சீறிப் பாயும் பெண்கள் கிரிக்கெட் – இந்தியாவின் WPL

முதன்முதலாக சர்வதேச அளவிலான பெண்களுக்கான முன்மாதிரி (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மார்ச் 2023-ல் ஆரம்பிக்கவிருக்கிறது.  WPL – Women’s Premier League – துவக்கப்படுவதற்கான இந்திய கிரிக்கெட் போர்டின் ஆரம்ப அறிவிப்புக்குப் பின்,  உலகெங்குமான  கிரிக்கெட் வீராங்கனைகள், அதனுள்ளே நுழைந்துவிடப் படபடக்கிறார்கள். இந்திய வீராங்கனைகளுடன், அயல்நாட்டு அதிரடி பெண் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆடப்போகும் மகளிர் கிரிக்கெட்டின் high profile T-20 போட்டிகள் இவை. மும்பையில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மொத்தம் 22 போட்டிகளின் இறுதியில், எந்த அணி தட்டிச்செல்லுமோ அலங்கார WPL கோப்பையை!

WPL-ன் அழைப்பின் பேரில் வீராங்கனைகள் ஏலத்திற்காக சுமார் 1500 பேர் பதிவு செய்திருந்தார்கள். தங்கள் நாட்டிற்காக ஆடிவருபவர்களும், U-19 வீராங்கனைகளும் கொண்ட நீண்ட பட்டியல். இந்திய வீராங்கனைகளையும் உள்ளடக்கிய இந்த பட்டியல், இந்திய கிரிக்கெட் போர்டினால் சுருக்கப்பட்டு 449 வீராங்கனைகள் மட்டும் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த ப்ரிமியர் லீகில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் 5 பெண்கள் அணிகள் ஆடவிருக்கின்றன: குஜராத் ஜயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ், மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மகளிர் கிரிக்கெட் அணிகள் நேற்று (13-2-23) மும்பையின் Jio Global Centre-ல் நடந்த கிரிக்கெட் வீராங்கனைகளின் ஏலத்தில் பங்கேற்றன. WPL ஏலத்தில், அதிகபட்ச அடிமட்ட விலை -Base Price – ஆக ஒரு முன்னணி வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூ.40 லட்சம், ரூ. 30 லட்சம் என அடுத்தடுத்த பிரிவுகளும் இருந்தன. தன் நாட்டு அணிக்காக இதுவரை ஆடியிராத  வீராங்கனை ஒருவரின் அடிமட்ட விலை ரூ. 20 லட்சம், ரூ. 10 லட்சம் என்கிற பிரிவுகளில் இருந்தது. இதற்கு மேல், ஒரு வீராங்கனையின் ஆடும் திறன், சர்வதேச அனுபவம், அவர் ஒரு batter, bowler, allrounder- ஆகியவற்றைப்பொருத்து ஏலத்தில் அவர்களின் விலை ஏறியது அல்லது அடிமட்ட விலையைத் தாண்டாது, அதே விலையிலேயே சில கிரிக்கெட்டர்கள் விலைபோனார்கள்! WPL அணிகள் தங்களுக்கேற்ற வீராங்கனைகளைப்பற்றி நிபுணர் குழுவின் ஆலோசனைகளை, ஏலத் திட்டங்களை லேப்டாப்புகளில் நிரப்பி, எடுத்து வந்து அமர்ந்திருந்தன. உதாரணமாக குஜராத் ஜயண்ட்ஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் (மெண்ட்டர்), நூஷின்  அல் காதிர் (பௌலிங் கோச்), பெங்களூரு அணிக்கு டைரக்டர் மைக் ஹெஸ்ஸன், மும்பை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்/ கோச் ஜூலன் கோஸ்வாமி போன்றவர்கள் அணியின் உரிமையாளர்கள், பிரதிநிதிகளுடன் உட்கார்ந்திருந்து தங்களுக்கான வீராங்கனைகளை வாங்குவதில் முனைப்புக் காட்டினர்/ ஆலோசனை தந்தனர்.

WPL’s lady auctioneer Mallika Sagar

எல்லாம் பெண், எதிலும் பெண் என்கிற லட்சிய வேகத்தில் WPL இருக்கிறதோ ! ஐபிஎல் ஏலத்தில் வரும் உலகப்புகழ் ஆண் ஏலக்காரர் ஹக் எட்மெடீஸ் (Hugh Edmedeas), WPL ஏல நிகழ்ச்சிக்குத் தேர்வாகவில்லை. பெண் auctioneer மல்லிகா சாகர் என்பவர் வந்து, இந்திய / சர்வதேச வீராங்கனைகளை WPL-க்காக ஏலம்போட்டு கலக்கியதை உலகம் பார்த்து வியந்தது நேற்று! ஸ்போர்ட்ஸ் 18 சேனல் அழகாக எல்லாவற்றையும் லைவ் காண்பிக்க,  பார்த்து மகிழ நேர்ந்தது. தற்போது தென்ன்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை ஆடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கள் ரூமில் மெகாஸ்க்ரீன் போட்டு, தங்களில் சிலர் அதிகவிலைக்குத் தேர்வானதைப் பார்த்துக் குதித்துக்கொண்டிருந்ததையும் லைவ் ஆகக் காண்பித்தார்கள். கூடவே, தங்களின் செல்லப்பெண் உலகளாவியப் புகழ் பெற்றுவிட்டதையும், பெரும்பணத்தை அள்ளிவிட்டதையும் டிவியில், ஃபோனில் பார்த்து கைதட்டியும், கண்கசக்கியும் உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனைகள் சிலரின் பெற்றோரையும் லைவ் காட்சி க்ளிப்களில் மென்மையாகக் கொண்டு வந்திருந்தது Sports 18.

இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச விலையை வென்றவர்கள்: ஸ்ம்ருதி மந்தனா ரூ 3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்). தீப்தி ஷர்மா ரூ. 2.6 கோடி (உ.பி. வாரியர்ஸ்). ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ.2.20 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). ஷெஃபாலி வர்மா ரூ. 2 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). பூஜா வஸ்த்ராகர் ரூ. 1.9 கோடி (மும்பை இண்டியன்ஸ்), ஹர்மன்ப்ரீத் கௌர் ரூ. 1.8 கோடி (மும்பை இண்டியன்ஸ்), ரிச்சா கோஷ் ரூ. 1.9 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), ரேணுகா சிங் டாக்குர் ரூ.1.5 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia)   ரூ. 1.5 கோடி (மும்பை இண்டியன்ஸ்), தேவிகா வைத்யா ரூ.1.4 கோடி (உ.பி. வாரியர்ஸ்), ஸ்னேஹ் ரானா ரூ.75 லட்சம் (குஜராத் ஜயண்ட்ஸ்).

மேலே : மும்பை இண்டியன்ஸின் நீதா அம்பானி ஏலம் எடுக்க முயற்சிக்கிறார்!

கீழே : RCB, MI ஏலத்தில் எடுத்த இந்திய முன்னணி வீராங்கனைகள் இருவர்

முதலில் ஏலத்தில் இடம்பெற்றவர் இந்திய துணைக் கேப்டனும், கிரிக்கெட் உலகில் பிரசித்திபெற்றவருமான ஸ்ம்ருதி மந்தனா. அவர்தான் WPL ஏலத்தின் டாப் வின்னர். மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எனக் கடுமையாகப் போட்டிபோட, இறுதியில் பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். அதைப்போல கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்காக டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் போட்டிபோட்டன. இறுதியில் மும்பை வென்றது அவரை ! ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவுக்காக டெல்லி, உ.பி, மும்பை இன்டியன்ஸ் மோதிப்பார்த்தன. உ.பி. வென்று, அவரைத் தன் அணியில் சேர்த்துக்கொண்டது.

படம்: ஏலத்தைக் கூர்மையாக அவதானிக்கும் குஜராத் ஜயண்ட்ஸ் பிரதிநிதிகள். மத்தியில் மித்தாலி ராஜ்

ஐந்து அணிகளுமே முக்கிய அயல்நாட்டு வீராங்கனைகளை தங்கள் அணிக்கு வாங்கிப்போடுவதில் தீவிரம் காட்டின. எதிர்பார்த்ததைப்போலவே போட்டி பற்றிக்கொள்ள, சிலர் மிக அதிக விலைகொடுத்து ஏலமெடுக்கப்பட்டார்கள். ஆஷ்லே கார்ட்னர், ஆஸ்திரேலியா ரூ.3.2 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்), நேட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt) , இங்கிலாந்து ரூ.3.2 கோடி (மும்பை இன்டியன்ஸ்), பெத் மூனி (Beth Mooney) ஆஸ்திரேலியா ரூ.2 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்), ஸோஃபீ எக்ள்ஸ்டன் (Sophie Ecclestone), இங்கிலாந்து ரூ.1.8 கோடி (உ.பி.வாரியர்ஸ்), எலிஸ் பெர்ரி (Elyse Perry), ஆஸ்திரேலியா ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), மரிஸான் கேப் (Marizanne Kapp) , தென்னாப்பிரிக்கா ரூ.1.5 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). தாஹ்லியா மெக்ரா (Tahlia McGrath) , ஆஸ்திரேலியா ரூ.1.4 கோடி (உ.பி. வாரியர்ஸ்). மெக் லானிங் (Meg Lanning), ஆஸ்திரேலியா ரூ. 1.1 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்),  ஷப்னம் இஸ்மாயில், தென்னாப்பிரிக்கா ரூ.1 கோடி (உ.பி. வாரியர்ஸ்). அமேலியா கெர் (Amelia Kerr) , நியூஸிலாந்து ரூ.1 கோடி (மும்பை இண்டியன்ஸ்). இந்த வெளிநாட்டு வீரர்களுக்கான அணிகளின் பரபரப்புக்கிடையே, ரூ.60 லட்சத்துக்கு இங்கிலாந்தின் ஸோபியா டன்க்ளியை (Sophia Dunkley) மலிவாக வாங்கிவிட்டது குஜராத் ஜயண்ட்ஸ். அதேபோல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிஸா ஹீலியை (Alyssa Healy) ரூ.70 லட்சத்துக்கு வாங்கிப்போட்டது உ.பி.வாரியர்ஸ். கிரிக்கெட் விளையாடும் ஏனைய நாடுகளிலிருந்தும் (excepting the top 10) குறைந்த பட்சம் 5 பேரையாவது ஏலத்தில் எடுக்க ஒரு திட்டமிருந்தது. தாய்லாந்து, சிங்கப்பூர், அமீரகம், நமீபியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ICC Associate Members ஆகும். இவற்றிலிருந்து ஒரே ஒரு வீராங்கனை – தாரா நாரிஸ் (Tara Norris, USA) மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார். டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.10 லட்சத்திற்கு அவரை வாங்கிப்போட்டுக்கொண்டது (எதுக்கும் இருக்கட்டும்!)

தற்போது தென்னாப்பிரிக்காவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடிவரும் இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளான ஹர்லீன் தியோல் (Harleen Deol) , ராஜேஷ்வரி கயக்வாட் (Rajeshwari Gayakwad) , (பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஸ்பின் வீசிய) ராதா யாதவ் ஆகியோர் தலா ரூ. 40 லட்சத்துக்குத்தான் (Base Price) வாங்கப்பட்டார்கள்.

படம் : WPL -ல் 15 வயது சிறுமிகள் ! சோனம் யாதவ், ஷப்னம் ஷகீல்

ஜனவரியில் U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் ரூ.10 லட்சம் என்கிற ஏல ஆரம்பத்தொகையில் இருந்தார்கள். சிலரே வாங்கப்பட்டார்கள். அவர்கள் ஏலத்தில் இப்படி எடுக்கப்பட்டார்கள்: அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஷ்வேதா செஹ்ராவத் ரூ.40 லட்சம் (உ.பி. வாரியர்ஸ்), வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் சாது ரூ. 25 லட்சம் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), வேகப்பந்துவீச்சாளர் எஸ்.யஷஸ்ரீ, பதினாறு வயது பறவைகள் பார்ஷவி சோப்ரா(Parshawi Chopra) (ஸ்பின்னர், உ.பி. வாரியர்ஸ்) , ஹர்லி காலா (Hurley Gala) (ஆல்ரவுண்டர், குஜராத் ஜயண்ட்ஸ்), தலா ரூ.10 லட்சம். 15 வயது உ.பி. ஸ்பின்னர் சோனியா யாதவ் (மும்பை இண்டியன்ஸ்), அதே வயது ஆந்திரா மீடியம் பேசர் ஷப்னம் ஷகீல் (குஜராத் ஜயண்ட்ஸ்) ஆகியோர் WPL -ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் இளைய தலைமுறையினரிடையே எவ்வளவு ஆழமாக ஊன்றியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மார்ச் 4-லிலிருந்து 26 வரை WPL போட்டிகள் மும்பை, நவி மும்பை மைதானங்களில் நடக்கவிருக்கின்றன. பெண்கள் கிரிக்கெட் உலகின் பெரும் நட்சத்திரங்களுடன் தோளுரசும் வாய்ப்பினைப் பெற்ற மகிழ்ச்சியில் நமது இளம் வீராங்கனைகள் சிலர் ஒவ்வொரு அணியிலும் இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள, பங்களிப்பு தர, கிரிக்கெட்டில் முன்னேற அருமையான வாய்ப்பு WPL மூலம் இவர்களுக்கெல்லாம் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பெண்களுக்கான high profile சர்வதேச டி-20 சேம்பியன்ஷிப்பை உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்திய கிரிக்கெட் போர்டு பாராட்டுக்குரியது. Women’s Hundred (England), WBBL (Australia) என இதுவரை மகளிர்க்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும்,  இந்தியாவில் நடக்கும் WPL என்பது ஒரு game changer, டாப் க்ளாஸ் ப்ரொஃபனல் கிரிக்கெட் எனப் பெயர்பெற்றுவிடும்  என நம்பலாம்.

**

Advertisement

2 thoughts on “சீறிப் பாயும் பெண்கள் கிரிக்கெட் – இந்தியாவின் WPL

  1. எப்படி எல்லாம் காசு பார்க்கிறார்கள் என்றுதான் தோன்றியது!  நம் நாட்டு வீராங்கனைகளுக்கு கொடுக்கும் காசைவிட அயல் நாட்டு வீராங்கனைகளுக்கு அதிக காசு கொடுக்கிறார்கள்!

    Like

  2. @ Sriram:

    பின்னே! மஞ்சள் அழகிகள் வந்து மைதானத்தில் இறங்கினால்தானே கூட்டமும் அள்ளும்.. பெருவணிகம் புகழ்பெற்ற விளையாட்டுகளைக் கட்டித் தழுவும் காலமிது. பேசப்படாது

    இருந்தும் ஆஷ்லே கார்ட்னர், நேட்-ஸிவர் ப்ரண்ட் ,ஸ்ம்ருதி மந்தனா என ரொம்பத்தான் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள் நமது முதலாளிகள்! எடுத்துவிடுவோம் என்கிற நம்பிக்கைதான் இங்கே…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s