மேலும் மேலும் அணு ஆயுதங்கள்

அமெரிக்காவின் பொதுவான ஆதரவை, குறிப்பாக நிதி உதவியை அவசரமாகக் கோரியிருக்கிறது பிரிட்டன். என்ன.. ஏன் ? கொரோனா பிரச்னையில் நாடு நொடித்துவிட்டதா? அவ்வளவுதானா கிரேட் பிரிட்டன்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்திற்கு கொரோனா பெரிய கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இது வேற விஷயம். ‘ஐரோப்பியப் பாதுகாப்பு’ என்கிற முகமூடியைப் போட்டுக்கொண்டு அமெரிக்கக் கூட்டாளியான பிரிட்டன் வகுக்கும் புதுவகை ஆயுதத் தயாரிப்புத் திட்டம்.

’கப்பற்படையில் சேர்க்கவென, நவீன அணு ஆயுதம் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறோம், நீங்களும் சேர்ந்து கொண்டால் பின்னாளில் ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் வரவிருக்கும் பேராபத்தை நேட்டோ கூட்டணி (NATO Alliance) சார்பாக சரியாக எதிர்கொள்ளமுடியும்…’ என்கிறது தற்செயலாகக் கசிந்துவிட்ட ஒரு அதிகாரபூர்வக் கடிதத்தின் சாரம். பிரிட்டிஷ் பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ் (Ben Wallace) தன்னுடைய அமெரிக்க இணைக்கு ரகசியமாக அனுப்பிய அன்பு மடல். அமெரிக்க செனட்காரர்களை (பார்லிமெண்ட் குழு உறுப்பினர்கள்) இப்போது மண்டையைப் பிய்த்துக்கொண்டு உட்காரவைத்திருக்கிறது இது. ஏற்கனவே அமெரிக்க அணு ஆயுதங்கள், வகை, வகையான ஏவுகணைகள் போன்றவற்றின் நவீனமயமாக்கலுக்காக ட்ரம்ப் அரசின் அமெரிக்க பட்ஜெட் திட்டங்கள், 1 ட்ரில்லியன் டாலர்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

W-93 அழைக்கப்படும் இந்த பிரிட்டிஷ்-வகை ரகசிய அணு ஆயுதம்பற்றி கூடுதல் விபரங்கள் வெளிவரவில்லை. அமெரிக்க-சோவியத் பனியுத்த காலத்தில் (Cold War Period) பேசப்பட்டு, தயாரிப்பில் தாமதிக்கப்பட்ட ’டிசைன்’-ஐ மையமாகக் கொண்டது இது என்கிறது ஒரு தகவல். ஏற்கனவே அமெரிக்கக் கப்பற்படையில் பணியிலிருக்கும் ட்ரைடண்ட் 2 (Trident II) ஏவுகணைகளில், ஏகப்பட்ட பட்ஜெட் பணத்தை விழுங்கிவிட்ட அமெரிக்க W-76 நவீன அணுஆயுதங்கள் இணைக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளன. அமெரிக்க W-76-ன் அழிக்கும் சக்தி, ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமாவின் மீது அமெரிக்காவினால் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட ஆறு மடங்கு அதிகம் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். பிரிட்டன் தயாரிக்கவிருக்கும் W-93, அமெரிக்க W-76-ஐ விடக் கூடுதல் அழிவுசக்தி கொண்டதாக இருக்கும் என்பது நிபுணர்களின் யூகம். இவை விரைவில் தயாரிக்கப்பட்டு, பிரிட்டிஷ் கப்பற்படைக்கான ட்ரைடண்ட் (Trident) வகை ஏவுகணைகளில் வரும் வருடங்களில் பொருத்தப்படவிருக்கிறது.

ஏற்கனவே உலகில் இருக்கும் அணு ஆயுதங்களில் 85%-க்கும் மேலானவை, சூப்பர் வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யாவின் கைவசம் இருக்கின்றன. பிரிட்டன், சீனா, இந்தியா, ஃப்ரான்ஸ், பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகளில் மீதமுள்ள 15% அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பெரிய யுத்தம் நடந்து, அதில் தற்செயலாக ஓரிரண்டு நவீன அணுஆயுதங்கள் வீசப்பட்டாலே போதும், அந்தப் பிரதேசமே அழிந்துவிடும். மீண்டு நிமிர்ந்து எழ பல வருடங்கள் ஆகும். அதுவரை அங்கே புல்கூட முளைக்காது. இப்படிப்பட்டப் பேரழிவு ஆயுதங்களை (அணு ஆயுதங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவை) விதம்விதமாகத் தொடர்ந்து தயாரிக்க, மேம்படுத்த ரகசிய முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இடையிடையே ’அணுஆயுதத்தைக் குறைப்போம், உலக அமைதியைக் காப்போம்’ எனச் சொல்லிக்கொண்டு அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (START -Strategic Arms Reduction Talks) என்கிற பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கிடையே அவ்வப்போது கையெழுத்திடப்படுகின்றது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒபாமா, மெட்வடேவ்

தற்பொழுது நடப்பில் இருக்கும் அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New START Treaty) முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா (Barack Obama) மற்றும் ரஷ்ய அதிபர் த்மித்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev) ஆகியோரால் 5 பிப்ரவரி 2011-ல் கையெழுத்திடப்பட்டது.5 பிப்ரவரி 2021-ல் முடிவுக்கு வரும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் மேற்கொண்டு பேரழிவு ஆயுதங்களை ராணுவப்பணியில் அமர்த்துவதைத் தவிர்க்கிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் 1550 அணுஆயுதங்களைத் தன் ராணுவம் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதற்குமேல் போகக்கூடாதாம். அடடா, என்ன ஒரு முன் ஜாக்ரதையான பாதுகாப்பு உணர்வு!

கொரோனாவின் கைங்கர்யம் காரணமாக, அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் பொதுமக்கள் ஆதரவு வெகுவாகக் குறைந்து வருகிறது. போகிறபோக்கைப் பார்த்தால், 2021-ல் வாஷிங்டனில் ஜோ பிடென் (Joe Biden) ஜனாதிபதியாக உட்கார்ந்திருப்பார் எனத் தோன்றுகிறது. அவருக்கும் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையே மேற்கொண்டு இன்னொரு ஒப்பந்தத்திற்காகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடக்கும். ஏதேதோ பேசி, ஒரு முடிவுக்கு வந்து, கையெழுத்திடுவார்கள். ஆனால், மற்றொரு பக்கம் மேலும் மேலும் அணுஆயுதங்கள் ஏதோ ஒரு வடிவில் ரகசியமாகத் தயார் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். எந்த ஒரு அணுஆயுத நாடும் இன்னொரு நாட்டை இந்த விஷயத்தில் நம்பத் தயாராக இல்லை. அறிந்தும் தவிர்க்கமுடியாதது போலாகி அழிவை நோக்கி, போட்டி போட்டுக்கொண்டு உலகை நகர்த்திவருகிறார்கள் நாடுகளை ஆள்பவர்கள். எத்தனைதான் தாங்கும் இந்த உலகமும்?

**

11 thoughts on “மேலும் மேலும் அணு ஆயுதங்கள்

    1. @ SRIRAM : தன் தலையில் தானே தீ வைத்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டான் !

      Like

  1. //அணுஆயுதத்தைக் குறைப்போம், உலக அமைதியைக் காப்போம்//

    இதெல்லாம் நொண்டிச்சாக்கு நான் என்றுமே சொல்வது விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே…

    அடுத்தடுத்த தலைமுறைகள் இன்னும் துயரங்களை சந்திக்க வேண்டியது வரும். உலக அழிவு நிச்சயம்.

    Liked by 1 person

    1. கில்லர்ஜி விஞ்ஞான வளர்ச்சியைக் குறை நாம் குறை சொல்லக் கூடாது. அந்த வளர்ச்சி இல்லை என்றால் இன்று நாம் நீங்கள் உட்பட பதிவு எழுத் முடியாது. மின்னூல்கள் போட முடியாது. கரண்ட் கூட இருந்திருக்காது. கணினி இருந்திருக்காது. கார் இருந்திருக்காது. ஃப்ளைட் என்று இப்போது நாம் பயன்படுத்தும் எதுவுமே இருந்திருக்காது. எல்லாவற்றிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துத்தான்.

      அது கத்தி போன்றது. கத்தியால் கொலையும் செய்யலாம் என்பதால் நாம் காய் நறுக்கக் கத்தி பயன்படுத்தாமல் இருக்கோமா? அதை எதுக்குப் பயன்படுத்த வேண்டுமோ எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி அதுக்குத்தானே பயன்படுத்துகிறோம்.

      நாம் விஞ்ஞானத்தைப் அதன் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டே அதைக் குறை சொல்லக் கூடாது. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருக்கலாமே.!! எந்த வசதியும் செய்து கொள்ளாமல்…வாழவும் செய்யலாமே!

      கீதா

      Like

    2. @ கில்லர்ஜி தேவகோட்டை:
      உண்மை. அடுத்த தலைமுறைகளுக்குத் துன்பப் பட்டியல் காத்திருக்கிறதுதான்..

      Like

  2. மனிதனின் சிந்தனைச் செயல்பாடுகள் அமைதியை நோக்காமல் சுயநலம், அதில் கிடைக்கும் லாபம். ஆள்வது, மண்ணாசையில் இருப்பதால் அழிவை நோக்கித்தான் செல்லும் ..

    கீதா

    Like

    1. @கீதா: சூது, வாதுடன் அலையும் மனிதனுக்கு, அவனுக்கு ‘வேண்டியது’ கிடைக்கத்தான் செய்யும்!

      Like

  3. அணு ஆயுதம் என்பது பேராபத்தை விளைவிக்கும் ஒன்று. மக்களைக் காக்க வேண்டித்தானே நாட்டை ஆள்கிறோம் என்று பேசும் தலைவர்கள் அழிவை நோக்கிப் பயணிக்கின்றனர்.

    துளசிதரன்

    Like

    1. @ துளசிதரன்: \

      அரசியல்வாதிகள்தானே ஒவ்வொரு நாட்டையும் ஆள்பவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், அதற்கேற்ற செயல்பாடுகளும் அவர்களது ‘நெறி’! அவஸ்தைப்படுவது அப்பாவிகளின் விதி..

      Like

  4. ஆயுதங்கள் அடுத்தவனை பயமுறுத்த யாராவ்து உபயோகித்தால் தால் அவர்களும் will be paid back in their own coin and they know it

    Liked by 1 person

    1. @ GM Balasubramaniam: அப்படி நினைத்துத்தான் கொஞ்சம் தைரியாமாக சிலர் இருக்கிறார்கள்!

      Like

Leave a comment