சுதந்திரத்துக்கு முன்னான காலகட்டத்தில், நாட்டில் இருந்த பல திறன்வாய்ந்த நாடக நடிகர்களில் ஒருவர். அந்தக்காலத்தின் புகழ்பெற்ற Boys நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இளம் வயதிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து நாடக உலகையே, தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் திருப்பிப் போட்டவர்! அருமையான கலைஞர். இப்படிப்பட்ட திறமையை வைத்துக்கொண்டு சினிமா உலகிற்குள் நுழையாதிருக்கமுடியுமா? நுழைந்தார், அந்தக் காலத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்த ‘பேசும்படங்களிலும்’ (அதற்கு முன் ’வாய்பேசாத’ படங்கள்தான் ஒடிக்கொண்டிருந்தன எனத் தனியாகச் சொல்லவேண்டுமா!) பிரவேசித்து, திறமை காட்டிய தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க பங்களிப்பாளர்.
’அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1941) படத்தில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கிறார். 1952-ல் வெளியான புகழ்பெற்ற ‘பராசக்தி’ படத்தில் இளம் சிவாஜிகணேசன், கருணாநிதியின் வீரதீர, காரசார வசனத்தில் வெடித்துக்கொண்டிருக்க, நிமிர்ந்த நெஞ்சோடு பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாக்யம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது! பலபடங்களில் வில்லன் வேலை. அதில் மெச்சப்பெற்ற சில பங்களிப்புகள் உண்டு.
அட, யாரப்பா அது? கே.பி.காமாட்சி ! முழுப்பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஒரு கட்டத்தில் ’நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்..’ எனச் சொல்லிவிட்டதோ தில்லுமுல்லுத் திரையுலகம்… நடிக்க வாய்ப்புகள் மேலும் வரவில்லை. மூடிக்கொண்டு அழுபவரா காமாட்சி? வாடி விழுந்துவிடுவாரா? நடிக்கத்தானே வாய்ப்பில்லை? பாட்டு எழுதலாம்ல.. முன்னாடியே சில பாடல்களைத் சினிமாத்திரைக்காக எழுதியிருக்கிறோமே – எனத் தெளிந்து ஸ்டூடியோவைச் சுற்றிவந்திருக்கிறார் மனுஷன். மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் சிறந்தவர் காமாட்சி. அவ்வப்போது வாய்ப்பு கிடைக்க, மனதை மயக்கும் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த கவிஞராக உருமாற்றம் பெற்றார். அப்போது எழுத ஆரம்பித்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம், கே.பி.காமாட்சி சுந்தரத்தை ஆசானாகக் கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.
அந்தக்காலத்திலேயே ‘பழையபாட்டு’ எனக் கருதப்பட்ட சில ரம்யமான பாடல்களை ஆல் இந்தியா ரேடியோ, ரேடியோ சிலோனின் கைங்கர்யத்தில் அனுபவித்திருக்கிறோம் – இசைக்காக மட்டுமல்லாது அவற்றின் எழில்கொஞ்சும் வார்த்தைவடிவத்திற்காகவும். ஆனால் எழுதியவர் காமாட்சி சுந்தரம் எனத் தெரிந்திருக்கவில்லையே! கீழே கொஞ்சம் பாருங்கள்..
’வாழ்க்கை’ (1941) படத்தில் இந்தப் பாடல் : “உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோபம் கொள்ளுவதேன்!”
‘பராசக்தி’(1952)-யில் வரும் :
“ஓ! ரசிக்கும் சீமானே !
வா, ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்..!
அதை நினைக்கும்பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் !”
‘எதிர்பாராதது’ (1954) படத்தில் வரும் ”சிற்பி செதுக்காத பொற்சிலையே..!”
’அமரதீபம்’(1956) படத்தில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் சேர்ந்து, புகழ்பெற்ற இசையமைப்பாளரான T. சலபதி ராவின் இசையில் உருகும் ”தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு..”
எனக் கொஞ்சிச் செல்லும் பாடல். கவிஞர் காமாட்சியின் மொழிவண்ணத்தை ரசிப்பதற்காக இந்தப் பாடலை முழுமையாக அனுபவிப்போம்:
தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
பூங்கொடியே நீ சொல்லுவாய்
வீணை இன்ப நாதம்
எழுதிடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே ..
காற்றினிலே .. தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ .. ஓ.. ஓ..
புதுமை இதில்தான் என்னவோ
மீன் உலவும் வானில்
வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும்
ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
மென்காற்றே நீ சொல்லுவாய்
கான மயில் நின்று
வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே, வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே .. ஓ.. ஓ..
காணாததும் ஏன் வாழ்விலே ..
கண்ணோடு கண்கள்
பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல்
வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் .. ஓ.. ஓ..
கலைமதியே நீ சொல்லுவாய் !
**
ஏகாந்தன் அண்னா, இந்தப் பாடல்கள் என்ன அழகான பாடல்கள் மிகவும் ரசித்ததுண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல் இலங்கை வானொலியின் உபயத்தில். ஆனால் பாடலாசிரியர் இவர் பற்றி எதுவும் தெரியாது. உங்கள் மூலம் அறிய முடிந்தது.
ஏனோ திரையுலகம் பல நல்ல கலைஞர்களைக் கண்டுக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டது எனலாம்.
கீதா
LikeLike
பழைய படங்களில் பார்த்த நினைவு உள்ளது. ஆனால் இவரது பெயர் கூட இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். அவரைப் பற்றிய விவரங்களும். பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இவர் எழுதியது என்ற விவரமும் உங்கள் மூலம்தான் அறிகிறேன்.
மிக்க நன்றி சார்
துளசிதரன்
LikeLike
பாடல்கள் எல்லாம்கேட்டு ரசித்தவை முதலில் எல்லாம் ரசிக்குசீமானே என்றுதான் நினைத்துகொண்டிருந்தோம் தகவல்கள் புதிது
LikeLike
தேன் உண்ணும் வண்டு பாடல் மிகவும் பிடித்த பாடல்.
என்ன ஒரு டியூன்… சுசீலாம்மாவின் குரலை ரசித்துக் கொண்டிருக்கும்போதே ஏ எம் ராஜாவின் குரல் வந்து முந்திச் செல்லும் பாருங்கள்… இனிமை! இது இவர் எழுதிய பாடலா? சூப்பர்.
LikeLike
@ கீதா: ஆமாம், பல நல்ல கலைஞர்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்ததில்லை. அதேபோல், பல சராசரி ‘ஸ்டார்’களுக்கு ஏகப்பட்ட பிராபல்யம்!
@ துளசிதரன் : வருகை, கருத்துக்கு நன்றி துளசிதரன் சார்.
@ பாலசுப்ரமணியம் ஜி.எம்.: ஓ .. ரசிக்கும் சீமானே ..பாடலை பலமுறை சிறுவயதில் ரசித்திருக்கிறேன். சரியாக வரிகளைக் கவனிக்கமுடிந்ததில்லை.
@ ஸ்ரீராம் : இவரைப்பற்றி 2017-லிலேயே தகவல் சேர்த்துவைத்திருந்தேன். ஆனால் இன்றுதான் வலையில் போட முகூர்த்தம் வந்தது! இதேபோல் இன்னும் ஒரு கவிஞர்…
LikeLike
இவரைப்பற்றி இவரது உறவினர் கலைஞானம் அவர்கள் தன் புத்தகத்தில் குறித்திருக்கிறார். குடி, மனைவிகள் என்று திரை வாழ்க்கை பாழாய்ப்போனவர்களில் இவரும் ஒருவர். அதீத திறமை தேவையில்லை. இருக்கும் திறமையை பொன் போலப் பொத்தி வைத்து பிரகாசிக்கச் செய்யும் நல்லொழுக்கம்தான் முக்கியம் என நினைக்கிறேன். இதுபோல மிகத் திறமை வாய்ந்த கம்பதாசன் அவர்களையும் இன்னும் பலரையும் குடிப்பழக்கம் ஒழித்தது.
LikeLike
@ நெல்லைத்தமிழன்:
இவரின் ’அந்தப் பக்கம்’ எனக்குத் தெரிந்திருக்கவில்லை! சினிமாக்காரர்களில், பெண், குடி என மிதந்து அழியாதவர்கள் வெகுசிலரே. இப்போதும் இதே கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது.
சினிமாவைத் தாண்டிப் பார்த்தோமானால், நல்லொழுக்கம் என்பது நன்றாகப் பேசப்படுகிறது, பொதுவாக. ஆனால் எத்தனை பேரிடம் உண்மையில் அது இருக்கிறது? எத்தனை பேர் இது அத்தியாவசியமான ஒன்று என நம்புகின்றனர் என்றால் அப்படியெல்லாம் நிறையப்பேர் இல்லை என்பது தெரியவரும். வாழ்க்கை என்பது, ‘அனுபவிக்க’த்தான் என அலையும் மனிதரிடம் ஒழுக்கம் பற்றிப் பேசினால் புரியாது.
நாளுக்குநாள், இன்னும் நிலமை மோசமாகவே வாய்ப்பதிகம்.
LikeLike
எல்லாம் கேட்டு ரசித்த பாடல்தான் ஆனால் இன்றுதான் பாடலாசிரியர் அறிந்து கொண்டேன்.
//ஓ ரசிக்கும் சீமானே
வா, ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்..//
மறக்கும் பாடலா இது அனைவரும் அறிந்த பாடலே…
LikeLike
@கில்லர்ஜி தேவகோட்டை:
ஆம், மனதை லயிக்கவைக்கும் பாடல்தான் இது!
LikeLike
ஆஹா! எல்லாமே அருமையான பாடல்கள்! ஆனால் எழுதியவர் பற்றி இப்போத் தான் தெரிந்தது. அதிலும் “தேன் உண்ணும் வண்டு” பாடலும், “ரசிக்கும் சீமானே!” மறக்க முடியாத பாடல்கள். தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
LikeLike
@ கீதா சாம்பசிவம் : வாங்க! கருத்துக்கு நன்றி.
LikeLike