யமனின் சிரிப்பு !

முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு? சங்கீதம் கற்றுக்கொள்ள! சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால் அங்கேயே விழுந்துகிடப்பான். வேறேதும் தேவையில்லை. சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ஆசை நாளுக்குநாள் அவனுக்குள் பொங்கியது. ஆனால் அப்படிக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டுமேயானால், நாரதமுனியிடம்தான் கற்பேன் என மனதில் சங்கல்பித்து வாழ்ந்துவந்தான். அது நடக்குமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. சங்கீதத்தின் உன்னதத்தைத் தவிர வேறு சிந்தனையின்றி சுற்றித்திரிந்தான். அன்று திடீரென, நாரத முனிவர் எதிர் வரும் பாக்கியம் பெற்றான். அதிர்ந்தான். அவர் முன்னே நடுங்கிப் பணிந்தான். கைகட்டி நின்று, தன் விண்ணப்பத்தை உருக்கத்தோடு வைத்தும் விட்டான். அவரது திருவுள்ளமறிய அவர் முகம் பார்த்து ஏங்கி, தள்ளி நின்றான். நாரத மஹரிஷி அவனை ஒருகணம் பார்த்தார். சம்மதமென்பதாகத் தலையசைத்தார். ஆச்சரியம்தான். அவர் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்.

அவனுக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவனும் மிகுந்த சந்தோஷத்துடன், நாளுக்குநாள் அகலாத சிரத்தை, அதிபக்தியுடன் கற்றுவந்தான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் தேவலோகத்தில் ஒரு விசேஷமான சங்கீதக் கச்சேரி. தேவர்களோடு உட்கார்ந்து நாரதரும் இத்தகைய கேளிக்கைகளை அனுபவிப்பதுண்டு. தேவலோகக் கச்சேரியின் நாள் நெருங்கிக்கொண்டிருக்க, நாரத முனிக்கு, தன் சிஷ்யனையும் அங்கு கூட்டிப்போய் உட்காரவைத்தாலென்ன எனத் தோன்றியது. அத்தகைய கேட்பதற்கரிய உன்னத சங்கீதத்தை இந்தப் பித்தனும் கேட்கட்டும், ஏதாவது தெரிந்துகொள்ளட்டும் என முடிவு செய்தார். தன் யோகசித்தியினால் அவனையும் கூட்டிக்கொண்டுபோய், கச்சேரி நடக்கவிருக்கும் இந்திரசபையில் தனக்கருகிலேயே உட்காரவைத்துக்கொண்டார்.

தேவலோகக் கச்சேரி ஆரம்பித்தது. ‘ஹாஹா’, ‘ஹூஹூ’ என அழைக்கப்படும் கந்தவர்வ ஜோடியின் இசைக்கதம்பம் சபையில் மெல்ல எழுந்து ஏகாந்தமாய்ப் பரவியது. சபை நொடியில் மயங்கியது; உருகிக்கிடந்தது. நாரதமுனியும், சிஷ்யனும் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் மேலும் தேவர்களோடு, யமதேவனும் அமர்ந்து தேவகானத்தில் லயித்திருந்தான். இடையே அவனது பார்வை, எதிர்த்திசையில் நாரத மஹரிஷிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞனின் மேல்பட்டது. ஆச்சர்யம். இவன் எங்கே இங்கே? – என நினைத்தவனின் முகத்தில் சிந்தனை, லேசான முறுவல். கச்சேரியை ரசிப்பதும், நாரதசிஷ்யனின் பக்கம் அவ்வப்போது கண்களைப் பாயவிட்டு மெல்லப் புன்னகைப்பதுமாக இருந்தான் யமன்.

ஒரு கட்டத்தில் அந்த சிஷ்யன் இதைக் கவனித்துவிட்டான். ஆ.. எதிரே இருப்பவன் யமனல்லவா? அரண்டான். அவனால் மேற்கொண்டு சங்கீதத்தில் லயிக்கமுடியவில்லை. பயம், பீதி கடுமையாகத் தாக்கிவிட்டது. தன் குருவிடம் காதோடு, ’யமன் தன்னை அடிக்கடி திரும்பிப் பார்த்து சிரிப்பதை சொல்லி, தனக்கு இதனால் பிராண ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுவதாக நடுங்கியவாறு தெரிவித்தான். நாரத முனிவர் கவனித்தார். சிஷ்யனின் பயத்தில் நியாயம் இருக்கும்போலிருக்கிறதே என நினைத்தார். ‘பயப்படாதே! என்னோடு வா.. எதற்கும் உன்னை பத்திரப்படுத்திவிடுகிறேன்’ என அவனை அழைத்து வெளியே வந்தார். தன் யோகசாகஸத்தினால் வெகுதூரம் பயணித்து பூமியில் ஒரு மலைத்தொடரில், ஒரு ஆழமான குகையைக் கண்டார். அங்கே அவனே உள்ளே கொண்டுபோய் விட்டார். ‘இரு இங்கேயே! உனக்கு எந்த ஆபத்தும் வராது!’ என்று சொல்லிவிட்டு அகன்றார்.

இந்திரசபையில் தன்னிடத்திற்குத் திரும்பிவந்து உட்கார்ந்து சங்கீதம் கேட்கலானார் நாரதமுனி. இடையே, யமதேவனின் பக்கம் மெல்ல கண்களை உலவவிட்டார். அவன் இவரைப் பார்த்து லேசாகப் புன்னகைப்பபதைக் கண்டு திடுக்கிட்டார். என்ன! யமன் இங்கேயும் தன் வேலையைக் காட்டப் பார்க்கிறானா என நினைத்தபடி, யோகநிஷ்டையில் யாரும் அறியாதவாறு யமதேவனிடம் பேசினார். ”யமதேவரே! முதலில் என் சிஷ்யனைப் பார்த்துச் சிரித்தீர். இப்போது என்னைப் பார்த்தும் நகைக்கிறீர். என்னிடமே உமது சாகஸத்தைக் காட்டும் எண்ணமா?” என்று வினவினார்.

யமதர்மராஜன் சொன்னான்: ‘நாரத மஹரிஷி! உம்மிடம் போயா நான் சாகஸம் காட்ட நினைப்பேன்? நிச்சயம் இல்லை. உமது சிஷ்யனை இங்கே பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாழிகையில் மரணம் ஏற்படும். பாறைகள் இடிந்து அவன் தலையில் விழ, நசுங்கி அவன் பிராணன் போகும் என்றிருக்கிறது. அவனோ இங்கு உட்கார்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறான்! எப்படி இது சாத்தியமாகப் போகிறது? அவன் லயித்துக்கிடப்பதைப் பார்த்தால் எழுந்துபோவான் என்றே தெரியவில்லை. அப்படியே அவன் போனாலும் இவ்வளவு சொற்பநேரத்தில், அந்திம ஸ்திதியில் அவனிருக்கவேண்டிய பூலோகத்திலிருக்கும் அந்த மலைக்குகைக்கு எப்படிப் போய்ச்சேரப்போகிறான் என நினைக்கையில் ஆச்சரியமாயிருந்தது, சிரிப்பும் வந்தது’ என்றான்.

”ஓ! அதிருக்கட்டும். ஏன் சிரித்தீர் என்னைப் பார்த்து?

”மஹரிஷி! இப்படி அவனைப்பற்றி, ’அவன் இங்கே உட்கார்ந்திருக்கிறானே.. ப்ரும்மம் அவன் முடிவை எப்படி சாத்தியமாக்கும்’ என நினைத்து வியந்திருக்கையில், நீர் திடீரென எழுந்து அவனைக் கூட்டிக்கொண்டுபோய் பூலோகத்தின் அந்த மலையில் அதே குகையின் ஆழத்தில் ஒளித்துவிட்டு, இங்கே திரும்பி வந்து அமர்வதைப் பார்த்தேன். புரிந்தது. ’ஆஹா, ப்ரும்மம் தன் கார்யத்தை இந்த மாமுனிவரின் கையினாலேயே நிறைவேற்றிக்கொள்கிறதே!’ என ஆச்சர்யப்பட்டு உம்மைப் பார்த்தேன். சிரிப்பும் வந்தது…” என யமதேவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவர்களிருவருக்கும், தூரத்து உலகின் பெருமலை ஒன்று அதிர்வதும், குன்றுகள், பாறைகள் இடிந்து நொறுங்கும் சத்தமும் ஹீனமாகக் கேட்டது.

‘கதை முடிந்தது’ என்றான் யமன்.

”ம்..” தலையசைத்த நாரதர், “விதியின் சக்தி அதீதமானது, காலநியமத்தை விட்டுவிடாதது” என்றார்.

**

17 thoughts on “யமனின் சிரிப்பு !

 1. படித்த கதை, மீண்டும் படித்தேன். நல்ல தத்துவம்.

  Like

 2. இருந்தாலும் ருருவே சிஷ்யனுக்கு ஆப்பு வைத்தது நியாயமாக தெரியவில்லை எல்லாம் விதி கதை சுவாரஸ்யம். அவனது ஆத்மா சாந்தியை அடையட்டும்
  (பக்கத்து வீட்டுக்காரி இறந்து ஒரு வருடம் ஆகிறது)

  Liked by 1 person

 3. தேவனாகவே இருந்தாலும் விதிப்படி தான் நடக்கும். அவரவர் கர்மா. அருமை.

  Liked by 1 person

 4. நாரதருக்கும் விதி தெரிய வில்லையே

  Like

 5. @ கீதா சாம்பசிவம், ஸ்ரீராம், கில்லர்ஜி, வடுவூர் ரமா, ஜி.எம்.பாலசுப்ரமணியம், திண்டுக்கல் தனபாலன் :

  வால்மீகி ராமாயணத்தில் வரும் எண்ணற்ற குட்டிக்கதைகளில் ஒன்று. விதி யாரையும் விடாது என்று சோகத்தோடு அயோத்தி மக்கள் நினைத்து வருந்துகின்றனர் – ராமன் காட்டுக்குப் போவதைத் தவிர்க்கமுடியாத நிலையில் …

  Like

 6. எமது நீதிக் கதைகள் ‘விதி படிதான் நடக்கும் ‘ என்றுதான் சொல்கின்றன.

  Like

 7. இதே கதையை முல்லா கதைகளில் படித்திருக்கிறேன். 

  Like

  1. @Bhanumathy V : நானும் படித்திருக்கிறேன் முல்லா நஸிருதீன் கதைகள். ஆனால் இப்படி வந்து பார்த்ததில்லை!
   நான் இந்தக் கதையின் சுருக்கத்தைக் கண்டது வால்மீகி ராமாயண அடிப்படையில் எழுதப்பட்ட ஆஸ்ரம நூலொன்றில்.

   Like

 8. இதே விதியை காதலர்களைச் சேர்த்து வைத்த கருட மூர்த்தியின் கருணையாகப் படித்திருக்கிறேன்…
  மேலும் இதுபோல் ஒன்று திருவிளையாடற் புராணத்திலும் உண்டு.. சற்றே வேறு விதம்…
  பிராமணரின் மனைவியை வேடன் கொன்றதாக வந்த வழக்கின் நீதி உணர்த்தப்படும் சம்பவம்…

  Liked by 1 person

  1. @ துரை செல்வராஜு:
   யாராலும் விதி தவிர்க்க இயலாதது என்பதை வலியுறுத்த இப்படி பல்வேறு புராணங்களில் இருக்கக்கூடும்தான். கதைவழி அனைத்தையும் சொல்லமுயன்ற காலகட்டம். அதனால்தான் நமக்குப் படிக்க நிறையக் கிடைக்கிறது!

   Like

 9. விதி – அதை யாருமே தெரிந்துகொள்ள முடியாது. ஒருவனுக்கு ஒரு பிரச்சனை. ஜோசியரிடம் போகிறான். அவர் அவனை மறுவாரம் வரச் சொல்கிறார். மறுவாரம் சென்றபோது அவர் அசந்துவிடுகிறார். உன் விதிப்படி நீ இறந்திருக்கணும். உன் பிரச்சனை, நீ புதிய கோவிலைக் கட்டினால்தான் தீர்க்கமுடியும். நீயோ ஏழை. அதனால் இறக்கப்போகும் உனக்கு எதற்கு ஜோசியம் சொல்வது என்று மறுவாரம் வரச்சொன்னேன் என்றாராம். அதற்கு அவன், நான் ஏழையாக இருந்தாலும் தூக்கம் வராதபோது மனக்கண்ணிலேயே கோவிலைக் கட்டினேன் என்றானாம். விதியை மட்டும் அறிய முடிந்தால் அது அனேகமாக கெடுதலாகத்தான் முடியும் என்பது என் எண்ணம்.

  கதையை ரசித்தேன் (முன்பே இதன் வடிவம் தெரிந்திருந்தபோதும்)

  Liked by 1 person

  1. @ நெல்லைத்தமிழன்: விதியை அறிந்துகொள்வதா! ஏற்கனவே மண்டைகொள்ளாப் பிரச்னைகள் மனிதனுக்கு..

   எது நமக்குத் தரப்படவில்லையோ அதைத் தெரிந்துகொள்ளமுயன்றால், அது துன்பத்தில் முடியலாம்..

   Like

 10. நல்ல ஸ்வாரஸ்யமான கதை. எல்லாமே விதிப்படிதான் நடக்கும்தான்.

  துளசிதரன்

  கதை இப்போதுதான் அறிகிறேன். விதி என்ன என்பதை அறிய ஆசைப்படுவதை விட இன்றைய நொடியை வாழ்ந்துவிட்டுப் போகலாமோ?!!!

  கீதா

  Liked by 1 person

  1. @ துளசிதரன், @ கீதா : வருகை, கருத்துக்கு நன்றி.

   நேற்றைய ‘மணி’யைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிராமல், இன்றைய ‘நொடி’யில் இருந்தால் நல்லதுதான்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s