So far, so good ..

What will you have, my love

Just Capuccino said she

Am  going  to  have Corona..

What !  Screamed  Shobhana

Beer, my dear, beer

Innocent lager beer

Not spread from.. but

Imported from Mexico 

Goodness me!

Sighed she..

Relieved for the time being

From  that  deadly stuff from China

The mysterious thing called Corona

**

ICC Women’s World Cup: இறுதிப்போட்டியில் இந்தியா!

மகளிர் கோப்பைக் கிரிக்கெட்டின் இரண்டு செமிஃபைனல் போட்டிகளும் இன்று(5/3/20) சிட்னியில் ஆடப்படவிருந்தன. முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்துடனும், இரண்டாவதில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுடனும் மோதுவதாக இருந்தது.

சிட்னியில்  மழை பலமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை கூறியது. மழையினால் ஆட்டம் நின்றால், இன்னொரு நாளில் ஆட, ரிசர்வ் நாள் ஐசிசி-யினால் கொடுக்கப்படவில்லை. ஆட்டம் நடக்கவில்லையெனில் க்ரூப் ஸ்டேஜில் முதல் இடத்தில் இருந்த அணி, ஃபைனலுக்கு முன்னேறும் என்பது ஐசிசி டி-20 மகளிர் உலகக்கோப்பை விதி. காலையிலிருந்தே சிட்னியில் விளாசிய மழை முதல் செமிஃபைனல் ஆட்டத்தை நிதானமாக விழுங்கி ஏப்பம் விட்டது. வலிமையான Group ‘A’-யில் எல்லா மேட்ச்களையும் வென்று முதல் இடம்  வகித்ததால், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி. இந்தியா மகளிர் டி-20 உலகக்கோப்பை ஃபைனலில் நுழைவது இதுவே முதல் முறை. அதுவும் எப்படி!

இந்தியாவுடனான செமிஃபைனல் ஆடமுடியாதுபோக,  வெளியேற்றப்பட்ட இங்கிலாந்து ஒரே புலம்பல்.  ஐசிசி விதிமுறைகள் மாறவேண்டும் என்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், சரிதான். எந்த அணிதான் இப்படி வெளியேற்றப்படுவதை விரும்பும்? ஆனால் இத்தகு அசட்டுத்தனமான விதியை ஐசிசி மீட்டிங்கில் கொண்டுவந்தபோது,  ஒத்துக்கொண்ட மெம்பர்-நாடுகளில் இங்கிலாந்தும்தானே இருந்தது? ஏன் எதிர்க்கவில்லை அப்போது?

இரண்டாவது செமிஃபைனலும் சிட்னி மைதானத்திலேயே நடந்தது.   முதலில், ஆஸ்திரேலிய பேட்டிங்குக்குப்பின் இடையே மழை வந்து குழப்ப, ஆட்ட நேரம் /ஓவர்கள் குறைக்கப்பட்டன. மழைக்குப்பின் தொடர்ந்த ஆட்டத்தில் ஆவேசமாகப் போராடிய தென்னாப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா D-L முறைப்படி, 5 ரன் வித்தியாசத்தில் வென்றது.  ஃபைனலில் பிரவேசித்திருக்கிறது.

உலகக்கோப்பையுடன் ஆஸ்திரேலிய, இந்திய கேப்டன்கள்

ஞாயிறன்று (8/3/2020) மெல்பர்னில் நடக்கிறது மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம். ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் இந்தியா,  மெக் லான்னிங் (Meg Lanning)-ன் தலைமையிலான வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்த்தாடும். நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளுமா? இல்லை, இந்தியா உலகக்கோப்பையை முதன்முறையாக வென்று வாகை சூடுமா?

இந்த உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய மகளிர் அணி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  குறிப்பாக  இந்திய ஸ்பின்னர்களும், batting sensation ஷெஃபாலியும். இந்தியாவின் இளம்புயல்,  தமிழ்  மீடியாவினால்  ’கபாலி ஷெஃபாலி’  என்றெல்லாம் புகழப்படும் பையன்போல் தோற்றம்தரும் 16 வயது வனிதை. சமீபத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 -டி-20 பேட்ஸ்மனாக ஆகியிருக்கும் ஷெஃபாலி, ஃபைனல் மேட்ச்சில் என்ன மாதிரி ஆட்டம் போடப்போகிறார் என்பதைப் பார்க்க கூட்டம் கூடும். அங்குமிங்கும் ஓடி, திரட்டி, ஏர்-டிக்கெட் வாங்கி ஆஸ்திரேலியாவுக்கே பறந்துவந்திருக்கிறார், ஆசை மகளின்  ஆட்டத்தைப் பார்க்க, அருமை அப்பா. பெண்ணிற்கு சின்ன வயதிலிருந்தே சச்சின் டெண்டுல்கரின் சாகசக் கதைகளை சொல்லி வளர்த்த சஞ்சீவ் வர்மா.  

**

டெஸ்ட் தொடரையும் இழந்தாச்சு…!

நியூஸிலாந்தின் க்றைஸ்ட்சர்ச்சில் (Christchurch) நடந்த இரண்டாவது டெஸ்ட்டிலும் இந்தியாவுக்குத் தோல்வி.  ஒரு-நாள் தொடர்போலவே, டெஸ்ட் அரங்கிலும் நியூஸிலாந்து, உலகின் நம்பர் 1 அணியான  இந்தியாவை ஒய்ட்-வாஷ் செய்துவிட்டது. அவமானம். தலைமைக் கோச் ரவி சாஸ்திரியைக் காணவில்லை எனக் கேள்வி. நியூஸிலாந்து ஜெயிக்க சில ரன் இருக்கையில் ஒரு ஓவர் போட்டுப் பார்த்திருக்கிறார் கோஹ்லி.. என்ன,  பேட்டிங் செய்வதை விட்டுவிட்டு பௌலராகிவிடலாம் என்று நினைப்பா!  அவரும் பாவம், சாஸ்திரி மாதிரி ஒரு தெண்டத்தைத் தோளில் தூக்கிக்கொண்டு, எப்படி பேட் செய்வது, அணிக்குத் தலைமை தாங்குவது, எத்தனைக் காலம்தான் தாங்குவது? இந்தக் கண்றாவி காம்பினேஷனில் கங்குலி உடனே கவனம் செலுத்துவது உசிதம். புதிய தேர்வுக்குழுவும் விரைவில் அமையவிருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள், இரு அணிகளுக்கிடையே கடுமையான மோதலை வெளிப்படுத்தியது ரசிகர்களின் ரசனைக்குக் கொஞ்சம் தீனிபோட்டது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 242 அடித்தது. அதில் 3 அரைசதங்கள் -ப்ரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி. கோஹ்லி, ரஹானே, அகர்வால், ரிஷப் பந்த் – வெறும் தண்டமான பேட்டிங் முயற்சி. நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்ஸை ஆடியபோது, இந்திய பௌலர்கள் திருப்பிக்கொடுத்தார்கள். இந்தப்போட்டியில் இந்தியாவின் ஒரே ப்ளஸ்பாய்ண்ட். ஷமி, பும்ரா, ஜடேஜா முறையே 4,3,2 விக்கெட்டுகள் சாய்க்க, நியூஸிலாந்தின் ஸ்கோரை இந்திய ஸ்கோரின் கீழே அழுத்தினார்கள். 235 ஆல் அவுட். இதுவரை கதை ஆஹா.. ஓஹோ..

ஆனால், இந்தியா திரும்பவும் பேட் செய்யவேண்டுமே.. டெஸ்ட் மேட்ச் அல்லவா! தன் ஆவேச ஸ்விங் பௌலர்களை ஏவி, நியூஸிலாந்து தாக்கியது.  குறிப்பாக ட்ரெண்ட் பௌல்ட்(Trent Boult(, டிம் சௌதீ (Tim Southee).  இந்திய விக்கெட்டுகள் ஒரு சரியான எதிர்ப்பின்றி சரிய ஆரம்பித்தது அதிர்ச்சியாக இருந்தது. நாலாவது நாள் இறுதியில் இந்தியா 90/6. கேவலம். நீல் வாக்னர் (Neil Wagner), ஜேமிஸன், பௌல்ட் ஆகியோரின் ஷார்ட்-பிட்ச் பந்துகளைத் தாக்குவதாக நினைத்து அசட்டுத்தனமாக மேலே தூக்கி அடிக்க முயற்சித்து கேட்ச் ஆகி வீழ்தல்(அகர்வால், ஷா), அல்லது ஓவராக தடுப்பாட்டம் (ரஹானே, புஜாரா), அடிப்பதா, தடுப்பதா எனக் குழப்பம் (கோஹ்லி). ஜடேஜா போன்ற ஒரு திறனான ஆல்ரவுண்டரை 9-ஆம் நம்பரில் அனுப்புவதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கமுடியும்? அவர் சிக்ஸர், பௌண்டரி என விளாசப் பார்த்தார் – கூட நின்று ஆடத்தான் ஆளில்லை! ஷமியும், பும்ராவும் க்றைஸ்ட்சர்ச் பிட்ச்சில் ஜடேஜாவோடு பார்ட்னர்ஷிப் போடமுடியும் என நினைத்ததா கோஹ்லி-சாஸ்திரி கூட்டணி? நடக்குமா? கோமாளித்தனமாக வீழ்ந்தனர் அனைவரும். 124-ல் ஆல் அவுட். 

நியூஸிலாந்துக்கு 132 தான் இலக்கு.  இந்திய வீரர்களை பயமுறுத்திய இந்தப் பிட்ச், நியூஸி வீரர்களை ஒன்றும் செய்யவில்லையே.. துவக்க ஆட்டக்காரர்கள் ஆனந்தமாக ஆடி அரைசதங்கள் கொடுக்க,  3 விக்கெட் மட்டும் இழந்து நியூஸிலாந்து வென்றது.

Troubled Indian Captain

உங்கள் உடல்மொழியில் ஆவேசத்தைக் காண்பிப்பதை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம் எனத் தோன்றவில்லையா, அதை ஆட்டத்தில் காண்பிக்கலாமே.. என்கிற ப்ரெஸ் ரிப்போர்ட்டரின் சாதாரண கேள்விக்கே கோஹ்லியினால் பதில் சொல்ல முடியவில்லை. ’நன்றாகத் தயார்செய்து கொண்டு நீங்கள் கேள்விகேட்கலாமே!’ – இது எரிச்சலுற்ற கோஹ்லியின் எதிர்கேள்வி! ரொம்பச்சரி, நீங்களும் கொஞ்சம் தயார்செய்துகொண்டு பேட்டிங் செய்யலாமே.. ரன்னும் கொஞ்சம்  அடித்துக் காண்பிக்கலாமே.. ஏன் அடிக்கவில்லை. இந்த இரண்டு டெஸ்ட்களிலும் உங்களின் அதிகபட்ச ஸ்கோர் என்ன? 19 தானே.. இதுதான் ஒரு டெஸ்ட் கேப்டன் விளையாடும் லட்சணமா, அதுவும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளில்,  மிஸ்டர் கேப்டன்?

அடுத்ததாக 10 நாட்களுக்குள் வருகிறது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு-நாள் போட்டித் தொடர். இந்தியாவில் நடக்க இருப்பதால் இந்திய வீரர்கள் சாத்துவார்கள், மீண்டும் ஹீரோக்களாகிவிடுவார்கள், கோஹ்லியின் பாபமும் தீர்ந்துவிடும். வெளிநாட்டு டூரில்தான் ப்ரச்னை இல்லையா? கவாஸ்கர் காலத்து பூதம் திரும்பிவிடுகிறது அந்நியமண்ணில்…

**