அமீரகத்தில் ஐபிஎல்

ஐபிஎல் இந்தியாவில் நடந்தாலென்ன, அமீரகத்திலோ, அமெரிக்காவிலோ,  ஆஃபிரிக்காவிலோ நடந்தால்தானென்ன.. கொரோனா கால குழப்பங்களுக்கிடையே, ஐபிஎல்-ஐ நடத்த முடிந்ததே ஒரு பெரும் சாதனை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மனும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னரும் நேற்று துபாயில்(Dubai) இதையே கூறினார். இந்திய மற்றும் அமீரகக் கிரிக்கெட் போர்டுகள் பாராட்டுக்குரியவர்கள். மாசக்கணக்கில் முடங்கியிருந்தும்  துருப்பிடித்துவிடாமல், ஃபிட்டாக வந்து விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆரோக்யமாக இருங்கள், அதிரடியாக ஆடுங்கள். மைதானத்தில் உட்கார்ந்திருப்பது ஐபிஎல் நிர்வாகிகள், அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் மட்டும்தானா.. இருக்கட்டுமே. கண்காணா ரசிகர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள், இறைவனைப்போலவே! டி-20 மேஜிக் தெறிக்கட்டும் எங்கும்..

கோவிட்-19 தாக்குதல்.. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆடாததால் சிஎஸ்கே பலவீனமடைந்துவிட்டதாக ஒருபக்கமாகக் கிளம்பிய விமரிசனம், புலம்பல்.   எல்லாவற்றையும் தாண்டி, செப்டம்பர் 19-ல் நடந்த ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. உலகக்கோப்பைக்கான தேர்வில் தேர்வுக்கமிட்டி மற்றும் கோஹ்லி & கோ.வினால் தவிர்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு(71),  சிஎஸ்கே-வுக்காக மிடில்-ஆர்டரில் விளாசி தன் ஆட்டத்தரத்தை மீண்டும் நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூப்ளஸீ(Faf du plessis 58 N.O.) இறுதிவரை கவனமான ஆட்டத்தைக் காண்பித்தார். சென்னை அணியை கோட்டைக் கடக்கவைத்தார். மும்பை அணியில் க்விண்ட்டன் டி காக் (Quinton de Kock)(33) மற்றும் சௌரவ் திவாரி(42) ஓரளவு ஆடியும், சென்னையை சாய்க்கப் போதுமானதாக இல்லை. ரோஹித் சொற்ப ரன்களில் கவிழ்க்கப்பட்டார். பௌலர்களில் பியூஷ் சாவ்லா (ஸ்பின்னர்) மற்றும் லுங்கி இங்டி (வேகப்பந்துவீச்சாளர்) சென்னைக்காக ஜொலித்தார்கள்.

இரண்டாவது IPL மேட்ச்! பஞ்சாப் – டெல்லி மோதல். என்ன சொல்வது இந்த மேட்ச்சைப்பற்றி.  முதலில் ஆடிய டெல்லி ஆரம்பத்திலேயே திணறித் தடுமாறியது. பஞ்சாபின் பௌலிங் -குறிப்பாக முகமது ஷமியின் வேகம்- தூள்கிளப்பியது. ஷ்ரேயஸ் ஐயர் 39, ரிஷப் பந்த் 31 அடித்து நிலைமையை சரிசெய்யமுயன்றும் போதாதுபோல் தெரிந்தது. இறுதிக் கட்டத்தில் நுழைந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்(53) மைதானத்தைக் கொளுத்திவிட்டார். 150-ஐத் தாண்டி இரண்டே ஓவர்களில் டெல்லியைக் கொண்டு சென்றார். டெல்லியின் 157/8 பஞ்சாபை நிறுத்த முடியுமா?

பேட்டிங்கில் பஞ்சாப் அணி ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை.  விக்கெட்டுகள் சரிய (டெல்லிக்காக முதல் தடவையாக ஆடும் அஷ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்), மயங்க் அகர்வால் மட்டும் தனியொரு ஆளாக எதிர்த்தாடினார். வெற்றிக்கு 13 ரன் என்று கடைசி ஓவரில் நுழைத்தார் பஞ்சாபை. அதிலும் 12 ரன்களை அவரே எடுத்தும்விட்டார். இன்னும் இரண்டு பந்துகள் 1 ரன் தேவை என்கிற வெற்றிமுகம். ப்ரீத்தி ஸிந்தாவின் முகத்தில் தாமரைப்பூ! ஆனால், கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டத்தின் கதையை, தோசையைத் திருப்பிப் போட்டதுபோல் போட்டுவிட்டார் டெல்லியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு பஞ்சாப் டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தார். குலை நடுங்கியது பஞ்சாபுக்கு. மேட்ச் டை(tie), Super Over !

எலிமினேட்டர் சூப்பர் ஓவரில் பஞ்சாபைத் தெறிக்கவிட்டார், முதலில் ஓவர் போட்ட டெல்லியின் சூப்பர் ஓவர்-ஸ்பெஷலிஸ்ட் ககிஸோ ரபாடா (Kagiso Rabada). மூன்று பந்துகளில் 2 ரன் கொடுத்து,  பஞ்சாப் கேப்டன் ராகுலையும், நிகோலஸ் பூரனையும் (Nicholas Pooran) தூக்கிவிட்டார். தன் பதிலில் டெல்லி, எளிதாக 3 ரன் எடுத்து மேட்ச்சை வென்றது.

இத்தோடு முடியவில்லை கதை. ஐபில் கமிஷனிடம் பஞ்சாப் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடைசி ஓவரில் பஞ்சாபின் க்றிஸ் ஜார்டன் எடுத்த 2 ரன்களில் ஒரு ரன்னைத்தான் அனுமதித்தார் அம்பயர் நிதின் மேனன். ரன் ஓடுகையில் ஜார்டன் கோட்டை பேட்டினால் சரியாகத் தொடவில்லையாம். ஆனால் ’ரீ-ப்ளே’ என்று ஒன்று இருக்கிறதே.. டெக்னாலஜி! அது காட்டிவிட்டது உண்மையை. ஜார்டனின் பேட் கோட்டிற்குள்தான் வைக்கப்பட்டது! இந்த தவறான ரன் -கழித்தல் இல்லாதுபோயிருந்தால், பஞ்சாப் 20-ஓவர்களிலேயே ஜெயித்திருக்கும். வீரேந்திர சேஹ்வாக்கும் அம்பயரின் தவறைச் சாடியுள்ளார்.

Dev Dutt Padikkal

நேற்று (21-9-20) துபாயில் நடந்த பெங்களூர் Vs ஹைதராபாத் போட்டியில் சுறுசுறுப்பு அதிகமில்லை. பெங்களூர் அணி,  கர்னாடகாவின் 20-வயது ஓப்பனர் தேவ் தத் படிக்கல் (Dev Dutt Padikkal) – ஆரோன் ஃபிஞ்ச் ஜோடியுடன் பேட்டிங்கை ஆரம்பித்தது.  படிக்கல் தன் முதல் ஐபிஎல் போட்டியில் அனுபவ வீரரைப்போல,  சுதந்திரமாக பேட்டை சுழற்றினார். ரன்கள் வேகமாக வந்தன. இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்கால மிடில்-ஆர்டர் பேட்ஸமனாக உருவாகக்கூடுமோ எனத் தோன்றுகிறது.  படிக்கல் 56, டி வில்லியர்ஸ் 51 – டாப் ஸ்கோர்கள். 163 என்பது ஹைதராபாதுக்கு, பெங்களூர் கொடுத்த இலக்கு.  ஹைதராபாதின் மிடில்-ஆர்டரில் தம் இல்லை. ஓப்பனர் ஜானி பேர்ஸ்டோவின் (Jonny Bairstow)  61 தான் உருப்படியான ஆட்டம். யஜுவேந்திர சாஹலின் ஸ்பின்னில் பேர்ஸ்டோ விழுந்தவுடனே, ஹைதராபாத் ஆட்டம் கண்டது. விக்கெட்டுகள் நில்லாது ஓடின. முக்கியக் கட்டத்தில் சாஹல் 3 விக்கெட் எடுத்து, முறித்துப்போட்டார் ஹைதராபாதை. இறுதியில் 10 ரன் வித்தியாச வெற்றி கோஹ்லியின் பெங்களூருக்கு.

இன்று இன்னுமொரு க்ளாசிக் ? தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ். மேட்ச் ஷார்ஜாவில். சென்னை அணியில் 20-வயது அதிரடி பேட்ஸ்மன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) இருப்பாரா?  கோவிட்-19 நெகடிவ்-ஆகி, தப்பிவந்திருக்கும் வீரர். அவர் உள்ளே வந்தால் முரளி விஜய் வெளியே! சிறிய மைதானம் ஷார்ஜா. சிக்ஸர்கள் பறக்கும்!

**

8 thoughts on “அமீரகத்தில் ஐபிஎல்

 1. நானும் மேட்சைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 8:50 வரை. ரசிகர்கள் இருப்பதுபோல பின்னணி இசை கொடுக்கறாங்க என்று தோன்றுகிறது.

  Liked by 1 person

  1. @ நெல்லைத்தமிழன்: ஆம். ரசிகர்கள் இருப்பதுபோல் சத்தம், cheergirls and fans (from home) video என்று போட்டுக்காண்பிக்கிறார்கள்.

   Like

 2. அது மட்டுமல்ல டிஜிட்டல் சியர் லீடர்ஸ் :)))! ஆர்.ஜே.பாலாஜியின் தமிழ் வர்ணனை எப்படி? 

  Liked by 1 person

  1. @ Bhanumathy V.:
   ஆர் ஜே பாலாஜி, சடகோபன் ரமேஷ் (former TN/India player) தமிழ் வர்ணனையில் இருப்பார்கள் எனத் தெரியும். இன்னும் இங்கிலீஷ் சேனல்தான் பார்க்கிறேன். தமிழுக்கு இடையில் வருவேன், அந்த சுகத்தை அனுபவிக்காமல் விடுவானேன்!

   Like

 3. கிரிக்கெட் எங்கெல்லாம் ஆடப் படுகிறதோ
  எப்போது ஆடப் படுகிறதோ
  அப்படியே ரசிப்பவர்கள் என் கணவரும் இப்போது எங்கள் சின்ன மகனும்.
  அதைப் பார்த்தால் மட்டும் போதாது.
  ஒவ்வொரு பந்தையும் ,அதை வீசியவர்கள்,அடித்தவர்கள் எல்லாவற்றையும்
  ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்க வேண்டும்:)

  ” அம்மா, மே வரை ஓடும். சந்தோஷமாக இருக்கிறது”
  என்றான் சின்னவன். எனக்குப் புரியவில்லை.
  இன்னும் ஒரு வருஷமா போகும். இல்லை நாந்தான் புரிந்து கொள்ளவில்லையா!!!!
  நன்றி ஜி.

  Like

 4. @ Revathi Narasimhan : //..அதைப் பார்த்தால் மட்டும் போதாது.
  ஒவ்வொரு பந்தையும் ,அதை வீசியவர்கள்,அடித்தவர்கள் எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்க வேண்டும்:)//

  கிரிக்கெட் விஷயத்தில் உங்கள் கணவரையும், சின்னப் பையனையும் எனக்கு நன்றாகவே புரிகிறது.. நாங்கள்லாம் ஒரு ஜாதி! கிரிக்கெட் எங்களில் பாதி!

  ’மே வரை ஓடும்’ என்று உங்கள் பையன் சொன்னது ஐபிஎல் பற்றி மட்டும் அல்ல. இந்தியாவின் கிரிக்கெட் engagements till May 21 . பையன் தீவிர கிரிக் ரசிகன் தான் !

  Like

 5. நாங்களும் இங்கே துபாயில் வீட்டில் அனைத்து போட்டிகளையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறோம். சூப்பர் ஓவரில் ராகுல் அது வரை நன்றாக விளையாடிக்கொண்டிருந்த மயாங்க் அகர்வாலை அனுப்பாமல் ஏற்கனவே ‘டக்’ வாங்கிய பூரணை கொன்டு வந்து ஆட்டத்தைக்கோட்டை விட்டபோது என் கணவரும் மகனும் புலம்பித்தீர்த்து விட்டார்கள்.
  ராஜஸ்தானின் விளாசலை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நேற்றைய மாட்ச் மட்டும்தான் [ கல்கத்தாவும் மும்பையும் ஆடிய மாட்ச் ] தூக்கத்தை வரவழைத்தது!!!

  Liked by 1 person

  1. @ Mano Saminathan : Great! நீங்கள் எல்லோரும் துபாய் சூழலில் மேட்ச்சுகளை ரசித்துவருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. ராஜஸ்தான் மேட்ச் அபாரம். சென்னைக்கு ராயுடு இல்லாதுபோனது அதிர்ச்சி. கல்கத்தா மும்பைக்கு எதிராக சரியாக ஆடவில்லைதான்.

   இன்றைய கதையைப் பார்ப்போம். படிக்கல் மீண்டும் சாத்துவாரா !

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s