Covid-19: சீனாவுக்கு ஒத்து ஊதும் WHO

இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948-ல் நிறுவப்பட்ட, ஐ.நா.வுக்குக் கீழ்வரும் சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), சமீப காலமாகக் கடும் விமரிசனத்திற்கு ஆளாகிவருகிறது. சென்ற வருட இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் வெடித்த நிலையிலிருந்து இதுநாள் வரை தன் செயல்பாடுகள், அறிக்கைகளால் குழப்பி, ஏற்கனவே தாங்கமுடியாத நோய்த்தாக்கம், உயிரிழப்பினால் தத்தளிக்கும் நாடுகளுக்கு, குறிப்பாக வல்லரசு நாடுகளுக்குக் கடுப்பை ஏற்றிவருகிறது. 1918 ஸ்பேனிஷ் காய்ச்சலிற்குப் (The Spanish Flu of 1918) பிறகான உலகின் பெரும் உயிர்க்கொல்லியாக மாறிவரும் தொற்றுநோயின் அசுரவேகப் பரவலின்போது, அது சம்பந்தமான தகவல்களை ஆரம்பத்திலிருந்தே சரியாக வெளிப்படுத்தாதிருந்தது, மூடிமறைத்தல், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் சம்பந்தமாக சீனாவுக்கு சாதகமாகப் பேசிவருதல் எனத் தொடர் சர்ச்சைக்குள்ளாகிவருகிறது இந்த உலக நிறுவனம்.

WHO Secretary General Tedros
இந்தச் சர்ச்சையின் மையப்புள்ளி உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரெயெஸஸ் (Tedros Adhanom Ghebreyesus ). நிறுவனத்தின் செகரெட்டரி-ஜெனரல். மேற்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். 2017-ல் இவர் இந்தப் பொறுப்பிற்கு வந்தபோதே சர்ச்சைகள் தலையைக் காட்டின. ஒரு கொடுங்கோல் ஆட்சியில் மந்திரியாக இருந்த இந்த ஆளுக்கு, உலக சுகாதாரத்தைப்பற்றி என்ன தெரியும் என மேற்கத்திய நாடுகள் முறைத்தன. இந்தப் பதவிக்கான தேர்தலில் இவரை எதிர்த்து நின்றவர் ஒரு தேர்ந்த பிரிட்டிஷ் டாக்டர். இருந்தும், எத்தியோப்பியா-சீனா இடையில் வலுவான இருதரப்பு உறவுகள் ஏற்பட்ட நிலையில், சீனாவின் செல்லப்பிள்ளையான டெட்ரோஸ், சீன ஆதரவுப்பின்னணியில், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஓட்டுகளை வசப்படுத்திக்கொண்டு WHO-வின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். உலகே எரிச்சலுடன் சீனாவைப் பார்க்கும் இந்நிலையில், சீனாவின் பழைய உதவிக்கு விசுவாசம் காட்டவேண்டிய நிலையில் இருக்கிறாரா டெட்ரோஸ்?

நவம்பர் இறுதி-டிசம்பர் 2019 ஆரம்பத்திலிருந்து நடந்த சில நிகழ்வுகள் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கேள்விக்குறியாக்கிவிட்டன. பயங்கரமான ஒரு தொற்றுநோய்பற்றி உலகத்தை சரியான நேரத்தில் எச்சரிப்பதற்கு பதிலாக, WHO சீனாவின் பேச்சைக்கேட்டு, சர்வதேச வெளியில் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்தது. கொரோனா தாக்குதலை முதலில் வுகான் நகரில் அனுபவித்த சீனா, அதுபற்றிய செய்தியை நைஸாக அமுக்கிவிடப் பார்த்தது. (ஆச்சரியப்பட ஏதுமில்லை. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. கம்யூனிச ஆட்சியில் அரசு சார்ந்த ரகசியம், அதனைப் பாதுகாப்பது, அதற்காக எந்தவழியையும் மேற்கொள்வது என்பதெல்லாம்தான் முக்கியம். கருத்துச் சுதந்திரம் என்று வாயைத் திறந்தால், வாய் கிழிந்துவிடும் சீனாவில். சம்பந்தப்பட்ட அப்பாவிகள் ’காணாமல்’ போய்விடுவார்கள். (தமிழக அரைவேக்காட்டு படிப்பாளிகளுக்கு, அறிவுசீவிகளுக்கு இதெல்லாம் புரியவர நாளாகும்). தன்னுடைய டாக்டர்கள் 8 பேரை-அவர்கள் அதுபற்றி தங்களிடையே(!) பேசிக்கொண்டதை உளவுபார்த்து, பிடித்து உடனே உள்ளே தள்ளியது சீனா. அதில் முதலில் விசில் அடித்தவரை மேலுலகத்திற்கு அனுப்பிவிட்டது சீனா. டிசம்பர் 2019 கடைசி வாரத்தில் சீனாவின் வுஹான் நகரில் ஏதோ பயங்கரம் நடக்கிறது என்கிற தகவல் வெளி உலகிலும் கசிந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. உலக சுகாதார நிறுவனம் இதுபற்றித் தெரிந்துகொண்டபின், சீனாவுடன் தொடர்பில் வந்தது. வுஹான் நகருக்கு தனது டாக்டர்கள் அணியை அனுப்ப WHO விருப்பம் தெரிவித்தது. இந்தக் கட்டம்வரை WHO-வின் செயல்பாடு, சற்றே தாமதமாகியிருந்தாலும், சரிதான்.

WHO-வின் கோரிக்கையைக் கேட்டு சீனா அரண்டது. வெளி உலகத்துக்கு மணி அடித்துச் சொன்னதாக ஆகிவிடுமே! WHO நிபுணர் குழு வுஹானுக்கு வந்து ’பார்க்க’, சீனா அனுமதி தரவில்லை. வெளி உலகம் அலர்ட் ஆனது. WHO-வின் கோரிக்கை நியாயமானதுதானே. சீனா ஏன் அனுமதிக்கவில்லை? என்ன நடக்கிறது அங்கே? வல்லரசு நாடுகளோடு மற்றவைகளும் முணுமுணுக்க ஆரம்பித்தன.

ஒரு ’ராணுவ ஸ்டைல் லாக்-டவுன்’ வுஹானைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. (அதாவது வாயைத் திறப்பவர்களைக் கிழித்து, அடைக்கவேண்டியவர்களை அடைத்து, ஒழுங்குபடுத்தவேண்டியவர்களை ‘ஒழுங்கு’படுத்தி துரிதமாக காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது சீன அரசு. உலக நாடுகள் சந்தேகிக்க ஆரம்பிக்க, திடுக்கிட்டது. (சீனாவுக்கு விஷமம் செய்வது முக்கியம். கூடவே இப்போதெல்லாம், தன் ‘இமேஜ்’ பற்றியும் கவலை!) மேலை நாடுகளின் வாயைக் கொஞ்சம் அடைக்கத்தான் வேண்டும்.. WHO தலைவர் டெட்ரோஸிடம் டிசம்பர் இறுதியில் பேசியது. ’’டாக்டர்கள்/நிபுணர்கள் அணியெல்லாம் இங்கு வரவேண்டிய அவசியமில்லை. நீங்கள் வந்தால் போதும்’’ என்றது. எங்கே? எங்கே பிரச்னையோ அந்த வுஹானுக்கு அல்ல. ’பெய்ஜிங் (தலைநகர்) வந்து பேசுங்கள்’ என்றது. ஏற்கனவே சீனா என்றால் வாயெல்லாம் பல்லாக இருக்கும் டெட்ரோஸுக்கு குஷி! சென்றார். சீன ஜனாதிபதி தன் முன்னாள் நண்பரை பெய்ஜிங்கில் கவனமாக வரவேற்று விருந்தளித்தார். வுஹானில் வெடித்த கொரோனா வைரஸ்பற்றி ’படம்’ காட்டினார் அதிபர் க்ஸி ஜின்ப்பிங் (Xi Jinping). அதாவது ” பெரிய ஆபத்தெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமானதுதான். கட்டுக்குள் வந்துவிட்டது. பரவமுடியாதபடி தடுத்தாயிற்று. உயிர்ப்பலியா? அதெல்லாம் சும்மா.சொற்பம்தான்..’’ என்பதுபோன்ற பசப்புகள். சீனா சொல்லச்சொன்னதை நன்றாகக் கேட்டுக்கொண்டு ஜெனீவா திரும்பியவுடன் கிளிப்பிள்ளை போல் உலகுக்குப் படித்துக்காட்டினார் டெட்ரோஸ். கூடவே, வைரஸைப் பரவாமல் கட்டுப்படுத்திவிட்டதாக சீனாவை வாயாறப் புகழ்ந்தது உலக சுகாதார நிறுவனம். இதற்குள் சீனாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, தென்கொரியா, ஜப்பான் என விமானத்தில் பயணிகள் இஷ்டத்துக்கும் பயணித்து, ‘அமைதி’யாக நோய்க்கூறுகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தார்கள். உலகின் மோசமான காலகட்டம். இந்தக் காலவெளியில் சுமார் 4,30,000 பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருவதும் போவதுமாய் இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 40000 அமெரிக்க தொழில்துறைக்காரர்கள், டூரிஸ்ட்டுகள் சீனாவுக்கு ‘மலிவு சுற்றுலா’ சென்று ‘சுற்றிவிட்டு’ ஆனந்தமாகத் திரும்பினர். வரப்போகும் பேராபத்திற்கான உஷார்நிலையில் யாரும் இல்லை. சீனப்பயணம் குறித்து எந்தத் தடையும் எந்த நாட்டிலிருந்தும் வரவில்லை அப்போது. வைரஸே குதூகலித்திருக்கும் – என்ன ஒரு முட்டாள் உலகம்டா இது!

இங்கே இன்னொரு விஷயம். 2019 டிசம்பரிலேயே, தைவான் (Taiwan – சீனாவுக்கு அருகிலிருக்கும் சிறுநாடு) இந்த வைரஸ்பற்றி, தங்கள் நாட்டில் காணப்பட்ட சில கேஸ்களை ஆராய்ந்து, சரியாக விளக்கி WHO-வை எச்சரித்தது. ” நெருக்கத்தினால், அருகாமையினால் ஒருவருக்கொருவர் பரவக்கூடிய மிகவும் ஆபத்தான உயிர்க்கொல்லி!” என்றது தைவான். சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட துல்லியமான எச்சரிக்கை. ஆனால் டெட்ரோஸுடனான பேச்சுவார்த்தையில் அந்த விஷயம் எடுக்கப்பட்டபோது, சீனா மழுப்பியது. ‘தைவான் ஒரு திமிர்பிடித்த நாடு. அதன் பேச்சையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள்’ எனச் சொல்லி நம்பவைத்தது. சீனாவின் புத்திமதியைக் கேட்டுக்கொண்டு, WHO தைவானின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தது. ஊர், உலகத்துக்கும் அப்படியே ஒப்பித்தது: ‘அப்படியெல்லாம் பரவக்கூடிய தொற்று அல்ல இந்த வைரஸ்..’ என்று உளறியது ஆரம்பத்தில் WHO. இதனை அப்போது நம்பிய அமெரிக்க ஜனாதிபதியும் ‘இது ஒரு ஃப்ளூ போன்றதுதான். பயப்படத் தேவையில்லை!’ எனத் தன் மக்களிடம் அசடுவழிந்தார். முழு ஐரோப்பாவும், தென்கொரியா, ஜப்பானும்கூட ஏமாந்தது. ஆங்காங்கே தென்பட்ட, வளர்ந்த கேஸுகளை சரிவர சோதிக்காமல், கையாளாமல் இருந்தது அப்பாவி உலகம். உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகமாக, நன்றாக அனுபவிக்கிறது இப்போது.

Cartoon courtesy: Satish Acharya
இந்த கொரோனா தாக்குதலால், அமெரிக்க உயிரிழப்புகள்தான் மிக அதிகம். அடுத்தாற்போல் இத்தாலி, ஸ்பெய்ன், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள். தன் நாட்டில் கட்டுக்கடங்காது பரவி உயிர் பலி வாங்கும் கொரோனாவினால் அமெரிக்கா ஆடிப்போயிருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் WHO சரியான நேரத்தில் உரிய தகவல்களைத் தராமல், சீனாவைப் புகழ்வதில் மும்முரமாக இருந்ததையும் வெளிப்படையாகக் கூறிக் கடுமையாக விமரிசித்தார். உலக சுகாதார நிறுவனம் சீனாவைச் சார்ந்து இயங்கும் ஒரு நிறுவனமாக ஆகிவிட்டது என்பது அவர் கூற்று. இதே சமயத்தில் ஜப்பானின் துணைப்பிரதமர் தாரோ ஆஸோ, ”WHO ‘சீன சுகாதார நிறுவனம்’ என அழைக்கப்படுவது இப்போது வழக்கமாகிவிட்டிருக்கிறது!” என்றார். டிசம்பர் 2019-இறுதியில் நிகழ்ந்த அந்த தகவல் தாமதம், உலகம் கொடிய வைரஸ் ஒன்றை எதிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்த்துவிட்டது என்றது அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள். பிரிட்டனின் பிரதமரே கோவிட்-19-ல் சிக்கிய நிலையில் அந்த நாடு ’இதற்கெல்லாம் சீனா பதில் சொல்லவேண்டிவரும்’ என எச்சரித்துள்ளது.

பரபரப்பு நிறைந்த சர்வதேச சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், WHO-க்கு அமெரிக்கா தந்துவரும் வருடாந்திர நிதி உதவியை நிறுத்திவிட்டார். ’சரியாக இயங்காத ஒரு நிறுவனத்திற்கு அமெரிக்கப் பணம் எதற்கு?’ என்பது அவரின் கேள்வி. இது பிரிட்டன், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தரும் நிதி உதவிகளை விடப் பலமடங்கு பெரிய தொகை. பெரும் நாடுகளிலிருந்து முதலில் தன் செயல்பாடுகள் குறித்த விமரிசனம், அப்புறம் நிதி நெருக்கடி என வரிசையாக பிரச்னைகளை சந்தித்து வருகிறது உலக சுகாதார நிறுவனம்.
**

3 thoughts on “Covid-19: சீனாவுக்கு ஒத்து ஊதும் WHO

  1. பாவிகள்..். வேறென்ன சொல்ல முடியும்? எப்போதும் முழுமையாக மூளுமோ உலகு? அப்புறம்தான் அடுத்த சீரமைப்பு எல்லாம்..

    Like

  2. சீனா எதற்கோ உள்மாந்திரமாக வேலை செய்து போட்டி மனப்பான்மையில் அராஜகமாகத் தன்னை பவர்ஃபுல் என்று நிரூபிக்க ஆப்பு வைக்கப் போக இப்போது அதற்கே எதிர்வினை ஆப்பு வைக்க எல்லா நாடுகளும் கூக்குரல். வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது போல…ஆனால் ஒரே ஒரு பயம் இப்பவும் சினா தன் டெக்னாலஜி பவரை வைத்து பேரம் பேசி பிஸினஸ் பேசி மற்ற நாடுகளைக் கைக்குள் போட்டு அமுக்கி விடுமோ என்று…ஏனென்றால் பெரும்பாலான நாடுகள் அதனிடம் தானே பல பொருள் பிஸினஸில் சார்ந்திருக்கின்றன.

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      சீனா ஒரேயடியாக டேமேஜ் ஆகிவிடாதவாறு பார்த்துக்கொள்ள முயலும். ஆனால், மற்றவர்கள் விடமாட்டார்கள். இதைப்பற்றி கொஞ்சம் பின்னர் எழுதுவேன் எனத் தோன்றுகிறது.

      இருந்தும், மேலைநாட்டுப் பெருவணிகம் எக்கச்சக்கமாக சீனாவில் சிக்கியிருக்கிறது. வெளியே வருவதில் சிக்கல்கள் பல. அதையும் பார்க்கவேண்டுமே. அடுத்த 12 மாதங்கள் சுவாரஸ்யமானவை.அடுத்த ஆறுமாதங்கள் ஒழுங்காகச் செல்லட்டும் முதலில்!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s