இந்திரா பார்த்தசாரதி

தமிழ் மொழியின் சமகால இலக்கிய ஆளுமைகளுள் ஒருவர்.  தரமான படைப்புகள் பல தந்தவர். இ.பா. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சென்னையில் பிறந்த கும்பகோணத்துக்காரர். முனைவர் பட்டம் பெற்ற படைப்பாளி. தன் உயர் கல்விப்பின்னணியினால், டெல்லி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், போலந்தின் வார்ஸா பல்கலைக் கழகம் என்றெல்லாம் விஸ்தாரமாகப் பணிபுரிந்த அனுபவமுண்டு. இந்தியக் கலாச்சாரம், தத்துவம் என போலந்தில் அயல்நாட்டு மாணவர்களுக்கு ஐந்தாண்டு காலம் பேராசிரியராகக் கற்பித்திருக்கிறார்.

டெல்லியில் சுமார் 40 வருட வாசம் என்பதால் இவரது கதைகளின் கரு டெல்லி மாநகரத்தில் நிலைகொண்டிருப்பது வழக்கம். இவரது முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது. விகடனில் இலக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பை ஆரம்பித்துவைத்தவர்கள் ஜெயகாந்தனும், இவரும்தான் எனலாம். நடுத்தரவர்க்கத்து மனிதர்களே இவரது கதைமாந்தர்கள். மனிதனின் தனிமை, ஏக்கம், உள்மன உறுத்தல்கள், பொதுவாக வாழ்வின் நிறைவின்மை போன்றவை இவரது படைப்புகளில் மேலெழுந்து காணப்படுகின்றன.  ’தொலைவு’, ‘ஒரு கப் காப்பி’, ‘குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்’ போன்றவை வெகுவாக ஸ்லாகிக்கப்பட்ட இவரது சிறுகதைகளில் சில. மனித தெய்வங்கள், நாசகாரக்கும்பல் என்கிற தலைப்புகளில் சிறுகதைத் தொகுதிகள், வேதபுரத்து வியாபாரிகள், யேசுவின் தோழர்கள், வெந்து தணிந்த காடுகள், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன போன்ற நாவல்கள், நந்தன் கதை, ஔரங்கசீப், ராமானுஜர், கால எந்திரம், கொங்கைத்தீ போன்ற நாடகங்கள், சில  கட்டுரைத்தொகுதிகள், Ashes and Wisdom, Wings in the Void, Into this Heaven of Freedom ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் என, தமிழ் இலக்கியத்தில்  விரிவாக, தீர்க்கமாக அரைநூற்றாண்டு காலமாக இயங்கிவரும் படைப்பாளி.

இ.பா.வின் புதினமான ‘குருதிப்புனல்’ 1977-ல் ’சாஹித்ய அகாடமி’ விருதைத் தமிழுக்குப் பெற்றுத்தந்தது. இந்திய மொழிகளில் தரமான இலக்கியப் படைப்புகளுக்காக K.K. Birla Foundation- நிறுவிய ‘சரஸ்வதி சம்மான்’ (Saraswati Samman) விருதை, இவரது ‘ராமானுஜர்’ நாடகம் தமிழ் மொழிக்காக வென்றது. ’பாஷா பரிஷத்’ விருதும்  கிடைத்துள்ளது. சிறப்புமிகு இலக்கியப் பங்களிப்புக்காக இந்திய அரசு 2010-ல் ’பத்ம ஸ்ரீ’ விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது. ‘தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்’ விருது (The Hindu Lit for Life Award) வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக இந்திரா பார்த்தசாரதிக்கு 2018-ல் வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சரஸ்வதி சம்மான் ஆகிய மூன்று பெரும் தேசியநிலை விருதுகளையும் வென்ற ஒரே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிதான் என்கிறது ‘இந்து தமிழ் இதழ்’!

தமிழ் உலகில், சமகால அரசியல்தாக்கத்தை வெளிப்படுத்தும் இலக்கியப் படைப்புகளைத் தந்த வெகுசில எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவராக அறியப்படுகிறார். இ.பா.வின் ‘குருதிப்புனல்’ கீழவெண்மணிப் படுகொலை/அரசியல் பின்னணி  கொண்ட நாவல். இவரது ’உச்சிவெயில்’ எனும் குறுநாவல் ‘மறுபக்கம்’ (இயக்கம்: சேதுமாதவன்) என்கிற திரைப்படமாக 1990-ல் வெளியிடப்பட்டது. இந்திய ஜனாதிபதியின் ‘தங்கத்தாமரை’ விருதை (Golden Lotus Award) தட்டிச்சென்ற முதல் தமிழ்ப்படம் இது.

ஒரு கட்டுரையில் இந்திரா பார்த்தசாரதி சொல்கிறார்: “பிரபஞ்சத்தில் ‘ சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்த முடிவில் வெறும் பாழ் ‘ என்று எதுவுமில்லை. அனைத்தும், ‘சூழ்ந்து அகன்று தாழ்ந்த உயர்ந்த முடிவில் பெரும் ஜோதி’ என்று நம்மாழ்வார் வாக்கில் கூற முடியும்.  இதற்கு ‘உள்பார்வை’ வேண்டும். ‘உள்பார்வையின்’ இன்னொரு பெயர் கற்பனை. இது சிந்திப்பதால் வராது. இதயத்தின் வெளிச்சம். பிரபஞ்சத்தில் எதுவுமே எதேச்சையாக உருவாவதில்லை. அனைத்தும் சத்தியத்தின் வெளிப்பாடுகள்.”

’சிறுகதை’ பற்றி இந்திரா பார்த்தசாரதி  சொல்வதென்ன : “ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அந்தக் கதையைப் படித்து முடித்த பிறகு அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக்கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்னையை மையமாக வைத்துக்கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தான் இந்த ஆற்றல் உண்டு. பிரச்னையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையின் அழகுணர்ச்சியோடு பிரச்னையைச் சொல்வதுதான், ஒரு சிறந்த படைப்பாளியின் திறமை …. வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்வி மனப்பான்மையையும் இலக்கியமாக்கிவிடக் கூடாது” என்கிற கருத்தை முன்வைக்கிறார் இ.பா.

அடுத்த பதிவில் இவரது சிறுகதை ஒன்றை வாசிப்போம்.

**

அரட்டைக் குறிப்பு! : இந்திரா பார்த்தசாரதியும், நா.பார்த்தசாரதியும் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமானவர்கள் எனலாம் . உ.பி.யின் அலிகரில் எனது மனைவின் குடும்பம் வசித்த காலகட்டம். அலிகர் முஸ்லிம் பல்கலையில் (AMU) ‘நவீன இந்திய மொழிகள்’ பிரிவிற்குத் தலைமை தாங்கியிருந்த அடியேனின் மாமனாரைப் பார்க்க என, வீட்டுக்கு சிலமுறை இ.பா. வந்திருக்கிறார் – நட்பு, பல்கலைப்பணி தொடர்பாக இருந்திருக்கும்.

 

**

 

 

9 thoughts on “இந்திரா பார்த்தசாரதி

 1. இந்திரா பார்த்தசரதி நம்பதிவர் ஒருவரின் உற்வு மர்மதேசம் தொடரின் ஆசிரியர் என்று நினைப்பு

  Like

 2. நான் இவரது படைப்புகளை வாசித்ததில்லை.  சிறுகதைகள் பற்றிய அவர் கருத்துக்கு உடன்படாமல்தான்  இப்போது நிறைய கதைகள் வெளிவருகின்றன.

  Like

 3. இ பா அவர்களின் கதைகளை சிறுகதைகள்.காம் ல் வாசிக்கிறேன் அண்ணா. தொலைவு வாசித்திருக்கிறேன். முடியாத கதையும் வாசித்திருக்கிறேன். குருதட்சிணை அடுத்து.

  முடியாத கதையில் ஒரு வரி வரும் “அவனுக்கு வாழ்க்கையில் ஒரு தோல்வி, வாசிப்பவர்களை ஈர்க்கும் படி எழுதவரவில்லை என்கிறார்கள் என்று. …இது நான் அடிக்கடி எனக்குச் சொல்லிக் கொள்வது!!! ஹா ஹா நம்மால் வாசிப்பவர்களை ஈர்க்கும்படி எழுத முடியவில்லையே என்று.

  இந்தக் கதையும் நன்றாகவே இருக்கும்.

  சிறுகதைகள் பற்றிய அவர் கருத்து அருமை.

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: நீங்கள் இ.பா.வின் சிறுகதைகளை இப்போது வாசித்துவருகிறீர்கள் என்பதில் சந்தோஷம். ‘முடியாத கதை’ மனசுக்கு ஹெவியானதுதான் -நம்மைப்போல கத்துக்குட்டி ‘எழுத்தாளர்களுக்கு’! இருக்கட்டும், அதனாலென்ன, all in the game!

   Like

 4. @ திண்டுக்கல் தனபாலன்: வருகை, கருத்துக்கு நன்றி.

  @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்: ஸ்ரீராமின் பதிலைக் கவனிக்கவும் !

  @ ஸ்ரீராம்: நீங்கள் இ.பா.வினது ஒன்றுகூட வாசிக்கவில்லையா? ஆச்சரியம். ஆம், இப்போது வரும் சிறுகதைகளில் சில எப்படி, எப்படியோ எழுதப்படுகின்றன. ஏதோ, அவர்களாலானது !

  Like

 5. இந்திரா பார்த்தசாரதி, தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் சாகித்ய அகாதெமியின் FELLOW ஆக்கப்பட்டார். வாழ்நாள் கௌரவம் இது. தமிழில் இதற்குமுன்பு இப்படிப்பட்ட சிறப்பு ஒரே ஒருவருக்குத்தான் கிட்டியது. அவர், ஜெயகாந்தன். சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் நான் நேரிடையாகக் கலந்துகொண்டு இ.பா. அவர்களின் உரையைக் கேட்டேன். அவர் டில்லியில் இருந்தபோதும் நான் பார்த்திருக்கிறேன்.

  Liked by 1 person

  1. @ Chellappa Yagyaswamy : வருக!

   நான் டெல்லியில் பல வருடங்கள் இருந்தபோதும் இ.பா.வை பார்த்ததில்லை. டெல்லி தமிழ்ச் சங்க நிகழ்வுக்கு வந்திருந்த 90-களிலிருந்த கி.ரா.வைப் பார்த்துப் பேசியிருக்கிறேன்.

   இ.பா-வுக்கு சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப். சரியான தேர்வு. நீங்கள் அந்த சென்னை நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s