உயிர்க்கொல்லி வைரஸைக் கிளப்பிவிட்டு, தனது உலகளாவிய ஆதிக்க முயற்சிக்கு சவாலாக இருந்துவந்த வல்லரசுகளைச் சாய்த்துப் படுக்கவைத்தாகிவிட்டது, ’இவர்கள் எழுந்து நிற்பதற்குள் நாம் நமது ரகசிய ஏகாதிபத்திய இலக்குகளை நோக்கி ஜாலியாக நடைபோடலாம். உலகில் இனி நம்ம ராஜ்யம்தான்’ என செஞ்சீனா கனவு காண ஆரம்பித்திருந்தால், அது பகல்கனவாகத்தான் போய் முடியும் என்பதற்கான அறிகுறிகள் சர்வதேச வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
கொரோனா எனும் தீநுண்மியின் கோரத் தாக்குதலால், உலகம் ஆடித்தான்போய்விட்டது. எழுகின்ற பேச்சையே காணோம். அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா போன்ற பொருளாதார சக்திவாய்ந்த நாடுகள் குப்புற விழுந்துகிடக்கின்றன. தீநுண்மியின் பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டதாலும், தொழிற்சாலைகளையும் திறந்து உற்பத்திகளை மீண்டும் ஆரம்பித்துவிட்டதாலும், இப்போதைக்கு சீனப் பொருளாதாரம் மட்டும்தான் தாக்குப்பிடிக்கும் நிலையில் உள்ளது.
அமெரிக்காவிலும் மற்றும் மேலைநாட்டு சமூகங்களிலும் காணப்படாத, இந்தியாவின் நேர்மறைசக்திகளான சமூக, வாழ்வியல் வழிமுறைகள், தலைபோகும் பிரச்னை வந்தாலும் மற்ற நாட்டு மக்களைப்போல் பதறிச் செத்துவிடாமல், இந்திய மக்களின் தத்வார்த்தமான சிந்தனைப்போக்கு, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோபலம், அதீத சகிப்புத்தன்மை, மேலும் ‘ஆத்மநிர்பர்’ எனப்படும் ’self-reliant’ பொருளாதாரக்கூறுகள் பற்றிய கூரிய அவதானிப்பும், கூடவே பயமும் சீனாவுக்கு எப்போதும் உண்டு. ஆனால் காட்டிக்கொள்வதில்லை. இந்த நிலையில், உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா சீரழிவுபற்றிக் கூறுகையில், ‘இந்தியா இந்தப் பிரச்னையை சமாளித்து மீண்டுவரும் தன்மை கொண்ட நாடு’ என்றிருக்கிறது சீனா. கூடவே, வைரஸ் பரவல் தொடர்பாக, மற்ற நாடுகளோடு சேர்ந்துகொண்டு, சீனாவைக் குறைசொல்ல, விமரிசிக்கவேண்டாம் என்றும் இந்தியாவைக் கேட்டுகொண்டிருக்கிறது!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனாவின் ‘பிறந்தகம்’ வுஹான் சோதனைச்சாலைதான் என ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறார். உலகெங்குமான நோய்த்தொற்றுக்கு, சீரழிவிற்கு சீனாதான் காரணம் என்பதே அவரது வாதம். அமெரிக்காவின் இந்த சீன எதிர்ப்புக்கு மேலைநாடுகள் நேரடியாக ஒத்துழைப்பு தருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் பிரதான கூட்டாளியான பிரிட்டன், இந்தப் பிரச்னை ஒருவழியாகக் கட்டுக்குள் வரட்டும், பிறகு சீனாவை ’கவனிப்போம்’ என்றிருக்கிறது! பொதுவாகவே சீனாவை விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் நாடு ஜப்பான். சரித்திரம் அப்படி. கடந்தகால பகைமையை எளிதில் மறந்துவிடும் நாடல்ல அது. கொரோனா பூகம்பத்தினால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. தங்களது பெருவணிகக் குழுமங்கள் (டொயோட்டா, நிஸான், ஹோண்டா, ஸுஸுகி, சோனி, பானஸானிக், தோஷிபா, நிப்பான், சான்யோ, டோக்கொமோ(Docomo) போன்ற பல) சீனாவிலிருந்து உடனே வெளியேறவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது ஷின்ஸோ அபே (Shinzo Abe)யின் தலைமையிலான ஜப்பானிய அரசு. இந்த ‘வெளியேறுதலுக்கான’ நஷ்டத்தில் பெருமளவை ஜப்பானிய அரசு தருவதாக அறிவித்தும்விட்டது. ’’ஜப்பானுக்கே எல்லா உற்பத்தித் தொழிற்சாலைகளையும் மாற்றவேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. முதலில் சீனாவிலிருந்து உங்கள் ‘கடை’யைத் தூக்குங்கள். ’புதுக்கடைகளை’த் திறக்க, ஆசியாவிலேயே நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன’’ என்கிறார் அபே. அவர் குறிப்பிட்ட வர்த்தக-சாதகமான நாடுகள் பட்டியலில் இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா ஆகியவை அடங்கும்.
தென்சீனக் கடலில் சீனாவோடு பிரச்னைகள், ஆஸ்திரேலியப் பெருநிறுவனங்களின் பங்குகளை அழுத்தம்கொடுத்து மலிவு விலையில் வாங்கி, ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சீனாவின் தில்லுமுல்லுத் திட்டங்கள் ஆகியவை, ஆஸ்திரேலியாவுக்குப் புதுத் தலைவலியாக மாறியுள்ளன. சீனர்களுக்கு எதிரான கோஷங்கள் ஆஸ்திரேலியாவின் பொது வெளியிலே கேட்கத் துவங்கியுள்ளன. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் ‘கொரோனா நெருக்கடி’ தொடர்பாக பிரிட்டன், ஃப்ரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்களுக்கு எழுதியிருக்கிறார். இந்த தீநுண்மி சீனாவிலிருந்துதான் வந்ததா இல்லையா என விஜாரிக்க, சர்வதேச கமிஷன் அமைக்கப்படவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் கோரிக்கை. கடுப்பான சீனா, அமெரிக்க அரசியல்வாதிகள் சிலரின் சீன-எதிர்ப்பு சிந்தனைக்கு ஆஸ்திரேலியா ஒத்து ஊதுவதாக விமரிசித்துள்ளது. ஆஸ்திரேலியாவைத் ’தண்டிக்கும்’ வகையில், அங்கிருந்தான முக்கிய இறக்குமதிகள் சிலவற்றிற்குத் (மாட்டிறைச்சி, பார்லி) தடைகளையும் விதித்து, ஆஸ்திரேலியப் பெருவணிகக் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது சீனா. ஆஸ்திரேலிய வர்த்தக மந்திரி இதுகுறித்துப் பேச ஃபோன் போடுகையில், சீன வர்த்தக மந்திரி ஃபோனை எடுக்கவில்லையாம்! ’இந்த வர்த்தக அழுத்தமெல்லாம் எங்களிடம் எடுபடாது. மசியமாட்டோம்’ என இரண்டு நாட்கள் முன்பு சீறியிருக்கிறது ஆஸ்திரேலியா.
தன் நாட்டில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறும் அமெரிக்கா, சீனாவுக்கெதிராக தினம்தினம் கொதித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப்: ”சீனாவுடன் சில மாதங்கள் முன்புதான் வர்த்தக ஒப்பந்தம் செய்தோம். அதற்குள் இது (தீநுண்மி கொரோனா) வந்துவிட்டது சீனாவிலிருந்து! தங்கள் நாட்டைத் தாண்டிப் பரவாமல், சீனா இதனைத் தடுத்திருக்கவேண்டும். ஏனோ செய்யவில்லை. உலகின் 186 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. ஃப்ரான்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு நாடாகப் பாருங்கள். ‘பாதிக்கப்பட்டுள்ளது’ என்றோ ’தொற்று பரவியுள்ளது’ என்றோ நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்..!” என்று கிண்டல்தொனிக்கும் தொனியில் கூறியிருக்கிறார். ’சீன அதிபர் க்ஸி ஜின்பிங் (Xi Jinping) -உடன் பேசுவீர்களா?’ – என்ற கேள்விக்கு, சுற்றிவளைத்துப் பேசத் தெரியாத ட்ரம்ப், ‘நான் அவருடன் இப்போது பேச விரும்பவில்லை!” என்றார்.
இதற்கிடையே கொரோனா பரவல் தொடர்பான ஆராய்ச்சித் தகவல்களை (research data) சீன ’ஹேக்கர்கள்’ திருடிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. செமி-கண்டக்டர் தொழில்நுட்பப் பரிமாற்றம், வர்த்தகத்தில் சீனப் பெருவணிக நிறுவனமான ஹுவாவே (Huawei) அமெரிக்கத் தொழில்நுட்பத்தையே கையாண்டு தன்னாதிக்கம் செலுத்தமுற்படுவதாக, அதன் செயல்பாடுகளுக்குத் தடைகளை சிலநாட்கள் முன்பு விதித்துள்ளது. சீனாவுக்கு ஏகப்பட்ட எரிச்சல். இத்தகு குழப்பமிகு பின்னணியில், அமெரிக்க-சீன ராஜீய உறவில் இறுக்கம் நாளுக்குநாள் எகிறுகிறது. எண்பதுகளுக்கு முன்னால், அமெரிக்கா-சோவியத் யூனியனிடையே காணப்பட்ட ’பனிப்போரின்’(Cold War) தடயங்கள் தூரத்தில் தெரிய ஆரம்பிக்கின்றன. ஜப்பானும், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவும் சீனாவுடன் முறுக்கிக்கொண்டுவிட்டன. பிரிட்டன் ஏதோ திட்டம் வகுக்கும் நிலையில் உள்ளது. இன்னும் என்னென்ன நிகழவிருக்கிறதோ .. பார்ப்போம்.
**
இயற்கை இன்னமும் நிறைய கற்றுக் கொடுக்கும்…
LikeLiked by 1 person
அன்று பிரதமர் பேசும்போதே அந்த ஆத்மநிர்பர் வார்த்தை எனக்குப் புதிதாக இருந்தது. அதன் அர்த்தம் இன்று தெரிந்துகொண்டேன்.
போஸ்ட் கொரோனா பீரியடில் பொருளாதாரம் என்ன ஆகும் என்கிற கவலை அதிபர்களோடு சேர்ந்து ஒவ்வொரு சாமானியக் குடிமகனுக்கும் இருக்கும்.
LikeLiked by 1 person
அனேகமா எல்லாமே சீனத் தயாரிப்புகளா இருக்கையில் எப்படி சீனாவிலிருந்து தொழிற்சாலைகள் வெளியேறும் என்று தோன்றுகிறது.
முன்பு, நாங்கள் (கன்ஸ்யூமர்ஸ்) Made in China என்றிருந்தால் வாங்கத் தயங்குவோம். அதற்காக நிறைய Made in Malysia, Indonesia லாம் வரும். அதனை வாங்குவோம். (Brand ஆக இருந்தாலும் China என்றால் குவாலிட்டி மட்டம்தான்).
இவைகள் இந்தியாவிற்கு வருமா என்பது சந்தேகம்தான். ஆரம்பத்தில் அப்ளிகேஷன் போட்டு வேலைக்குச் சேர்ந்து உடனே கொடிபிடிக்கும் கூட்டம் நம்மிடம் அதிகம். அப்புறம் அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்து கட்டிங் கேட்பதும், கிடைக்கவில்லை என்றால் ‘சுற்றுச் சூழ்நிலை’ என்று வெடிகுண்டு போடுவதும், வேறு ஒரு காம்படீடர் ‘அன்பளிப்பு’ வெட்டினால், முதலில் இருந்த கம்பெனிக்கு எதிராக நடப்பதும் இந்தியாவில் சாதாரணமே.
LikeLiked by 1 person
தொடர…
LikeLike
இதுவரை இருந்த சீனாவின் ஆட்டம் அடங்கும் நிலை வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. குறிப்பாக இனி அங்கு மேலை நாடுகளின் முதலீடுகள் குறையும் என்றே தோன்றுகிறது. குறைய வேண்டும். அடக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.பார்ப்போம்..
துளசிதரன்
LikeLiked by 1 person
இது இந்தியாவுக்கு நல்லதொரு சான்ஸ். இங்கு முதலீடுகளை வரவேற்பதற்கு. அதற்கு இந்தியா போட்ட முதல் அச்சாரத்தை ட்ரம்ப் முறியடித்ததாக அதாவது ஆப்பிள் நிறுவனம் சைனாவிலிருந்து வெளியேறி நம்மூரிலும் தொடங்குவதற்கு ட்ரம்ப் அப்படி அமெரிக்காவில் அல்லாமல் வேறு எங்கும் தொடங்கினால் ஆப்பிளுக்கு கெடுபிடிகள் இருக்கும் என்று சொல்லியிருப்பதாகச் செய்தி. அவர் நாட்டில் தொழில் பெருக்கம் வேண்டும் என்று அவர் நினைப்பதில் தவறில்லைதான். …
இது ஒரு முரணான காலகட்டம் மக்களின் நலனா? பொருளாதாரமா என்ற நிலை. இரண்டையுமே ஹேண்டில் செய்ய வேண்டிய நிலையும்.
சீனா பாடம் இன்னும் கற்க வேண்டும் என்று தோன்றினாலும் மற்ற அரசுகள் இதே எதிர்ப்பை எத்தனை மாதங்கள் காட்டும்? வர்த்த்கம் என்று வரும் போது? ஆனால் சீனாவின் கொட்டம் அடங்க வேண்டும் என்று தோன்றத்தான் செய்கிறது. பார்ப்போம்.
கீதா
LikeLiked by 1 person
@ திண்டுக்கல் தனபாலன்: உண்மை. நாடுகளுக்கு இருக்கு இன்னும் பாடம்..!
@ ஸ்ரீராம்: பொருளாதாரத்தையே நினைத்து வாழ்ந்த மனித சமூகம், இந்த ஆபத்தான காலத்திலும் தன் உயிர்வாழ்தலையும் தாண்டி. இந்த ஆதாரம் சம்பந்தப்பட்ட கூட்டல் கழித்தல்களில்தான் இன்னமும் மண்டையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது! என்ன செய்ய?
@ நெல்லைத்தமிழன்: சீனாவிலிருந்து கம்பெனிகள் கிளம்புவது அவ்வளவு எளிதல்ல. எக்கச்சக்கமாக சிக்கியிருக்கிறார்கள். அப்படிச் சிலர் வெளியேறினாலும் இந்தியாவுக்குத்தான் வருவார்கள் எனச் சொல்ல முடியாது. இருந்தும் மத்திய அரசு அதற்கான சூழலை உருவாக்குவதில், தொழில்கட்டுப்பாடுகள், லோகல் சிரமங்களைக் களைவதில் கவனம் செலுத்துகிறது. நல்லது.
@ துளசிதரன்: ஆமாம். சீன ஏகாதிபத்திய ஆசை ஒடுக்கப்படவேண்டும். .அவர்களது ராணுவ வாலாட்டமும் நசுக்கப்படவேண்டும். இல்லையேல் உலகிற்கு ஆபத்து. அமெரிக்கா இந்தியாவிடம் அதிகமாக நெருங்க இது காரணம்.
@கீதா : நாம் ஆப்பிளையே நினைத்திருக்கவேண்டியதில்லை! வேறு ‘பழங்கள்’ உள்ளன. அவற்றில் சிலவாவது நம் வாயில் விழுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டு முக்கியமான ஆண்டாகத் தெரிகிறது. முதலில் இந்த வருடம் போகட்டும்…
LikeLike