வாசகரை சாந்தப்படுத்திய ஜெயகாந்தன்

 ’மணிக்கொடி’ காலத்திற்குப் பின், விஜயபாஸ்கரன் ஆசிரியராக இருந்து 1950-களில் நடத்திய ’சரஸ்வதி’ இலக்கிய இதழ், தமிழின் இளம் இலக்கியப் படைப்பாளிகளைக் கவர்ந்தது. அவர்களது சிறுகதைகள், கட்டுரைகளை ஆர்வமாய் வெளியிட்டுத் தனக்கு வனப்பு சேர்த்துக்கொண்டது சரஸ்வதி. அத்தகையோரில் சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், விந்தன், கிருஷ்ணன் நம்பி ஆகியோர் இருந்தனர். சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவலான ‘ஒரு புளியமரத்தின் கதை’ , முதலில் சரஸ்வதியில்தான் ’புளியமரம்’ என்கிற தலைப்பில் தொடராக எழுதப்பட்டது

வெளிவர ஆரம்பித்திருந்த ஜெயகாந்தனின் கதைகள் அப்போதிருந்த எழுத்து வெளியில், வித்தியாசமாகவும், சிலரை சினப்படுத்தியவையாகவும் இருந்திருக்கின்றன. ’பௌருஷம்’ என்கிற அவரின் சிறுகதை ஒன்று, சரஸ்வதி, மே, 1957 இதழில் வெளியாகி (அப்போது கதாசிரியரின் வயது 23) சர்ச்சையைக் கிளப்பியது. குணவதியான கிராமத்துப் பெண்ணொருத்தி, கல்யாணம் செய்துகொண்டு தன் கணவனுடன் பட்டணம் வருகிறாள், வாழ. ரிக்‌ஷாக்காரனான தன் கணவன் ஒரு மாதிரி என அவளுக்குத் தெரியாது. ஒருநாள் அவன், எவனோ ஒருவனை வீட்டுக்கு அழைத்துவருகிறான், தன் மனைவியின் அழகு, இளமையை வைத்துக் காசு சம்பாரிக்கலாம் எனத் திட்டமிட்டவாறு. விஷயம் அறிந்து திடுக்கிட்டவள், ஓங்கி விட்டாள் ஒரு அறை கணவனுக்கு. நீயெல்லாம் ஒரு புருஷன்.. உனக்கு நான் பொண்டாட்டியா! – எனச் சீறியவாறு மனம் நொந்து, விடுவிடுவென கிராமத்துக்குத் திரும்புகிறாள் எனச் செல்லும் கதையில் சில திருப்பங்கள், நெளிவு, சுளிவுகள். அந்தக் கதைக்காக வாழ்த்துகள் சிலவும், வசைகள் பலவும் வரிசை கட்டி ஆர்ப்பரித்தன. சரி, கொஞ்சம் விளக்கவேண்டியதுதான் என நினைத்த ஜெயகாந்தன் அடுத்த இதழில், விமர்சனத்துக்குப் பதிலாக சில விஷயங்களைச் சொல்லலானார்:

”கடிதங்கள் மூலமாய் சரஸ்வதியில் வெளியாகும் எனது கதைகளை விமர்சித்து வரும் வாசக அன்பர்களுக்கும், நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும் வாழ்த்தியும், வைதும் என்னை, இலக்கியத்தை வளர்க்கும் இலக்கிய அபிமானிகளுக்கும் எனது நன்றி.

எனது சிருஷ்டிகளைச் சிலர் ‘ஆபாசம்’ என்கின்றனர். சிலர் ‘தரக்குறைவு’ என்கின்றனர். இன்னும் சிலர், ‘இது என்ன, கதையா?’ என்கின்றனர்.

சென்ற இதழில் வெளியான ‘பௌருஷம்’ என்ற கதையைப் படித்துப் பல நண்பர்கள் முகம் சுளித்தனராம்.

ஆம்; நானும்கூட, அந்தக் கதையை எழுதிவிட்டு முகம் சுளித்துக்கொண்டேன்!

மனிதராசியின் வாழ்க்கை வக்கிரங்களைப் பார்த்தால் சிலசமயம், நம் முகம் சுருங்கத்தான் செய்கிறது. அதனால் நாம் வாழ்க்கையை வெறுத்துவிடுகிறோமா என்ன?

இலக்கியமும் அப்படித்தான். அந்தக் கதையைப் படித்துவிட்டு நீங்கள் முகம் சுளித்திருப்பீர்களானால், அதுதான் எனது வெற்றி! என் கதையின் வெற்றி.

ஆனால் அதில் வரும் ரங்கத்தைப் பார்க்கும்போது என் முகம் சுருங்கவில்லை. நெஞ்சு உயர்ந்தது பெருமிதத்தால்.  சற்று, நீங்களும் அதைப் பாருங்களேன்.

கதையை எப்படியெப்படியோ சொல்கிறேன். ஏன் அப்படியெல்லாம் சொல்லவேண்டும் என்று கேட்பதைவிட, எதற்காக அப்படியெல்லாம் சொல்கிறேன்; அப்படியெல்லாம் சொல்லி, கடைசியாக அதில் நிமிர்ந்து நிற்கும் உண்மை என்ன என்று பார்த்தால், நீங்கள் முகம் சுளிக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கடைசியாக என் நண்பர்களையும், வாசகர்களையும் நான் வேண்டிக்கொள்வது இதுதான்.

இலக்கிய விஷயத்தில் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்துவிடாதீர்கள். உங்கள் ‘முசுடு’த்தனத்தைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு, பரந்த நோக்கோடு இலக்கியத்தை அணுகுங்கள். காலத்தின் மீது, வரப்போகும் சரித்திரத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.

உண்மை இலக்கியங்கள் நிற்கும். மற்றவை நசிக்கும்.

அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆதலால், தொடர்ந்து கடிதங்கள் மூலமாயும், நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், வாழ்த்தியோ, வைதோ இலக்கியத்தை வளர்க்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.”

-ஜெயகாந்தன்

சர்ச்சைகளும் விளக்கங்களுமாய், சிறப்பானவர்களின் சீரிய எழுத்து பல தாங்கி, தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கியவெளியில் லட்சிய வீறுநடைபோட்ட காலமது. ‘சரஸ்வதி காலம்’ என்கிற வல்லிக்கண்ணனின் புத்தகத்தைப் படிக்கையில், பகிரத் தோன்றியதே மேல் வந்தது. வல்லிக்கண்ணன் தனது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற நூலுக்காக, 1978-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

**

10 thoughts on “வாசகரை சாந்தப்படுத்திய ஜெயகாந்தன்

 1. மிக அருமையான தன்னிலை விளக்கம். கதை அந்தக் கால கட்டத்திற்குப் பொருந்தி இருக்காதோ? எனில் கதை வாசகர்கள் கதை எப்படி முடிந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள்? அந்தப் பெண் ரங்கம் கணவனோடு சேர்ந்து கொண்டிருக்க வேண்டுமோ? நினைத்தாலே ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறதே! இந்தக் கதையைப் போய் ஆபாசம் என்றால் என்ன சொல்லுவது! 😦

  Liked by 1 person

 2. ஜெயகாந்தனின் விளக்கம் அருமை.  அவர் இயல்புக்கும் மீறிய பொறுமையுடன் சாத்வீகமாக பதிலளித்திருக்கிறார்.

  Like

  1. @ ஸ்ரீராம்: அவரது பதில், இத்தகைய எழுத்து தொடர்பான விளக்கங்கள் வாசிக்க சுவாரஸ்யமானவை. கருத்தில் கொள்ளத்தக்கவை.

   Like

 3. எண்ணிலடங்கா வாசகர்களை தன்
  எழுத்தாளுமையால் வயப்படுத்திய
  எழுத்துச் சித்தரான ஜெயகாந்தன்
  எழுத்துலகின் இணையிலா மன்னராய்
  என்றும் உலா வருவார் தமிழுள்ளவரை !
  சமுதாய அவலங்களை சந்தியில்
  சத்தமிட்டு செப்பத் துணிந்த ஒரு சிலரில்
  சந்தேகமின்றி இவரும் ஒருவர் !
  ஜெயகாந்தனை பற்றிய பதிவு அருமை !

  T. Swaminathan

  Liked by 1 person

  1. @ T. Swaminathan : ஏற்கனவே ஜெயகாந்தன்பற்றி எழுதியிருக்கிறேன். இது அவர் வாசக விமர்சனத்துக்குத் தந்த பதில்பற்றி. வாசகர்களுக்கு அவ்வப்போது விஷயங்களைத் தெளிவுபடுத்தி, புத்திமதி சொல்லும் எழுத்தாளர்கள் தேவைதான்.

   Like

 4. ஜெயகாந்தன் வாசகர் கடிதத்துக்கான பதில்களை இதுவரை படித்ததில்லை.
  அவருடைய யுகசந்திக்கும், அக்னிப் பிரவேசத்துக்கும் நிறைய எதிர்ப்பு மொழிகள்
  வந்தன.
  என் பதின்ம வயதில் படித்த இந்தக் கதைகளால் என் சிந்தனைகள் மாறியது .

  எந்தப் பொருளையும் கொஞ்சம் ஆராய்ந்து
  பதில் சொல்லலாம் என்பதே அது. என்னை இது போன்ற கதைகளைப் படிக்க
  அனுமதித்த தந்தைக்கு என் நன்றி.

  வழக்கம் போல உங்கள் பதிவிலிருந்து விலகிச் சென்று
  எழுதிவிட்டேன்.
  அருமையான அறிவுச் சிங்கம் அவர்.
  என்றும் உயிர்ப்புடன் இருக்கும் அவர் எழுத்துகள்.
  மிக மிக நன்றி மா.

  Liked by 1 person

  1. @ Revathi Narasimhan:
   நீங்களும் இவரது கதைகளைப் பதின்ம வயதிலிருந்தே படித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
   இந்தப் பதிவிலிருந்து விலகிச் சென்று நீங்கள் எழுதியதாக நான் கொள்ளவில்லை. சரியாகத்தான் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

   Like

 5. அந்தக் கதையின் இணைப்பு இருந்தால் போடுங்கள். படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
  நானும் முகம் சுளித்தேன் என்று சொல்லி பிறகு ஏன் எழுதினேன் என்று சுயநிலை விளக்கம் தந்திருப்பது ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.

  Liked by 1 person

  1. @ ranjani135 : அந்தக் கதைபற்றிய குறிப்பே கிடைத்தது. இணைப்பு கிடைக்கவில்லை எத்தனைத் தேடியும்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s