தமிழின் புதுக்கவிதைகளுக்காக எனப் பிரத்யேகமாக கவிஞர் ஆத்மாநாம் அவர்களால் மே 1978-ல் துவக்கப்பட்டு, விட்டு விட்டு அக்டோபர் 1988 வரை வெளிவந்தது ‘ழ’ சிற்றிதழ். மொத்தம் 28 இதழ்கள் ஒரு காலகட்டத்தின் தரமான புதுக்கவிதைகள் சிலவற்றை அடையாளம் காட்டின. நவீனத் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், ஆத்மாநாமின் 1984 மறைவுக்குப்பின், ‘ழ’ வின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் கண்டுகொள்ளாத (ஒருவகையில் அது நல்லதுதான்) புதுக்கவிதைகளோடு, அம்ரீதா ப்ரீத்தம் போன்ற பிறமொழிக்கவிஞர்களின் படைப்புகளும், புதுக்கவிதையின் வளர்ச்சி தொடர்பான குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், ஞானக்கூத்தன் ஆசிரியராயிருந்த ‘ழ’ வில் வெளிவந்தன 1984-லிருந்து 1988 வரை.
கவிதைகளில் உள்ளார்ந்த ஆர்வம் காட்டுவோருக்கு:
‘ழ’ இதழ்களில் ஆத்மாநாம் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதிவந்த ராஜகோபாலனிடமிருந்து பழைய அச்சு இதழ்களைப் பெற்று, அமேஸானில் கிண்டில் புத்தகங்களாக ஏற்றி வெளியிட்டுவந்தார் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன். ஒவ்வொரு இதழாக, தனித்தனியாக ’ழ’ கிண்டிலில் கிடைத்துவந்தது. இலவசத் தரவிறக்கம் சில செய்திருக்கிறேன். வாங்கியுமிருக்கிறேன். இப்போது, ‘ழ’வின் இணையாசிரியரான கவிஞர் ராஜகோபாலன், விமலாதித்த மாமல்லனின் உதவியுடன் ‘ழ’ இதழ்கள் அனைத்தையும் ஒரே கிண்டில் புத்தகமாக அமேஸானில் வழங்கியிருக்கிறார். விலை ரூ.200. கவிதைகள், கவிதை குறித்த படைப்பாளிகளின் கட்டுரைகள் என 500 பக்கங்களுக்கும் மேலாக விரிகிறது இந்நூல்.
எத்தனையோ வெட்டிச் செலவுகளுக்குப் பணம் காணாமற்போய்விடுகிறது ஒவ்வொரு மாதமும் நமக்கு. இஷ்டமுள்ளோர் இதனை வாங்கிப் படிக்கலாம். என்ன.. ஒரு புத்தகம் ரூ.200.. ஆ! – என வியர்த்துக்கொட்டும் சிலருக்காகவும், மற்ற கவிதாப்ரியர்களுக்காகவும் சலுகையாக, 21-10-2020 (பகல் 12:30)-லிருந்து 23-10-20 (பகல் 11:59) வரை இலவசமாகக் கிடைக்கிறது ‘ழ’ கிண்டில் புத்தகம். கிடைக்கிறதே என்று வெறுமனே தரவிறக்கம் செய்துவிட்டு, ஆயிரம் வேலைகளில் மும்முரமாகி மறந்துவிடாமல், தனியே உட்கார்ந்து கொஞ்சம் வாசித்துப்பாருங்கள். ஏதாவது வெளிச்சம் கிட்டக்கூடும்…
சரி, ஓவராக விளக்கியாயிற்று. இரண்டு ‘ழ’ கவிதைகள் :
மேசை நடராசர்
-ஞானக்கூத்தன்
மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்களல்ல. கிங்கரர் அல்ல.
எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கருத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப்படுத்துக்கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுதுபார்க்க
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்
ஆனால் நடராசர்
ஆடிக்கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும்
சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்.
எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறிவிடாமல்
ஆடிக்கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்
**
பயணம்
-சுரேசன்
பலரும்
கூட்டமாய் முடமாகிவிடுகிறீர்கள்.
ஏதோ
குறிப்பிட்ட ஒரு கணத்தில்
நான் மட்டும் சிலரோடு
ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு கணத்தையும்
சந்தித்துக்கொண்டே
படிமம் எனக்கென்று
எதுவும் தேவையில்லை
இதுதான் நானென்று
எதுவும் முடிவில்லை
இது
இன்று இனிப்பது
நாளை கசக்கும்
இயல்பான வாழ்க்கை
**
இலக்கில்லாத கவிதைகள் என்றும் சொல்லலாம். இலக்கியக் அவ்விதைகள் என்றும் சொல்லலாம். இரண்டு சாம்பிள்களையும் ரசித்தேன். என்னிடம் கிண்டில் கிடையாது… அமேசான் கணக்கு கிடையாது… எனவே இந்தச் செய்திகளை எல்லாம் படிப்பதோடு சரி…!
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
அமேஸான் அக்கவுண்ட் இல்லை என்று ஒரு ஆம்பிளை சொல்லலாமா! ஆதாரில்லாமல் இருக்கலாம். அமேஸானில்லாமலா, அதுவும் ஒரு நகரவாசி ?
விக்ரமாதித்யன் படித்திருக்கிறீர்களா?
பிடிக்கும். இப்போதுதான் ஒரு கிண்டில் நூல் வாங்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரு சுருக் கவிதை:
மஹாஜனங்கள் மழுங்கிப்போயிடின்
மஹாகவி வாயில்
மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளவேண்டியதுதான்…
பின்னர் எழுதுவேன்.. இன்ஷா அல்லாஹ்!
LikeLike
ழ கவிதைகள் அழகு.. ரசிக்கிறேன்.
ஏ அண்ணன் நலம்தானே…
LikeLiked by 1 person
@ athiramiya:
வாங்கம்மா! ட்ரம்ப்பை ஜெய்க்கவைக்கிறதுல பிஸின்னு கேள்விப்பட்டேன்!
LikeLike
ட்றம்ப் அங்கிள் பாவம்:) ஜெயிக்கட்டும்:)) அப்போதானே முசுப்பாத்தியாக இருக்கும் :))
LikeLiked by 1 person
//வாங்கம்மா! ட்ரம்ப்பை ஜெய்க்கவைக்கிறதுல பிஸின்னு கேள்விப்பட்டேன்!//
ஏகாந்தன் அண்ணா பின்னே அவங்க தானே ட்ரம்ப் அங்கிளின் செக்ரட்டரி. ஹா ஹா ஹா
கீதா
LikeLiked by 1 person
இது
இன்று இனிப்பது
நாளை கசக்கும்
இயல்பான வாழ்க்கை//
ரொம்பவே யதார்த்தமான வரிகள். நாளை கசப்பது மறுநாள் இனிக்கவும் செய்யலாம் இயல்பான வாழ்க்கை!
இதை வாசித்ததும் பெரியசாமி தூறன் அவர்களின் வரிகள்
மானிட வாழ்க்கையிலே இன்பம் துன்பம்
மாறி மாறி வருவதுன் செயலன்றோ
என்ற வரிகள். அருமையான ஒரு பாடல்!
ழ கவிதைகள் இரண்டுமே நன்றாக இருக்கிறது
கீதா
LikeLiked by 1 person
@கீதா :
வருகைக்கு நன்றி
பெரியசாமி தூறன் (அல்லது தூரன்?) பெயரை வெகுநாட்களுக்குப் பின் உங்கள் வாயிலாகக் கேள்விப்படுகிறேன். படிக்காவிட்டால் மனதை விட்டு அகன்றுவிடுகின்றன பெயர்கள். இப்படிப் பல படைப்பாளிகளை, ஆளுமைகளை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் எனத் தோன்றுகிறது.
LikeLike
தூரன் தான் சரி.
LikeLiked by 1 person