சி.சு. செல்லப்பா சிறுகதை

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் மறக்க இயலாத எழுத்தாளர். வத்தலக்குண்டு சொந்த ஊர்.  இளம் வயதில் சென்னை வந்து,  சுதந்திரச் சங்கு, மணிக்கொடி ஆகிய அந்நாளைய சிற்றிதழ்களில் ஆரம்பித்தார் தன் எழுத்து வாழ்க்கையை. தரமான தமிழ்ப் படைப்புகளைத் தரவென, தானே முன்னிட்டு, ‘எழுத்து’ என்னும் சிற்றிதழை, எத்தனையோ இன்னல்களிடையே ஒரு தவமே போல் நடத்தி (தோளில் சுமந்து சென்று கல்லூரிப்படிகளில் ஏறி இறங்கியவர், மாணவர்கள் வாங்க, வாசிக்க என) தமிழுக்கு அணி சேர்த்த ஆளுமை.  கதைகள், புதினங்கள், நாடகம், திறனாய்வுக் கட்டுரைகள் என விரிவாகப் பரந்து நிற்கும் எழுத்துலகம் அவருடையது. சுதந்திரப்போராட்ட அனுபவங்களை மையமாகக் கொண்டு, சுமார் 16 ஆண்டுகள் உழைத்து அவர் எழுதிய நாவல் ’சுதந்திர தாகம்’. திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெருவில் ஒரு சிறு வாடகை வீட்டில், அந்த நாவலின் அச்சுப்பிரதிகளும், எழுத்து பிரசுரங்களும் ஒரு மூலையில் குவிந்து கிடக்க, தன் மனைவியுடன் முதுமையின் தள்ளாமையில் வாழ்ந்து 1998-ல் மறைந்தவர். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, திடீரென விழிப்பு வந்ததுபோல் சாஹித்ய அகாடமி எழுந்து கண்ணைக் கசக்கியது; செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலிற்கு விருது வழங்கியது (2001). 

அவரது எழுத்தைக் கொஞ்சம் அனுபவிப்போம்: 

சிறுகதை :  முறைமைப் பெண் – சி.சு.செல்லப்பா

அழகுவின் கல்யாணம் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அன்றைக் கல்யாண காரியம் முடிந்து, அழகுவும் அங்கம்மாளும் படுக்கப் போகும் சமயம், அவர்கள் வீட்டுக் கதவு தடதடவென்று இடிக்கப்பட்டது. இந்நேரத்திற்குப் பிறகு யார் வந்து கதவைத் தட்டுவார்கள் என்று சந்தேகித்து , “யாரது?” என்று கேட்டுக்கொண்டே அங்கம்மாள் கதவைத் திறக்கப்போனாள். “நான் தான் அங்கி, கதவைத்திற” என்று வெளியிலிருந்து ஒரு முரட்டுக்குரல் பதில் அளித்தது. அந்தக் குரலைக் கேட்டதும், தாயும் மகளும் ஏக காலத்தில் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்து விழித்துக்கொண்டார்கள். பயம் தோய்ந்த ஒரு கலக்கம், பீதி அந்த விழிப்பில் கலந்திருந்தது.

சி.சு. செல்லப்பா | அழியாச் சுடர்கள்
சி.சு. செல்லப்பா

அந்தக் கலக்கத்தையும் அமிழ்த்திக் கொண்டு, அங்கம்மாள் போய்க் கதவைத் திறக்கவும், வீடு அதிரும்படியாகக் காலடி எடுத்து வைத்துப் பகுடித்தேவன் உள்ளே நுழைந்தான். இத்தனை வருஷங்களாக உழைத்து உழைத்து வைரம் பாய்ந்து போன தேகமும், குடித்துக் குடித்து நிலையாகச் சிவப்பேறிப் போயிருந்த கண்களும், இரண்டு கன்னங்களிலும் கிர்தா மீசையோடு வந்து சேரும்படியாகக் “கேரா’ வெட்டி விடப்பட்டு, இடுப்பில் தோல் உறை இடப்பட்டிருந்த ஒரு பிச்சுவா சகிதம், வெளிக்குத் தெரியாதபடி குத்து ஈட்டி ஒன்று மறைக்கப்பட் டிருந்த பித்தளைப்பூண் இரு புறமும் பிடித்த ஒரு கருங்காலித் தடியைக் கையில் வைத்துக்கொண்டு, ஆஜானுபாகுவாய் உள்ளே நுழைந்த உருவம், ஒரு கற்பனைக் காட்டுத் தெய்வத்தின் தோற்றத்தை அளித்தது.

பகுடித் தேவன் வரவும், அங்கம்மாள் அவன் பக்கம் திரும்பி, “அண்ணே, வா ! ஏது இந்த அகாலத்திலே புறப்பட்டு வந்தே? எங்கேயாவது காவலுக்குப் புறப்பட்டியா? ஏது இத்தனை நாளா இந்தப் பக்கமே காணோம்? இந்த ஊரிலேயே இருந்துக்கிட்டு…” என்று ஒரு புறம் அவனுடைய அகால வருகையை விரும்பாமல் வினவி, மறுபுறம் பரிவோடு கேட்பவள் போல வரவேற்றாள். ஆனால் பகுடியோ அவள் அழைப்பிற்குப் பதில் ஒன்றும் பேசாமல், தீவிரம் பொங்கும் முகத் தோற்றத்துடன், தடியை முன்னாலே போட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்தான்.

யதார்த்தத்திலேயே அந்த அகாலத்தில் பகுடி வந்தது அவளுக்கு அவ்வளவு திருப்திப்படவில்லை. அதற்கேற்றாற்போல் வரும் போதே அவன் கடுப்பாக நடந்து கொண்டது அவளுக்கு அசாதாரணமாகப் பட்டது. அவர்களுக்குள் முன் நடந்தது, பின் நடக்க இருப்பது இவற்றைக் கோவைப்படுத்திக் கொண்ட பொழுது, என்ன அனர்த்தத்திற்கு அவன் அடிபோடுகிறானோ என்ற பயம் ஏற்பட்டது தாய்க்கும் மகளுக்கும். எடுத்த எடுப்பிலேயே இருவரிடையேயும் சௌஜன்ய உணர்ச்சி காணப்படாதது, அவர்களுக்குள்ளே இருந்த மனஸ்தாபத்தை வெளியிட்டுக் காண்பித்தது.

அப்பொழுது வெளியே நல்ல இருட்டு. ஆடிக் கடைசி. ஆகையால் காற்று முழு வீறாப்புடனும் புழுதியை அள்ளி வீசிக்கொண் டிருந்தது. பனை மரங்கள் ஒன்றோடொன்று மோதி ‘ஹோ’ என்று அலறிக் கொண்டிருந்தன. அவ்வளவு கொதிப்படைந்த இரவு – அதற்குச் சமமாகக் கொதிப்படைந்த மனத்தோடு இருந்த பகுடி, ஒரு கனைப்புக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். அந்தக் கனைப்பு, தாய்க்கும் மகளுக்கும் கசந்து வழிந்தது. என்ன சொல்லப் போகிறானோ என்று அவன் வாயையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அங்கி! நீ நினைத்ததை அப்படியே சாதித்துப் போட்டே, இல்லையா? குலத்தைவிடப் பணம் உனக்கு பெரிசாப் போயிருச்சு. அந்தப் பஞ்சாயத்துக்காரன் சம்பந்தம் உனக்கு ரொம்ப உசத்தியாப் போயிருச்சு. நம்ப மாசானம் உன் கண்ணுக்கு அவ்வளவாத் திருப்திப் படல்லே, இல்லையா?” என்று அடித் தொண்டையிலிருந்து உறுதியான குரலில் பேசினான். அவன் கண்கள் நிலையாக அவர்கள் இருவரையுமே மாறி மாறி விழித்து உருண்டன, அவன் இதைச் சொல்லும் பொழுது .

அங்கியும், அழகுவும் எதிர்பார்த்துப் பயந்தது போலவே எடுப்பிலேயே இவ்வளவு உஷ்ணமாக ஆரம்பித்தது,  அவர்களுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. தீர்ந்துபோனதென்று அவர்கள் கருதியிருந்த விஷயத்தை அவன் திரும்பக் கிளறி விட்டு விட்டான். மேலும் மேலும் அதைப்பற்றிப் பேசுவது மனஸ்தாபம் அதிகரிப்பதற்குத்தான் இடமாகும். ஆயினும் என்ன செய்வது? அவன் அப்படி நினைக்கவில்லை. ஜவாப் கூறித்தானே ஆகவேணும்!

“அதைப்பற்றி இனிமே பேச்சு எதற்கு? அண்ணே, வியவகாரந்தான் ஒரு விதமாகத் தீர்ந்து போயிடுத்தில்லே” என்று பேச்சிற்குப் புள்ளி வைத்து அங்கம்மாள் பதில் கூறினாள்.

“என்ன, தீர்ந்தா போயிருச்சு! நான் அப்படி நினைக்கல்லையே” என்றான் பகுடி, திரும்பவும் பன்மடங்கு உறுதியுடன். இதைக் கேட்டதும் அங்கம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனத்திற்குள் ஒரே கலக்கம். பதில் ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

“மாசானம் ரொம்ப ஆசைப்படறான், ஓரண்டையும் பார்க்காமே ஏதோ ஒண்ணுக்குள்ளே ஒண்ணு கட்டிக் கொடுத்திருன்னு எத்தனையோ வாட்டி வலுவிலே உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன். அதைக் கொஞ்சங்கூடக் காதிலே போட்டுக்காமே இந்த மாதிரி காரியம் செய்துட்டே.. பகுடியை மனுசன்னு கூட மதிக்காமே…ஹும்!” என்றான் பகுடி தொடர்ந்து.

அங்கம்மாள் அவனுக்கு விட்டுக் கொடுக்காமல், “அண்ணே! என்ன இப்படிப் பேசறே! மாசானத்துக்கு அழகுவைக் கட்டிக் கொடுக்கத் தோதுப்படாதுன்னு உன்கிட்ட எத்தனை வாட்டி நானும் சொல்லியிருக்கேன். அழகுவுக்குத்தான். அவனைக் கட்டிக்கிற பிரியமே இல்லை. அப்புறம்…”

இதை அவள் கூறி முடிப்பதற்குள் பகுடியின் முகம் சரேலென்று நிமிர்ந்து அழகு பக்கம் திரும்பிக் கோபத்தோடு உருண்டன விழிகள். “நேற்றுப் பிறந்த கழுதைக்கு அவ பிரியம் வேறே வச்சிருக்குதோ? ஹும், வேண்டாமோ?” என்று கோபத்தில் நகைத்தபோது, அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது. அந்த இடத்தில் அதற்குமேல் நிற்க முடியாமல் அழகு அப்புறம் போய்விட்டாள்.

“அண்ணே, அவளோ எனக்கு ஒண்ணே ஒண்ணு. அவள் சம்மதம் இல்லாமே செய்கிறதற்குப் பிடிக்கல்லே” என்றாள் அங்கி பணிவோடு.

“அப்போ, ஜாதி முறைமை யெல்லாம் பறந்து போயிருச்சோ?” என்று கர்ஜித்தான் பகுடி.

அங்கி நடுநடுங்கிப் போய்விட்டாள். அவனிடம் எப்படிப் பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. வாஸ்தவமாகவே மாசானத்திற்கு அழகுவைக் கட்டிக் கொடுக்கக் கொஞ்சமும் அவளுக்கு இஷ்டம் இல்லை. அங்கம்மாள் வாழ்க்கைப்பட்ட இடம் கொஞ்சம் பசையுள்ள இடம். நாளையும் பின்னும், கண்ணீரும் கம்பலையுமாக வந்து நிற்காமல், கண்ணியமும் கொஞ்சம் அந்தஸ்தும் உள்ள இடத்தைத் தேடும் அவளா, இந்த யோக்கியதையும், பொறுப்பும், பணமும் இல்லாத கஜப் போக்கிரியின் மகன் – காவாலிப்பயல் – மாசானத்துக்கு அழகுவைக் கொடுப்பாள்?

இந்த லக்ஷணத்தில் முறைமை கொண்டாடுகிறான் – பகுடி. ஜாதி வழக்கமாம் வழக்கம்! முறைமையைப் பார்த்து விட்டுத்தான் அப்புறம் வெளியிடம் பார்க்கணுமாம்; வேடிக்கைதானே! ஆனால் இந்தக் காரணத்தையெல்லாம் பகுடியிடம் நேரடியாக எடுத்துச் சொல்லி அவன் கோபத்தை அதிகரிக்கச் செய்யவில்லை. பயந்து பயந்து தான் அங்கம்மாள் பதில் கூறினாள். அழகுவின் மீது சுலபமாகப் பழியைத் தூக்கிப் போட்டு விட்டாள். பகுடியின் கடைசிக் கேள்விக்கு அவள் ஒன்றும் பதிலே பேசவில்லை.

ஆனால் பகுடி அதோடு விட்டு விடாமல் திரும்பவும் அதே முரட்டுக் குரலில், “இதோ பாரு , அங்கி; உன்கிட்டத் தர்க்கம் பேசிக்கிட்டு இருக்கிறதற்கு நான் இங்கே வரல்லே. நம்ம ஜாதி வழக்கப்படி பேசாமே மாசானத்துக்குக் கட்டிக்கொடுத்திரு” என்றான்.

“என்ன, என்ன? நிச்சயம் பண்ணின கல்யாணத்தை முறிச்சிடவா சொல்றே?” என்று தன்னை மீறிப் பலக்கக் கூவிவிட்டாள் அங்கம்மாள், வியப்புக் குரலில்.

”ஆமாம், அதைத்தான் சொல்றேன். பேசாமே அப்படிச் செய்துடு. இல்லாட்டிப் பின்னாலே ரொம்ப மனஸ்தாபத்திற்கு இடமுண்டாவும்” என்றான். அங்கம்மாள் அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின்பு தன்னைத் திடப் படுத்திக்கொண்டு, “அண்ணே, நீ இப்படியெல்லாம் பேசறது நல்லாயில்லே, அதது தலைப்பொறி போலே நடந்துட்டுப் போவுது” என்றாள் இறைஞ்சலாக. தங்கள் விஷயத்தில் கூட அவன் அப்படி நடந்துகொள்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சாதனைக் குணம் நன்றாகப் பிடித்துக்கொண்டுவிட்ட ஒருவனுக்கு, தன் இனம், பிற இனம் என்று கூடப் பகுத்தறிய முடியாதபடி அறிவு இருளடைந்து விடுகிறது.

“அப்போ மாசானத்துக்கு அழகுவைக் கட்டிக் கொடுக்கமாட்டே நிச்சயமாய்? ஹும்?” என்று கூவினான் பகுடி.

“நிச்சயமான கல்யாணத்தை நிறுத்த முடியுமா அண்ணே? விட்டுடு பேச்சை” என்று சமாதானமாகக் கூறினாள் அங்கி.

பகுடியின் கோபமும், முரட்டுத்தனமும் அளவு கடந்து போய்விட்டன. உட்கார்ந்து கொண்டிருந்தவன் சரேலென்று எழுந்து, தடியைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி, “பகுடின்னா என்னமோ லேசாக நினைச்சுக்கிட்டு இருக்கிறே நீ! கிராமமே என்னைக் கண்டா நடுநடுங்கிக்கிட்டுக் கிடக்குது. அதுவும் உனக்குத் தெரியாம இல்லே. முறைமையை விட்டுட்டு வேறே இடத்திலே குட்டியைக் கட்டிக் கொடுத்துட்டா எனக்குத்தான் கேவலம். பகுடி ரோஷம் கெட்டவனல்ல. எங்கே இந்தக் கல்யாணம் நடந்துடறதைப் பார்த்துடறேன்! இல்லாட்டி என் பேரு பகுடியும் அல்ல; மறவனுமல்ல” என்று கிர்தாவில் கைபோட்டுத் திருகிக்கொண்டு, கண்களில் தீக்கனல் வீச, சட்டென்று திரும்பி வாசற்படியைக் கடந்து கீழே இறங்கி, இருளில் மறைந்து போய்விட்டான் பகுடி.

“அண்ணே! அண்ணே!” என்று ஏதோ கூற அங்கி, வாயெடுத்தாள். அவன் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்விட்டான், அந்த அபாக்கிய வீட்டில் பயத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி விட்டு.

மறு நாள் காலையில் அங்கம்மாள் வேறு ஒன்றும் தோன்றாமல் போலீஸில் போய் இரண்டு நாட்களில் நடக்க இருக்கும் தன் மகள் கல்யாணத்திற்குப் பகுடி, அவன் சகாக்கள் ஆகியவர்களால் இடைஞ்சல் ஏற்படு மென்று பயப்படுவதாயும், பந்தோபஸ்துத் தரவேண்டு மென்றும் “ரிபோர்ட்’ செய்து விட்டாள். அதன்மீது போலீஸார் பகுடியையும், அவன் மகனையும் கூப்பிட்டு அந்தக் கல்யாண சம்பந்தமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களே ஜவாப்தாரி என்று எழுதி வாங்கிக் கட்டுப்படுத்தி எச்சரித்து அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது தான் சம்பந்தப்பட்டவர்கள் மனத்தில் ஒரு நிம்மதி பிறந்ததென்று சொல்ல வேண்டும். இனிக் கல்யாணம் இடைஞ்சலின்றி நடக்கக்கூடுமல்லவா!

ஆனால் பகுடி இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன் சகோதரி அவ்வளவு தூரத்திற்குப் போகமாட்டாள் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனுடைய செய்கையே அவளுடைய அந்த நடவடிக்கைக்குத் தூண்டுகோலாக இருந்தது. இது வரையில் சுயேச்சை யாக நடந்து கொண் டிருந்த தான் கட்டுப்படுத்தப் பட்டதை நினைக்கும் பொழுது, அவன் மனம் கொதித்தது. எந்த விதத்தில் இதற்குப் பழி வாங்கலாம் என்று ஆராயத் தொடங்கியது அவன் முரட்டு உள்ளம்.

கல்யாண தினம் வந்துவிட்டது. அவர்கள் ஜாதி வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டிலேதான் கல்யாணம் நடப்பது வழக்கம். எனவே பெண் வீட்டா ரெல்லாம் கல்யாணத்திற்கு முந்தின நாளே மாப்பிள்ளை வீட்டுக் கிராமத்திற்குப் போய்விட்டார்கள். அங்கம் மாள் வீடு பூட்டிக் கிடந்தது.

பாதிராத்திரி சமயம் இருக்கும். மாப்பிள்ளை வீட்டுக் கிராமத்திலே அழகுவுக்கும், பாலுத்தேவன் மகனுக்கும் அந்நேரத்தில் முகூர்த்தம் ஆகி எல்லோரும் சந்தோஷமாகப் பொழுது போக்கிக்கொண் டிருக்கும் சமயம். அமாவாசை ஸமயமாகையால், எங்கும் இருட் டாக இருந்தது. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நக்ஷத்திரங்கள் மின்னிக் கொண் டிருந்தன. காற்று அகோரமாகக் கிளம்பி வீசிக்கொண் டிருந்தது. எல்லோரும் ஒரு தூக்கம் போட்டிருப்பார்கள். அப்பொழுது, திடீரென்று அரைகுறைத் தூக்கத்தில் இருந்த சிலருடைய நாசிகளில் ஓலை எறிவதனால் உண்டாகும் புகை நாற்றம் போல் ஏதோ தாக்கியது. சந்தேகப்பட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அங்கம் மாள் வீடு பற்றி எரிந்து கொண் டிருந்தது. தீப்பட்ட ஓலைத்துண்டுகள் பல ஆயிரக்கணக்கில் காற்றில் சிதறி நானா பக்கங்களிலும் பறந்து போய்க்கொண் டிருந்தன. அவ்வளவு தான்; கிராமமே ஒரே அல்லோல கல்லோலப் பட்டது. எங்கே பார்த்தாலும் ஒரே பரபரப்பு; ஆரவாரம். தீ பரவி விடாமல் இருக்கவேண்டிய வழிகள் எல்லாம் தாமதமின்றிக் கையாளப்பட்டும், தீ அணைய வெகு நேரம் பிடித்தது, காற்றடி காலமாகையால். அங்கம்மாள் வீடு உள்ளிருந்த சாமான்களோடு முழுவதும் வெந்து சாம்பலாகிவிட்டது.

கல்யாணம் முடிந்து மறுநாளே அங்கம்மாள் திரும்பி வந்தாள். வீடு இருக்கும் நிலைமையைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் பதறிற்று. கொஞ்ச நேரம் பிரலாபித்து விட்டு, உடனே போய் அதையும் போலீஸாரிடம் “ரிபோர்ட்’ செய்து விட்டாள். போலீஸார் வாசனையை நுகர்ந்தார்கள். பகுடியையும், மாசானத்தையும் கைது செய்யுமாறு வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. மாசானம் சுலபமாகப் பிடிபட்டான். பகுடியோ பதினைந்து நாட்கள் வரை அகப்படாமல் தப்பித்துக்கொண்டிருந்து பிறகு சாதுர்யமாக ஜாமீன் வசதி ஏற்படுத்திக்கொண்டு, ஆஜராகி ‘லாக்கப்பிற்குப் போகாமல் கோர்ட்டிலிருந்தே ஜாமீனில் விடுதலைக்கு வழி செய்து கொண்டான்.

அங்கம்மாளுக்குப் பகுடி தன் அண்ணன் என்ற நினைப்பே கூட இல்லாமற் போய்விட்டது. வீட்டையே எரித்துத் தன்னைப் பாழ்படுத்தியவன் அண்ணனாக இருந்தால் என்ன, வேறு யாரானால் என்ன? அத்தனை ஆக்ரோஷம் அவளுக்கு அவன் மீது பிறந்துவிட்டது. எப்படியாவது அவனை இதற்காகச் சிறையில் வைத்துப் பார்க்க வேண்டு மென்று கூட உறுதி கொண்டு விட்டாள்

அதோடு பகுடியை ஒழிப்பதற்குத் தக்க சமயத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண் டிருந்த கிராமமும் அவளுக்குத் துணை புரியத் தூண்டுகோலாக முன் வரவே, பகுடிக்கு எதிராகப் பலமாகச் சாக்ஷிகளைத் தயாரிப் பதில் இறங்கிவிட்டாள். பகுடி தான் தீ வைத்தவன் என்று அவள் நிச்சயமாக நம்பினாள்.

தன்மீது தீ வைத்த குற்றம் சுமத்தப்படுவதைப் பகுடியால் பொறுக்க முடியவில்லை. குற்றம் செய்திருந் தால் அவன் மனம் சிறிதும் அதன் பயனை அனுபவிக்கத் தயங்காது. ஆனால் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவிப்பதென்றால், அதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

சப்மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணை ஆரம்ப மாயிற்று. பகுடிக்கு எதிராகச் சாக்ஷிகள் மிகப் பலமாகத் தயார் செய்யப்பட்டிருந்தனர். பகுடி கைதிக் கூண்டில் நின்று கொண் டிருந்தான். இந்த நாற்பது வருஷ காலத்திலே இன்றைக்குத்தான் அவன் ஓர் அற்ப, தீ வைத்த குற்றம் சாட்டப்பட்டுக் கைதிக் கூண்டில் ஏறி நிற்கிறான். சமயம் பார்த்து எதிரிகள் இப்படித் தன்னைச் சிக்கலில் மாட்டி விட்டதை நினைத்து அவன் மனம் உள்ளூறக் குமுறிக்கொண் டிருந்தது. அவனாலோ எவ்வளவோ முயன்றும் தன் நிரபராதித் தன்மையை ரூபிக்கும் வகையில் சாக்ஷியம் தயாரிக்க முடியவில்லை. எதிர்ச் சாக்ஷியமோ வெகு பலமாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. எங்கே தனக்குத் தண்டனை விதிக்கப்படுமோ என்று பயந்து கொண் டிருந்தான். கூண்டில் குனிந்த தலை நிமிரவே இல்லை. இடையிடையே அங்கம்மாளைப் பற்றிய ஞாபகம் வரும்போது அவன் பற்கள் நறநற வென்று நெரிந்தன. ரோஷத்தில் சொல்லிவிட்ட இரண்டு வார்த்தைகள் அல்லவா அவனது இந்த நிலைமைக்குக் காரணம்!

அன்று அங்கம்மாள் சாக்ஷியம் விசாரிக்கப்பட வேண்டிய பிரமேயம் ஏற்படவில்லையாதலால், அவள் கோர்ட்டிற்கு வரவில்லை. பகுடி பயந்தது போலவே, குறிப்பாக இரண்டொரு சாக்ஷிகளை மட்டும் விசாரித்து விட்டு மாஜிஸ்டிரேட் வழக்கை ஸெஷன்ஸுக்கு அனுப்பி விட்டார். அந்தத் தீர்ப்பு, பகுடிக்குப் பேரிடியாக விழுந்தது. அவன் நம்பிக்கை இழந்தவனாகி விட்டான். அவனது முரட்டு மனமும் கலகலத்துப் போய்விட்டது.

பகுடி ஸெஷன்ஸுக்கு அனுப்பப்பட்ட விஷயத்தை யாரோ ரொம்ப மகிழ்ச்சியோடு அங்கம்மாளிடம் வந்து கூறினார்கள். அவள் மனம் சந்தோஷப்படவேண்டியிருக்க, அவளுக்கு அதைக் கேட்டதும் திடுக்கென்றது. அப்பொழுது அவள் மனத்தில் ஏற்பட்டது, திருப்தியா, அதிருப்தியா என்று அவளாலேயே நிதானிக்க முடியவில்லை. பல முரண்பாடான எண்ணங்கள் அவள் மனத்தில் எழுந்து அலைத்தன. வேதனை போட்டுப் பிய்த்துக் கொண்டது. “ஐயோ! யார்மீது இப்படி நடவடிக்கை எடுத்துக்கொண்டு விட்டோம்’ என்று ஒரு வேதனை அவள் மனத்தில் முளைத்தது. ’அவன் உன் அண்ணன் அல்லவா?’ என்று ஏதோ ஒன்று அவளுக்கு உள்ளே இருந்து வினவியது போல் இருந்தது. மறு கணம் அவன் செய்த கொடுமை நினைவிற்கு வரவும், அதில் ஓர் ஆறுதல் ஏற்பட்டது போல் இருந்தது. வெளியிட்டுச் சொல்ல முடியமால் உள்ளூற இந்தக் குழப்பத்திலேயே நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மங்கலான சூரியன் கூட மேக விதானத்தைப் பொத்துக்கொண்டு வெளிக் கிளம்ப முடியவில்லை. அன்ற தான் ஸெஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையின் கடைசி நாள். பகுடி தான் தண்டிக்கப்படுவது நிச்சயம் என்று தீர்மானித்தவனாய் உணர்ச்சியே இல்லாமல் மனம் குன்றிப் போய், கைதிக் கூண்டில் நின்று கொண்டிருந்தான். குனிந்த தலை நிமிரவே இல்லை. அவனுடைய மானம் அல்லவா அவனை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருந்தது!

விசாரணை ஆரம்பித்தது. சாக்ஷிகள் ஒவ்வொரு வராகக் கூறிவிட்டுப் போய்க்கொண் டிருந்தார்கள். அதைப்பற்றியெல்லாம் பகுடி சிறிதும் கவலைப்பட்டவன் போலவே தோன்றவில்லை. அடுத்த சாக்ஷியின் பெயர் கூப்பிடப்படவும் பகுடி திடுக்கிட்டுத் தன் ஒளியிழந்த கண்களை உயர்த்தி அந்தப் பக்கம் பார்த்தான். அங்கம்மாள் – அவன் சகோதரி – தள்ளாடித் தயங்கி வந்து கொண் டிருந்தாள். அதே சமயம் களையிழந்திருந்த அவள் முகத்திலிருந்து இரண்டு விழிகள் கைதிக் கூண்டை நோக்கின. ஒரே விநாடி இருவர் கண்களும் சந்தித்தன. அடுத்த விநாடி இருவர் முகங்களும் விருட்டென்று தாமாகவே அப்புறம் திரும்பிக் கொண்டன. பகுடிக்கு வெறுப்பு; அங்கமாளுக்குக் குழப்பம். சகோதரனுக்கு எதிர்த் தரப்பில் சகோதரி சாக்ஷி சொல்வதென்றால் அதைவிட விதிவசம் வேறென்ன இருக்கும்?

பகுடியின் அந்தப் பார்வை – கோபமும், நிராதரவும், இரக்கமும், கொடூரமும் கலந்து பேசிய அந்தப் பார்வை அவள் நெஞ்சை ஆயிரம் சுக்கலாக உடைத்து நொறுக்கிவிட்டது. அக்கு அக்காகப் பிரிக்கப்பட்டதொரு கப்பல் போல் சிதறிப் போய்விட்டது. அதனால் எழுந்த கலக்கத்தை அவளால் சமாளிக்க முடியவில்லை. ஒரு யந்திரத்தைப்போல் தான் சொன்னது புரியாமலே மளமளவென்று சாக்ஷியம் கூறிவிட்டு இறங்கிப் போய் விட்டாள்.

அப்பொழுதுதான் அவள் கலக்கம் அதன் உச்ச நிலையை அடைந்துவிட்டதென்று சொல்லவேண்டும். சுலபமாக நிவர்த்தித்துவிட முடியாத ஒரு நிலைமையைச் சிருஷ்டித்துவிட்டாள் அவள்..

ஆனால் ஓர் இரண்டு வருஷ தண்டனையை மனத்தில் கற்பனை செய்து கொண்ட பொழுது அவள் உடல் நடுங்கினாள். அழுகைகூட வந்துவிட்டது. அவளறியாமல், “ஐயோ, ஆத்திரப்பட்டு என்ன காரியம் செய்துவிட்டோம்!” என்று வாய்விட்டுக் கூறி விட்டாள். தன் அண்ணன் சிறைக்குப் போகத் தான் காரணமாக இருப்பதென்றால் !  அவள் கோழையாகி விட்டாள். கோபமும் வர்மமும் அவள் மனத்திலிருந்து பறந்து போன இடம் தெரியவில்லை. எங்கிருந்தோ வாத்ஸல்யமும், பச்சாத்தாபமும் வந்து நுழைந்து கொண்டன. இந்தச் சமயத்தில் ஜட்ஜ் தீர்ப்பு எழுதத் தம் அறைக்குப் போய்விடவே, அங்கம்மாளின் நிலைமை சகிக்கக்கூடா தாகிவிட்டது. ‘ஐயோ, என்ன அவசரப் பட்டு இந்தக் காரியம் செய்துவிட்டேன்! அண்ணனைச் சிறைக்கு அனுப்ப நானா காரணமாக இருப்பேன்? இல்லை, மாட்டவே மாட்டேன். அக்கிரமம்..’ என்று துடித்தாள்.

திடீரென்று ஓர் அசட்டு யோசனை தோன்றியது. ஜட்ஜிடம் போய் நேரில் சொல்லிவிட்டாலென்ன? “அவன் செய்யவில்லை, அந்தக் காரியம். வேறு யாரோ, எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிடக் கூடாதா என்றுகூட நினைத்தாள். ஆனால் அது நியாயஸ்தலம். வாத்ஸல்யத்திற்கும், பச்சாத்தாபத்திற்கும் அங்கே இடம் இல்லை. சட்டத்திற்கும் சாக்ஷியத்திற்குமே மதிப்பு உண்டு. சாக்ஷியமோ அவன் குற்றவாளிதான் என்று நிரூபித்துவிட்டது. சட்டம் அவனைத் தண்டித்துத்தான் ஆகவேண்டும்; இல்லாவிட்டால் அது சட்டமே அல்ல. நீதிக்குப் புறம்பானதாகிவிடும். அவள் மேலும் நினைத்தாள் : ‘ஐயோ, குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று ஜட்ஜ் விடுதலை செய்துவிடமாட்டாரா?’ என்று பேதை மனம் பிதற்றத் தொடங்கியது. ஆத்திரத்தில் தான் செய்துவிட்டதைக் குறித்து மருகினாள், மருகினாள், மருகினாள். மனம் நிலைக்காமல், செய்வது இன்னதென்று புரியாமல் பிரமையே உருவாகிவிட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து ஜட்ஜ் திரும்ப ஆசனத்தில் வந்து உட்காரவும், கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. குல்லாய் அணிந்து கொண்டு, கண்களை ஒரு தரம் கசக்கிவிட்டு, சபையைச் உற்றுப்பார்த்து ஜட்ஜ் தீர்ப்புச் சொல்ல வாயைத் திறந்தார். எல்லோருடைய ஆவல் முகங்களும் கவனத்தோடு அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தன. அதேசமயம் திடீரென்று, “தர்ம துரை…ளே!” என்று தளர்ந்த குரல் ஒன்று நிதானித்துக் கிளம்பியது. “உஸ்! பேசக்கூடாது..’  ‘ யாரது? தள்ளு வெளியே!” என்று பல குரல்கள் ஏக காலத்தில் அங்கம்மாள் வாயை அடைத்தன. ஜட்ஜ் தீர்ப்புக் கூறப் போகும் சமயத்தில் கோர்ட்டில் சப்தம் போடவாவது!

அங்கம்மாளுக்கு மேலே ஒன்றும் பேசத் தோன்றவில்லை. ஜட்ஜையும், சபையையும் மாறி மாறிப் பார்த்து மருள மருள விழித்தாள். இது ஒரு விநாடிக்குத்தான். மறு விநாடி அவள் தளர்ந்த, ஆயாசமடைந்த சரீரம் பொத்தென்று ஆசனத்தில் விழுந்து உட்கார்ந்தது. தலை சாய்மானத்தில் சாய்ந்து கொண்டது. ஜட்ஜ் திரும்பவும் தொடர்ந்து ஆரம்பித்துத் தம் தீர்ப்பைக் கூறி முடித்தார். ஆனால் ஜட்ஜ் கூறிய அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்கள் அப்பொழுது அவள் காதில் விழவில்லை.

**

சி.சு. செல்லப்பாவின் ’சரஸாவின் பொம்மை’ எனும் சிறுகதைத்தொகுதியில் வருகிறது இந்தக் கதை.

3 thoughts on “சி.சு. செல்லப்பா சிறுகதை

  1. சுதந்திர தாகம் PDF ஆகக் கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்கவேண்டும்!  என் அப்பாதான் அதைத்தேடிக்கொண்டே இருந்தார் அப்போது.

    Like

    1. @ ஸ்ரீராம்: சுதந்திர தாகம் சுமார் 2000 பக்கங்கள் (3 பாகம்) எனப் படித்த நினைவு. பகுடி – நானும் முதன்முதலாகக் கேட்கிறேன் இதை!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s