எழுத்தின் இளமை

கவிஞன் என்றும் இளமையானவன். ஏன்? அவன் எழுத்து அப்படி. அல்லது அவனது கவிதைகள் அப்படியிருப்பதால், அவனப்படி.

நவீனத் தமிழின் தலைசிறந்த கவிஞருள் ஒருவரான நகுலன் வெகுகாலம் எழுத்துலகில் இருந்தார். ஆனாலும் அப்படி ஒன்றும் அதிகம் எழுதித் தள்ளியவரல்ல. சில கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள். அவ்வளவுதான். இலக்கிய போதையாளர்களைத் தவிர வேறு யாரும் – அரசோ, நிறுவனமோ அவரைக் கண்டுகொண்டதில்லை. இருந்தும் எழுதினார்.. எழுதினார். போய்விட்டார் ஒரு நாள், ஸ்தூல உடம்பைத் தூக்கிக் கடாசிவிட்டு. ஆனால் அவரெழுத்து நின்று ஆடுகிறதே இன்னும். எழுத்தின் – உண்மையான எழுத்தின் – உயிர்ப்பு அப்படி, சாகஸம் அப்படி.

நாட்டில், நல்ல எழுத்துக்கும் தப்பித் தவறி விருது கிடைத்துவிடலாம். கிடைக்காமலே போய்விடும் சாத்யமே அதிகம், குறிப்பாக தமிழ்வெளியில். சுந்தர ராமசாமி, சுஜாதா {பன்முக ஆளுமை, உரைநடை, அறிவியல் புனைவில் – without a doubt, a trend-setter},  ப்ரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், கலாப்ரியா போன்றோருக்கு என்ன பெரிய அங்கீகாரம் கிடைத்தது? இந்த நிலையில் மிகக் கொஞ்சமாக எழுதி, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத நகுலனின் நண்பரான ஷண்முக சுப்பையாவை யாருக்குத் தெரியப்போகிறது? ஆனால் அவர்களின் எழுத்தை வாசிக்க நேர்ந்த தமிழ் இலக்கிய வாசகன் லயித்துக்கிடக்கிறானே.. தொடர்ந்து செல்கிறானே, அத்தகைய ஆளுமைகளின் படைப்புகளைத் தேடி.  என்ன ஒரு மாயம்! இயலின் மகிமை இது. மாறாதது.

கொஞ்ச நாட்களாக ஆத்மாநாம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் என அலைந்துகொண்டிருந்தபோது, ஃப்ரான்சிஸ் கிருபாவின் நிகழ்வு குறுக்கிட்டு மனதைக் கசக்கிப்போட்டது. அதனாலென்ன, மேலும் மேலும் சிந்தனைகள், ஒன்றுக்கும் உதவா செயல்பாடுகளென வாழ்க்கை தொடர்கிறது அதுமாட்டுக்கு.

கவிஞனை எழுத நேர்ந்தால், அவனெழுதிய கவிதையும் கொஞ்சம் சிந்தத்தானே செய்யும்?

சோற்றுக்குப் பள்ளி சென்றேன்

உபரி அறிமுகந்தான்

உயிர் எழுத்து…

-மகுடேஸ்வரன்

**

விதி

அந்திக்கருக்கலில்

இந்தத் திசை  தவறிய

பெண்பறவை

தன்  கூட்டுக்காய்

அலைமோதிக்  கரைகிறது.

எனக்கதன் கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை தெரியவில்லை.

கலாப்ரியா

**

பார்த்தல்

கூடைக்காரி
சிலசமயம்
குடும்பக்காரி
வரும் தெருவில்
டீச்சர் வந்தாள் குடைவிரித்து.

ஒற்றைமாட்டு வண்டியிலே
வைக்கோல் பாய்க்கு
நெளிந்து தரும்

மருத்துவச்சி தேடுகிறாள்
எட்டிப்பார்த்து ஒரு வீட்டை .
விளக்குக் கம்பம்
நடைக் கொம்பாய்
நிற்கும் தெருவில்
பிற பெண்கள்
வந்தார் போனார்..

அவள் வரலே.

ஞானக்கூத்தன்

**

என்னைத்

துரத்திக்கொண்டு

நான் செல்கிறேன்

எல்லோரும்

சிரிக்கிறார்கள்

நகுலன்

**

வழி

வயிற்றுப் பசிதீர்க்க

வராதா என்றேங்கி

மழைக்கு அண்ணாந்த கண்கள்

கண்டுகொண்டன

வானம் எல்லையில்லாதது

பிரமிள்

தரிசனம்

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப்

போய்விட்டார்

ஆயினும்

மனதினிலே  ஓர்  நிம்மதி

ஆத்மாநாம்

***

6 thoughts on “எழுத்தின் இளமை

 1. ஆமாம் பல நல்ல எழுத்தாளர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அதற்கும் லாபியிங்க் என்று எங்கோ யாரோ எழுதியிருந்ததை எப்போதோ வாசிக்க நேர்ந்தது.

  சுஜாதாவிற்கு விருது கிடைக்கவில்லையாக இருக்கலாம். ஆனால் சாகித்திய அகாடமி விருது கிடைத்தவர்களை விட அவருக்கு இப்போதும் ரசிகர்கள் ஏராளம்! அதுவே பெரிய விருது இல்லையோ!

  கவிஞன் என்றும் இளமையானவன். ஏன்? அவன் எழுத்து அப்படி. அல்லது அவனது கவிதைகள் அப்படியிருப்பதால், அவனப்படி.//

  உண்மைதான்.

  பகிர்ந்திருக்கும் எல்லாக் கவிதைகளும் அருமை. மகுடேஸ்வரன் பற்றி சுஜாதா சொல்லியிருந்த நினைவு.

  ஞானக்கூத்தன் கவிதை மட்டும் கொஞ்சம் புரியவில்லை, அண்ணா.

  கீதா

  Like

  1. @ கீதா: //…மகுடேஸ்வரன் பற்றி சுஜாதா சொல்லியிருந்த நினைவு.

   ஞானக்கூத்தன் கவிதை மட்டும் கொஞ்சம் புரியவில்லை..//

   சுஜாதா பல கவிஞர்களை தன் ‘கற்றதும் பெற்றது’மில் ஸ்லாகித்து பகிர்ந்திருக்கிறார். மகுடேஸ்வரன் அதிலுண்டு என்றுதான் நினைவு.

   ஞானக்கூத்தன் என்ன சொல்கிறார்.. எல்லா வகைப் பெண்களும் வருகிறார்கள், போகிறார்கள்தான்.. ம்ஹூம்..
   ஆனால்… அவள் எங்கே ? என்று தவிக்கிறார்!

   Like

 2. அனைத்துக் கவிதைகளும் மனதில் லயிக்கின்றன.
  கவிஞர் போகலாம் .கவிதை நிற்கும்.
  மகுடேஸ்வரன் படித்த நினைவுண்டு.
  நம் உள் நினைவுகளும் அபூர்வத்தை
  உள்ளே வாங்கிக் கொள்கின்றன.
  ரசித்து அசைபோட கலாபிரியா அவர்களின்

  கவிதைகள் நாம் வாழும் உலகத்தை
  அமிர்தம் ஆக்குகின்றன.
  எத்தனை திறமைசாலிகள் சுவாசித்த காற்றை நாமும் சுவாசிக்கிறோம்!!!

  மிக மிக நன்றி ஏகாந்தன் ஜி.

  Like

  1. @Revathi Narasimhan :
   மகுடேஸ்வரனை முன்பே படித்திருக்கிறீர்களா? நல்லது. இணையத்திலும் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்களின் எதிரே வருவார்கள்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s