டிசம்பர் 2019-ல் ஒட்டுமொத்த உலகத்துக்கு எதிராக, தான்தோன்றித்தனமாக, குள்ளநரித்தனமாகக் கிளப்பிவிட்ட வைரஸ் நிழல் யுத்தம், ஹாங்காங் மக்களின்மீதான அடக்குமுறைகள், தைவானுக்கு எதிரான சவால்கள், ராணுவ பயமுறுத்தல்கள், இந்தியாவோடு ஒருபக்கம் பொருளாதார உறவு, மற்றொரு பக்கம் எல்லை அத்துமீறல்கள் என சீனாவின் சமீபகால நடவடிக்கைகள் ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருப்பது வல்லரசு நாடுகளின் தலைவர்களால், பாதுகாப்பு வல்லுநர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டே வருகிறது. அதற்கு எதிர்சவாலாக, குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவை மட்டுப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. சர்வதேச வெளியில், யாரும், எதற்கும் நம்ப விரும்பாத, ஆபத்தான நாடு அது என்கிற நிதர்சனம் பிரும்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கொரோனா உள்புகுந்து அழித்துவிட்ட வல்லரசுகளின் பொருளாதார அடித்தளத்தை, அதன் கட்டுக்கடங்கா பின் விளைவுகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, உலக அரங்கில் ஒரே வல்லரசாக பொங்கி எழுவதற்கான சரியான தருணம் இது என கம்யூனிஸ்ட் சீனாவின் அதிபர் க்ஷி ஜின்பிங் (Xi Jinping) நோட்டம்விட்டிருப்பதாகத் தெரிகிறது. தன் வெகுநாள், ரகசிய முயற்சியான பிராந்திய ‘விஸ்தார’ நோக்குடனான (expansionist motives) சதித்திட்டங்களை ஒவ்வொன்றாக, வேகமாக அமுல்படுத்துவதற்கு உரிய காலம் கனிந்துவிட்டது என முடிவுசெய்து காரியங்களை ஆரம்பித்துவருகிறது சீனா. இது எங்கே போய் முடியும் என இப்போதும் எவரும் சரியாகக் கணிக்க இயலாது.
இயற்கைவளம் மிகுந்த தென்சீனக்கடல் பகுதியில் ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேஷியா, தைவான், வியட்நாம், ப்ரூனெய் (Brunei) என வரிசையாக ஒவ்வொரு நாட்டோடும் கடல்வழி மோதல்கள், சவால்கள். ட்ரம்ப்பின் அமெரிக்கா ஆவலுடன் இதனை கவனித்துக்கொண்டிருக்கிறது. ஜப்பானும்தான். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ, சர்வதேச விதிமுறைகளை மீறி, சீனா தென்சீனக் கடலில் தன் இஷ்டத்துக்கு மேய்வதை அனுமதிக்கமாட்டோம் என எச்சரித்திருக்கிறார். அமெரிக்க, ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களோடு, இப்போது இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு எல்லைப்பகுதிகளில் லடாக்கிலிருந்து அருணாச்சல் வரை சீனா தன் வாலை நீட்டி வைத்திருக்கிறது. 1950-களின் இறுதியில் ‘பஞ்ச்ஷீல்’ கொள்கை, ‘இந்தியா-சீனா பாய்-பாய் (Bhai-Bhai) எனப் பிதற்றிய கோமாளி கோஷங்களில், சீனப் பிரதமர் ஸௌ-என்லாயின் (Zhou-Enlai) தொடர்ந்த பல்லிளிப்பில், பகட்டுகளில் முட்டாள்தனமாக விழுந்து நொறுங்கிய பிரதமர் நேரு, வெளியுறவு மந்திரி கிருஷ்ண மேனன் ஆகியோரின் பலவீனமான இந்தியத் தலைமை, 1962 யுத்தத்திற்குப் பின் இந்தியாவை ஒரு ஏமாளியாக, பலவீனனாக சர்வதேச அரங்கில் காண்பித்திருந்தது. அதன் கடுமையான பின்விளைவுகள் இந்தியாவை இன்னும் விட்டபாடில்லை. 1962 அக்டோபரில், சீனா காண்பித்த கயமைத்தனத்திற்குப் பின், நீண்ட இந்திய எல்லைப்பகுதிகளில் அத்துமீறல்கள் தொடர்ந்து நீடித்தே வருகின்றன. சீனா எல்லை மீறுவதும், இந்திய எதிர்ப்பும், தடுப்புமுயற்சிகளும், அதன்பின்னான இருதரப்பு படைத் துணைத்தளபதிகள்-நிலைப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துத் தொடர்வதும், கடைசியில் அவை ஒன்றுமில்லாமல் போவதும், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு ராணுவ வழக்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கல்வான் பள்ளத்தாக்கு (Galwan valley) எல்லைச்சண்டைக்குப்பின், தீவிர பேச்சுவார்த்தைகள் இரு ராணுவத் தரப்பினரிடையே ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகின்றன. அமெரிக்கா இந்த விஷயத்தில் சீனாவை எச்சரித்தபோதெல்லாம், ‘இது எங்களுக்குள்ளேயான இருதரப்பு பிரச்னை. நாங்கள் ‘பேசி’த் தீர்த்துக்கொள்வோம்’ என அவ்வப்போது கூறிவருகிறது சீனா. ஆனால் அதன் எல்லை செயல்பாடுகள் நேரெதிரானவை. ஆகஸ்டு 30-ஆம் தேதி மீண்டும் சில இடங்களில் அத்துமீறப் பார்த்தது. இந்த முறை இந்திய ராணுவ வீரர்கள் கணிசமான அளவில், வான்படையின் பின்னணியோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்ததால், வேறுவழியின்றி சீனா பின் வாங்கியிருக்கிறது. மேலும் இந்த முயற்சிக்குப்பின், இந்திய வீரர்கள் கல்வான் மலைப்பகுதியின் மூலோபாயமான குன்றுகளை வளைத்ததோடு, அங்கே போய் தயாராக நிலைகொண்டுவிட்டார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சீனா, எரிச்சலில் இருக்கிறது!
ஷாங்காய் பாதுகாப்புக் கூட்டமைப்பின் (Shanghai Cooperation Organization) வருடாந்திர கூட்டத்திற்காக ரஷ்யா சென்றிருக்கிறார் இந்திய ராணுவ மந்திரி. மாஸ்கோவில் ரஷ்ய ராணுவ மந்திரியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது இந்தியா கேட்டுக்கொண்டபடி, பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்களை விற்பதில்லை என ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. இதற்குப்பின் இந்திய-சீன ராணுவ மந்திரிகளும் தங்களது அணியினருடன் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். எல்லைப்பிரச்னை நிச்சயம் பேசப்பட்டிருக்கும். விளைவு? பெரிதாக ஒன்றும் சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பதற்கில்லை.
இந்த நிலையில், தேர்தலை சந்திப்பதில் பிஸியாகிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா, சீனாவுக்கிடையே எல்லை நிலைமை மோசமாகிவருகிறது எனக் கூறியிருக்கிறார். இருநாடுகளிடமும் பேசி, ஒத்துழைக்க நாங்கள் தயார் என அறிவிப்பு வேறு! இது ஒருபுறமிருக்க, அமெரிக்க தேர்தல் சமயத்தில் (நவம்பர் 03, 2020), வாஷிங்டனில் நிகழக்கூடிய அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்களை எல்லையின் பல்வேறுபகுதிகளில் கொடுக்கத் திட்டமிட்டிருக்கலாம். சீனாவின் அடிவருடி, சம்ச்சா (Chamcha)வான பாகிஸ்தான் மேற்கு எல்லையில் அதே சமயத்தில் தன் விஷமத்தைக் காண்பிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இந்திய ராணுவக் கூட்டமைப்பின் தளபதி (CDS), ’எந்தத் தரப்பிலிருந்தும், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்நிலையில் இருக்கிறது’ என சிலநாட்கள் முன்பு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
**
சீனா வேறு ஏதோதிட்டத்துடன் குடைச்சல் கொடுப்பதை ஆரம்பித்திருக்கிறது. நேருவைப் போல பயப்படாமல், இராணுவம் ஓரளவு தயார் நிலையில் இருக்கிறது.
ஒரு வேளை யுத்தம் வந்தால், அது இந்தியத் தரப்புக்கு நிறைய சேதம் விளைவித்தாலும் long termல், சீனப் பொருட்கள் முழுவதுமாக பகிஷ்பரிப்பில் போய் முடியும். அது இந்தியாவிற்கு நல்லதாகத்தான் அமையும்.
சீனா எப்போதுமே நம்பகமான கூட்டாளி இல்லை. இதனை இலங்கை, பாகிஸ்தான், நேபாள் மற்ற நாடுகளும் புரிந்துகொண்டிருக்கும்.
LikeLike
@புதியவன் :
வருகை, கருத்துக்கு நன்றி.
இந்தக் குளிர்காலத்தில் (நவம் – மார்ச்) போர் வெடிக்காமல் இருக்கவேண்டும் . போர் என்றாலே இருதரப்பிலும் பெரும் சேதம் ஏற்படும். ஏற்கனவே பொருளாதாரம் உலகெங்கும் சரிவைச் சந்தித்த காலகட்டம். சீனாவில் ஏற்கனவே உணவுப்பஞ்சம். இன்னும் ஏதேதோ வெளியுலகத்திற்குத் தெரியாப் பிரச்னைகள்!
LikeLike
நம் தலைவர்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள்தானேஇவர்க பேச்சு வர்த்தையில் என்னதான் செய்துவிட முடியும் 20 வீரர்களிந்தியாவிலிருந்து இறந்தபோது அவர்கள் தரப்பு சேதம் ஏதும் இல்லைய தெரியவில்லையா
LikeLike
@ பாலசுப்ரமணியம் ஜி.எம்.: அவர்கள் தரப்பில் யாரும் இறக்கவில்லையா? உங்கள் கணக்கா இது? சீனாவின் பிரதிநிதிகள் கூட இப்படிச் சொல்லவில்லையே ஐயா! சீனாவின் அதிகாரபூர்வ நாளேடு Global Times இரண்டு நாட்களுக்குப் பின், ‘இருதரப்பிலும் உயிரிழப்புகள்’ எனப் பொதுவாகச் சொன்னது. மேலும் சில நாட்கள் கழித்து, தங்கள் உயிரிழப்பில் இரண்டு ராணுவ அதிகாரிகளும் அடக்கம் என்றது. இது சீனாவின் அதிகாரபூர்வ செய்தி! ஆனால் உங்கள் கணக்கில் இந்தியா 20, சீனா 0. ! அபாரம்..
எல்லைச் சண்டைக்குப்பின், அமெரிக்க பாதுகாப்பு வட்டாரத்தகவல்கள் சீன மரணங்களை 35 எனச் சொன்னது. இன்னொரு தகவலின்படி சீனாவின் உயிர்இழப்பு 45. வாய்மூடியிருப்பது கம்யூனிஸ்ட் சீனாவின் வழக்கம். அவர்களது அரசியல் முறை. அதனை வெளிநாட்டு சீனர்களே கண்டித்திருந்தார்கள். சமீபத்தில்கூட எல்.ஓ.சீ. யின் சீனப்பக்கத்தில் எல்லைத்தகராறில் உயிரிழந்த சீனத் துருப்புகளின் கல்லறைகளின் படங்கள் வந்திருந்தது. பாவம், நீங்கள்..
LikeLike