சைக்கிள்ல வந்தாரு !

பிரபல  தமிழ் நாளேடுகளின்  ஆன் -லைன் பக்கங்களில் நேற்று தலைப்புச் செய்திகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தன: ‘சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார் நடிகர் விஜய்!’ ”பூத்திற்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஜய் தரப்பு அதிகாரி விளக்கம் !”

தேர்தல் தினத்தில் தமிழ்நாட்டுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு , பிரிய தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது, வாக்களிப்பு எப்படிப் போகிறது, அப்பாவி மக்களுக்குச் சிரமம் ஏதும் தரப்படவில்லையே.. என்கிற  சிந்தனை கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் மீடியாவில்.  என் கண்ணில் பட்ட -புண்யம் பல செய்திருக்கவேண்டும் யான்- பரவசக் காட்சிகளில் சில இவை.  சரி, சரி.. தாண்டிப் போவோம் என்றால்,  விட்டுவிடுவார்களா அவ்வளவு எளிதாக?  ”நடிகர் அஜீத்  கோபம்! செல் ஃபோனை ரசிகரிடமிருந்து பிடுங்கினார்.  திருப்பிக் கொடுத்தார்.. மன்னிப்புக் கேட்ட அஜீத்!”  “ரஜினி, கமலை மிஞ்சிய விஜய், அஜீத் ! “நடந்தே  வாக்குச்சாவடிக்கு வந்த பிரபல நடிகர்  விக்ரம்..” அடடா.. அடடா… தமிழ்நாட்டின்  ரசனை, பொதுஅறிவை  வேகவேகமாக வளர்ச்சிப்பக்கம் அழைத்துச்செல்ல என்னவெல்லாம் செய்கிறது இந்த மீடியா.  கடும் தேசப்பணி..

தேர்தலுக்கு அடுத்த நாள். இப்போதாவது செய்திகள்,  அவற்றின் உள்ளீடுகள் மாறித்தொலைந்ததா என்றால்,  இன்னும் இல்லை!   மக்களின்  சிந்தனையை மேலும் மேலும் அதே நேர்க்கோட்டில் அழைத்துச்சென்று புரட்டிப்போடும் செய்திச் சரடுகள்: “அஜீத் போட்டிருந்த மாஸ்க்!  விஜய் ஓட்டிவந்த சைக்கிள்! பின்னணியில் இப்படி ஒரு  குறியீட்டு அரசியலா?”  தேர்தல் இரவில், எப்படியெல்லாமோ புரண்டு படுத்து ஒருவாறு தூங்கி, எழுந்து காலையில் டீ/காப்பி குடிக்க வந்திருக்கும், காத்திருக்கும்  டமிளன் ,கையில் பேப்பரைத் தூக்கிப் பிடித்து  படிக்க ஆரம்பித்தால், அவனை சீண்டும், சிதறடிக்கும்  கேள்விகள் . அஜீத்தின்  முகக்கவசம் கருப்பு, நாடா சிவப்பு! ஆ.. அந்தக் கட்சிக்குத்தான் போட்டாரா? விஜயின் சைக்கிளின் நிறம் – கருப்பு ..அப்புறம் அதில் கொஞ்சம் சிவப்பு.. புரிஞ்சிருச்சு…புரிஞ்சிருச்சு !   விக்ரம் ஏன் நடந்தே… வந்தாரு?   லாக்டவுனின்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு நடந்தே,  நடந்தே  சென்றதை நினைவுபடுத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாரோ.. என்னே ஒரு புத்திசாலித்தனம்.. சீயான் ! 

அவன் கண்ணில் படுகிறது இன்னொரு நியூஸு. பார்த்திபன் ஓட்டுப் போடவே வரலியாமே! பாவம், அவரும்  ஏதாவது காரணம் வச்சிருப்பாரு..! – என வாழ்க்கையின்  ‘இருத்தல்’பற்றிய பெருங்கேள்விகள்  விடாது துரத்த, டமிளன் வேகவேகமாக டீ யை உறிஞ்சி கிளாஸைக் கீழே வைக்கிறான்.  தூண்டிவிடப்பட்ட சிந்தனை வளர்ந்து பெருக,  ’இன்னொன்னு போடப்பா !’ எனத் தீவிரமாக ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டே,  மேலும் மேய்கிறான், பேப்பரில்..

மே 2-ஆம் தேதின்னு ஒரு நாள் வரப்போகுதே சீக்கிரம்? அது என்னென்ன சொல்லப்போகுதோ?  அதன்பின்  என்னென்ன செய்வானோ, யோசிப்பானோ? சினிமா, அரசியல்னு மாறி மாறித் தாக்கும் சித்தாந்தப் புயல்களினூடே இந்த அப்பாவியின் வாழ்க்கைதான் எப்படி, எப்படியெல்லாம் திரும்புமோ,  தூக்கியடிக்கப்படுமோ ..

**

8 thoughts on “சைக்கிள்ல வந்தாரு !

 1. தமிழ் பத்திரிகைகள் அளவுக்கு அதிகமாக, ஒரு கட்சியை எதிர்க்கின்றன, இன்னொரு கட்சிக்கு ஆதரவாக புரட்டுச் செய்திகளை உருவாக்குகின்றன என்று நினைக்கிறேன். சைக்கிளில் வந்தவர், தன்னைச் சுற்றி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு சென்றதும், திரும்பும்போது அவர்களுடைய ஸ்கூட்டரிலேயே செல்லும்படி நேர்ந்ததும் காண நேரிட்டதும் வெளியிலும் இவர்கள் நடிப்பதை விடவில்லை என்று தோன்றியது.

  Liked by 1 person

  1. @ நெல்லைத்தமிழன்:
   நம்ம நடிகர்களுக்கு தகுதிக்கு மீறியப் புகழிருந்தாலும், பணம் வந்தாலும் பத்தாது! வந்துகொண்டே இருக்கவேண்டும். வெளிச்சத்தில் தான் இருந்துகொண்டே இருக்கவேண்டும்!

   தமிழ்நாட்டைப்போல், தெலுங்குதேசமும் இதே பாதையில் செல்வதாகவே அறிகிறேன்.

   Like

 2. அட விஜய், அஜித் விக்ரமை விடுங்கள்.  அக்கடைசியில் பிபி ஈ கிட்டில் வந்து செய்திகளை நிறைத்த கனிமொழியையும் விடுங்கள்…  வாக்காளர் குவார்ட்டர் வாங்கித் தருகிறேன் என்று சொன்னதால் வாக்கு போடக் கிளம்பிய குவார்ட்டர் கோவிந்தன் ஒருவர் மனைவியிடமும், ஊர் மக்களிடமும் அடித்த கூத்து பார்த்தீர்களா?  2000 ரூபாய் டோக்கன் என்று ஒரு கடையைக் குறிப்பிட்டு அந்தக் கடையைக் காலி செய்த எவனோ ஒரு குறும்புக்காரன் செய்தி பார்த்தீர்களா?

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:

   டோக்கனைத் தூக்கிக்கொண்டு நேரா மளிகைக் கடைக்கா!
   ஆண்டவா.. அந்த கடைக்காரர் பிழைத்தாரா ! எல்லாம் நேரம்…

   Like

 3. இந்த மாதிரி விசித்திரங்கள் எல்லாம் தமிழகத்தில் நடக்கலைனாத் தான் அதிசயம்! ஆச்சரியம்!

  Liked by 1 person

  1. @ கீதா சாம்பசிவம்:

   ஆமாம். தமிழகத்தில் நடப்பதெல்லாம் நார்மல்தான்!

   Like

 4. சைக்கிளுக்கு காத்தடிக்கும் காசு அதிகமானதைக் கண்டித்து –

  நல்லவேளை… வேறு எந்தவிதமாகவும் வந்து தொலைக்க வில்லை…

  Liked by 1 person

  1. @ துரை செல்வராஜு:

   சின்னப்புள்ளயா இருந்தபோது நடை பழகின ’நடைவண்டி’யத்தான் தேடினாராம்.. அவசரத்துக்கு.. சனியன், கெடக்கல!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s