உலக ஜுடோ கேடட் சேம்பியன்ஷிப் போட்டிகள் சில நாட்கள் முன்பு போஸ்னியா-ஹெர்ஸகோவினா (Bosnia Herzegovina) நாட்டுத் தலைநகரான ஸரயேவோவில் (Sarajevo) நடைபெற்றன. இந்தியப் பெண் அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால் 16-வயது சிறுமி லிந்த்தோய் சனம்பம் (Linthoi Chanambam) பிரேஸிலின் கடும் சவாலை எதிர்கொண்டு உலக சேம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
2018-ல் தேசிய சப்-ஜூனியர் போட்டிகளில் இவர் சேம்பியன் ஆனபோது, சரி, இந்தியாவில் எதிர்கால ஜூடோ ஸ்டாராக வர வாய்ப்பு இந்த சிறுமிக்கு இருக்கிறது என்கிற அளவில் கணித்திருந்தார்கள், ஜூடோ வல்லுநர்கள். கடந்த ஆண்டு நவம்பரில் தன் 15-ஆவது வயதில், தேசிய சேம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறார். ஜூலையில் தாய்லாந்தின் பேங்காக்கில் நடந்த போட்டிகளில் ஆசிய ஜூனியர் ஜூடோ சேம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி அதிர்வுகளை ஏற்படுத்திய லிந்த்தோய், உலக சேம்பியன்ஷிப் அரங்கிலும் போட்டுத்தாக்குவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். பிரேஸிலின் அந்த அனுபவ வீராங்கனை (15 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டவர்) பியாங்கா ரெயிஸ் (Bianca Reis) தன் இந்திய எதிரியை சரியாகப் பார்த்திருக்கக்கூடமாட்டார். பின்னே? சர்வதேச ஜூடோ அனுபவம் கூடிய எதிர்கால சேம்பியனை, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் யாரோ ஒரு குட்டிப்பெண் எதிர்ப்பாள் என்பதிருக்கட்டும், புரட்டிச் சாய்ப்பாள் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்?
எப்படி ஆரம்பித்தது இந்த சாதனைப்பயணம்? லிந்த்தோய் மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கருகிலுள்ள மயாங் எனும் சிற்றூரில் ஒரு சாதாரண விவசாயியின் மகள். அவரது 3 பெண்களில் நடுவில் வந்தவர். சின்னஞ்சிறு பெண்ணாயிருந்தபோதே தன்னை ஒரு சிறுவனாகவே உணர்ந்ததாகவும், பசங்களுடன் சேர்ந்து ஓட்டம், கால்பந்து போன்றவற்றில் கலந்துகொள்வதே வழக்கம் என்கிறார். இதைக் கவனித்த விளையாட்டு ரசிகரான அப்பா சந்தோஷப்பட்டதோடு, அருகிலுள்ள ஜூடோ பள்ளியில் சேர்த்துவிட்டார் தன் பெண்ணை. அங்கே சிறுமியின் எனர்ஜி, வேகம், உடல்மொழி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஓரிரு வருடங்களில், 11 வயது சிறுமியாய் லிந்த்தோய் இருக்கையில், அங்கு வருகிறார் ஒரு நிபுணர். IIS (Inspire Institute of Sports, Bangalore)-ன் இளம்பிஞ்சுகள் உலகத்தில் எதிர்கால வீரர்களைக் கண்டறியும் ஜூடோ கோச்/நிபுணர் மமுகா பஸிலாஷ்விலி.(Mamuka Basilashvili-ஜார்ஜியா நாட்டவர்) கண்டதும் உடனே புரிந்துகொண்டார் சிறுமி லேசுப்பட்டவளல்ல என்று! கஷ்டப்பட்டு குடும்ப அனுமதி பெற்று, சிறுமியை பெங்களூருக்கு அழைத்துவந்து, ஸ்போர்ட்ஸ் இன்ஸ்ட்டிடியூட்டில் 2017-ல் ஜூடோ பயிற்சிக்காக சேர்த்துவிட்டார்.

படம்: இந்தியாவின் ஜூடோ இளவரசி !
கேடட் (U-18) சேம்பியன்ஷிப் தங்கப்பதக்கத்தை வென்ற லிந்த்தோய் சொல்கிறார்: ’ஏதாவதொரு பதக்கத்தை இங்கிருந்து கொண்டு செல்லவேண்டும் எனத்தான் இங்கே வந்திருந்தேன். அதற்காக மேடையில் சாகவும் தயாராக இருந்தேன்!’ தங்கத்தை வென்றவுடன் ஒரு குட்டிச் சிங்க கர்ஜனை கொடுத்த சிறுமி அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். தன் கோச்சைக் காணவில்லையே என்ற அதிர்ச்சி, ஏமாற்றம். பிறகுதான் என்ன நடந்தது எனத் தெரிந்திருக்கிறது. ஃபைனல் போட்டியின் போது ரெஃப்ரீயின் தவறினால் சில பாய்ண்டுகளை இழந்திருக்கிறார் லிந்த்தோய். அதனால் அரங்கில் கோபப்பட்டுப் பேசியிருக்கிறார் கோச் மமுகா. அரங்கத்துக்காரர்கள் அவரை எச்சரித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு லாவகத்தில் ப்ரேஸில் வீராங்கனையை நொடியில் கீழே சாய்த்திருந்த லிந்த்தோய்க்கு ‘இப்போன்’ (ippon -ஜப்பானிய பாணியில் அதிக பாய்ண்ட்டுகள்) கொடுத்திருக்கவேண்டும். ஆனால் வஸா-அரி (Wasa-ari) எனும் இரண்டாவது க்ரேடிங் பாய்ண்ட்தான் அவருக்கு ரெஃப்ரீயால் தரப்பட்டது. இன்னும் ஒரு நிமிஷம் தானே இருக்கிறது, என் சிஷ்யையை ஜெயிக்கவிடாமல் செய்கிறார்கள் என ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சத்தம்போட்ட, இந்திய கோச்சை அங்கிருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அரங்கத்துக்குள் அவர் இனி நுழையக்கூடாது என்கிற தடையையும் விதித்துவிட்டார்கள். இந்தியாவாவது, ஜூடோவில் ஜெயிப்பதாவது என்கிற அலட்சியம், அக்ரமம்தான், வேறென்ன.
ஆனால் தங்கத்தை வென்றுவிட்ட லிந்த்தோய், அவரது கோச் மமுகா இருவரையும் சர்வதேச ஜூடோ சங்கம் மாலையில் நேர்காணலுக்கு அழைத்தது. கோச்சிற்குத் தடை விதித்த ஆட்ட, அரங்க ஏற்பாட்டாளர்களுக்கு ரொம்ப அவமானமா போயிருச்சாம்.. இது எப்படியிருக்கு!
2024-ல் நிகழவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஏதாவது ஒரு மெடலைத் தூக்கிவிடவேண்டும் என்பதுதான் என் ஆசை! என்கிறார் மணிப்பூர் மாமனுஷி லிந்த்தோய் !
**
ஆமாம் அண்ணா மகிழ்வான விஷயம். நான் யுட்யூபில் பார்த்தேன். எனக்கு ஜூடோ விளையாட்டு பற்றித் தெரியாது ஆனால் கொஞ்சம் கராத்தே ஃபைட் போல சில இடங்களில் என்பது புரிந்தது. மகன் கராத்தே ப்ளாக் பெல்ட் என்பதால் நான் அவனுடன் பயிற்ச்சிக்குச் சென்று வந்ததால் கொஞ்சம் தெரியும். ஜூடோ விதிகள் என்று தெரியாவிட்டாலும் லிந்தோய் சரியான தாக்குதல் நடத்தி வீழ்த்தியும் பாயின்ட்ஸ் அவளுக்கு வழங்கப்படாதது தெரிந்தது. நமக்குத்தான் விளையாட்டு தெரியாதே அங்க சரியாகத்தான் இருந்திருக்கும்னு நினைத்தேன் இப்ப உங்க பதிவிலிருந்து தெரிகிறது. பாருங்களேன் எப்படி எல்லாம் செய்கிறார்கள்! கோச் பாவம்…லிந்தோய்க்கு வாழ்த்துகள் பாராட்டுகள். மேலும் மேலும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பாள்.
கீதா
LikeLiked by 1 person
@ கீதா:
அவருடைய அதிர்ஷ்டம், ஒரு அருமையான கோச் கம் மெண்ட்டர், ஜார்ஜியாவிலிருந்து இவருக்காகவே வந்தவர் போலே.
பார்த்தும், படித்தும் விரிவான கருத்து தந்திருக்கிறீர்கள். நன்றி.
LikeLike
புதிய செய்தி. நான் Follow செய்யவில்லை. ஆனால் இறுதிச்சுற்று படம் க்ளைமேக்ஸ் நினைவுக்கு வருகிறது. மார்க் குறைத்துப் போட்டும் சிறுமி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். பெருமையாய் இருக்கிறது. நாமமே இவ்வளவு பெருமையாய் இருந்தால் மமுகோ மற்றும் அவர் பெற்றோருக்கு எப்படி இருக்கும்? ஈன்ற பொழுதின்….
LikeLike
எப்படியோ கிரிக்கெட்டை தாண்டி இந்த மாதிரி சிறு விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி மேலே கொண்டுவர சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றன.
LikeLike
@ ஸ்ரீராம்:
கிரிக்கெட், சாக்கர், டென்னிஸ் தாண்டி எத்தனையோ விளையாட்டுகள். இவற்றில் ஏதாவதொன்றில் போதுமான கோச்சிங், சப்போர்ட் இல்லாமலே கூட நட்சத்திரங்கள் உருவாகிவிடுகின்றனர். இப்படிப்பட்ட கதைகள் மற்ற நாடுகளிலும் அவ்வப்போது நிகழ்ந்திருக்கின்றன. இங்கே இந்தப்பெண்ணுக்கு கிடைத்தவர் ஒரு அபூர்வமான பயிற்சியாளர். ஆசீர்வாதிக்கப்பட்டிருந்தால் எல்லாம் நிகழும் கிரமப்படி.
LikeLike
செய்தியில் பார்த்தேன். இப்போது உங்கள் பதிவும். மகிழ்ச்சியாக இருந்தது. நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தக் குட்டிப் பெண்ணை நினைத்து.
சிறியவராகத்தான் இருக்கிறார். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது.
அவரது வெற்றிக்குப் பின் இப்படி ஒன்று நடந்திருக்கிறது என்பது உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். கோச் சை அவமானப் படுத்தியதற்குக் க்டைசியில் நீங்கள் சொல்லியிருப்பது போல் தலை குனிந்திருப்பார்கள்.
துளசிதரன்
LikeLiked by 1 person
@ துளசிதரன்:
மணிப்பூரின் இளம் தலைமுறையினரிடையே ஜூடோ கல்ச்சர் பரவிவருகிறதாம். லிந்த்தோய் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டு சாதித்திருப்பது இந்தியாவுக்குப் பெருமை. மேலும் முன்னேறவேண்டும் இவர். Credit goes to her father first, then the coach.இத்தகைய இளம் வீராங்கனைகள் கண்டுகொள்ளப்பட்டு சரியான பயிற்சி தரப்பட அரசும் கவனிக்கவேண்டும்.
வருகைக்கு நன்றி.
LikeLike