’காயமே இது பொய்யடா..வெறும் காற்றடைத்த பைய்யடா..’ என்று யாரோ, எப்போதோ, எதையோ அறிந்த நிலையில் பாடியதை, அசட்டுத்தனமாக அவ்வப்போது உளறிவிட்டால் உடம்பின்மீதுள்ள பிடிப்பு அகன்றுவிட்டதாக ஆகிவிடுமா? போனால் போகட்டும் என்று காலம் விட்டுவிடுமா உங்களை? பெரிதாக நீங்கள் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கும் அந்தப் பைக்குள் காற்று போகாமலும், போன காற்று சரியாக வெளிவராமலும் வேடிக்கைகள் பல செய்து காண்பிக்கிறது காலம். காற்றடைத்த பையாவது கால், கை ஆட்டும். பேசும். ஏதேதோ செய்யும். காற்று ’போன’ பை? கிடத்தப்படும். வேகமாக அப்புறப்படுத்தப்படும். கடந்த வருடம், ஆவேசமாக உலகெங்கும் நிகழ்த்திக் காட்டிய விதவிதமான செயல்பாடுகளில் பிரதானமானது இதுதான். இந்தக் காற்றுப் பிரச்னை, காயப் பிரச்னை உலகில் இன்னும் தீர்ந்ததாகத் தெரியவில்லை.
ஸ்தூல தேகத்தின் மீது மனிதன் கொண்டிருக்கும் தீராக் காதல்! தான் என்பது ’இது’ என தன் உடம்பைப் பார்த்து காலமெலாம் நினைத்துக்கொண்டிருந்தால், கொஞ்சிக்கொண்டிருந்தால், ஏதாவது திடீர் ஆபத்து வருகையில், ஐயய்யோ.. ’அது’ சாய்ந்துவிடுமோ, சரிந்துவிடுமோ, நம் கதை அவ்வளவுதானோ என்கிற பயம் வரும். மருந்தும் மாயமும் ஒன்றும் காப்பாற்றப்போவதில்லை.. போச்சு.. எல்லாம் போச்சு.. என்கிற பீதியும் ஒரேயடியாகக் கிளம்பி, ஏற்கனவே சோர்ந்திருக்கும் மனதை மேலும் மேலும் சித்திரவதை செய்யத்தான் செய்யும். யாராயிருந்தால் என்ன. உயிர்ப்பயம் இல்லாதோர் உண்டோ உலகில்? மனிதனின் புத்திசாலித்தனமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், மருத்துவ ஆராய்ச்சிகளைத் தாண்டி இந்த மனித உடம்பு என்பது எந்த நிலையிலும் எளிதில் நொறுங்கிவிடும், உயிர் உடம்பைவிட்டு எந்த நேரமும் கழன்றுகொண்டுவிடும் என்பதற்கான உன்னதக் காட்சிகளை சென்ற வருடம், zoom செய்து திருப்பித் திருப்பி மனிதனுக்குப் போட்டுக் காண்பித்தது. இந்த வருடம் தடுப்பூசிகள் தடதடக்கும். அதன் சாகசங்கள்(?), பின்விளைவுகள் பெரிதாகப் பிரஸ்தாபிக்கப்படும். மேலும், குழப்பம், மேலும் மேலும் பயம்..
இறக்கிவிட்டவர் ஒருவர், நடத்திச் செல்பவர் ஒருவர், தூக்கிக்கொண்டு காட்சியிலிருந்து விலகிச் செல்பவர் பிறிதொருவரோ? நடக்கட்டும். அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் .. அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் .. அவரவர் வினைவழி அவரவர் பயணம்..
இதற்கிடையில் வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள் என்றவாறு மனிதன் இவ்வுலகில் ..
**
அவரவர் வினைப்படி என்பதெல்லாம் அர்த்தமற்றுப் போயினவோ என்று என்னும் வண்ணம் வருடம்.
நாஸ்ட்ரடாமஸ் 2021 பற்றி மோசமாகி சொல்லி இருப்பதாக செய்தித்தாளில் படித்தது வேறு மனதில் நிற்கிறது!
LikeLike
@ Sriram : கர்மவினை காலைச் சுற்றும் பாம்பாக. காலைச் சுற்றிய பாம்போ, கடிக்காமல் விடாது. அதற்கு நீங்கள் பாலை வார்த்திருந்தாலும் சரி!
நோஸ்ட்ராடமஸ் 2021 ஐப் பற்றித் தனியாகச் சொன்னதாகப் படித்த நினைவில்லை. அவர் சொன்னதெல்லாம் அதிபயங்கரங்கள். 2021 ஐப் பற்றி நமது ஜோதிட ரத்னங்கள் என்ன சொல்லப்போகிறார்கள் எனப் பார்ப்போம்!
LikeLike
உடல், ஆன்மா என்று தொட்டுச் சென்றவுடன் இது வேற சப்ஜெக்டோ என்று நினைத்தேன்.
‘வரியா..கிளம்பலாம்’ என்று கேட்டால், ‘நான் ரெடி. கிளம்பலாம்’ என்று எத்தனைபேருக்குச் சொல்ல முடிகிறது? தன்னால் உடலை மேனேஜ் செய்யவில்லை என்ற நிலையில்தான், ‘போதும்பா கஷ்டம்..நான் வருவதற்கு வழி செய்’ என்று கேட்கிறார்கள். அதுவும் உடல் நிலை சரியாகிவிட்டால், ‘கொஞ்சம் காத்திரு… பேரன் ஒரு வயசு பிறந்தநாள் வந்துடட்டும்’ என்று மனம் சாக்குப் போக்குச் சொல்கிறது.
LikeLike
@ நெல்லைத்தமிழன் :
லோகம் கெட்டுப்போச்சு என்று வாழ்நாளெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தவர்கள் காலன் தன்னை நெருங்கும்போது எக்ஸ்டென்ஷனுக்கு வேகவேகமாக விண்ணப்பிப்பார்கள்! அஸம்பவ் ஹிந்திப் படம் இதுபற்றியதுதான். நான் எழுதியிருக்கிறேன் இங்கே.
LikeLike
உண்மைதான். வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது.
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?//
கண்ணதாசன்.
யாரோ கேட்டார்கள் என்ன புது வருடத்தீர்மானம் உனக்கு
என்று.
எனக்கு அது இன்னும் ஒரு நாள்
இன்னும் ஒரு வருடம் அவ்வளவுதான் என்றேன்.
மற்றபடி நோய் சார்த்திக் கொண்டால்
உள்ளம் கர்மாவை யோசிக்கிறது.
ஏன் இப்படி??? என்று. சரியாகிவிட்டால்
மேற்கொண்டு விசாரம் இல்லை.
மிக அருமையான பதிவு ஏகாந்தன் ஜி.
LikeLike
@ Revathi Narasimhan :
ஆபத்து வருவதாகத் தூரத்தில் தோன்றினாலும் பயத்திலேயே துவண்டுவிடுவோம். போய்விட்ட மறுகணமே, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு போய்விடுவோம். அல்லது இந்தக் கால பாஷையில், மொபைலை எடுத்து அடுத்த வாட்ஸப் மெசேஜ்களை கிண்டுவோம்!
மனவிசாரம் என்பது நம்மிடம் சீரியஸாக இருந்ததில்லை!
LikeLike
பட்டினத்தார் ஸ்வாமிகள் அருளியிருக்கும் – ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி – எனும் விருத்தத்தின் ஈற்றடிகளை அவ்வப்போது சிந்தித்துக் கொண்டிருப்பேன்…
LikeLiked by 1 person
@ துரை செல்வராஜு:
ஞானிகளின் வார்த்தைகளைக் கேட்க நேர்வது, வாசிக்க நேர்வது, சிந்திக்க நேர்வது எல்லாம் ஆத்மபலம் தருபவை. மனம் அங்குமிங்கும் அலைந்து தளர்ந்துவிடாமல் வழிப்படுத்துபவை.
எல்லாவற்றிற்கும், அவனருள் வேண்டும். அது ஒன்றே வேண்டும்.
LikeLike
நடந்ததை குறித்த வருத்தம்(2020), நடக்கப் போவதைப் பற்றிய பயம்(2021) இந்த இரண்டையும் உங்கள் பதிவில் உணர முடிந்தது. பார்க்கலாம்.
LikeLiked by 1 person