சிட்னியில் இன்று (27 நவ. 2020) ஆரம்பிக்கிறது இந்தியாவின் ஆஸ்திரேலியக் கதை. கோவிட்-கால நீளத் தொடர்போட்டிகளில் முதலாவதாக ஒரு-நாள் மேட்ச். ஆஸ்திரேலியா முஷ்டியை உயர்த்தி இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது. சிட்னியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு 50% ரசிகர் கூட்டத்தை அனுமதித்துள்ளது. ரொம்ப நாளுக்கப்புறம் ரசிகர்கள் மைதானத்தில். சுவாரஸ்யம். விற்பனை ஆரம்பித்ததுமே டிக்கட்டுகள் போன இடம் தெரியவில்லை! ஒரு கடுமையான, சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடருக்காக, ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு..

Allrounder
விராட் கோஹ்லியின் இந்திய அணி எப்படி இருக்கும், யார் யார் உள்ளே? துவக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்வதிலேயே குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. ஷிகர் தவன் ஐபிஎல்-இல் காட்டிய ஃபார்மோடு, தன் புகுந்த வீட்டில்/நாட்டில் நன்றாக ’ஆடி’க் காண்பிப்பார் என எதிர்பார்ப்போம்! (தவனின் மனைவி ஆயிஷா முகர்ஜி ஒரு ஆஸ்திரேலிய-இந்தியன், மெல்பர்னில் அம்மணியின் வீடு). தவனுக்குத் துணையாக மட்டையோடு இறங்கப்போவது யார்? மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராஹுல் -இதில் ஒருவர். மூவரின் ஐபிஎல் ஃபார்ம் ஓகே. ஆனால் இன்று ஆரம்பிப்பது 50-ஓவர் மேட்ச். ஒரு-நாள் போட்டிகளுக்கு வேறுவித முனைப்பு, டெக்னிக், ஆட்டம் தேவை. தயாராகத்தான் இருப்பார்கள் இந்தியாவின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள். கே.எல்.ராஹுல் விக்கெட்-கீப்பராகவும் இயங்கப்போகிறார். ஷிகருடன் ராஹுல் இறங்கி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை ஆரம்பத்தில் ’கவனிப்பதே’ உசிதம் எனத் தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் கோஹ்லியும், ஷ்ரேயஸ் அய்யரும் கவனமாக ரன் சேர்க்காவிட்டால் அணியின் ஸ்கோர் 280-க்கு வரவே திண்டாடும். 5-ல் ஃபார்மில் உள்ள மனீஷ் பாண்டேயும் (அருமையான ஃபீல்டரும்கூட), 6-ல் எதிரியை நொறுக்கப்பார்க்கும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடவேண்டும். பாண்ட்யா வெகுகாலத்துக்குப் பிறகு (காயம்), இந்திய அணியில். ஆஸ்திரேலியாவுக்கு சொல்ல, அவருக்கு சில விஷயங்கள் இருக்கக்கூடும்!
சிட்னி பிட்ச் ஸ்பின் காண்பிக்கும். இப்போது கொஞ்சம் மாறியிருக்கக்கூடும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள், 6 பேட்ஸ்மன்கள் எனும் விகிதத்தில் இந்தியா களத்தில் இறங்கவேண்டும். பௌலர்கள் அநேகமாக இப்படி இருக்கலாம்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் செய்னி. ஸ்பின்னர்கள்? ரவீந்திர ஜடேஜாவின் இடதுகை ஆர்தடாக்ஸ் ஸ்பின் (leftarm orthodox spin) ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் சிலருக்கு சோதனை தரும். சிட்னிபெரிய மைதானம். ஜடேஜாவின் மந்தகதிப் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்க முயற்சிக்கையில் எல்லோரும் தப்பிக்க முடியாது! அவருக்கு ஜோடியாக லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹலே சரி. தந்திரமாக சுழல்காட்டி 10 ஓவர்கள் வீசி, ஆஸ்திரேலிய அதிரடி ஆசாமிகள் ஒன்றிரண்டு பேரையாவது வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.
என்னுடைய அனுமானத்தில், சிட்னியில் இப்படி இறங்கவேண்டும் இந்திய XI
1.ஷிகர் தவன் 2. ராஹுல் 3. கோஹ்லி 4. ஷ்ரேயஸ் ஐயர் 5.மனீஷ் பாண்டே 6. ஹர்திக் பாண்ட்யா. 7.ஜடேஜா 8. ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) 9. ஷமி 10. பும்ரா(Bumrah) 11. சாஹல்.
செய்னியின் இடத்தில் டாக்குரை மேலே சேர்த்ததன் காரணம், அவர் மிதவேகத்தில், ஆனால் ஸ்விங் காட்டிப் போடுவார். கொஞ்சம் street-smart ஆன ஆள் என்பது, சிஎஸ்கே-யில் தோனி அவரை பயன்படுத்தியவிதத்திலேயே தெரிந்தது! செய்னி காண்பிக்க விரும்பும் 140+ வேகம் ஆஸ்திரேலியாவில் அடிவாங்கலாம்.
கோச் என்கிற பெயரில் இந்தியாவின் சாபக்கேடான சாஸ்திரி ஆஸ்திரேலியாவில். கோஹ்லியிடம் என்ன கிசுகிசுத்துக் குழப்புவாரோ என்கிற சஞ்சலமும் தலைதூக்குகிறது. எத்தகைய காம்பினேஷன் அணியில் அமையுமோ! ஒருவேளை, ஷுப்மன் கில் (Shubman Gill) நாளை ஆடுவதை கோஹ்லி விரும்பலாம். அல்லது அதிரடி ஆட்டமாடும் சஞ்சு சாம்ஸன், நம்பர் 5-ல் (பாண்டேக்குப் பதிலாக) இறக்கப்படலாம். (சாம்ஸன் விக்கெட்கீப்பரும்கூட). பார்ப்போம். அமீரகத்தின் ஐபிஎல் -இல் ஆரம்பித்து, தொடர்ந்து Bio bubble-லில் இருந்துகொண்டு இறுகியிருக்கும் இந்திய வீரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக தங்களை சரிப்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய சூழலில் பொருத்திக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இந்திய வெற்றி எளிதாகும்.
சில மணிநேரங்களுக்கு முன்பாக: வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னிக்கு முதுகுப்பிடிப்பு என்று கேள்வி. T.நடராஜன் – வருண் சக்ரவர்த்தியின் காயத்தினால் கடைசி தருணங்களில் டி-20 அணியில் சேர்க்கப்பட்ட சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர்- ஒரு-நாள் அணியில் இப்போது இணைக்கப்பட்டிருக்கிறார். கோஹ்லி ஆஸ்திரேலியாவில் ’ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது!
தொடங்கட்டும் போர்..
**
நசுங்கப் போகிறதா, நசுக்கப்போகிறதா என்று பார்க்க வேண்டும். நடராஜனென்ன செய்யப்போகிறார் என்றும் பார்க்க ஆவல்.
LikeLiked by 1 person
என் தனிப்பட்ட விருப்பம், இந்த சீரிஸ், கோஹ்லிக்கும் ரவி சாஸ்திரிக்கும் பாடம் கற்பிப்பதாக இருக்கவேண்டும். Both have too much head weight and regard their personal survival than the Team India.
LikeLiked by 1 person
ஆஸ் டிரேல்யாவில் ஜெயிப்பது எளிதல்ல
LikeLiked by 1 person
@ Sriram @ Nellaithamizhan @ Balasubramaniam GM :
ஆடிய ஆட்டமென்ன ! – என்று கோஹ்லி & கோ. வைக் கேட்கத்தோணுகிறது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் எல்லாவற்றிலும் பெரிய ஓட்டை. Lethargic and idiotic, excepting a few..
அடுத்த மேட்ச்சும் சிட்னியில்தான். அங்கேயும் நசுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
LikeLike