ஊரடங்கு காலத்தில் மார்க் ட்வெய்ன் !

மார்க் ட்வெய்ன் (Mark Twain, 1835-1910) ஒரு அமெரிக்க எழுத்தாளர், நகைச்சுவையாளர் – இன்னும் சொல்லப்போனால், ஒரு சீரியஸான தமாஷ் பேர்வழி, அல்லது ஒரு தமாஷான சீரியஸ் ஆசாமி! அவர் எழுதியதில் புகழ்பெற்ற படைப்புகள்: அவரது இளமைக்கால அனுபவங்களின் அடிப்படையிலான The Adventures of Tom Sawyer, சமூகக் காட்சிகளை புழங்குமொழியில் அங்கதச் சுவையோடு வெளிப்படுத்திய, விமரிசகர்களால் ‘the first Great American Novel’ எனப் புகழப்பட்ட The Adventures of Huckleberry Finn மற்றும் Jumping Frog of Calaveras County ஆகியவை. 60 வயதைத் தாண்டிய முதுமையில், அவரின் வாழ்வில் ஒரே துக்கம். முதலில் அவரது பெண், பின்னர் அவர் மனைவி, நான்கு வருடங்கள் கழித்து இன்னொரு மகள் என்று ஒவ்வொருவராக இறக்க, சோகத்தில் ஆழ்ந்திருந்தார் மார்க் ட்வெய்ன். ஒரு கட்டத்தில் அவரது இலக்கிய நண்பர்கள் சிலரின் வாழ்வும் அப்போது நொடித்து துன்பமயமாக மாறியிருப்பதை அறிந்து மேலும் நொந்துபோனார்.

மார்க் ட்வெய்ன்
1909-ஆம் ஆண்டு தன் 74-ஆவது வயதில், இப்படிச் சொன்னார் மார்க் ட்வெய்ன்: ”ஹாலியின் வால்நட்சத்திரம் (Halley’s Comet) பூமிக்கு வெகுஅருகில் வந்தபோது (1835) நான் பிறந்தேன். அடுத்த வருடம் (1910) அது பூமியின் அருகில் திரும்பவும் வரும் எனச் சொல்கிறார்கள். கடவுள் நினைத்திருப்பார்: ’என் கணக்கில் சரியாக வராத இரண்டு விசித்திரங்கள் இவை. ஒன்றாக பூமிக்கு வந்தன, ஒன்றாகத் திரும்பும்!’ அப்படி அந்த வால்நட்சத்திரத்துடன் நானும் போகாவிட்டால் என் வாழ்வின் ஏமாற்றமாக அது இருக்கும்.” வானவியலாளர்கள் கணித்தபடியே, 1910-ல் அந்த வால்நட்சத்திரம் பூமியை நெருங்கித் தலைகாட்டியது அல்லது வால்காட்டியது. மறைந்தது – கூடவே மார்க் ட்வெய்னையும் கூட்டிக்கொண்டு! அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் (William Howard Taft) எழுத்தாளரின் மறைவு குறித்துச் சொன்னது: ’மார்க் ட்வெய்ன் வெளிப்படுத்திய நகைச்சுவை அறிவுஜீவித்தனமானது. அவரைத் தெரிந்த, வாசித்த பலர் களித்து மகிழ்ந்தனர். அத்தகைய உயர்ந்த நகைச்சுவையை இனி வருவோரும் சந்தோஷமாக அனுபவிப்பார்கள்”.

மார்க் ட்வெய்ன் பேச்சுவாக்கில் அவ்வப்போது அவிழ்த்துவிட்ட அல்லது போகிறபோக்கில் சொல்லிச்சென்ற வார்த்தைகள் பல இன்றும் நினைவுகூரப்பட்டு ரசிக்கப்படுகின்றன. Pure humour laced with wisdom. இந்தக் கொரொனா காலத்தில் கொஞ்சம் மார்க் ட்வெய்னைக் கிளறி, மனசை லேசுபடுத்திக்கொள்வோம் :

வாரத்தின் இறுதியில், கடவுள் களைத்துப்போயிருந்த வேளையில், மனிதன் படைக்கப்பட்டிருக்கவேண்டும் ..
*
உலகம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது எனச் சொல்லித் திரியாதீர்கள். அது உங்களுக்கு கடமைப்பட்டிருக்கவில்லை. அதுதான் இங்கே முதலில் வந்தது!
*
அடிப்படையில், இரண்டு வகையான மனிதர்களே உண்டு. ஒன்று சாதித்தவர்கள். இன்னொரு வகை சாதித்ததாகச் சொல்லித் திரிபவர்கள். முதல் வகையில் கூட்டம் குறைவு.
*
எந்த ஒரு விஷயத்திலும் உண்மை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்புறம் இஷ்டப்படித் திரித்துக்கொள்ளலாம்.
*
ஒரு காரியத்தை நாளைக்கு ஒத்திப்போடவேண்டாம். அதை நாளை மறுநாள் செய்யலாம் எனில்.
*
கல்வி என்பதென்ன? பள்ளியில் படித்ததெல்லாம் மறந்துபோனபின், மிச்சமிருப்பது.
*
எத்தனை சொல்லி என்னதான் நிரூபித்தாலும், ஒரு முட்டாளை நம்பவைக்கமுடியாது.
*
அவனுடைய இறுதிச் சடங்கிற்கு நான் போகவில்லை. ஆனால் ஒரு கார்டு அனுப்பினேன் – இறுதிச்சடங்கை அப்ரூவ் செய்வதாக!
*
பலவருடங்களாகப் புவியியல் படித்தபிறகு இப்போது மனதில் வந்துவிட்டது: ஆஸ்திரேலியா பக்கம் 23-ல் இருக்கிறது !
*
எவ்வளவு தூரம் மனிதர்களைப் புரிந்துகொள்கிறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு எனது நாயை எனக்குப் பிடிக்கிறது.
*
புகைபிடிப்பதை விட்டுவிடுவது சுலபம். எனக்குத் தெரியும். நானே ஆயிரம் தடவை விட்டிருக்கிறேனே..
*
கோபம் வருகையில் நாலுவரை எண்ணுங்கள். ரொம்பக் கோபம் வந்தால் திட்டித் தீர்த்துவிடுங்கள்.
*
எந்தத் தப்பையும் செய்துவிடாதீர்கள் – மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில்.
*
முட்டாள்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்கள் இல்லாவிடில் நாம் வெற்றிபெற்றிருப்போமா?
*
இரும்புக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததால், அது தங்கமாக மாறிவிடாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு!
*
எந்த ஒரு வாய்ப்பையும் நான் கவனித்ததில்லை – அது கை நழுவிப்போகும் வரை.
*
ஒரு நல்ல வக்கீல் சட்டம் தெரிந்தவனாக இருப்பான். சாமர்த்தியக்கார வக்கீல், நீதிபதியை லஞ்சுக்குக் கூட்டிச் செல்வான் !
*
வாயை மூடிக்கொண்டிருங்கள். நீங்கள் ஒரு முட்டாள் என அவர்கள் நினைத்துக்கொள்ளட்டும். வாயைத் திறந்து அதை நிரூபிப்பதைவிட அது மேலல்லவா?
*
ஒரு புகழ்ச்சொல்லில் என்னால் இரண்டு மாதம் (உணவின்றி) வாழ்ந்துவிட முடியும்.
**
எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் விளக்குகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது எனக்குப் புரியவில்லை!
*
நீங்கள் எவ்வளவு இளமையோடு இருக்கிறீர்கள் என உங்களது நண்பர்கள் உங்களைப் புகழ ஆரம்பித்தால், உங்களுக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என அர்த்தம்.
*
கேட்கத் தகுதியில்லாதவர்களிடம், ஒருபோதும் உண்மையைச் சொல்லவேண்டாம்.
*
நல்ல காரியத்தையே செய்யுங்கள். சிலருக்கு அது திருப்தி தரும். பலரை அது ஆச்சரியப்படுத்தும்.
*
இந்தியாவில் 2 மில்லியன் தெய்வங்கள். அவற்றையெல்லாம் அவர்கள் வணங்குகிறார்கள். மதம் என்று பார்த்தோமேயானால், மற்ற நாடுகள் பரமஏழைகள். இந்தியாதான் மில்லியனர் !
*
என் மரணம்பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டுவிட்டது..

***

7 thoughts on “ஊரடங்கு காலத்தில் மார்க் ட்வெய்ன் !

  1. @ திண்டுக்கல் தனபாலன்:

    உங்கள் மனமெலாம் குறள்களும், பாடல்களுமாய் உள்ளது. அவ்வப்போது தலைதூக்கத்தானே செய்யும் !

    Like

  2. ஹா ஹ ஹா பல வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. சிரிப்பு மட்டுமல்ல யதார்த்தம்! சற்றே கிண்டல் தொனியில்!! மிகவும் ரசித்தேன்..

    //எவ்வளவு தூரம் மனிதர்களைப் புரிந்துகொள்கிறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு எனது நாயை எனக்குப் பிடிக்கிறது.// இதைக் கூடுதலாக ரசித்தேன்னு சொன்னா நீங்க கண்டிப்பா பொய் சொல்லக் கூடாது கீதான்னு நிச்சயமா பாட மாட்டீங்க!!

    கீதா

    Like

  3. எல்லாத்தையுமே கோட் செய்யலாம்…அந்த அளவு யதார்த்த, சர்க்காஸ்டிக் நகைச்சுவை!

    அடிப்படையில், இரண்டு வகையான மனிதர்களே உண்டு. ஒன்று சாதித்தவர்கள். இன்னொரு வகை சாதித்ததாகச் சொல்லித் திரிபவர்கள். முதல் வகையில் கூட்டம் குறைவு.
    *
    எந்த ஒரு விஷயத்திலும் உண்மை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்புறம் இஷ்டப்படித் திரித்துக்கொள்ளலாம்.
    *

    ஹா ஹா ஹா ஹா செம இல்ல அதே போல வக்கீல் பத்தி சொன்னதும்…பூகோளம்…இப்படி எல்லாமே செமையா இருக்கு…ரொம்ப ரசித்தேன்

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா : ரசிப்புக்கு நன்றி. இப்படி இன்னும் சிலர் இருக்கிறார்கள், இலக்கியத்தில். மெல்லப் பார்ப்போம் !

      Like

  4. “இந்தியாவில் 2 மில்லியன் தெய்வங்கள். அவற்றையெல்லாம் அவர்கள் வணங்குகிறார்கள். மதம் என்று பார்த்தோமேயானால், மற்ற நாடுகள் பரமஏழைகள். இந்தியாதான் மில்லியனர் !”

    … ஆகா .. ஆகா … கடைசியில மனுஷன் நம்ம நெஞ்ச தொட்டுட்டாருய்யா !!! …

    Liked by 1 person

Leave a comment