ஐபிஎல் 2021 – கோப்பை யாருக்கு?

IPL – ன் அழகிய கொழுகொழு மொழுமொழு கோப்பை யார் கைக்குப் போகப்போகிறது? தோனியா? மார்கனா? இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியவரும். குற்றம் கூறுதல், அலசல்கள் கூடவே வர்ணனையாளர்கள், ரசிகர்களிடையே தூள்கிளப்பும்!

யாரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR), இறுதிப்போட்டியில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லைதான். எதிர்பாராததைத் தருவதுதானே டி-20 -ன் வேலை!

போனவருடம் தடுமாறித் தத்தளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்த வருடம் துபாய் ஃபைனலில் கம்பீரமாய் நிற்கிறது. இதுவரை அவர்கள், குறிப்பாக 2021-ன் இரண்டாம் பாதியில் ஆடிய ஆட்டம், வெற்றிகளுக்கு மூலகாரணமென ஒருவரை குறிப்பிடலாமென்றால் அது நிச்சயம் தோனியல்ல. சென்னை ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் அந்த கௌரவத்தைத் தட்டிச்செல்கிறார். கூடவே, டூ ப்ளஸீ, ப்ராவோ, ஷர்துல் டாக்குர், ஜோஷ் ஹாஸல்வுட், தீபக் சாஹர் ஆகியோரும் மிளிர்ந்தார்கள்.

அமீரக ஆட்டங்களில் கொல்கத்தா அணி எதிர்பாரா வெற்றிகளைத் தட்டியது. குறிப்பாக பந்து கீழே தங்கும், தடுமாறி முன்னேறிக் கம்பைத் தொடப் பார்க்கும் ஷார்ஜா மைதானத்தில் அவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட்கள் என நிரூபித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் கொல்கத்தா அணியின் மெண்ட்டரான ப்ரெண்டன் மக்கல்லம். முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரராக எதிரணி பௌலர்களை அலறடித்த பெருமையுண்டு அவருக்கு. அவரின் சாதுர்ய டீம் செலெக்‌ஷன் கொல்கத்தாவுக்குக் கை கொடுத்திருக்கிறது. சுனில் நாரய்ன், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் உல் ஹஸன் என அதிரடி ஸ்பின்னர்களையும், லோக்கி ஃபெர்குஸன், ஷிவம் மாவி ஆகிய துல்லிய வேகப்பந்து வீரர்களையும் வைத்துக்கொண்டு பலமான எதிரணிகளைப் புரட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் ஐபிஎல் ஃபைனலுக்கு.

தோனியின் சிஎஸ்கே , கேகேஆர்-ஐ கேஷுவலாக எதிர்கொள்ள வாய்ப்பில்லை. கொல்கத்தா அணிக்கு துபாய் பிட்ச் சவாலாக அமையக்கூடும். கொல்கத்தாவின் மிஸ்டரி ஸ்பின்னர்கள் சென்னை பேட்ஸ்மன்களை அடித்துச் சாய்ப்பார்களா? அல்லது சென்னையின் வேகப்பந்துவீச்சு கொல்கத்தாவின் பேட்ஸ்மன்களை குறிப்பாக அவர்களின் தள்ளாடும் மிடில்-ஆர்டரைப் (ரன் எடுக்கத் திணறும் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் ஆய்ன் மார்கன்) பதம் பார்த்து, வெற்றியை நோக்கி சென்னையை நகர்த்துமா? பெரும் குழப்பம் தரும் டி-20 கேள்விகள் !

முடிவு எப்படியாகினும், கடும் போட்டி துபாயில் இன்றிரவு. கிரிக்கெட் ப்ரேமிகளுக்கு ஒரு அருமையான டி-20 க்ளாஸிக் வாய்க்கக்கூடும் !

**

4 thoughts on “ஐபிஎல் 2021 – கோப்பை யாருக்கு?

  1. குலதெய்வத்தைப் பார்க்கக் கிளம்பும் எங்கள் பயணம் இந்த மேட்ச்சினால் இரவுக்கு பதிலாக அதிகாலை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது!  சென்னை மட்டை பிடித்திருக்கிறது!

    Liked by 1 person

  2. சென்னை வெற்றி பெற்றுவிட்டதாம்! தோனியின் புன்னகை!  அவர் குலதெய்வம் அவரைக் கைவிடவில்லை!

    Liked by 1 person

    1. @ sriram: 2011-ல் உலகக்கோப்பை வெற்றிக்குப்பின் தோனியை உடனே மொட்டை போடவைத்த குலதெய்வம், ஐபிஎல் 21-ஐ ஜெயிச்சுக் கொடுக்கறேன் உனக்கு, மொட்டை எல்லாம் வேண்டாம், எனச் சொல்லியிருக்குமோ!

      Like

Leave a comment