உலகக்கோப்பையில் ’குரூப் ஸ்டேஜ்-இல் மட்டும் ஐந்து மேட்ச் விளையாடிய விராட் கோஹ்லியின் இந்தியா, ‘சிறிய’ நாடுகளுக்கு எதிரான வெறும் 3 வெற்றிகளுடன் செமிஃபைனலுக்குள் கால்வைக்க முடியாமல் கந்தலாகி வீடு திரும்பியது. (Bio-bubble-தான் காரணம்: மாஜி கோச் ரவி சாஸ்திரி!). கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட, சிறப்பாக ஆடிவந்த பாகிஸ்தானுக்கும் கூடுதலாக ஒரு போட்டி மட்டுமே (செமிஃபைனல்) ஆடித் தன் ரசிகர்களைக் குஷிப்படுத்திவிட்டு கராச்சிக்கு அவசர ஃப்ளைட் பிடிக்கவேண்டியிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியனான நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நேற்று (14-11-21) துபாயில் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதின.

சரிபலத்துடன் மோதிய இரு அணிகள், டி-20 வகைமையில் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தின. டாஸ் ஜெயித்த அணிகள் இரண்டாவதாக பேட்டிங் செய்து இலக்கைத் துரத்தி ஜெயிப்பதே வழக்கமாகிப்போன அமீரகக் கிரிக்கெட் கதைகளின் தொடர்ச்சியாக, நேற்றும் அதுவே நிகழ்ந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று நியூஸிலாந்தை உள்ளே அனுப்ப, ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, பின்னர் கேப்டன் வில்லியம்சன் (85) அதிரடி காட்ட, ஸ்கோரை வேகமாக உயர்த்திய நியூஸிலாந்து 172 எடுத்து கோப்பைக்கான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.
முதல் டி-20 கோப்பைக்காக ஏங்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெகு உற்சாகமாக இலக்கை எதிர்கொண்டதாகத் தோன்றியது. ஃபிஞ்ச் எளிதில் விழுந்துவிட்டாலும், டேவிட் வார்னர் தன்னை விமர்சித்தவர்களுக்கு ஆவேச பதிலடி தருவதுபோல் அபாரமாகத் தாக்கி ஆடினார். ஃபிஞ்ச் அவுட்டானபின், பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக, வழக்கமான ஸ்மித்திற்கு பதிலாக மிட்செல் மார்ஷை அனுப்பிய கோச் ஜஸ்டின் லாங்கரின் யுக்தி சரியான சமயத்தில் கைகொடுத்தது. வார்னரோடு சேர்ந்து நியூஸிலாந்து பௌலிங்கை ஒரு கை பார்த்தார் மார்ஷ். இவரும் அதுவரை முக்கிய பங்களிப்பு ஏதும் தரமுடியாமல், விமர்சனத்துக்கு உள்ளாகி நொந்துபோயிருந்தார்! அடிபட்ட புலிகளாய் வார்னரும், மார்ஷும் சீற, ரன்கள் வேகமாக எகிறின. வார்னர் அரைசதத்துக்குப் பின் வெளியேற்றப்பட்டுவிட்டாலும், அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் தன் கைவரிசையைக் காட்ட, இலக்கு எளிதில் வீழ்த்தப்பட்டது. திரளான ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆரவாரத்தின் பின்னணியில், முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் கைக்கு வந்தது டி-20 உலகக்கோப்பை. 8 விக்கெட் வித்தியாச வெற்றி. 50 பந்துகளில் 77 விளாசி நாட் அவுட்டாக கம்பீரம் காட்டிய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் ஆனார். டேவிட் வார்னர் தொடர் நாயகன்.
ஃபைனலுக்கு முன்னான, முன்னாள் வீரர்களின் வெற்றிக் கணிப்புகளில், இந்தியாவின் ஹர்பஜன் சிங் இப்படிச் சொல்லியிருந்தார்: ’மனசு சொல்லுது நியூஸிலாந்துதான் ஜெயிக்கும்னு. புத்தி என்னடான்னா, ஆஸ்திரேலியாதான் சாம்பியன்ங்கறதே!..’ என்னே, சர்தார்ஜியின் புத்திசாலித்தனம்!
வார்னரை ஐபிஎல் கேப்டன்சியிலிருந்து இந்த வருடம் தூக்கியிருந்த ’சன் ரைசர்ஸ் ஹைதரபாத்’ அணி நிர்வாகம், நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததோ என்னவோ? 2022-ல் வரவிருக்கும் இரு புதிய ஐபிஎல் அணிகளில் ஒன்றிற்கு டேவிட் வார்னர் தலைமை தாங்கும் வாய்ப்புண்டு எனத் தெரிகிறது.
அடுத்த மாதம் வரவிருக்கும் ‘ஆஷஸ்’ டெஸ்ட் தொடரில் வலிமையான இங்கிலாந்தை சந்திக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் உத்வேகம் தருவதாக அமைந்த திடீர் டானிக், இந்த உலகக்கோப்பை வெற்றி. ஆனால், ’டெஸ்ட்’ கதையே வேறயாச்சே.. என்ன நடக்குமோ..
**
இந்த மைதானங்களில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானுக்கு அது தாய் வீடு போல. எனவே நன்றாகவே விளையாடியது. கடைசி மேட்ச் உண்மையிலேயே நல்ல ‘மேட்ச்’. ஆனால் இங்கும் ஓரளவு டாஸ் தன் வேலையைக் காட்டியிருக்கிறது!
LikeLike
@ ஸ்ரீராம்: ’டாஸ்’ தான் ‘பாஸ்’ என்றாகிவிட்டதே அமீரகக் கிரிக்கெட் !
LikeLike