வாழ்க்கை எனும் யோகம்

சில வருடங்களுக்கு முன் ஒரு யோகா நிகழ்ச்சிக்காக வேலாயுதம்பாளையம் எனும் ஒரு கிராமத்தில் தங்கவேண்டியிருந்தது. நான் தங்கவென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு, ஒரு பெரும் குன்றினை எதிர்நோக்கியிருந்தது. ஒரு காலத்தில், சுமார் 1900 வருடங்கள் முன்பு, ஜைனத் துறவிகள் இத்தகைய  மலைப்பகுதிகளில் உலவினார்கள், தங்கி தியானங்களில் ஈடுபட்டிருந்தார்கள், இங்கேயே வாழ்வைக் கழித்தார்கள் என அறிந்திருக்கிறேன். அந்தத் தொன்மைபற்றிய சிந்தனை ஏதோ ஒரு ஆர்வத்தை எனக்குள் உசுப்பிவிட்டிருந்தது. அப்படியென்றால், ஜைன மத ஸ்தாபகரும், குருவுவான மகாவீரரின் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் தாண்டி அவர்கள் இப்போதைய தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கவேண்டும்…

ஒரு மதியப்பொழுதில், என்னோடு வந்திருந்த சிலருடன் குன்றுகளின் மீது ஏறினேன். சற்று உயரம் ஏறிக் கடந்தபின், பறவையின் கூடுபோல அழகாக அமைந்திருந்த  சிறு குகை ஒன்று கண்ணில் பட்டது. இத்தகைய ஒதுக்குப்புறமான இடங்களில் நாம் இப்போதெல்லாம் எதனை எதிர்பார்க்கமுடியும்? அதே காட்சியே அங்கும் காணக்கிடைத்தது. உடைந்த பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்கள், தீப்பெட்டிகள், சுருட்டி எறியப்பட்ட பாலிதீன், காகிதம் என குப்பைகூளங்கள் குகைக்குள் வியாபித்திருந்தன. இந்தியாவின் பல இடங்களில், இதுபோன்ற  ஒவ்வொரு பழங்காலக் குன்றிலும், குகையிலும், அவ்வப்போது அங்கு வரும் சுற்றுலாக்காரர்கள், காதலர்கள் தங்கள் பெயர்களை அழுத்தமாகப் பொறித்துவிட்டுப் போயிருப்பதையும் பார்க்கலாம்.

இந்தக் குகையும் அவைகளிலிருந்து, இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்டிருக்கவில்லை. எங்கும் ’KPT loves SRM’ என்பதுபோன்ற இளசுகளின் வாசகங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. அந்த இடத்தைக் கொஞ்சம் முனைந்து நாங்கள் சுத்தப்படுத்தினோம். இப்போது அந்தக் குகை ஒருவழியாகத் தன்னைக் காண்பிக்க ஆரம்பித்தது. பாறைத் தளத்தில் படுக்கைகள்போல் சில செதுக்கப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. இவற்றில்தானே அந்தக்கால ஜைன சாதுக்கள் படுத்து உறங்கியிருப்பார்கள்…

Lord Mahavir and Jain Religion

அத்தகைய ஒரு ‘படுக்கை’யின் மீது நான் உட்கார்ந்து பார்த்தேன். திடீரென என் உடம்பெங்கும் அதிர்வுகள். ஆச்சரியம். என்ன இது? என்ன இருக்கிறது இங்கே? எதுவானாலும், அந்த இரவை அங்கேயே கழிப்பது என மனதில் முடிவுசெய்துகொண்டேன்.  இரவில் குகைக்குத் திரும்பினேன். அந்தப் படுக்கைகளில் ஒன்றில் மெல்லப் படுத்தேன். எப்பேர்ப்பட்ட இரவானது அது! அந்த இரவினில்.. பல நூற்றாண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த அந்த ஜைனத் துறவியின் சூட்சும உடம்பு இன்னும் அங்கேயே, உயிர்ப்போடு நிலவுவதை உணர்ந்தேன். அவரைப்பற்றி எனக்குத் ‘தெரிய’ ஆரம்பித்தது. அந்தத் துறவிக்கு இடது கால் இல்லை. அதாவது முழங்காலுக்குக் கீழே.. கால் இல்லை. ஏதுகாரணத்தினாலோ அதை அவர் இழந்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் புரிந்தது.

அத்தகைய துறவிகள் மனித நடமாட்டத்திலிருந்து வெகுதொலைவில், சராசரி வாழ்வுக்கூறுகளிலிருந்து முற்றிலுமாக விலகி, தனிமையில், அமைதியாக ஆழ்ந்து காலங்கழித்திருக்கவேண்டும். அவர்களது உன்னதமான உணர்வுபூர்வமான வாழ்வியலின் காரணமாக, யாருமே இந்த உலகில் விட்டிராத அளவுக்கு, தங்களின் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்போலும். அந்தத் துறவியின் வாழ்வுநெறிகள், ஆன்மீகப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் என்னால் அப்போது உணர முடிந்தது..

கடந்துபோய்விட்ட அந்தக் காலவெளியின் மன்னர்கள், ஆட்சியாளர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். அப்போது வாழ்ந்த செல்வந்தர்கள், மெத்தப்படித்த ஆண்கள், பெண்கள் நமது நினைவுகளில் இல்லை. ஆனால், எளிமையே உருவான இத்தகைய சாதுக்கள் 1900 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப்போலவே, இன்றும் உயிர்ப்புடன் உலவுகிறார்கள். உணரப்படுகிறார்கள் …

’உங்களது விதியைச் செதுக்குவதற்கான ஒரு யோகியின் கையேடு’ எனும் புத்தகத்திலிருந்துதான், மேற்சொன்னது. புத்தக ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாஸுதேவ். பெங்குயின் இந்தியா பதிப்பகத்தால் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

Source: A Yogi’s Guide to Crafting Your Destiny (Penguin/ also available in Amazon)

**

13 thoughts on “வாழ்க்கை எனும் யோகம்

  1. நான் உங்கள் அனுபவம் என்று நினைத்து வியந்தேன். நமக்குத் தெரிந்தவர் சொன்னால்தான் அதன் மீது முழுமையான நம்பிக்கை வரும்.

    Liked by 1 person

  2. எப்படி உங்களால் இரவு நேரத்தில் போகமுடிந்தது, எப்பேர்ப்பட்ட அனுபவம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே மேலும் படிக்கையில் இதுவும் எழுதியவிதம் ஆச்சரியம்தான்.அனுபவம் புதிது இப்போது.மிகவும் ஸ்வாரஸ்யமான விஷயம். நன்றி. அன்புடன்

    Liked by 2 people

  3. @ ஸ்ரீராம்,@ நெல்லைத்தமிழன் @ Chollukiraen :

    கருத்துக்களுக்கு நன்றி.

    அனுபவம் யாரிடமிருந்து வந்தாலென்ன, நல்ல விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டியதுதான்.

    Like

  4. திரு ஆரூருக்கு அருகிலுள்ள கீழ்வேளூர் திருக்கோயிலில் எனக்கு எனது முந்தைய பிறப்புகள் உணர்த்தப்பட்டிருக்கின்றன… அந்தக் கோயிலின் தலபுராணமும் அப்படித்தான்!.. தன் நடத்தையால் சாபம் பெற்று கழுதையாகிக் கஷ்டப்பட்ட மன்னனது சாபம் தீர்ந்த திருத்தலம் கீழ்வேளூர் (இன்றைய நாளில் கீவளூர்).

    Liked by 1 person

  5. கீழ்வேளூர் சம்பவத்தை ஏன் சொல்லியிருக்கின்றேன் என்றால் – பிறத்தியாரை அறிந்து ஆகப் போவது ஒன்றும் இல்லை.. தன்னை உணர்தல் வேண்டும்.. தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்றார் திருமூலர்.. அதற்காகத் தான்… உண்மையை உணர்ந்து கொண்டிருப்பதால் என்னை ஒழுங்கமைத்துக் கொள்ள முடிகின்றது…

    Liked by 1 person

  6. இந்தப் பதிவின் வழி ஏற்பட்ட அனுபவமே அதிசயம். யோகியின் சரிதம் படித்த போது
    வியந்தேன்.
    இந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
    அன்பின் துரை செல்வராஜு வின் கீழ்வேளூர் பதிவைப் படிக்க வேண்டும்.

    எனக்கும் இந்த கர்ம வினைகளில் முழு நம்பிக்கை உண்டு.
    நல்லதொரு பதிவை இன்று
    படித்தது என் அதிர்ஷ்டம்.

    Liked by 1 person

  7. ஏகாந்தன் அண்ணா உங்க்ள் அனுபவ்ம் என்று நினைத்தேன்..ஓ அண்ணாவுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதே என்று எண்ணி சரி அண்ணாவை ஒர் ஆஸ்ரமம் தொடங்கச் சொல்லிடலாம் குருவாக்கிக் கொண்டுவிடலாம் என்று நினைத்து…!!!!!!!

    .ஏனென்றால் சிலர் இப்படிச் சொல்வதுண்டு…எங்கள் வீட்டிலும் கூட ஆனால் டக்கென்று நம்பிக்கை வராது!!!! (இதுதான் மனுஷ புத்தி!!) எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்கும் மனித புத்தி. !!!

    ஆனால் மிக மிக சுவாரசியமான பதிவு.

    கீதா

    Liked by 1 person

  8. @ துரை செல்வராஜு: கீழ்வேளூர் கோயில் அனுபவங்கள்பற்றி எழுதியிருக்கிறீர்களா? அது தற்செயலாக ‘நிகழ்ந்ததா’ , முயற்சி, சாதனாவினால் விளைந்ததா?
    தன்னை அறிவதே யோகம். அது ஒன்றே அறியவேண்டியது. புரிகிறது. ஆயினும் தனக்குள்ளான பயணம் வாய்ப்பதில்லை எல்லோருக்கும். வெளியிலிருந்து விடுபட்டால்தானே, உள்ளே செல்லமுடியும் ?

    @ ரேவதி நரஸிம்ஹன் : ’யோகியின் சரிதம் படித்தபோது வியந்தேன்’ என்கிறீர்களே.. எந்த யோகி? பரமஹம்ச யோகானந்தாவையா குறிப்பிடுகிறீர்கள்?

    @ கீதா : அனுபவம் என்றால் ’குரு’தானா, ஆஸ்ரம்தானா! அரைகுறைகள் ஆஸ்ரம் ஆரம்பித்தால்.. ஆண்டவனுக்கே பொறுக்காது!

    Like

  9. கீழ்வேளூர் திருக்கோயிலில் சிவ தரிசனத்தின் போது ஆங்கே நிலவிய அமானுஷ்யத்துள் ஆழ்ந்தேன்.. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக சில விஷயங்கள் உணர்த்தப்பட்டன… நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே வைத்தீஸ்வரன் கோயில் சுவடியின் மூலமாக – கூர்ச்சரத்து அரச குடும்பத்தில் பிறந்து செய்த அடாதவைகளைப் பற்றி அறிந்திருந்ததனால் அதையும் இதையும் கூட்டிக் கழித்துப் பார்த்து உணர்ந்து கொண்டேன்… சில வருடங்களுக்கு முன் கீழ்வேளூர் திருக்கோயிலைப் பற்றி எழுதிய பதிவுகளில் இதைப் பற்றி ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன்…

    Like

  10. மற்றபடி சாதனம் எல்லாம் பயின்றதில்லை… நண்பர் ஒருவர் யோக சாதனம் பழகுவதற்கு அழைத்துச் சென்றார்.. அவர்களுக்கு ஆச்சர்யம் – முறையான பயிற்சி இன்றியே குண்டலுனி மேலே எழும்பியிருப்பது கண்டு… நாக்கில் கற்கண்டு வைத்து சோதித்தனர்.. அது கரையாமல் இருந்தது.. இரண்டு வகுப்புக்கு மட்டும் சென்றேன்… அதற்கு மேல் குல தெய்வம் அனுமதிக்க வில்லை – அவர்கள் சூனியத்தில் நிறுத்துகின்றார்கள் என்று… இப்போதும் கூட சுக ஆசனத்தில் பிரார்த்தனையுடன் அமர்ந்தால் … அதைப் பற்றி வேறொரு சமயத்தில் சொல்கின்றேன்… மகிழ்ச்சி.. நன்றி..

    Like

    1. @ துரை செல்வராஜு:

      கீழ்வேளூரும், வைத்தீஸ்வரன் கோவிலும் உங்களுக்கு வேண்டியவைகளைத் தெரியப்படுத்தியிருக்கின்றன என்று புரிந்துகொள்கிறேன். நமக்கு எதைப் புரியவைக்கவேண்டும் என அது/அவன் நினைக்கிறானோ, அது நமக்குத் தக்க சமயத்தில் புரிந்துவிடுகிறது. அதன் துணையில் மேற்கொண்டு பயணம் செல்கிறதுபோலும்.

      நம்மிடையேயான இந்த உரையாடல் மகிழ்ச்சி தருகிறது. உங்களது கோயில் அனுபவங்கள்பற்றிய பதிவுகளை மெல்ல வந்து படிப்பேன். நன்றி.

      Like

Leave a comment