ஓடு.. விட்டுட்டு..

எல்லாத்துக்கும் பழகிப்போன, அல்லது கிட்டத்தட்ட மரத்துப்போய்விட்ட மனசு. இதை துணைவைத்துக்கொண்டுதான் அலையவேண்டியிருக்கிறது அங்குமிங்குமாக இந்த வாழ்வில். அவ்வப்போது, ‘அறிய”வும் வேண்டியிருக்கிறது, நேரிடுகிறது பலவற்றை. இந்த அறிதலில் அக்கம்பக்கம் பார்ப்பது, கேட்பது, பத்திரிக்கைகளைப் புரட்டுவது, மீடியாவைப் பார்ப்பது.. இப்படி வகை வகையாய். அறிதல் சரி. தெளிதல் உண்டா என்று அசட்டுத்தனமாகக் கேட்கமுயற்சிக்காதீர்கள்..

காலைக் காப்பி தீர்ந்துவிடும் முன்னால் செய்திகளைக் கொஞ்சம் பார்ப்போம் என லேப்டாப் ஸ்க்ரீனில் கண்ணை உருட்டினால்.. இது திடீரெனப் பட்டது. அதிர்ச்சி. அப்போ.. இன்னும் மரக்கவில்லையா மனம்? என்ன அப்படி ஒரு நியூஸ்? நம் நாட்டுக் குப்பையா? அயல்நாட்டு அதிர்வா?

இஸ்ரேலில் பென் குரியன் (Ben Gurion) ஏர்ப்போர்ட். ஃப்ளைட் பிடிக்க நேரமானதால் அவசர அவசரமாக ஓடிவந்தார்கள் ஒரு தம்பதி. கையில் சின்ன கேரியரில் குழந்தை. செக்-இன் கவுண்ட்டர் மூடப்படும் பரபரப்பு. பதட்டம். வேகமாக போர்டிங் லவுஞ்சுக்கு ஓடவேண்டுமே.. குழந்தையை கேரியருடன் செக்-இன் கவுண்ட்டர் வாசலிலேயே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் உள்ளே. குழந்தையுடன் ஓடுவது எவ்வளவு கஷ்டம்.. பாவம்! மேலும் குழந்தைக்கு டிக்கெட்வேறு வாங்கவில்லையாம்.  செக்-இன் கவுண்ட்டர் அலர்ட் ஆனது. ஏர்ப்போர்ட் செக்யூரிட்டியிடம் தகவல் போனது. அவர்கள் உடனே போர்டிங்கை நிறுத்தி, உள்ளே போய் அந்த மகத்தான பெற்றோர்களை வெளியே இழுத்துவந்துவிட்டார்கள். குழந்தையை எடுத்துக்கொள்ளவைத்தார்கள். டெல் அவீவிலிருந்து (Tel Aviv) பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸுக்குப் (Brussels) போகும் ரியான்ஏர் (Ryanair) ஃப்ளைட் அது. பெல்ஜியக்காரர்கள்தான் இந்த தம்பதி.. ஜெகதாம்பதி. இஸ்ரேலியப் போலீஸ் மேலும் விசாரணையில் இருக்கிறதாம். ரியான்ஏரில் பெற்றோர் தங்கள் கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பயணிக்கலாம். ஆனால் அதற்கு அவர்களின் டிக்கட் கட்டணத்தோடு, 27 டாலர் எக்ஸ்ட்ரா கொடுக்கவேண்டும் . அல்லது குழந்தைக்கு, தனி சீட்டுக்கான டிக்கெட் வாங்கிவிடவேண்டும். பெற்றோர் இதில் எதையும் செய்யவில்லை. குழந்தைக்கு டிக்கெட்? – என்று கேட்கப்பட்டவுடன், விட்டுட்டு.. ஓடியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிகழ்வை நாங்கள் சந்தித்ததே இல்லை என்கிறார்கள் பென் குரியன் ஏர்ப்போர்ட் ஸ்டாஃப். ’டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ நாளிதழில் வெளியாகியிருந்த செய்திக்குக் கீழே ஒரு வாசகரின் கமெண்ட்: அந்தப் பெற்றோர்களைப் போகவிட்டிருக்கலாம். இந்தக் குழந்தை அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்குமே!

என்னமாதிரி உலகம் இது. இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறது?

**

4 thoughts on “ஓடு.. விட்டுட்டு..

  1. இந்தச் செய்தி என் கண்ணிலும் பட்டுத் தொலைத்தது. எழுதுவதற்கு எடுத்து வைத்திருந்தேன்…நீங்க சுடச் சுட மாலை மலர் போல காலை மலரா போட்டுட்டீங்க, அண்ணா.!!

    அந்த வாசகரின் கமென்ட் சரிதான்னு கூடத் தோணுது. இப்ப ஏத்துக் கொண்டு அப்புறம் அந்தக் குழந்தைய கடாசிடக் கூடாதேனு மனம் பக் பக், அந்தச் செய்தியில் ஒரு வீடியோ இது எதுவுமே தெரியாம அந்தக் குழந்தை நடப்பது அமர்வது வீடியோ பார்த்து நான் அழுதுட்டேன்….

    அவங்க இது வரை பாத்திருக்க மாட்டாங்க இப்படி ஒரு நிகழ்வை. இருக்கலாம்….ஆனா நம்ம ஊர்ல இது சர்வ சகஜமா நடக்கக் கூடிய விஷயம்தான். குப்பைத் தொட்டில போடும் பழக்கம் அல்லது யாரும் இல்லாத இடத்துல விட்டுட்டுப் போறவங்க…

    அடையார்ல இருக்கற கான்சர் ஆஸ்பத்திரியில கான்சர் குழந்தைகளை அப்படியெ விட்டுட்டுப் போற பெற்றோர்……

    எதுக்குக் கல்யாணம் எதுக்குக் குழந்தை குட்டி? இதுக்கும் வலுவான சட்டம் வரணும்…..ஒழுங்கா வளர்க்கறதா இருந்தா குழந்தை பெத்துக்கோ இல்லைனா குழந்தை பெத்துக்கக் கூடாதுன்னு..

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      சொத்துபத்துக்களை வைத்துக்கொண்டு வாரிசு இல்லையே என்று அலையும் தம்பதிகளும் உண்டு உலகில். தத்தெடுக்கவும் விரும்பாமல், பெத்துக்கவும் முடியாமல் தவிப்பு. இன்னொரு பக்கம் என்னடான்னா.. இப்படி அபத்தக் காட்சிகள்.

      எதையாவது கூர்ந்து பார்த்தால், தெரிந்துகொண்டால் அந்தப் பாவம் நம்மையும் பிடித்துக்கொண்டுவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு இருக்கு உலக நடப்பு…

      Like

  2. உறவுக்கான மதிப்புகள் மலிந்து வரும் காலம் இது.  தாலி கட்டி விட்டோமே என்று நம்பிக்கையுடன் நிம்மதியாகத் தூங்க முடியாது.  கணவன் தலையில் கல்லை போட்டுக் கொல்லும் மனைவியும், மனைவியை துண்டு துண்டாக அறுக்கும் கணவர்களும் நிறைந்த பூமி இது.

    Like

    1. @ ஸ்ரீராம்:

      கொலைக்கொடூரங்களுக்கு, அட்டூழியங்களுக்கு 24 மணி நேர லைவ் கவரேஜ் கொடுக்கும் மீடியாவை வைத்துக்கொண்டு எந்த சமூகம் உருப்படும்? ஒழுங்கீனங்களை உன்னதம்போல் காட்டும் மீடியா.. அதைப் பார்த்துப்பார்த்து, கேட்டுக்கேட்டுத் தன்னையும் பயமின்றி, வெட்கமின்றி அவ்வாறே நாளடைவில் உருவாக்கிக்கொள்ளும் சமூகம்.

      மேலும் மேலும் மோசமாகிவரும் இந்தக் காலகட்டத்தில்தான் நல்லவர்களாகப் பிறந்துவிட்டவர்களும் தட்டுத்தடுமாறி வாழவேண்டியிருக்கிறது.

      Like

Leave a reply to Aekaanthan ஏகாந்தன் Cancel reply