ஜூன் 9 -லிருந்து தொடங்கும் தென்னாப்பிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடருக்காக, இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்மில் இல்லாத ரோஹித் ஷர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஷிகர் தவன், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், டி.நடராஜன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, போன்ற முக்கிய வீரர்கள் இல்லை. கடைசி இருவரும் காயம் காரணமாக பரிசீலிக்கப்படவில்லை.
புதுமுகங்களாக இருவர். தன்னுடைய அதிவேகப் பந்துவீச்சினால் ஐபிஎல்- இல் பேட்ஸ்மன்களைப் பயமுறுத்தி, காயப்படுத்தி கைங்கர்யம் செய்துவரும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் (ஸன்ரைசர்ஸ் ஹைதராபாத்), எதிர்பார்க்கப்பட்டபடி இந்திய அணிக்கு முதன்முறையாகத் தேர்வாகியிருக்கிறார். 150-கி.மீ.க்கு மேல் வீசி வேகத்தில் மிரட்டும் மாலிக்கை வைத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்களை கதிகலங்க வைக்க நினைக்கும் தேர்வுக்குழுவின் முயற்சி. விளைவு எப்படி இருக்கும் என்பது ஜூன் இரண்டாவது வாரத்தில் தெரிந்துவிடும். குறிப்பிடத் தகுந்த இளம் வேகவீச்சாளரான (பஞ்சாப் கிங்ஸின்) அர்ஷ்தீப் சிங் அணிக்குள் நுழைந்துள்ளார். இவர் ஐபிஎல் இல் அதிக விக்கெட் சாய்க்கவில்லை எனினும், டெத் ஓவர்களில் கஞ்சத்தனமாக ரன் கொடுத்து எதிரிகளைத் திணறவைக்கும் இவரது திறன் தேர்வுக்குழு உறுப்பினர்களைக் கவர்ந்துவிட்டது. வந்தார் உள்ளே.
சிலர் எதிர்பார்த்த, மொத்தத்தில் ஆச்சர்யமான ஒரு தேர்வு தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக். உள்நாட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கினாலும், கடந்த 3 வருடங்களாக கவனிக்கப்படாத இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன், ஐபிஎல்-இல் காட்டிய அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டினால் அதிரடியாகக் கொடுத்திருக்கிறார் ரீ-எண்ட்ரி. வரவேற்கப்படவேண்டியவர். கூடவே காயம் காரணமாக சமீபகாலமாகத் தேர்வாகாதிருந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா மீண்டும் அணியில். 6, 7 போன்ற பேட்டிங் வரிசை இடங்களில் யார் ஆடுவார்கள்? கார்த்திக்கா, பாண்ட்யாவா என்பது போகப்போகத்தான் தெரியும். இருவரும் பௌலிங்கை துவம்சம் செய்யக்கூடியவர்கள். ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில் அஷ்வினுக்கு ஏனோ இடமில்லை. அவரிடத்தை குல்தீப் யாதவிடம் கொடுத்தது சரியாகப்படவில்லை. மற்ற ஸ்பின்னர்கள் அக்ஷர் பட்டேல்,, யஜுவேந்திர சாஹல். ரவி பிஷ்னோய்.
வலிமையான தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் ஆல்ரவுண்டர்கள்/அதிரடிகள் எனக் கூட்டியிருக்கிறார்கள். அணி கிட்டத்தட்ட சமநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது:
கே.எல். ராஹுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்) இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஹார்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர்பட்டேல், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
**
மெல்ல மெல்ல அடுத்த டீம் உருவாக்குகிறார்கள் போலிருக்கிறது. எதிர்கால டீமை சோதிக்கிறார்கள். என்ன ஆகும் என்று பார்ப்போம். ஆட ஆடத்தானே அனுபவமும் லாவகமும் வரும்? ஷிகர் தவான் போல எனக்கு பாண்ட்யாவையும் பிடிக்காது! உனக்குப் பிடித்தால் என்ன, பிடிக்கா விட்டால் என்ன என்கிறீர்களா/ உங்களிடமாவது சொல்ல முடிகிறதே என்கிற சந்தோஷம்தான்!!
LikeLiked by 1 person
@ Sriram :
சொல்லுங்க, சொல்லுங்க மனசவிட்டு! திறமைகளின் வெளிப்பாடு தாண்டியும் ரசனைகள் வெவ்வேறாக இருக்கும்தான். கிரிக்கெட்டிற்கு அழகுசேர்க்கும் விஷயமிது!
சூர்யகுமார் ஜடேஜா இல்லாதது குறை. நடராஜனும் உள்ளே வந்திருக்கலாம்.. கே.எல்.ராஹுலுடன் யார் ஓப்பன் செய்வார் எனப் பார்ப்போம்…. உம்ரான் க்ளிக் ஆக வாய்ப்பதிகம்
LikeLike