இந்த வருடம் முழுதுமே கிட்டத்தட்ட ஒன்றும் எழுதவில்லை! வீட்டில் பிரச்னைகள், பயணங்கள், பயணம் கொண்டுபோய் சேர்த்த இடங்களில் செய்யவேண்டியிருந்த தொடர் காரியங்கள், நேரமின்மை இப்படி காரணங்கள். எழுதுவதற்கான விஷயங்கள் பல அவ்வப்போது முகம் காட்டிக்கொண்டிருந்தனதான். இரவின் நடுவில் எழுந்தாடிய கவிதை வரிகள்.. எழுந்து எழுதி வைக்க சோம்பல். தொடர்ந்த கனவு நிலை. அல்லது கண்விழித்து லைட் போட்டு கம்ப்யூட்டர் ஆன் செய்யும் பொறுமை இல்லாத கையாலாகத்தனம். காலையில் காப்பி குடிக்கையில் இரவில் கரைந்தவற்றை மீட்க முயற்சித்த மனம். வீட்டிலுள்ளவர்கள் அவ்வப்போது கேள்வியானார்கள்: என்ன யோசிச்சுகிட்டிருக்கே.. அங்கே என்னத்த பார்க்கறே..? சுருக்கமாகச் சொன்னால், எங்களோடு நீ இருப்பதாகத் தெரியவில்லையே. ஏன்? என்னடா இது. அங்கே இங்கே பார்க்காமல், சிந்தனையில் விழாமல், ஆழாமல் என்று வாழ்க்கை நகர்ந்திருக்கிறது? நம்மோடு இருப்பவர்களை, நம் எதிரே உட்கார்ந்திருப்பவர்களையே பார்த்துக்கொண்டு, உற்சாகமாக இருப்பதாக, அவர்கள் பேச்சுகளில் அலாதி ஆர்வம் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, பதில் சொல்லிக்கொண்டு அவர்களது உலகத்திலேயே உலவிக்கொண்டிருக்கவா முடியும்? நமக்கென ஒரு உலகம் நம்முள் இயங்குகிறதே… அதை யார் கவனிப்பது? எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டும், சுற்றுப்புறத்தை அனுபவித்துக்கொண்டுமிருந்தேன் தான் இந்தக் காலகட்டத்தில். இருந்தும் சில பல காரணங்களால், அல்லது சரியான காரணமின்றியும், எழுதவில்லை. எழுத்து நிகழவில்லை. As simple as that.

இப்ப என்ன அதுக்கு? நீ எழுதாததால் ஒலகம் அஸ்தமிச்சிருச்சா என்ன?- என நீங்கள் கேட்கலாம். சேச்சே.. அப்படில்லாம் ஒன்னும் ஆகல…! இதையெல்லாம் இங்கே சொல்ல, பின் என்னதாம்ப்பா காரணம்? ஏகப்பட்ட பிரச்னைகள், தொல்லைகளுக்கிடையேயும், ஏதோ… மனிதன் இருந்துவிட்டான். இன்னமும் மிச்சமிருக்க, தொடர்கிறான் எனக் காட்டிக்கொள்ளவேண்டாமா. உலகில் என் இருத்தலை, மேலும் நீங்கள் பொறுத்துக்கொண்டு, கொஞ்சம் அனுசரித்துப்போகவேண்டாமா.. அதுக்குத்தான்னு வெச்சுக்குங்க…
**
உலகக்கோப்பை கிரிக்கெட் சமயம் உங்களிடமிருந்து தொடர்பதிவுகள் எதிர்பார்த்தேன். எழுதாமல் இருக்கும் குற்ற உணர்ச்சியே விளக்கமளிக்க வைக்கிறது. எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்ச்சியும், எழுத வேண்டியதை மனதில் நிறுத்த எதிரில் உள்ள சுவரை வெறிப்பதும்… இயல்பே..!!!
LikeLike
அதுக்கு ஏற்றபடி நம் இந்திய அணி படுமோசமாக விளையாடியது…அப்புறம் எப்படி எழுதத் தோன்றும்?
LikeLike
எல்லோருக்குமே ஏதோ மன சஞ்சலம் இருப்பதாக
நானாக நினைத்துக் கொள்வேன்.
ஒரு பதிவுக்கும் சென்று வாசிக்காமல் இருக்கிறேன்.
இது என் ஜிமெயிலில் வந்ததால்
படிக்கத் தோன்றியது.
இந்தக் காலத்தையும் கடக்கலாம்.
நம்மைப் போல் ஒருவர் என்று நினைக்கிறேன்.
இத்தனைக்கும் நடந்த நிகழ்வுகளை
நட்புகளுடன் தினந்தோறும் பாகிர்ந்திருக்கலாம்.
ஏதோ ஒரு இயலாமை.
மாறலாம். அருமையான பதிவு ஜி.
LikeLike
@ ஸ்ரீராம், @ நெல்லைத்தமிழன், @ ரேவதி நரசிம்ஹன்:
எதையும் வெறிக்கவில்லை! நிறைய கொறித்துக்கொண்டிருந்திருக்கிறேன். எழுதவில்லை.
கிரிக்கெட்டைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. மற்ற விஷயங்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.
மன சஞ்சலம் அவ்வப்போது ஆட்கொள்ளும். விலகும். மீண்டும் வரும். அதன் இயல்பு!
இடையே லேப்டாப் க்ராஷ் வேறு. எனது கவிதை ஃபைல்களை ரெட்ரீவ் செய்யமுடியாத சோகம்.
சரி, புது எழுத்துக்கு வழிவகுத்திருக்கிறதோ, என்னவோ..
LikeLike
ஏகாந்தன் அண்ணே…சேம் போட்!!! டிட்டோ பல வரிகள் எனக்கும் பொருந்திப் போகின்றன. மன சஞ்சலம் இல்லை ஆனால் எழுதுவதற்கு நிறைய இருக்கு ஆனால் எழுத மனம் ஒத்துழைக்காமல் நிகழ்வுகள் பிரச்சனைகள்….சமுத்திர அலை ஓயாது என்பது போல!!!!!
கீதா
LikeLiked by 1 person
@ கீதா : என்ன செய்வது? அலையோடு அலையாக தண்ணீரில் இறங்கிவிடவேண்டியதுதான் . இழுத்துட்டுப்போனாலும் சரி, வெளியே தூக்கியெறிந்தாலும் சரி !
LikeLike