ரமேஷ் பிரேதன்

சென்னைப் புத்தகவிழாவில் வாங்கினேனா, இல்லை ஆன்-லைனில் ஆர்டர் செய்தேனா, நினைவில்லை. எனது அலமாரியில் என்னென்ன தமிழ்ப் புத்தகங்கள்தான் இருக்கின்றன என நானே தெரிந்துகொள்ளவிரும்பி ஒரு காலையில் குடைய ஆரம்பித்தபோது, அந்த ஒல்லிப் புத்தகம் கையில் கிடைத்தது. குண்டுப்புத்தகங்களைக் கண்டு விலகி ஓடுபவன் நான். குண்டாக எது எதிர் வந்தாலும், நன்றாக ஒதுங்கி வழிவிடும் வழக்கம் உண்டு சிறுவயதிலிருந்தே என்னிடம்.

சரி, குண்டுகளை விட்டுக் கொஞ்சம் வெளியே வாருங்கள். இப்போது சொல்ல வந்தது அந்த ஒல்லியை – கவிஞர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் ‘அயோனிகன்’. ஆ…. இப்படி ஒரு கவிஞர் இருப்பதையே மறந்துவிட்டிருக்கிறேனே. திறந்து கொஞ்சம் படிக்க ஆரம்பித்து, சற்றே ஆழ்ந்து மேலும் வாசித்தேன். ஏதேதோ கனவில், தொடரும் நினைவில் இன்றும் வாசிக்க நேர்ந்தபின் எழுதவந்தேன்.

அவனுடைய கதைகதைப்பில் நாகம் நெளிகிறது, சிவன் வருகிறான், கவிஞன் உலவும் வெளியில், அவள் இல்லாமலிருக்க முடியுமா என்ன?  இருக்கிறாள். இருந்தாள். இருப்பாள். கூடவே அவனில் தாக்கம் ஏற்படுத்தும் அப்பாவும், தவிக்கவிட்ட அம்மாவும். போதாக்குறைக்கு இந்த வேற்றுக்கிரகவாசி வேறே.. எதுவும் நிம்மதியாக விட்டுவைக்கவில்லை அவனை. ஃப்ரெஞ்சும் தமிழும் சேர்ந்து கலக்கும் புதுச்சேரியின் கலாச்சார கிச்சடிப் பின்புலம்..

சொல்லிக்கொண்டே போவதை நிறுத்தி, அயோனிகனையே கொஞ்சமாகத் தெளித்துவிடுகிறேன்:

காலங்காலமாகக் கைமாறி கைமாறி வந்த சிவன்

கவிஞர்களாலேயே வளர்ந்து ஆளாக்கப்பட்டவன்

போர் நடந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களிலிருந்தே

கூடைகூடையாய் மண்டை ஓடுகள் சிவனுக்குக் கிடைத்திருக்கும்..

**

வங்காள விரிகுடாவைப் பார்த்தபடி இந்த இரவைக் கடக்கிறேன்

நாளை இறந்தவர்களை நினைவுகூரும் நாள்

நிதானமாக ஒருமுறை சாகவேண்டும்

தனியாகச் சாவதற்கு பயமாயிருக்கிறது

**

என் பசியை ஆற்றியவளைப்பற்றிப் பிறகொருநாள் எழுதுகிறேன்

பெண்ணிடம் ஆண் பிச்சையெடுத்தல் கூடாது என புத்தனும்

காமத்தைப் பெண்ணிடம் யாசிப்பவனே யோக்யன் என ஏசுவும்

சொன்னதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

**

ஆண்மழை பெண்மழை என்பதில் எனக்கு உடன்பாடில்லை

அவள் மழை என்பதைத் தவிர வேறில்லை

நனைந்தால் முளைத்துவிடுவேன்..

**

என்னுடன் நீ நடக்கும்போது

என் நிழலின் தலையை மிதித்துவிட்டாய்

நான் மரித்துப்போனேன்

அவ்வளவே

**

அலையோசை ஓய்ந்தாலும் உளியோசை ஓயாதடி வாலைப் பெண்ணே

சொல்லைக் கல்லாக்கும் மாயம் செய்குவையோ வாலைப் பெண்ணே

**

அம்மாவையும் அப்பாவையும் ஒருசேரப் பார்க்காதவன்

அம்மாவையும் அப்பாவையும் தனித்தனியாகக் கொன்றவன்

என்னுள் விளையும் கவித்துவம்போலக்

கொலைத் தொழில் பழகியவன்

**

பிச்சை கேட்கும் மனநிலையை

நான் எட்டிய தருணம்

அகந்தை சூன்யமுற்று

நிர்வாணமாய் நின்றேன்

**

நீந்தினால் மீன்

மிதந்தால் பிணம்

குளம் இதன் வித்தியாசம் அறியாது

**

போரினால் பைத்தியம் பிடித்து

எங்கே எந்த நாட்டில் எந்த நகரத்தின் இடிபாடுகளில்

எந்தப் பிறவியில் அலைகிறாயோ…

போய் வருகிறேன் என் அன்பே..

Au revoir mon amour, au revoir…

**

கவிதைகளினூடே உரையாய், நடையாய் தன்சரிதம் வேறு… வாங்கிப் படியுங்கள் நண்பர்களே. மேலும் புரியலாம், ஏதேதோ தெரியலாம்.

அயோனிகன் – ரமேஷ் பிரேதன் – உயிர்மை பதிப்பகம்.  ரூ.55.

*****

4 thoughts on “ரமேஷ் பிரேதன்

 1. அயோனிகன், ரமேஷ் பிரேதன்…    என்ன பெயரோ…   என்ன தலைப்போ..

  என்ன மாதிரி சிந்தனைகள் இருக்கும் இதுபோன்ற கவிஞர்களிடம்?  சமயங்களில் எனக்கு இவர்கள் எல்லாம் எப்படி டீக்கடையில் நின்று டீ கேட்பார்கள் என்று தோன்றும்?  அதேபோல எழுதுபொருளை எங்கிருந்து தெரிவு செய்கிறார்கள் என்பதும் வியப்பாய் இருக்கும்!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:

   சுவாரஸ்யமான கமெண்ட்.

   பெயரென்ன பெயர்? What’s in a name? – கேட்டானே ஷேக்ஸ்பியரும்! விஷயத்தைக் கவனிப்போம். விஷயமும் பொல்லாத விஷயமாயிருக்கிறது. இவரைப்பற்றி மாமல்லனும், ஜெயமோகனும் கொஞ்சம் எழுதியிருந்தார்கள் சில வருடங்கள் முன்பு வலைப்பக்கங்களில். தேடிப் பிடித்தேன்.

   சராசரித் தமிழ்க் கவிஞனில்லை. அதற்காக, வித்தியாசமாகத் தெரியவேண்டுமென்பதற்காக, வார்த்தைகளைத் தேடிப்பிடித்து, இட்டுக்கட்டி எழுதுபவரும் அல்ல. ஒரிஜினல். வாசகருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. படைப்பாளி, படைப்பாளிதான்.

   Like

 2. ரமேஷ் பிரேதன்? ரமேஷ் ஓகே…பிரேதன் என்றதும் கிலி!!!! ஹாஹா

  அயோனிகன்? அர்த்தம் என்னவோ? இவர் பெயரைப் பார்த்ததும் இணையத்தில் தேடினேன். மிகவும் வறுமையில் (இப்படியான எழுத்தாளன் என்றாலே கூடவே வரும் இலவச இணைப்பு!!) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த நிலையிலும் அயோனிகன் மற்றும் இன்னும் இரு நாவல்கள் எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது. ஜெமோ மற்றும் சிலர் உதவியிருப்பதாகவும் தெரிகிறது. திண்ணையின் பழைய செய்தியில் 2016 – இருந்து அறிந்தேன்.

  //பிச்சை கேட்கும் மனநிலையை

  நான் எட்டிய தருணம்

  அகந்தை சூன்யமுற்று

  நிர்வாணமாய் நின்றேன்//

  தன் அனுபவத்தின் வெளிப்பாடோ?

  கவிதைகளில் சில புரிகிறது. சில என் சின்ன அறிவுக்கு எட்டவில்லை, ஏகாந்தன் அண்ணா….ஆழ்ந்து வாசிக்க வேண்டும் போல!!!!

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: சுஜாதா ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல், ’எல்லாக் கவிதைகளும் புரியவேண்டும் என்பதில்லை..’. புரியாமலும் உலவலாம் கவிதை.. பிடிகொடுக்காமல் சுற்றிச் சுற்றி வரலாம்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s