சில கதைகள், சில தலைப்புகள் !

கடந்த நூறாண்டு காலத்தில் எழுதப்பட்ட தமிழின் புகழ்பெற்ற அல்லது குறிப்பிடத்தக்க சிறுகதைகள் என அவ்வப்போது கண்ணில் தென்படுகின்றன. இணையத்திலோ, வேறெங்கோ படிக்கக் கிடைத்தால் வாசிக்கும் வழக்கம் உண்டு. சில கதாசாரியர்கள், சிறுகதைத் தலைப்புகளைப் பார்க்கையில், முதன்முறையாகக் கேள்விப்படுகிறோம் என்பதில், நாம் தமிழில்  எவ்வளவு குறைவாகப் படித்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. என்ன செய்ய? அதற்காக சிலர்போல மூசுமூசு-ன்னு படித்துத் தள்ளுபவன் நானல்ல. மெல்லத்தான், selective ஆகத்தான் வாசிக்கமுடியும்!

கண்ணில்பட்ட, எண்ணத்தைத் தொட்ட சில சிறுகதைகளின்  தலைப்புகள் சற்றே அபூர்வமாக, விசித்திரமாக இருப்பதைக் கவனிக்கிறேன். சிலது நீ..ள..மாகக் காட்சியளித்து மிரட்டுகின்றன. ’என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ, ஏனிந்தப் பெயரை.. வைத்தாயோ..’ என்று சம்பந்தப்பட்ட கதையே அந்தக் கதாசிரியரைப் பார்த்துப் பாடுமோ என்னவோ!

சுவாரஸ்யத்துக்காக சில ‘நீளத் தலைப்புகள்’ கீழே:

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ – ஜெயகாந்தன்

செம்பொனார் கோவிலுக்குப் போவது எப்படி – ந.முத்துசாமி

சிவப்பாய், உயரமாய், மீசை வச்சுக்காமல் – ஆதவன்

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை

டெரிலீன் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்

தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தியோரு சிறுகதைகள் – எம்.யுவன்

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் – பவா. செல்லதுரை

கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் – ப்ரேம்-ரமேஷ்

இருளப்பசாமியும் இருபத்தியோரு கிடாய்களும் – வேல.ராமமூர்த்தி

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும், வெஜிடபிள் பிரியாணியும் – நாஞ்சில் நாடன்

கதாசிரியர்களின் சிந்தனையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் :

தாத்தாவும் பேரனும் – தி.ஜானகிராமன்

தாத்தாவின் பேனா – கோணங்கி

சாமியாரும் குழந்தையும் சீடையும் – புதுமைப்பித்தன்

நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா

குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் – இந்திரா பார்த்தசாரதி

காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்

சிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்

குழந்தைகள் – அசோகமித்திரன்

ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும் – நகுலன்

மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்

காலனும் கிழவியும் – புதுமைப்பித்தன்

ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்

இப்பிடியெல்லாமா ஒரு தலைப்பு (புரியலையே சாமி!) :

ரி – அ.முத்துலிங்கம்

ரீதி – பூமணி

தனுமை – வண்ணதாசன்

நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்

நீதம் -லட்சுமணப் பெருமாள்

மாஞ்சு -சுஜாதா

அன்னமயில் -வேல.ராமமூர்த்தி (அன்னமா, மயிலா.. தெளிவாச் சொல்லுய்யா!)

இதெல்லாம் -பெரும்பாலும்- அந்தக் கால எழுத்தாளர்களின் வேலை.. இப்போது எழுதிவரும் ஆசாமிகள் என்னென்ன சிந்தித்து எதைத் தலைப்பாக வைப்பார்களோ யாரேயறிவார்? எது எப்படியோ, இலக்கிய வாசக, வாசகியருக்கு கும்மாளம்தான்!

**

15 thoughts on “சில கதைகள், சில தலைப்புகள் !

 1. பதிவின் தலைப்பு என்பது புடவையின் டலைப்பு போல இருக்கவேண்டு என்றார் ஒரு பதிவர் i

  Like

  1. @ Balasubramaniam GM :

   நான் இங்கே எழுதியிருப்பது அல்லது குறிப்பிட்டிருப்பது தமிழில் serious writing பற்றி, அதாவது இலக்கிய எழுத்துபற்றி, அந்த வகைமையில் வரும் படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கான சில தலைப்புகள் குறித்து!

   Like

 2. இதில் மாஞ்சு மட்டும் படித்திருப்பேன்.  மறுபடி பார்த்தால் தெரியும்.  மற்ற எதுவும் படித்திருக்க மாட்டேன்.  பவா செல்லத்துரையின் யு டியூப் பக்கங்கள் கேட்டிருக்கிறீர்களா?  ரொம்ப சுவாரஸ்யம்.

  Liked by 1 person

  1. @ Sriram:
   பவா செல்லதுரை ஒருமுறை சு.ரா.வின் பிரசாதம் கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாட்ஸப்பில் வந்தது. யூ ட்யூபில் அவர் போன்றவர்கள் வந்து கதை சொல்வதும் நல்லதுதான். வாசிக்க சோம்பல்படும் ஜனங்கள் கேட்கவாவது, பார்க்கவாவது செய்யட்டும் !

   Like

 3. சிலவற்றைப் படித்த ஞாபகம்.
  பவா.செல்லதுரை யு டியூப் கதைகள் மிகவும் பிடிக்கவும். அண்மையில் ஜெமோவின் ஒரு கதையை மிக உணர்ச்சியுடன் படித்தார்.

  நீங்கள் சொல்வது நிஜம் தான்.
  சிலசமயம் நினைப்பதுண்டு.
  கதையின் முதல்வரியைத் தலைப்பாய் வைத்து விட்டார்களோ என்று:)

  Like

  1. @ Revathi Narasimhan :
   கதைக் கருவைப்போலவே, தலைப்பும் எழுத்தாளரின் உரிமை. வைக்கட்டுமே இஷ்டப்படி ! தலைப்பே கதையின் கருவைத் தூரத்திலிருந்து காட்டும். சிலசமயம் இதற்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்றும் சிந்திக்கவைக்கும்.
   நடப்பது நடக்கட்டும்.. வாய்ப்பு வந்தால் நாமும் வைப்போம் தலைப்பு!

   Like

 4. அம்பை எழுதிய ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ தலைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  நல்ல அலசல்.

  Liked by 1 person

  1. @ ranjani135 :
   அம்பையின் அந்தக் கதைத் தலைப்பையும் பார்த்தேன். இன்னொன்று இப்போது நினைவுக்கு வருகிறது: எஸ்.ரா.வின் ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ !

   Like

 5. தலைப்புகள் எல்லாம் வெகு சுவாரசியம் மிகவும் பிடித்திருக்கிறது.

  //இருளப்பசாமியும் இருபத்தியோரு கிடாய்களும் – வேல.ராமமூர்த்தி//(அழியாச்சுடர் தளத்தில் என்று நினைவு)

  இதுவும், நாஞ்சில் நாடன் அவர்களின் மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும், வெஜிடபிள் பிரியாணியும் ” (அவர் பெயர் தளத்திலேயே) எங்க ஊர்ப் பெயரெல்லாம் நிறைய வருமே அவர் கதைகளில்!! இடலாக்குடி ராசா, மற்றொன்றில் வண்ணாக்குடி எங்கள் ஊரை ஒட்டி இருக்கும் ஓடும் வாய்க்கால்..இப்ப அங்குதான் நாலுவழிச்சாலை வருவதாகச் சொல்லப்பட்டது!! மனசு ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. நானும் மகவும் விளையாடிய வாய்க்கால்……

  இந்த இரண்டும் வாசித்த நினைவு. முதல் கதை இருளாப்ப தேவர் ஒரு கூட்டம் ஆடு திருடி வெட்டுவது என்று நினைவு…

  கீதா

  Like

 6. தலைப்பே பல சமயங்களில் கதையைப் பற்றிச் சொல்லிவிடும். அதுவும் ஒரு சுவாரசியம்தான். தலைப்பு எப்படிக் கதையுடன் பொருந்திப் போகிறது என்று நான் பல சமயங்களில் யோசிப்பதுண்டு.

  தலைப்பு கதைகளை வாசிக்கத் தூண்டவும் செய்யும்.

  கீதா

  Like

 7. @ கீதா:
  ஓ, நாஞ்சில் ஒங்க ஊர்க்காரரா! அப்ப நிறைய அவர் கதைகளைப் படித்திருப்பீர்கள். அவரது புத்தகங்களின் சுத்த தமிழ்ப் பெயர்கள் .. ஆஹா… தலைப்பே சுகம் தரும்: சூடிய பூ சூடற்க, கொங்குதேர் வாழ்க்கை, தொல்குடி, என்பிலதனை வெயில் காயும், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று. இப்படிச் செல்பவை.
  வேல.ராமமூர்த்தியையும் படித்திருக்கிறீர்கள்.. நல்லது.

  Like

 8. ஒருவேளை தி.ஜாவின் கதை படித்திருப்பேனோ என்னமோ! மற்றபடி சித்தப்பாவின் கதை உட்பட எதையும் படித்ததாக நினைவில் இல்லை. இவை இணையத்தில் கிடைக்கின்றனவா? கிடைத்தால் படித்து விடலாம். பதாகையிலிருந்து ஒவ்வொரு மாதமும் கவிதைத் தொகுப்பும், கதைத் தொகுப்பும் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் போல் யாராவது அனுப்பினால் தான் உண்டு.

  Like

  1. @ கீதா சாம்பசிவம்: அழியாச்சுடர்களில் பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’ படித்தேன். சில கதைகள் சிறுகதைகள்.காமிலும் கிடைக்கலாம்.

   பதாகையிலிருந்து கவிதை, கதைத் தொகுப்புகள் வருகிறதா? நீங்கள் ஏதாவது அங்கே மெம்பரா!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s