99 Songs

தொண்ணூற்றி ஒன்பது பாடல்கள்? ஏன் ஒன்னு கொறஞ்சு போச்சா? – என அசட்டுத்தனமாகக் கேட்கவேண்டாம். ஏப்ரல் 16-ல் திரையரங்கிற்கு வரவிருக்கும் (கொரொனா சனியன் வேற!) ஒரு romantic musical  படத்தின் பெயர் இது. கதை? நூறு பாடல்களை  அந்த வாலிபன் எழுதவேண்டுமாம்.. சிலதையாவது பாடிக் காண்பிக்கவேண்டியிருக்குமோ.. அப்போதுதான் காதலியை அடையலாமாம். என்ன ஒரு வில்லத்தனமான கண்டிஷன், அதுவும் இந்தக் காலத்தில்! ஸ்டார்பக்ஸின் குளுகுளுவில் உட்காரவைத்து, குக்கீஸோடு ஒரு கப்புச்சினோ வாங்கிக் கொடுத்தால், அல்லது ஹாக்கி போக்கி (Hokey Pokey), கொரமங்கலாவுக்கு அழைத்துப்போய், மூலையில் உட்காரவைத்து ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து அவள் அழகை அருகிருந்து தரிசித்தால்.. போதாதா? காதலி மயங்கமாட்டாளா, கிடைக்கமாட்டாளாமா? ஒருவேளை சராசரித் தமிழ்ப்பெண்ணோ? ஃபேமஸ் தியேட்டர் ஒன்றின் பக்கம் தள்ளிக்கொண்டுபோய்.. ஒரு விஜய் படம் அல்லது அஜீத் படம்? என்ன, இதெல்லாமும் பிடிக்காதாமா.. என்ன ஒரு கஷ்டம்? 100 பாடல்களை முதலில் எழுதிக் காமிடா நீ.. என்றால் என்ன அர்த்தம்? ஹீரோவைக் களேபரப்படுத்தித் திக்குமுக்காடவைக்கத் திட்டமா?

சங்கீதப்பைத்தியமான அந்த வாலிபன் பக்குவப்படப் பக்குவப்பட, அவனது பாடல்களும் மாற்றம் காண்கின்றன. அவன் தரும் இசையும். காதலி எப்படி எதிர்கொள்கிறாள்? பெயருக்கேற்றபடி துள்ளும் பாடல்களோடு காதல் கதை என்பது நிச்சயம். எஹான் பட் (உச்சரிப்பைக் கவனிக்கவும்: Ehan Bhat) என்கிற, முதன்முறையாக, திரையில் எட்டிப் பார்க்கப்போகும், குரல் கொடுக்கும் காஷ்மீரி இளைஞன் ஒருவன் நாயகன்!

Ehan Bhat with A.R. Rahman
ரஹ்மானுடன் எஹான் பட்

ரஹ்மானின் திட்டத்தில் தான் வந்ததெப்படி. பாடகர் எஹான் பட் : ”கூச்ச சுபாவமுள்ள ஒரு காஷ்மீரி இளைஞன் நான். ஏதோ ஆடிஷன் எனக் கூப்பிட்டார்கள். ஐந்தே நிமிடம்தான். போகச்சொல்லிவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரெனத் தகவல் – நீ தேர்வாகிவிட்டாய், வா, சென்னைக்கு. ரஹ்மான் சாரின் ப்ராஜெக்ட் எனக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்! காலை 10 மணிக்கு வரச்சொன்னார்கள். 9 மணியிலிருந்தே அவரது ஸ்டூடியோ வாசலில் நடுக்கத்தோடு அன்று உட்கார்ந்திருந்தேன். சற்றுநேரத்தில் உள்ளே கூப்பிட்டனுப்பினார்கள். அங்கே ரஹ்மான் சாரும், (இயக்குனர்) அஷுதோஷ் கௌவாரிகரும் இருந்தார்கள்.”

”ரஹ்மான் சார் அதிகம் பேசமாட்டார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். நானோ இதற்கெல்லாம் புதுசு. கூச்சம். தயக்கம் எல்லாம் எனக்குள். ஆனால்.. சாருக்கென்ன? அவருக்குமா கூச்சம்? ரஹ்மான் சார் மெல்ல என்னைப் பார்த்தார். பின் சுவரைப் பார்க்க ஆரம்பித்தார். நானும் தயக்கத்தோடு அவரை ஏறிட்டு நோக்கினேன். சுவரைப் பார்த்தேன்!  ’அரேஞ்சுடு மேரேஜு’க்காகப் பெண் பார்க்கப் போய் விழிப்பதாய் உணர்ந்தேன்.. நெளிந்தேன். ஒரே குழப்பம். டென்ஷன்..” என்கிறார் பட்.

Edilsy Vargas images
நாயகி !

அதெல்லாம் சரி.. ஹீரோயின்?  எடில்ஸி வர்காஸ் (Edilsy Vargas) ! அமெரிக்க மாடல் அழகி. ஏற்கனவே Lotoman, La Soga, Pimp Bullies போன்ற படங்களில் ’நடித்த’ அனுபவம் உண்டாமே.. சில டிவி நிகழ்ச்சிகள்/ கமர்ஷியல்களும் வந்திருக்கிராரம்.. ம்ம்… இவருக்கு முன்னாடி நம்ம கத்துக்குட்டிப் பையனை நிறுத்தி அழகு பார்க்கலாமா! அப்படித்தான் செய்திருக்கிறார் ரஹ்மான். ஜோடி எப்படி, படம் எப்படி எனப் படம் பார்த்தால்தான் சொல்லமுடியும்..

ரஹ்மான் என்ன சொல்கிறார் : ”பத்துவருடத்திற்கும் மேலாக மனதில் இருந்தது இது. ஒரு புதிய குரலை அறிமுகப்படுத்துவது, புதுவிதமாக -ஸ்டீரியோ-டைப் தமிழ்/பாலிவுட் படங்களிலிருந்து வேறுபட்டு ஒன்றைத் தயாரிப்பது, இசை தருவது, திரைக்குக் கொண்டுவருவது.. மக்கள் எப்படி வரவேற்பார்கள்?  சொல்வது கடினம். வென்றால் மேலே.. இல்லையென்றால் நான் காலி!”

**

4 thoughts on “99 Songs

  1. சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறதே.
    ஏனோ அம்பிகாபதி அமராவதி நினைவுக்கு வந்தார்கள்.

    திரைக்கு வந்து விட்டதா.அதாவது அமேஸான்?

    ஏ.ஆர். ரஹ்மானை முதலில் தூர்தர்ஷனில் அண்ணே அண்ணே
    பாடலை கீ போர்டில் வாசித்தபடி பார்த்த நினைவு வருகிறது.

    சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் மகனுக்கு
    பரிச்சயம்.
    நல்ல படமாக வெற்றி பெற வாழ்த்துகள். நன்றி ஜி.

    Liked by 1 person

    1. @ ரேவதி நரசிம்ஹன்:

      படம் வரும். எப்படி ஓடும் என்பதைக் கணிப்பது கஷ்டம். வித்தியாசமாக வருவது சரி, நன்றாகவும் ‘எடுக்கப்பட்டிருந்தால்’ நலம்!

      Like

  2. என்னைப்பார்த்தார், சுவரைப் பார்த்தார் என்று தைரியமாகவே சொல்லி விட்டார்!  இது என்ன நிகழ்வு என்று தெரியாமல் இது சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று பார்த்த நினைவு.

    Liked by 1 person

Leave a comment