மக்கள் ஊரடங்கும், சமூகப்பொறுப்புகளும்

குறுகிய காலத்தில் உலகப்புகழ் பெற்றுவிட்ட ’சைனீஸ் சூப்பர் ப்ராடக்ட்’ ஆகிவிட்டது ’கொரோனா’ வைரஸ்! இதனால் வெடித்துப் பரவும், ஒரு மருந்தில்லா நோய் (Covid-19 (Corona Virus Disease 2019)) உலகத்தையே சில வாரங்களில் சித்தம் கலங்கவைத்துவிட்டது. ஸ்தம்பித்துப்போயிருக்கிறது எல்லாம். பணம், பணம் என ஒரே லட்சியமாகப் பாய்ந்துகொண்டிருந்த சர்வதேசப் பெருவணிக நிறுவனங்களும், பேராசைப்பேய்களும் எங்கே போய் விழுந்தார்கள் எனத் தெரியவில்லை.

சீனாவின் வுஹான் கிருமி ஆய்வுச்சாலையிலிருந்து பரவ ஆரம்பித்த வைரஸின் கதை, ஆரம்ப மாதங்களில், சீன அரசின் முயற்சியினால் அமுக்கப்பட்டது. உயிர்ப்பலி அதிகமாக அதிகமாக, அந்த முயற்சி கைவிடப்பட்டது. எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பாவி சீன மக்களின் வாழ்வு முடங்கியது. சீன ஜனாதிபதியே துண்டைக்காணோம், துணியைக் காணோம் என இரண்டு வாரங்கள் முகமூடிபோட்டு ரகசியமான இடத்தில் ஒளிக்கப்பட்டிருந்த நிலை. ’சரியான மருந்தில்லை, நிலைமையை எங்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை’ என வேறுவழியின்றி, வெளி உலகிற்கு சீனா கைவிரித்து மாதமாகிவிட்டது. அதுவரை அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ சீனாவிலிருந்து வருவோர், போவோருக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. வைரஸ் கிளப்பிவிட்ட வியாதி, தடையின்றி எங்கும் பரவ ஆரம்பித்தது. குணப்படுத்தமுடியாமல் செத்தவர்களின் எண்ணிக்கையை உலகத்திற்குச் சொல்வதா, மறைப்பதா எனக் குழம்பித் தவிக்கும் நாடு ‘மத்திய கிழக்கின் Regional Power’ என்று நேற்றுவரைத் தன்னைக் கருதிக்கொண்ட ஈரான். அங்கே போதிய உயர்நிலை சோதனைச்சாலை வசதிகள் இல்லை என்பதும் ஒரு மருத்துவ எமர்ஜென்சியை அவர்களால் தாங்கமுடியாது என்பதும் உலகத்துக்குத் தெரிந்துவிட்டதே என்கிற அவமான நிலையில் அது கப்சிப் ஆகிவிட்டது. உலகமே திண்டாடிவரும் நிலையில் யாரும் ஈரானைத் தனியாக விமரிசிக்கவில்லை; விமரிசிக்கவேண்டிய அவசியமுமில்லை. ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தாண்டி, பரவி வரும் கொரோனா உலகின் முன்னேறிய நாடுகள் என மார்தட்டிக்கொள்ளும் தேசங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டுஆட்டு என்று ஆட்டிவருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலியிலும், ஸ்பெயினிலும் கொரோனா பலிகள் நாளுக்கு நாள் குபீரென வெடித்து பீதியைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. எங்கே ஓடுவது, எங்கே புதைப்பது என்பதே இத்தாலியின் நித்தியப் பிரச்னையாகியிருக்கிறது. சோகம். அமெரிக்கா திணறுகிறது. இங்கிலாந்து மிரண்டுபோய் விழிக்கிறது. மற்ற நாடுகளும் வெளியே வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்தாலும், உண்மையில் நடுநடுங்கி விழிபிதுங்கிக்கொண்டிருக்கின்றன. Survival fears of the nations…

’மக்கள் ஊரடங்கு’
(Janta Curfew)
இந்தியாவில் ஆரம்பத்தில் மிகக்குறைவாகவே இருந்தது நோயின் பாதிப்பு. இப்போது அதிகமாகிவருகிறது. இதுவரை ஆனந்தமாகத் தாங்கள் வசித்த வெளிநாடுகளிலிருந்து, சுயபாதுகாப்புக்காக, திடீர் தேசபக்தி மேலிட, இந்தியா திரும்பியிருக்கும் சில இந்தியர்கள், மற்றும் வெவ்வேறு காரணங்களால் ஏற்கனவே தங்கள் பாஸ்போர்ட்டில் இருக்கும் இந்திய விசாக்களைப் பயன்படுத்தி ‘விசிட்’ அடித்து நமது நகரங்களில் உலவிய சில வெளிநாட்டுக்காரர்கள், இந்திய மண்ணிற்குச் செய்த கைங்கர்யம் இது. இந்திய நோய்பாதிப்புகள் திடீரென அதிகமாக இவர்களே காரணம். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டத்தட்ட 45 பேர்; 16-18 பேர் இந்திய மருத்துவத்தில் குணப்படுத்தப்பட்டுத் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள் என்கிறது ஒரு செய்தி.

மக்களில் சிலர் அறியாத, அல்லது பொதுவாக மறந்துவிடும் ஒரு விஷயம்: இது போன்ற நெருக்கடி நிலைகளிலும் உலகின் எந்த ஒரு நாடும், பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் தன் குடிமக்களை அரசாங்க செலவில் நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவதில்லை. ஒவ்வொரு வெளிநாட்டவரும், தங்கள் செலவில், முயற்சியில்தான் தத்தம் நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் மட்டும்தான் இப்போதும், இதற்கு முந்தைய போர்சார்ந்த நெருக்கடி நிலைகளிலும், தன் குடிமக்களை அரசு செலவில் -சில சமயங்களில் இந்திய ராணுவ உதவியுடன், சில சமயங்களில் ஏர் இந்தியா விமானம் அனுப்பியும், இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நமது ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ஏர் இந்தியா அதிகாரிகள், ஊழியர்கள், இந்திய தூதரகத்தினர் போன்றோரின் நெருக்கடிகால சிறப்புப்பணிகளை நாம், அவ்வப்போதாவது நினைவு கூறல் வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் நேரம், காலம் பார்க்காது செயல்படும், டாக்டர்கள், நர்ஸுகள், ஏனைய மருத்துவ ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், காவல்/பாதுகாப்புத் துறையினர் ஆகியோரின் பணியையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய நேரமே இது.

கொரோனா விளைவித்திருக்கும் இக்கட்டான சூழலில், காரண காரியங்களைத் தாண்டியும் பதறாமல், அதே சமயம் அதிஜாக்ரதை உணர்வுடன், ஒற்றுமையாக நாம் இயங்கவேண்டிய தருணம் இது. பிரதமர் வேண்டிக்கொண்ட ‘மக்கள் ஊரடங்கு’ ஆகட்டும், மாநில அரசுகள் விதித்திருக்கும் நோய் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், வழிமுறைகளாகட்டும், இந்தியக் குடிமகன் என்கிற நிலையில் ஒவ்வொருவரும் அலட்சியம் செய்யாமல் கடைபிடிக்கவேண்டிவை இவை. நமது நலனிற்காக, நாட்டின் ஒட்டுமொத்த ஆரோக்யத்திற்காக அவசியம் செய்யவேண்டியவை. இத்தகைய வேதனை நிலையிலும் சிலர் காட்டவிரும்பும் கட்சி, அரசியல் போன்ற புறம்போக்குச் சிந்தனைகளை அகற்றிவிட்டு, ’ஒரு இந்தியன் நான், என் சமூகக் கடமைகள் இவை’ என பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, நமக்கு நாமே நமது ஒற்றுமையை, உறுதியை நிரூபித்துக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தாய்நாநாட்டின் நலன் கருதி சுயஒழுக்கம், தூய்மை, சமூகத்தனித்திருத்தல் (social distancing) – முன்பொரு காலகட்டத்தில் நம் வாழ்வியல் நெறிகளாக, தினசரி நியமங்களாக இருந்தவை – இவைகளை மீண்டும் நம் வாழ்வோடு இணைத்துக்கொண்டு இயங்கவேண்டி நிர்பந்தித்திருக்கிறது இந்த அவசரகாலம். இந்தியக் குடிமகன் என்கிற பெருமித உணர்வையும், அது சார்ந்த சில கூடுதல் பொறுப்புகளையும் நமக்கு அளித்திருக்கும் காலமிது.

**

6 thoughts on “மக்கள் ஊரடங்கும், சமூகப்பொறுப்புகளும்

  1. மத்திய அரசு செய்திருக்கும் சில சத்தமில்லா நல்ல செயல்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.  பாகிஸ்தான் அரசு வெளிநாட்டில் தவித்துக் கொண்டிருந்த தன் மக்களைக் கைவிட்டது.  ஜெர்மனியோ, இத்தாலியோ “நல்லவேளை, இது இந்தியாவில் ஆரம்பித்திருந்தால் அவர்கள் மந்த நிலைக்கு இந்நேரம் பெரும் ஆபத்து விளைந்திருக்கும்” என்பதுபோல கருத்து சொன்னதாகத் தகவல்.  இப்போதும் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் வெளியிலிருந்து வந்திருப்பவர்களால்தானே தவிர, உள்ளே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  

    Like

    1. @Sriram:
      இத்தாலி, ஜெர்மனி இப்படிச் சொன்னதா! நான் படிக்கவில்லை. இத்தாலிக்கு சொல்ல எந்த யோக்யதையும் இல்லை!

      வெளியிலிருந்து வந்தவர்கள் நமது பிரச்னையை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் இத்தாலியிலிருந்து அரசினால் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் -ஹோம் க்வாரண்டைனில். அதில் சிலர் நழுவவும் செய்வார்கள்…இன்னும் எத்தனை எத்தனை தலைவலிகளோ..

      Like

    1. @ திண்டுக்கல் தனபாலன்:
      மருத்துவத் தீர்வை நோக்கியே இந்தியா உட்பட ஒவ்வொரு முன்னேறிய நாடும் தம் சோதனைச்சாலைகளில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் விசித்திர அமைப்பின் காரணமாக, நிபுணர்களையே குழப்பி வரும் நவீன வைரஸ் இது!

      Like

  2. இது போன்ற நெருக்கடி நிலைகளிலும் உலகின் எந்த ஒரு நாடும், பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் தன் குடிமக்களை அரசாங்க செலவில் நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவதில்லை. ஒவ்வொரு வெளிநாட்டவரும், தங்கள் செலவில், முயற்சியில்தான் தத்தம் நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் மட்டும்தான் இப்போதும், இதற்கு முந்தைய போர்சார்ந்த நெருக்கடி நிலைகளிலும், தன் குடிமக்களை அரசு செலவில் -சில சமயங்களில் இந்திய ராணுவ உதவியுடன், சில சமயங்களில் ஏர் இந்தியா விமானம் அனுப்பியும், இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நமது ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ஏர் இந்தியா அதிகாரிகள், ஊழியர்கள், இந்திய தூதரகத்தினர் போன்றோரின் நெருக்கடிகால சிறப்புப்பணிகளை நாம், அவ்வப்போதாவது நினைவு கூறல் வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் நேரம், காலம் பார்க்காது செயல்படும், டாக்டர்கள், நர்ஸுகள், ஏனைய மருத்துவ ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், காவல்/பாதுகாப்புத் துறையினர் ஆகியோரின் பணியையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய நேரமே இது.//

    அருமை அண்ணா. இது கண்டிப்பாக எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. சத்தமில்லாமல் நம் நாடு செய்யும் திருப்பணி. இஇதை வாசித்ததும் மனம் நெகிழ்ந்து உடல் புல்லரித்தது. நான் மருத்துவ உலகிற்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பதிவில் கூட இது தெரிந்திருந்தால் கண்டிப்பாகக் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கலாம். ச்சே தெரியாமல் போய்விட்டதே.

    இப்போது சொல்லிக் கொள்வோம்.

    நீங்க கவனிச்சிருப்பீங்க இப்படி நம் நாடு நம் மக்களைத் தன் சொந்தச் செலவில் கொண்டு வந்து மருத்துவக் கண்காணிப்பிற்கு அழைத்துச் சென்றாலும் மக்கள் என்ன உதார் விடுறாங்க.. சுயநலவாதிகள். இதுகளை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க…

    அருமையான பதிவு.

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா: வெகுநாள் கழித்து வருகை!

      உண்மைதான். நம்மவர்களில் சிலருக்கு, டாலர்/வெளிநாட்டுக் கரன்சி அக்கவுண்ட்டில் ஏறிவிட்ட மமதையில், பெற்று, வளர்த்து, ஆளாக்கி அனுப்பிவைத்த தாய்நாட்டைப் பழிப்பதும், ஓவராக விமரிசிப்பதும் பொழுதுபோக்காகியிருக்கிறது. அரசாங்க உதவிபெறுவார்கள். அரசாங்கத்தையே வெட்கமில்லாமல் திட்டுவார்கள். இந்திய அரசு சார்பாக வெளிமண்ணில் பணிபுரிந்த எனக்கு, நிறைய இத்தகையை அபத்த, அநியாய அனுபவங்கள் உண்டு.
      இருந்தும் பாரபட்சமின்றிக் கடமையைச் சரியாக செய்த திருப்தி மனதில் இருக்கிறது.

      Like

Leave a comment