விசு

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோ, ஹீரோயின்கள் என ரசிகர்களால் சிலிர்ப்புடன் கொண்டாடப்பட்டவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இவ்வகை வழக்கமான ஜொலிப்புகளைத் தாண்டி குணசித்திர பாத்திரங்களில் மிளிர்ந்து, தன் பன்முகத்திறனுக்காக சக கலைஞர்களாலேயே பாராட்டப்பட்டும், பேசப்பட்டும் வந்தவர் நடிகரும், இயக்குனருமான ‘விசு’. இயற்பெயர் விஸ்வனாதன். ஆரம்பத்தில் மேடை நாடகங்கள். பிறகு திரையுலகில் பிரவேசம், அது தந்த புகழ்வெளிச்சம். திரையுலகிலிருந்து வெளிவந்தபின், டிவி- நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களை ஈர்த்து, யூ-ட்யூபில் போய் தன் கலைச் சேவையை நிறுத்திக்கொண்ட கலைஞர். உடல்நலம் குன்றியபோதும் கடைசிவரை துறுதுறுவென இருந்த ஆளுமை.

இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு, துணை இயக்குனராக தன் ‘திரை இயக்க’ வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’(1981) ‘நெற்றிக்கண் (1981)’ ஆகிய படங்களில் விசுவின் முறையே வசனம், திரைக்கதை. எஸ்.பி.முத்துராமனின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’(1980) படத்தில்தான் நடிகராக முதன்முதலாகக் காட்சிதந்தார் விசு. அதன் பிறகு அவர் தானே இயக்கி வந்த முதல் படம் ’கண்மணி பூங்கா’(1982). மத்தியவர்க்க குடும்ப உறவுச்சிக்கல்களே கதைக்களன் என ஒரு ஃபார்முலா வகுத்துக்கொண்டு விளையாடியவர். அதில் புகழ்பெற்றவர் -இயக்கம், திரைவசனம், நடிப்பு என மிளிர்ந்த மனிதர். விசுவின் படம் என்றாலே நகைச்சுவையும் சுவாரஸ்யமான குடும்பக்கதையும் இருக்கும் என ரசிகர்கள் நம்பி, ஆர்வமாகத் தியேட்டர்களுக்கு ஓடிய காலகட்டம்.

மனதைக் கிள்ளும் வசனங்கள், துடிப்பான பெண் பாத்திர அமைப்புகள், தன் உயிர்ப்பான நகைச்சுவை ததும்பும் நடிப்பு ஆகியவைகொண்டு திரையில் சித்திரங்கள் பலதீட்டி, ரசிகர்களைக் கொள்ளையடித்த பெருமை அவருடையது. ’மணல் கயிறு’(1982) படத்தில் அவர்தான் நாரதர் நாயுடு. குறைந்த வருமானத்தில் கூட்டுக்குடும்பம் நடத்த சிரமப்படும் அம்மையப்பன் முதலியாராக வந்து மனதில் இடம்பிடித்தார் விசு, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில். ’திருமதி ஒரு வெகுமதி’ (1987) படத்தில் நாகர்கோவில் நாதமுனி! இப்படி நினைவில் அலையும் விசுவின் பாத்திரங்கள்.

அவர் படைத்த ’குடும்ப சினிமா’வில் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள் ‘உமா’க்கள். விசுவின் ராஜமுத்திரை! அவர் இயக்கி, நடித்த புகழ்பெற்ற ’சம்சாரம் அது மின்சாரம் (1986) திரைப்படத்தில் மறக்கமுடியாத மருமகள் உமாவாக நடித்திருக்கிறார் நடிகை லட்சுமி. ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் எல்லோருக்கும் பிடித்த அந்த ‘அக்கா’வின் பெயரும் உமா! நடித்தவர் கல்பனா. ’வரவு நல்ல உறவு’(1990) படத்தில் அதே பெயரில் பொறுமைசாலி மருமகளாக வந்து, பார்ப்போரை உருகவைத்த நடிகை ரேகா. இந்த கேரக்டர்கள் தனக்குப் பிடித்திருந்ததாக பின்னர் ஒரு நேர்காணலில் விசு கூறியிருக்கிறார்.

’சம்சாரம் அது மின்சாரம்’, தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிஎக்ஸ்ப்ரெஸ் விருது என வரிசையாக வென்றுகொடுத்தது அவருக்கு. விசுவை ஒரு பாப்புலர் டைரக்டராக தமிழ் சினிமாவில் நிறுவியது. ’சன்ஸார்’ என்கிற தலைப்பில் ஹிந்திப் படமாக அடுத்தவருடமே வெளியானது. தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என மறுபிறப்புகள் அதற்கு!

சினிமாவை விட்டு விலகியிருந்த காலகட்டத்தில் ‘அரட்டை அரங்கம்’, ‘மக்கள் அரங்கம்’ என சாதாரணர்களின் பிரச்னைகளை மக்கள் முன் காரசார விவாதங்களுக்கு உட்படுத்தி அவர் அளித்த டிவி நிகழ்ச்சிகளும் ஜனரஞ்சகமாக அமைந்தன. டிவி-யின் மாபெரும் வீச்சினால் வெளிநாடுவாழ் தமிழர்கள் பலர் அவரது ரசிகர்களாக அதிகரித்த காலமது. தன் கடைசிகாலகட்டத்தில் யூ-ட்யூப் சேனல்களில் காணப்பட்டார் விசு.

கடைசி ஆசையாக ஒன்று வைத்திருந்திருக்கிறார் விசு. ‘சம்சாரம் அது மின்சாரம்-2’ -க்காக கதை வசனம் எழுதி வைத்திருந்ததாகக் கேள்வி. லட்சுமியின் இடத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லிவந்திருக்கிறார். ஏவிஎம்- ப்ரொடக்ஷன்ஸ் கம்பெனியை அணுக, அவர்கள் கைவிரித்துவிட்டார்களாம். மேற்கொண்டு முயற்சித்துக்கொண்டிருக்கையில் காலன் குறுக்கே வந்துவிட்டான்.

உடல்நலக்குறைவினால் இரண்டு நாள் முன்பு மறைந்த தமிழ் சினிமாவின் மறக்க முடியாக் கலைஞருக்கு, பிரபலங்கள், ’கொரோனா’ ஊரடங்கின் காரணமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலை. இருந்தும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தியதாக செய்தி. நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், இயக்குனர் வஸந்தபாலன், கவிஞர் வைரமுத்து ஆகியோரிடமிருந்து வந்தன கனிவான, உருக்கமான வார்த்தைகள். கிரிக்கெட் வீரர் அஷ்வினும் தன் அஞ்சலி ‘ட்வீட்டில்’, ‘என் இளமைக்காலத்தில் உங்கள் படங்களின் புத்திசாலித்தனமான திரைக்கதை, அழகான நகைச்சுவை, டிவி நிகழ்ச்சிகள் மூலம், ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள்’ என நினைவுகூர்ந்திருக்கிறார்.
**

9 thoughts on “விசு

 1. விசுவின் குரலே தனி… ஆனால் மணல் கயிறு 2ம் பாகம் சமயத்தில் அவரது தொண்டை பாதிக்கப்பட்டு, விசுவின் குரலே மறைந்துவிட்டது. நம் வாழ்வின் கலை ரசனையின் ஒரு அங்கமாக விசு அவர்கள் இருந்தார் என்பது உண்மை. அவரது அரட்டை அரங்கமும் மிகவும் நம்மைக் கவர்ந்தது. அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக.

  Like

 2. //அவர் படைத்த ’குடும்ப சினிமா’வில் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள் ‘உமா’க்கள். // விசுவின் எல்லா கதாநாயகிகளுக்கும் உமா என்றுதான் பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு. திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே இறந்து விட்ட அவருடைய முதல் மனைவியின் பெயர் உமா என்றும், அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பொழுது மனைவியிடம் தான் அவரை உமா  என்றுதான் அழைப்பேன் என்றும் கூறி விட்டாராம். அதனால்தான் எல்லா கதாநாயகிகளுக்கும் உமா என்று பெயர்.  விசுவிடம் என்னைக் கவர்ந்த விஷயம், சினிமா உலகில் இருந்தாலும், சேலம் ஆறுவழிச்சாலை போன்ற பல பொது விஷயங்களில் தைரியமாகக்  தன்  கருத்தைக் கூறியவர்.  

  Like

 3. ஒரு சிறந்த குணசித்திர நடிகர் எனக்கு பிடிக்கும்

  Like

 4. மறக்க முடியாத மனிதர்.  சினிமா என்கிற ஞாபகம் வந்தால் அவரை நினைக்காமல் இருக்க முடியாது.  

  Like

 5. @ நெல்லைத்தமிழன், @ திண்டுக்கல் தனபாலன், @ பானுமதி.V, @ ஸ்ரீராம், @ ஜி.எம்.பாலசுப்ரமணியம் :

  வருகை, கருத்துக்களுக்கு நன்றிகள்.

  நான் அவரது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை சோமாலியாவில் பணியாற்றியபோது VHS Cassette-ல் பார்த்தேன். துபாய்வழி வந்த நண்பர் ஒருவர் கொண்டுவந்திருந்த சூப்பர் ப்ரிண்ட். அவரது அரட்டை அரங்கத்தை காங்கோவில் வசிக்கையில் பார்த்ததாக ஞாபகம். ஒரு இந்திய நண்பரின் உதவியால் இந்திய சேனல்கள் சில கிடைத்தன.

  க்ரிஸ்ப்பான வசனங்களால், துடுக்கான பாத்திரங்களால், மிடில் க்ளாஸ் மனங்களை மீட்டிய மனிதர். தமிழ் சினிமாவுக்கு இப்படி அவ்வப்போது சில ஆளுமைகள் அமைந்துவிடுகிறார்கள். நாம் செய்த பாக்யம்.

  Like

 6. விசு! தனித்தன்மையுடன் ஆளுமையுடன் திரையுலகில் பிரகாசித்தவர். வசனங்கள் அருமையா இருக்கும். நகைச்சுவையுடன் கருத்துகளுடனும் இருக்கும். ஷார்ப் மற்றும் குடும்பப் பெண்களின் மத்தியிலும் பாப்புலர். அவர் படங்கள் குடும்பப் படங்கள் டீசண்டாக இருக்கும்.

  அவர் குரல் கம்மியானதற்குக் காரணம் தொண்டையில் கேன்ஸர் என்று யாரோ சொல்லிக் கேட்ட நினைவு. சரியாகத் தெரியவில்லை.

  பானுக்கா எப்போதும் போல தகவல்கள் கொடுத்துவிட்டார். அக்கா செம.

  விசுவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  கீதா

  Like

  1. @ கீதா: அவர் குரல் கம்மியான கதை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் எல்லாம் நன்றாக செட்டில் ஆகியிருப்பார்கள் என நம்புவோம்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s