இடதுபக்கம் மஸாலா நூடுல்ஸ். வலதுபக்கம் சிக்கன் நூடுல்ஸ். இடையிலே உப்புமா, கறுப்புக் காப்பி. இண்டிகோவில் சீட் 1-இ, நல்ல லெக்-ரூமுடன் வசதியாக இருந்தது. மஸாலாவை முடித்தபின் லேப்டாப்பை முடுக்கி, ஹாலிவுட் சினிமாவில் உறைய ஆரம்பித்திருந்தான், ஃபிட்னெஸ் பற்றி அதிகம் கவலைப்படாதவன் போன்ற அமைப்பிலிருந்த அந்த இளைஞன். வெந்நீர் விட்டுக் கொடுத்த விமானப்பணிப்பெண், அஞ்சு நிமிஷம் கழித்து சாப்பிடனும்னு சொல்லியும், ஓரிரு நிமிஷம்கூட பொறுக்கமாட்டாமல் பயங்கரப் பசியில் சிக்கன் நூடுல்ஸை உள்ளே தள்ளி, தீர்த்துக்கட்டிவிட்டு, லேப்டாப்பில் கேம் ஒன்றில் களிக்க ஆரம்பித்திருந்தான் இந்தப்பக்கத்து ஒல்லி. நடுவிலே, உப்புமா முடித்து, காப்பியை ரசித்தவாறு விரித்த புத்தகத்தோடு நான். காட்சி.. கொஞ்சம் விசித்திரமாகத்தான் எனக்கே இருந்தது. புத்தகத்தின் தலைப்பை யாரும் கவனித்திருந்தால், என்னை ஒரு மாதிரி ஏற இறங்கப் பார்த்திருக்கக்கூடும். படிக்கிறதுக்கு இந்த ஆளுக்கு கெடச்சுது பாரு ஒரு புஸ்தகம்.. என்றோ, என்ன இது.. அபசகுனம் மாதிரி பக்கத்தில் ஒக்காந்து இதைப் படிக்கிறான் இந்த மனுஷன்.. நம் கண்ணில்வேற பட்டுத் தொலச்சிருச்சே.. ஒருவேளை நமக்கு ஏதாவது ஆபத்து.. சே.. சே.. அப்படியெல்லாம் நடக்காது.. என்றெல்லாம் அவர்களுக்குள் சிந்தனை ஒரு இடத்தில் நில்லாது ஓடியிருக்கக்கூடும்.
டெல்லி போனபின், வீட்டில் ஆர, அமர மெல்ல வாசிக்கவேண்டும் என்று கொண்டுவந்திருந்த புத்தகம். ஆவலில் ஃப்ளைட்டிலேயே திறந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். பலரும் சற்றே தூரத்தில் இருந்தாவது பார்க்க நேருகின்ற, அவ்வப்போது பேச வாய்க்கின்ற, அல்லது நினைத்து பயப்படுகின்ற, பொதுவாக உள்ளே செல்ல விரும்பாத கருத்தாழம் காட்டும் ஒரு நூல். சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய Death – An inside story (Penguin India). பிறப்பெடுத்துவிட்ட ஒவ்வொரு ஜீவனாலும் தவிர்க்கமுடியாத ஒரு இறுதி நிகழ்வு.. மரணம்.
வந்தே தீர்க்கும் வயோதிகம், உடலை விட்டுவிட்டு உயிர் நீங்கிடும் உன்னதம் போன்ற, பயங்கர அல்லது மர்மம் நிறைந்த (ஆளாளுக்கு ஏற்றபடியான) தருணங்களை சந்திப்பதற்கான ஆயத்தங்கள் பற்றியெல்லாம் ஆதிகாலத்து இந்து மரபின் ஆழமான அவதானிப்புகள், அது சார்ந்த தார்மீக வழிநடத்துதல்கள் எனவும், தொடர்பான சடங்குகள்பற்றியும், இந்தக்கால அவசரக்குடுக்கைப் பிரகிருதிகளுக்குக் கொஞ்சம் சொல்லப் பார்க்கும் புத்தகம். மனிதவாழ்க்கை எனும் பெருவெளியை சீரியஸாக கவனித்துவரும் எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய முக்கியமான நூல் எனத் தோன்றுகிறது. எங்கே பக்கம் திறந்ததோ அங்கே நிறுத்தி, திட்டுத்திட்டாக மனம் போனபடிக் கொஞ்சம் வாசித்திருக்கிறேன் பயணத்தின்போது. நிதானமாகத் தொடர்வேன் சில நாட்களில் என்று நினைக்கிறேன்
33 -ல் புறப்பட்டிருந்து, சுமார் இரண்டரை மணிநேரத்தில் 38-ல் இறக்கிவிடப்பட்டேன். பாய்லருக்குள் தலையை விட்டது போல் ஒரு அதிர்ச்சி. டெல்லி ஏர்ப்போர்ட்டின் டர்மினல் 1 வித்தியாசமாக இருந்தது. பேக்பேக்குடன் மட்டுமே பெங்களூரிலிருந்து வந்ததால் வேகமாக வெளியேறி, வாசல் கவுண்ட்டரில் மேஹ்ரூவை புக் செய்தேன். டாக்ஸியில் அமர்ந்ததும் ஓட்டுநரை சற்று எரிச்சலோடு கேட்டேன். ஏசி சல் ரஹா ஹை ?.. யா நஹி(ன்)! சற்றே அதிர்ந்தவனாய், ஹா(ன்) ஜி.. சல் ரஹா ஹை! என்றான் உஷாராக அந்த இளைஞன். உள்ளே மெதுவாக நோட்டம் விட்டேன். மஹிந்திரா எலெக்ட்ரிக்.. புது வண்டி! இருந்தும் எனக்கு சந்தேகம் ஏசிபற்றி, அதன் திறன்பற்றி. நான் ஏசி வென்ண்ட்டையே பார்ப்பதைக் கண்டதும் கொஞ்சம் கூட்டிவைத்து அவன்பாட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தான், டெல்லியின் கோடையில் ஊறி விளைந்திருந்த அந்த தென்னகத்து இளைஞன்.
**
சிறு அனுபவம்.. சொந்த அனுபவம்? இந்த வெய்யிலில் என்ன டெல்லி விசிட்?
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்: வீட்டு ரிப்பேர் வேலை நடக்கிறது. அதற்காக வரவேண்டியதானது! மற்றபடி ஏப்ரலிலிருந்து ஆகஸ்ட் வரை டெல்லியைத் தவிர்ப்பவன் நான், கூடுமானவரை!
LikeLike
பங்களூரே கொதித்தது இப்போது சற்று அடங்கியுள்ளது மழையின் வரவால்…..அப்படியிருக்க கொதிக்கும் கலனாக இருக்கும் தில்லிக்கா ஆஆஆ!
நல்லகாலம் அவர்கள் உங்கள் புத்தகத்தைப் பார்க்கவில்லை போலும். ஆனால் ஜக்கி இளைஞர்களைக் கவர்பவராயிற்றே!
கீதா
LikeLiked by 1 person
@ கீதா: ஜக்கி கார்ப்பரேட் இளைஞர்களை வெகுவாகக் கவர்பவர் என்பது உண்மை. ஆன்மீகத்தில் எந்தப்பக்கமும் சாராமல், ஆனால் கொஞ்சம் அதிலும் தெரிந்துகொள்ளவேண்டும் என முனைபவர்களுக்கு ஜக்கிதான் வழி இன்று. சொல்வதைத் தெளிவாக, மனதினுள் சென்று உட்காரும்படி சொல்லும் திறன் உள்ளவர்.
நாட்டில் சிலருக்கு ஆன்மீகத்தில் கொஞ்சம் தெரியுமாயிருக்கும். ஆனால் வாயைத் திறந்தால் குழறல்தான்!
LikeLike