A small, but significant victory for India. கேன்பர்ராவில் நேற்று (02 டிசம்பர், 20) நடந்த இறுதி ஒரு-நாள் போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கொஞ்சம் ஆச்சரியமான ரிசல்ட்.
அணித்தேர்வு விஷயத்தில் தூக்கத்திலிருந்து மீண்ட இந்தியா, பாசிட்டிவாக சிந்திக்க நேர்ந்தது. விளைவு 4 மாறுதல்கள், பிரதானமாக பௌலிங்கில். முகமது ஷமியின் இடத்தில் ஷர்துல் டாக்குர் (Shardul Thakur எடுபடலாம் என முன்பு இங்கு சொல்லியிருந்தேன்). நவ்தீப் செய்னியின் இடத்தில் T. நடராஜன். ஃபார்மில் இல்லாத சாஹலின் இடத்திற்கு குல்தீப் யாதவ். அதிகமாக ரன் எடுக்காத மயங்க் அகர்வாலின் ஆரம்ப இடத்தில் ஷுப்மன் கில் (Shubman Gill). (இதையும் முந்தைய கட்டுரையில் பார்க்கலாம். ஏனோ அவர்கள் (கோஹ்லியும் அவருடைய துரோணாச்சாரியரும்) சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு தரத் தயங்குகிறார்கள். ஒருவேளை சாம்ஸன் நன்றாக அடித்து ஆடி, அணியில் ஒட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயமோ!
இந்திய வெற்றியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள். சுருக்கமாக.
32 ஓவரில் கோஹ்லியையும் இழந்து, 152-க்கு 5 எனப் புலம்பிக்கொண்டிருந்த இந்திய ஸ்கோர், 250 ஐத் தாண்டுவது கடினம் என்கிற நிலை. நம்பர் 6, 7 என்கிற நிலையில் இறங்கி, ஆரம்பத்தில் அதீத ஜாக்ரதை உணர்வுகாட்டி, இறுதியில் சாத்து சாத்து என ஆஸ்திரேலியர்களைச் சாத்திவிட்டார்கள் ஹர்திக் பாண்ட்யாவும், ரவீந்திர ஜடேஜாவும். 2019 உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான அட்டகாசத்திற்குப் பின் ஜடேஜாவின் மாஸ்டர்-க்ளாஸ். ’ஷான் ஆப்பட்’ (Shaun Abbot) ஓவர் ஒன்றில் 3 பௌண்டரிகள், ஒரு சிக்ஸ் எனக் கிழித்துத் தொங்கவிட்டார் மனுஷன். எடுத்த ரன்கள் அல்ல, அசால்ட்டாக அதை ஆடியவிதம்தான் எதிரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. பாண்ட்யா அந்தப்பக்கத்திலிருந்து ஜடேஜாவை சூடேற்றிக்கொண்டு, சமயம் வருகையில் தானும் போட்டுத்தாக்க, கடைசி 5 ஓவரில் இந்தியாவுக்கு சேர்ந்தது 76 ரன்கள். இறுதிவரை ஆடிய ஹர்திக் பாண்ட்யா 92, ஜடேஜா 66. நாட்-அவுட். கௌரவமாகத் தோன்றிய இந்தியாவின் 302.
இந்திய இன்னிங்ஸ் முடிந்ததும், சோனி சேனலின் இந்திய வர்ணனையாளர்கள் (ஹர்ஷா போக்லே, முரளி கார்த்திக், அஜய் ஜடேஜா) பாண்ட்யா, ஜடேஜா ஜோடியின் பேட்டிங்கை ஆஹா என்றார்கள். ஓஹோ என்றார்கள். அருகில் உட்கார்ந்திருந்த ஆஸ்திரேலியாவின் க்ளென் மக்ரா (Glenn McGrath, former fastbowler) சொன்னார் அலட்சியமாக: ’இந்தியா ஒருவேளை போராடலாம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு இந்த டார்கெட்டெல்லாம் ஒன்றுமில்லை’. அவர்மேல் தப்பில்லை. அப்படித்தான் இருந்திருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் 350-க்கு மேல் விளாசி தூள்கிளப்பிய ஆஸ்திரேலியர்களுக்கு.

ஆனால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷர்துல், இந்தியாவுக்காகத் தன் முதல் சர்வதேச மேட்ச்சை ஆடவந்த நடராஜன் வேறுவிதமாகக் கணக்குப்போட்டுத் தயாராயிருந்தனர். கடந்த 6 ஒருநாள் மேட்ச்களில், இந்தியா பவர் ப்ளேயில் (1-10 ஓவர்கள்) எதிர் அணியின் விக்கெட்டை வீழ்த்தியதில்லை. நடராஜன் தன் 3-ஆவது ஓவரில் ஓப்பனர் மார்னஸ் லபுஷானேயை (Marnus Labuschagne) 7 ரன்னில் க்ளீன்போல்ட் செய்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடி காட்டி 76 எடுத்தார் எனினும், விக்கெட்டுகள் மெல்லச் சரிய ஆரம்பித்தன. ரன்விகிதம் குறைய, இடையில் வந்த மேக்ஸ்வெல் 38 பந்தில் 59 அடித்து ஒருகட்டத்தில் இந்தியாவைத் திணறவைத்தார்தான். ஆனால், இந்திய பௌலர்கள் அசரவில்லை. முனைப்போடு தாக்கினார்கள். ஷர்துல் டாக்குர் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, நடராஜன் 2 என வேகப்பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு அசத்தலான பங்களிப்பு. குறிப்பாக மிகச் சிறப்பாக வீசினார் பும்ரா. இதுகாறும் குருடனைப்போல் தடவிக்கொண்டிருந்த இந்தியாவை, வெற்றிப்பாதையில் இதுதான் கொண்டுவந்துவிட்டது.
நாளை (4 டிசம்பர் 20) கேன்பர்ராவிலேயே ஆரம்பிக்கிறது டி-20 ஆட்டத் தொடர். நன்றாக வேகப்பந்து வீசிய ஷர்துல் டாக்குர் டி-20 அணியில் இல்லை! பும்ராவை வைத்துக்கொண்டு, நடராஜனை பெஞ்சில் உட்காரவைக்குமோ சாஸ்திரி-கோஹ்லி ஜோடி? Possible. தீபக் சாஹர், ஷமி உள்ளே வருவார்கள் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டு ஸ்பின் புலி வாஷிங்டன் சுந்தர் ஆடலாம், குல்தீப் யாதவின் இடத்தில். சாஹல் கோஹ்லியின் ஃபேவரைட் ஆச்சே.. பேட்டிங்கில் அனேகமாக மாற்றம் செய்யமாட்டார்கள். பார்ப்போம்..
**
பின்ச் கேட்சை முதலிலேயே ஷிகர் தண்டம் கோட்டை விட்டார். இன்னொரு கேட்சை தடவித்தடவிப் பிடித்து விட்டு தொடையைத் தட்டிக் கொண்டது வேடிக்கை! தோற்றாலும் முதல் இரண்டு மேட்ச்களிலும் இந்தியா முன்னூறைத் தாண்டிக் காண்பித்தது. ஆனால் ஆஸ்திரேலியா இரண்டாவது ஆடி அதனைச் சாதிக்க முடியவில்லை என்பதை யாராவது மெக்ராத்துக்கு சொல்ல வேண்டும்.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம் :
ஃபீல்டிங் பாடாவதி. தவன் ஸ்லிப்பில் நிற்கத் தகுதியில்லாதவர்.
ஆம், முதன்முறையாக இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் கதை 289-ல் முடிக்கப்பட்டது, அதுவும் கேன்பர்ராவின் பிட்ச்சில் என்பது , நமது பௌலர்கள் எப்படி வீசினார்கள் என்பதைக் காட்டுகிறது.
LikeLike