Narendra Modi நரேந்திர மோதி – தகுதி வாய்ந்த தலைவன்

1977- க்குப் பின் இந்தியத் திருநாட்டின் மிக இன்றியமையாத பொதுத்தேர்தல் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் நடந்த 10-வருட அபத்த ஆட்சி ’அப்பாடா! ஒழிந்தது ஒருவழியாக’ என்றிருக்கிறது நாட்டு மக்களுக்கு. இவ்வளவு கேவலமான, ஊழல் மலிந்த, அதைப்பற்றிய எந்த வெட்கமும், மான உணர்ச்சியும் இல்லாத, நிர்வாகத்திறமை என்பது மருந்துக்கும் கூடக் காணப்படாத குப்பைத்தொட்டி ஆட்சியை இந்த தேசம் இதுவரை கண்டதில்லை. இனியும் இப்படி ஒரு இழிநிலை நாட்டுக்கு நேராது இருக்க வேண்டுமானால், பெரிய, விரும்பத் தகுந்த அரசியல் மாற்றத்தை, மக்கள் நாடு முழுதும் இந்தத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டவேண்டும். இது நமது மக்களின் தற்போதைய தேசியக் கடமை. பல கட்சிகள் சேர்ந்து குழப்பும் நமது பெரும் ஜனநாயகத்தில் மக்கள் முன்னுள்ள ஒரு மாபெரும் சவாலும் கூட.

மாற்றுத் தேசியக்கட்சி என்பதோடு மட்டுமல்லாமல், 1999-2004 காலகட்டத்தில் நாட்டிற்கு நல்லாட்சியையும், அதன் வழியாக, கண்கூடான பொருளாதார வளர்ச்சியையும், அடல் பிஹாரி வாஜ்பாயீ தலைமையில் தந்த கட்சி பாரதீய ஜனதா கட்சி. வாஜ்பாயீக்கு உடல்நலமில்லாமல், அரசியலிலிருந்து விலகி ஓய்வு பெற்றுவிட்ட நிலை. குஜராத்தின் முதல்வராக, பல அரசியல், சமூக சோதனைகளையும் தாண்டி, சிறப்பான நிர்வாகத்திறமை, தொலைநோக்குப்பார்வை மூலம் சாதாரண மக்களின் ஆதரவைத் திரும்பத் திரும்பப் பெற்று நல்லாட்சி நடத்திவரும் நரேந்திர மோதி, பாரதிய ஜனதாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாடெங்கும் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் இவருக்கு மக்களிடம் நிறைந்த செல்வாக்கு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அத்வானி, ஜோஷி, போன்ற பழைய தலைவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, பிஜேபி-யினால் அறிவிக்கப்பட்டிருந்தால், அது சப்பென்று போயிருக்கும். பிஜேபி-யின் தேர்தல் பரப்புரைக்கு அது, இப்போது நரேந்திர மோதி தந்திருப்பதைப்போல் ஒரு கவர்ச்சியான, அதிரடித் துவக்கத்தை நாடுமுழுதும் ஏற்படுத்தியிருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பிஜேபி-யின் வளர்ந்து வரும் தலைவரான மோதியின் நிர்வாகத்திறமை பற்றி ஆதரித்தும் எதிர்த்தும் நாடு முழுதும் மீடியாவில் பேசப்பட்டுவந்தது. இது பிஜேபிக்குக் கிடைத்த எதிர்பாராதக் கூடுதல் பப்ளிசிட்டி ஆகும். கூடவே அமெரிக்கப் பத்திரிக்கைகளும், மேற்கத்திய அச்சு ஊடகங்களும் கடந்த ஆண்டிலிருந்தே, நரேந்திர மோதியை இந்தியாவின் வருங்காலத் தலைவர் எனக் கணித்துப் புகழ ஆரம்பித்துவிட்டன. சீனா அப்போதிருந்தே தன் காயை நகர்த்த ஆரம்பித்துவிட்டது. மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றன.

ஆள்வதாகச்சொல்லிக்கொண்டு, சொதப்பிக்கொண்டிருக்கும் சோனியா & கோ.விற்கு நரேந்திர மோதியின் வளர்ந்து வரும் புகழ், வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது? எதெதுக்குத்தான் மருத்துவம் செய்வது? மன்மோகன் சிங்கைக் கழட்டிவிட்டு (சொல்லப்போனால் கழட்ட ஏதுமில்லை- மறை கழன்ற உதிரி பாகங்களின் தொகுப்புதான் அவர்), காங்கிரஸின் பட்டத்து இளவரசரான ராகுல்காந்தியை சிம்மாசனத்தில் உட்காரவைக்க முயற்சி செய்யப்பட்டது மறைமுகமாக. கடந்த ஜனவரி வரை இந்த நிழல் நாடகம் சோனியாவின் கிட்ச்சனில் ரிகர்சல் மோடில் இருந்தது. வரும் பொதுத்தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வியை, வந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதி செய்தபின், இந்த முயற்சி வேறுவழியின்றி கைவிடப்பட்டது. மன்மோகன் வயதானோர் இல்லத்திற்காக மனுப்போட்டுள்ள நேரத்தில், ராகுலின் பரப்புரைகள் பொதுவாக எதிர்மறை விளைவுகளை காங்கிரஸுக்கு ஏற்படுத்தும் நிலையில், காங்கிரஸ் தன் அரசியல் வாழ்வின் படு மோசமான தேர்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

ஒன்பது கட்டமாக இப்போது நடைபெற்றுவரும் நாட்டின் பொதுத் தேர்தல், கடைசிக்கட்டத்தை நெருங்கும் நேரமிது. வடக்கே முலாயம் சிங் யாதவ், மாயாவதி, லாலு ப்ரசாத் யாதவ், நிதிஷ் குமார், அர்விந்த் கேஜ்ரிவால், கிழக்கே அக்கா மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி/உதிரிக்கட்சி தலைவர்கள் அவரவர் பங்குக்கு, மதச்சார்பற்ற ஆட்சி, மைனாரிட்டி சமூகம், தலித் மக்களின் வளர்ச்சி என்கிற பெயரில் நரேந்திர மோதியை எதிர்த்துவருகிறார்கள். அவரை பிரதமராக வரவிடாமல் செய்வதில் மட்டும் ஒற்றுமையாக இருந்து, இந்த நொந்துபோன, காலங்கெட்ட காலத்திலும் அன்னை சோனியாவுக்குப் ஆறுதலாக இருந்து வருகிறார்கள். அவர்கள் ஆற்றும் தேசியக்கடமை இது!

நரேந்திர மோதியே நல்ல மாற்றம் தரத்தக்க தலைவர் என்கிற வரவேற்கத்தக்க பொது உணர்வு, விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுவிட்டது நாட்டின் வரப்போகும் நல்ல காலத்தைக் குறிக்கிறது. இளந்தலைமுறையினரிடையே நரேந்திர மோதிக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு கடந்த இரு ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட ஒரே நல்ல மாற்றம். மாறாத தேசபக்தி, அரசியல் நேர்மை, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற உத்வேகம், நிரூபிக்கப்பட்ட நிர்வாகத்திறன் போன்ற குணநலன்கள், பிஜேபியின் நரேந்திர மோதியை நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கவல்ல, ஒரே சிறந்த தேசியத் தலைவராக இனம் காட்டுகின்றன. அறுபது ஆண்டுகளாக நாட்டை அலங்கோலமாக்கித் திணற அடித்த காங்கிரஸ் மற்றும் அவர்களது சகாக்களான சில்லரை எதிர்க்கட்சிகளின் துஷ்பிரச்சாரத்துக்கு இடம் தராமல், நரேந்திர மோதி ஒருவரே நாட்டின் தலைமைக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் மனதில் கொண்டு நமது மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மோதிக்கு இந்தச் சரியான தருணத்தில் வாக்களித்தலே, சிறப்பான பொருளாதார, சமூக வளர்ச்சியை நம் நாட்டுக்கு வரும் வருடங்களில் கொண்டுவந்து சேர்க்கும்.

நல்ல மாற்றங்களுக்கு, நாட்டின் நல்வாழ்விற்கு நரேந்திர மோதி !

**