’சொல்வனம்’ இதழில் கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

பிறப்பு: 1913-ல் கார்டிஃப் (Cardiff),  வேல்ஸ்.

வேல்ஸ் (British Wales) பிராந்தியத்தின் கிராமிய வெளியில், வேல்ஷ் ஆங்கிலிக்கன் சர்ச்சில் ஒரு பாதிரியாக இளம் வயதிலிருந்தே பணியாற்ற ஆரம்பித்து, பல வருடங்களாக சர்ச் பணியில் ஆழ்ந்திருந்தவர் ஆர்.எஸ். தாமஸ்.

Welsh Poet R.S. Thomas

வேல்ஸின் சூழ்ந்து படர்ந்திருக்கும் நீல மலைகள், ஆறுகள், அப்பாவி மக்களென இயற்கையின் வண்ணங்கள் அவரில் பெரிதும் வியாபித்துக்கிடந்தன. மெருகேற்றி அவரை உருவாக்கி ஒரு கவிஞனாய் வெளியுலகிற்கு ஒரு கட்டத்தில் காண்பித்தன. மண்ணின் மைந்தனாக இல்லாமல், உலகளாவிய கவிஞனாக நீ இருக்கமுடியாது எனும் ஆங்கிலேயக் கவி ராபர்ட் ஃப்ராஸ்டின் கூற்றை ஆமோதிப்பதுபோல் தன் தாய்மண்ணான வேல்ஸ் நிலத்தை, மனிதர்களை தொடர்ந்து தன் எழுத்தில் வெளிக்கொணர்ந்தவாறே இருந்தார் அவர். பணியாற்றுமாறு நேர்ந்த வேல்ஸ் சர்ச்சின் பணிசூழல், செயல்பாடுகள் ஒருபுறம், மாறா நம்பிக்கையுடன் வந்து சென்ற ஒன்றுமறியா மனிதர்களின் வாழ்வு மதிப்பீடுகள் மறுபுறம் எனவும், பொதுவாக தேசத்தின் கலாச்சாரச் சீரழிவுபற்றிய கவலையும் விரவிக்கிடக்கின்றன அவரது கவிதை வெளியில். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவராக பிரசித்தி பெற்றிருந்த தாமஸ், நோபல் பரிசுக்கெனப் பரிந்துரைக்கப்படலாம் எனும் பேச்சும் இருந்தது ஒரு கட்டத்தில். பிரிட்டிஷ் ராணியின் கவிதைக்கான தங்க மடலை 1964-ல் பெற்றார்.  2000-ல் மறைந்தார்.  

ஆர்.எஸ். தாமஸின் சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவர்பற்றிய என் மேற்கண்ட குறிப்போடு அந்தக் கவிதைகளை ‘சொல்வனம்’ இலக்கிய இதழ் வெளியிட்டிருக்கிறது. நன்றி: ’சொல்வனம்’.

சொல்வனத்தின் நடப்பிதழில் காணப்படும் தாமஸின் கவிதைகளில் மூன்றைக் கீழே தருகிறேன்: ( மற்றவைகளை சோம்பல்படாமல், சமர்த்தாக ‘சொல்வனம்’பக்கம்போய் வாசிப்பீர்களல்லவா ! https://solvanam.com )

அ வ ர் க ள்

அவர்களது கைகளை

என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்

அழுத்தமான கைகள்

அன்பில்லை அவற்றில்,

வலிய வரவழைக்கப்பட்ட

ஒரு மென்மையைத் தவிர.

கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து

வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.

சோகத்துடன் தங்கள் துக்கங்களை

எனது பின்வாசலருகே

கொண்டுவந்து வைத்துவிட்டு

வாயடைத்து நிற்கிறார்கள்.

பகலொளியின் பிரகாசத்தில்

வீசும் காற்றில்

அவர்களைப் பார்க்கையில்,

அவர்களின் கண்களின் ஈரத்தில்

அவர்களின் அழுகைக்கான

காரணம் புரிகிறது

தங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்களோடு

மல்லுக்கு நிற்கிறார்கள் அவர்கள்..

தினமும் வானம் நீரைப் பிரதிபலிக்கிறது

நீர், வானத்தை.

தினமும் அவர்களது போராட்டத்தில்

நான் நிற்கிறேன் அவர்கள் பக்கம்,

அவர்களது குற்றங்களையும்

என்னுடையதாக ஏற்றுக்கொண்டு.

வீட்டிலிருந்து, வாழ்விலிருந்து

நினைவுகளிலிருந்துகூட

அவர்களால் வெளியேற்றப்பட்டுவிட்ட

அவர்களது ஆன்மாவுக்கு,

பின் எப்படித்தான் நான் சேவை செய்வது ?

**

வ ரு த ல்

கடவுளின் கையில்

ஒரு சின்னஞ்சிறு உலகம்.

பார் இங்கே.. என்றார்.

பார்த்தான் மகன்.

எங்கோ வெகுதூரத்தில்,

நீரினுள் பார்ப்பதுபோல்,

வறண்டு வெடித்திருந்த

செந்நிற பூமியைப் பார்த்தான்.

விளக்குகள் அங்கு எரிந்தன.

பெரும் கட்டிடங்கள் தங்கள்

நிழலைப் பரப்பியிருந்தன

பாம்பைப்போல் நெளிந்து மின்னும்

ஆறொன்று ஒளிவீசி ஓடிக்கொண்டிருந்தது

அந்த மலைப்பகுதியின்  குன்றின்மீது

ஒரு மொட்டை மரம்

வானத்துக்கே துக்கம் தந்து நின்றிருந்தது.

பலர் அதனை நோக்கி

தங்கள் மெலிந்த கைகளை

நீட்டியவாறு நின்றுகொண்டிருந்தார்கள்,

காணாமற்போன வசந்தம்

அதன் கிளைகளுக்குத் திரும்பவேண்டுமென

இறைஞ்சுவதுபோல.

அந்த மகன்

அவர்களைப் பார்த்தான்.

என்னை அங்கே போகவிடுங்கள் என்றான்

**


ம ற் றொ ன் று

தூரத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தின்

ஏதோ ஒரு பகுதி ஒரேயடியாகப் பொங்க,

விளக்கில்லாத, துணையேதுமில்லாத

அந்தக் கிராமத்தின் கரையோரத்தில்

சீறும் அலைகள் எழுவதும் வீழ்வதும்,

எழுவதும் வீழ்வதுமான சத்தத்தை

அதிகாலையில் தூக்கமின்றி

படுத்தவாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

சில மணிநேரத்துக்கு, சில நாட்களுக்கு

சில வருஷங்களுக்கு என்றல்ல –

என்றென்றைக்குமாகவும் நமது பிரர்த்தனைகள்

தன் மீது மோதிமோதி விழுந்து நொறுங்குமாறு

இருந்துகொண்டிருக்கும் அந்த மற்றொன்றும்

தூங்காமல்தானிருக்கிறது

என்கிற நினைவும் கூடவே ..

**

7 thoughts on “’சொல்வனம்’ இதழில் கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

  1. கவிதைகள் வித்தியாசமான ரகத்தில் இருக்கின்றன.  மொட்டைமரம் அருமை.  மற்றொன்றும் சூப்பர்.

    Liked by 1 person

  2. முதல் கவிதையின் கடைசி வரிகள் சொல்வது ஆழமாக இருக்கிறது.

    வருதல் சொல்லும் கருத்து அருமை அதிலும் கடைசி வரி சொல்வதில் பெரிய விஷயம் அடங்கியுள்ளதாய்ப் படுகிறது.

    அந்த மற்றொன்றுக்கு ஏது தூக்கம்?! (என் புரிதலில்) பாவம் அந்த மற்றொன்று எத்தனை பிரார்த்தனைகள் மோதுகின்றன அதை! இருந்தாலும் அதன் தூக்கமின்மை வேறு …நம் தூக்கமின்மை வேறு!!!எத்தனை வழி காட்டினாலும் விவஸ்தை கெட்ட ஜென்மங்கள் என்று அந்த மற்றொன்று நினைக்காமல் இருந்தால் சரி!!

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா :
      தூங்காததுகள் எத்தனையோ.. ஒவ்வொன்றும் ஒரு விதம்! அந்த மற்றொன்றின் தூக்கமின்மை…! தூக்கம் பத்தாததால்தான் இப்படி அசடுகளாகப் படைத்துப்போட்டு வருகிறதோ என்னவோ..

      Like

      1. தூக்கம் பத்தாததால்தான் இப்படி அசடுகளாகப் படைத்துப்போட்டு வருகிறதோ என்னவோ..//

        ஹாஹாஹா ஆ ஏகாந்தன் அண்ணா மற்றொன்றை இப்படிச் சொல்லிட்டீங்களே அப்புறம் அது கோபித்துக் கொண்டுவிட்டால் அவ்வளவுதான்!!! கோபிக்காது என்ற தைரியமோ!!!!!!!

        கீதா

        Liked by 1 person

  3. மூன்று கவிதைகளின் மொழியாக்கமும் அருமையாக உள்ளது. இவரது கவிதைகள் பெரும்பாலும் வளரும் டெக்னாலஜி எப்படி கிராமங்களையும், இயற்கையையும் அழிக்கிறது என்ற கருத்தின் அடிப்படையில் மிக எளிமையான, அழகியல் கவிதைகளாக இருக்கும்.

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    Liked by 1 person

    1. @ கீதா: பொறுமையின் பூஷணம், கருணாசாகரம் என்று நம் பெரிசுகள் அதை வர்ணித்து வைத்திருப்பதைப் படித்ததால் வந்த தைரியம்தான்!

      @துளசிதரன் : வருகை, கருத்துக்கு நன்றி.
      தாமஸை 30 வருடம் முன் டெல்லியின் ப்ரிட்டிஷ் கௌன்சில் நூலகத்தில் முதன்முறையாக வாசித்தபோது அசந்துபோனேன். இப்படி இன்னும் சிலரும் மனதில் இருக்கிறார்கள். பிறகு எழுதக்கூடும்…

      Like

Leave a comment