஞ்சிச் செல்லும் பாடல். கவிஞர் காமாட்சியின் மொழிவண்ணத்தை ரசிப்பதற்காக இந்தப் பாடலை முழுமையாக அனுபவிப்போம்:

தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்ப நாதம்
எழுதிடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே ..
காற்றினிலே .. தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ .. ஓ.. ஓ..
புதுமை இதில்தான் என்னவோ

மீன் உலவும் வானில்
வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும்
ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
மென்காற்றே நீ சொல்லுவாய்

கான மயில் நின்று
வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே, வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே .. ஓ.. ஓ..
காணாததும் ஏன் வாழ்விலே ..

கண்ணோடு கண்கள்
பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல்
வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் .. ஓ.. ஓ..
கலைமதியே நீ சொல்லுவாய்  !

**