முன்னாள் ஸ்பின்னர் சுனில் ஜோஷி, வேகப்பந்துவீச்சாளர் ஹர்விந்தர் சிங் ஆகியோரைக்கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய தேர்வுக்குழு தன் முதல் பணியைச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் மூன்று இந்திய அணிகள், ஆரம்பக் குழப்பங்களுக்குப் பிறகு ’திருத்தி’ அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் முடிந்தபின் (ஃபைனல் 10-11-20), நவம்பர் 2020 இறுதியிலிருந்து ஜனவரி 2021 வரை 3 ஒரு-நாள், 3 டி-20, 4 டெஸ்ட் போட்டிகள் எனத் தொடர்களை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஆடவிருக்கின்றன. அழுத்தம் நிறைந்த இந்த கோவிட் காலத்தில், மூன்றுவகைக் கிரிக்கெட் போட்டிகளை, அயல்நாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடுமாறு செய்யும் இத்தகைய நீண்ட தொடர் உசிதம்தானா என்கிற கேள்வியும் தலைகாட்டத்தான் செய்கிறது.

அணிகள் சில புதுமுகங்களைத் தவிர்த்து, எதிர்பார்க்கப்பட்ட வகையில் இருக்கின்றன. டி-20, ஒரு-நாள் அணிகளில் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்திற்கு இடமில்லை என்பது ஒரு அதிர்ச்சி. இந்திய டி-20 அணியில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு/கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, தோள்பட்டைக் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். (காயம்பற்றி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணி, இந்திய போர்டுக்கு சரிவரத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது). Someone’s loss is someone else’s gain என்கிற கூற்றுக்கேற்ப, அவருடைய இடத்தில் தமிழ்நாடு/சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T. நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளுக்கான, மூன்று ‘ரிஸர்வ் வேகப்பந்துவீச்சாளர்கள்’ லிஸ்ட்டில் இருந்தார்). ’Natarajan is the find of IPL 2020’ என்றதோடு அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர்.
தேர்வில், ஒரு முக்கியமான மாற்றமும் நிகழந்தது. சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அணிகளில் காணாமற்போயிருந்த, இந்தியாவின் ப்ரிமியர் பேட்ஸ்மனான ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்திற்காக ஓய்வு இன்னும் தேவைப்படுவதால் டி-20, ஒரு-நாள் போட்டிகளில் ஆடமாட்டார். இன்னுமொரு அறிவிப்பு: முதல் டெஸ்ட்டிற்குப்பின் டிசம்பர் இறுதியில், கோஹ்லி விடுப்பில் இந்தியா திரும்புகிறார் (அனுஷ்காவுக்குக் குழந்தை பிறக்கும்போது அருகிலிருக்கவேண்டுமே!) எனினும், தொடர்ந்து ஆடிவரும் கோஹ்லிக்கு விடுப்பு தேவைதான். இதனால் டெஸ்ட்-2, 3, 4-களில் ரோஹித் கேப்டனாக ஆடக்கூடும்.
கேரளா/ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன் முன்னராக டி-20 அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார். இப்போது ஒரு-நாள் அணியிலும் அவர் இணைக்கப்பட்டிருப்பது அணிக்கு வலு சேர்க்கும். அவர் ஒரு அதிரடி என்பதோடு அருமையான கீப்பரும். டெஸ்ட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா காயத்தில் இருப்பதாகத் தெரிகிறது.காயம் சீரியஸ் இல்லை எனில் தொடர்ந்து டெஸ்ட் அணியில் நீடிப்பார்.
ஸௌரவ் கங்குலியின் குறிப்பிடத்தக்க, விமர்சகர்களால் ஸ்லாகிக்கப்பட்ட இந்திய கேப்டன்சி காலத்தில், ராஹுல் திராவிட் துணைக்கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் வெகுகாலம் சேவை செய்தது நினைவிருக்கலாம்! அந்த ’ரோல்’ கிட்டத்தட்ட இன்னொரு கர்னாடகா பேட்ஸ்மனான கே.எல்.ராஹுலிடம் வந்து சேர்ந்திருக்கிறது. டி-20, ஒரு-நாள் போட்டிகளில் இவரே முதல்-சாய்ஸ் விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு. சாம்ஸன் கீப்பர் எனினும், அவருடைய பேட்டிங்கிற்காகவே அணியில் இருக்கவேண்டியவர். அவருடைய ஆடும் ஸ்டைல், பந்து எழுந்து எகிறும் ஆஸ்திரேலியப் பிட்ச்சுகளுக்கு ஒத்துப்போகும். இதெல்லாம் கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெளிவாகவேண்டுமே! டெஸ்ட் கிரிக்கெட்டில் சாஹா ஆட முடியாத பட்சத்தில், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இயங்குவார். இவரது கீப்பிங் தரம் ‘டாப்-க்ளாஸ்’ அல்ல – சாம்ஸன், சாஹா ஆகியோரோடு ஒப்பிடப்படுகையில். கோச் சாஸ்திரியின் பயிற்சியில், புத்திமதியில், இயற்கையாக ரிஷப்பிடம் இருந்த அதிரடி ஆட்டமும் மலையேறிவிட்டதுபோல் தோன்றுகிறது.
காயத்தினால் கடந்த வருடம் ஆடாதிருந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா, ஒரு-நாள் மற்றும் டி-20 அணிக்குத் திரும்பியிருக்கிறார். Welcome change. இவரோடு, மனீஷ் பாண்டே, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி-20, ஒரு-நாள் அணி இரண்டிலும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் பேட்டிங்கிற்கு கோஹ்லியோடு, இவர்களின் திறனே ஆதாரம். அதைப்போலவே பௌலிங்கில், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் செய்னி, ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், யஜுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களும். ஆல்ரவுண்டர் சுந்தரின் ‘off-spin’, ‘பேட்டிங் பவர்ப்ளே’ யில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மன்களை அடக்க உபயோகமாக இருக்கும். சுந்தரின் பேட்டிங் ‘left-handed’, பௌலிங் ’right-handed’ – சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும்.

முகமது சிராஜ்
டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் பேட்டிங் செயல்பாடுகள், கோஹ்லியைத் தாண்டி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், செத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரைத்தான் நம்பியிருக்கும். இளம் பேட்ஸ்மன் ஷுப்மன் கில் (Shubman Gill), ரிஷப் பந்த் ஆகியோருக்கும் ஆட வாய்ப்பு கிட்டலாம். பௌலிங்கில் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா (Bumrah), ஷமி, உமேஷ் யாதவ், செய்னி ஆகியோரோடு, ஹைதராபாத்/ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜும் (Mohammad Siraj) டெஸ்ட் அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். வலிமையான ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களுக்கு இவர்களது பௌலிங் நெருக்கடி தருமா? பெரும் கேள்வி.
டெஸ்ட் அணியில் இருக்கும் அஷ்வினைத் தவிர, இந்தியாவுக்காக ஆட இரண்டு தமிழர்கள் – வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்-இல் சிறப்பாக ஆடிய இருவரும் டி-20 பங்களிப்புக்காக மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஜெர்ஸியில் முதன்முறையாக ஆடப்போகும் சேலத்தின் நடராஜனுக்கு முற்றிலும் புதிய அனுபவம்! ஆஸ்திரேலியாவில் இவர்களின் கதை எப்படிச் செல்லுமோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
**
அணித் தேர்வு, அதில் நடந்த பாலிடிக்ஸ், கோஹ்லி, ரவி சாஸ்திரிக்கு பெருமை சேர்க்கவில்லை. ராசியில்லாத கோஹ்லி, ரோஹித் சர்மாவிடம் டெஸ்ட் போட்டிகளை ஒப்படைப்பது, ரோஹித்துக்கு நல்லது மாதிரி தெரியவில்லை. ரோஹித் strength ஒன் டே மேட்ச். கோஹ்லியின் பாலிடிக்ஸ் நன்றாக இல்லை.
LikeLike
எனக்கு இந்த டூரே சரியாகப் படவில்லை. கோவிட் இரண்டாவது அலை உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் வேளையில் இது தேவை இல்லாத ஒன்றாகவே படுகிறது.
LikeLike
@ நெல்லைத்தமிழன், @ ஸ்ரீராம் :
கொஞ்சம் பாலிட்டிக்ஸ் இருப்பதாகவே ஆரம்ப டீம் அறிவிப்பில் தெரிந்தது. ‘காயம் இருக்கும்போது ரிஸ்க் எடுக்கக்கூடாது. கொஞ்சகாலத்துக்கு விளையாடாமல் இருப்பதே நல்லது!’ என ரோஹித் விஷயத்தில் கோஹ்லியின் குரு சாஸ்திரி ஒத்து ஊதி பேட்டி கொடுத்தது சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் வலுப்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு மிகக் கம்மி. தடுப்பு ஏற்பாடுகள் பக்கா. ஆதலால் கொஞ்சம் தைரியம் வருகிறது. அவர்களுக்கும் இந்திய அணியின் டூர் மிக முக்கியம் என்பதையும் கவனிக்கவேண்டும்.
LikeLike