அந்த ஐந்தாவது மூர்க்கன் ?

ஏழெட்டு வருட நீதிப் போராட்டத்தின் இறுதிக்கட்டமாக, டெல்லியில் ஒரு குளிர்கால இரவில், மருத்துவ மாணவி ஒருத்தியை ஓடும் பஸ்ஸில் அவளது நண்பனுக்கு எதிரிலேயே கோரமாக சீரழித்த டிரைவர் உட்பட்ட ஆறு காமக்கொடூரர்களில் நால்வரை, ஒருவழியாகத் தூக்கில்போட்டுவிட்டு கைகளை ‘ஸானிடைஸ்’ செய்துகொண்டது நாடு (மார்ச் 20, 2020). (ஏற்கனவே, கைது செய்யப்பட்ட சிலமாதங்களிலேயே டெல்லியின் திஹார் சிறையில் முக்கிய குற்றவாளி எனக் கருதப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்துகொண்டான்.)

குற்றம் என்று ஒன்று நிகழ்த்தப்பட்டால்- அதுவும் கொலைக்குற்றம், பெண்ணிற்கு எதிரான குற்றம் என்று வந்தால்- குற்றவாளி  உடனே பிடிக்கப்பட்டு, உச்சபட்ச தண்டனை தரப்படுவது, அதுவும் இழுத்தடிக்கப்படாமல் உடனே நிறைவேற்றப்படுவதே எந்த ஒரு  சமூகத்தின் நலத்திற்கும் உகந்தது. ’க்ரிமினல் கேஸ்’ என ஆரம்பித்து அதுமாட்டுக்கு நடந்துகொண்டே இருந்து, முதலில் அரண்ட, நடுங்கிய குற்றவாளிகளே போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒரு பொழுதுபோக்காக ’எஞ்ஜாய்’ செய்யும்படி  ஆகிவிட்டால், பொதுமக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுத்து சிறையிலேயே ’நிம்மதியாக வாழ’ ஆரம்பித்துவிட்டால் – நாட்டின் நீதித்துறை உள்நாட்டிலும், சர்வதேசவெளியிலும், சிரிப்புக்குள்ளாகும். நாட்டில் கொடும் குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்கும். தர்மம்  தலைதெறித்து ஓடும். தொடர்ந்து சீரழிக்கப்படுபவர்கள், நாசமாகிறவர்கள் பாதுகாப்பில்லாத அப்பாவிப் பெண்களாகவோ, சிறுமிகளாகவோதான் பெரும்பாலும் இருப்பார்கள். இத்தகைய கேவலமான சமூகச் சூழலின் இடையே, நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் திட்டமிட்டு, கதைத்து,  என்ன பிரயோஜனம்? பெண்ணுக்குப் பாதுகாப்புத் தர இயலாத ஒரு  சமூகம் வளருமா? வாழுமா?

நிர்பயா மற்றும் இதுபோன்ற வழக்குகளைப்பற்றி சிந்திப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ மிகவும் மனச்சோர்வு தரும் விஷயம். இருந்தாலும் நாடெல்லாம் சாமானியக் குடிமக்களின் மனதில் பற்றி எரியும், நீங்காத துக்கம் தரும் ஒரு விஷயத்தை அலட்சியம் செய்யவும் முடியவில்லையே. இந்திய மக்களில்  பலர் 20 மார்ச் காலைவேளையில் மகிழ்ச்சியடைந்தனர் என்பதைவிட, ஒருவாறான நிம்மதி அடைந்தனர் எனச் சொல்லலாம். ட்விட்டர், முகநூல், வாட்ஸப் தடதடத்துகொண்டிருக்கின்றன. ஒரு புதிய ஹேஷ்டேக் வந்துவிட்டது. பெருங்குற்றமொன்றில் பங்காளியாக இருந்துவிட்டு அந்த ஐந்தாவது அயோக்யன்,  எப்படித் தப்பிக்கலாம்? – எனக் கேள்விமேல் கேள்வியாக, குடைய ஆரம்பித்துவிட்டது.

2015-ல் வந்த செய்தி

அந்த ஒருவன், ஆறு பயங்கரக்குற்றவாளிகளில் ஒருவன் (கொடூரத்திலும் கொடூரமானவன் என்றன ஆரம்ப விசாரணைக்குப் பின்வந்த செய்திகள், விபரங்கள் விகாரமானவை, தவிர்ப்போம்), நாலுபேரோடு சேர்த்து ஐந்தாவது ஆளாக தூக்குத்தண்டனை பெற்றிருக்கவேண்டியவன், தப்பித்து ’இருக்கிறான்’. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர்  மீடியாவில் பேசப்படாமலேயே மூடிமறைக்கப்பட்ட அவனது பெயர் முகமது அஃப்ரோஸ். உ.பி.-யைச் சேர்ந்தவன். டெல்லிக்குப் பிழைப்பதற்காக வந்த ஏழையாம். குற்றம் செய்தான். தப்பித்துவிட்டான். எப்படி? இப்படி ஒரு கீழ்த்தரமான குற்றம் செய்த நாளன்று அவனது வயது 18 வருடங்களுக்கு சிலமாதங்கள் குறைவாக இருந்ததாக சில அதிகாரிகளால் பின்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டது’ (2013). பாவப்பட்ட ‘பையன்’ என அறியப்பட்டு, இரக்கம் மிகக்கொண்டு, அவனது கேஸ் ‘இளம்வயதினர்க்கான நீதிமன்ற’த்திற்கு (Juvenile Justice Board)  மாற்றப்பட்டது. அங்கே ‘போனால் போகிறான் சின்னப்பையன், ’ என அவனுக்கு மூன்று வருடம் ‘சீர்திருத்த வாசம்’ தண்டனையாக வழங்கப்பட்டது. சிறு, சிறு குற்றங்கள் செய்து ’உள்ளே’ வந்திருந்த மற்ற சிறார்களுக்கு, இவன் ‘பாடம்’ எடுத்திருப்பானோ, என்னவோ? நிர்பயா குற்றவாளிப் ‘பையன்’ ஒருகட்டத்தில் ’மனம் திருந்திவிட்டதாக’ கருதப்பட்டு, 2015-ல் விடுவிக்கப்பட்டான். நிர்பயாவின் பெற்றோரோடு, பொதுமக்கள் இயக்கங்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அரசியல்வாதிகளில் அவனது விடுதலையைக் கடுமையாக எதிர்த்தவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி. ’அவனது ‘கதை’ வேறுமாறானது, ‘சிறார் சீர்திருத்தக் கேஸ்’ இல்லை அது’ என சில சான்றுகளுடன் மத்திய அரசுக்கு மனுகொடுத்தார்.  புதிதாகப் பதவிக்கு வந்திருந்த மத்திய அரசு அவனை விடுவிக்கக்கூடாது எனக் கோர்ட் சென்றது. ஆனால்,  ’ஏற்கனவே சிறார்கள் நீதிமன்றத்தினால் மூன்று வருட ‘சீர்திருத்தத்தை’ தண்டனையாகப் பெற்றவன். ’தண்டனை’ முடிந்து அவன் வெளியேறுவதைத் தடை செய்யமுடியாது!’ என்றது டெல்லி ஹைகோர்ட். வெளியே அவிழ்த்துவிடப்பட்டான் ‘அப்பாவிப் பையன்’.

அப்பறம்? இங்கேயும் கொஞ்சம் : அவன் -முகமது அஃப்ரோஸ் (2015-ல்  21 வயது)- எப்போது வெளியே வருவான் என வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் ஒருவர். யாரப்பா அது? பிரிவு தாங்கமுடியாத பாசத் தந்தையா, தாயா? கூடப்பிறந்தவரா?  இல்லை, டெல்லியின் முதலமைச்சர் அண்ணாச்சி கேஜ்ரிவால். குற்றவாளியை  அழைத்து, அவனுக்கு ரூ.10000 அன்பளிப்பு செய்தது டெல்லி அரசு. பொதுமக்களிடமிருந்து கடும்எதிர்ப்பு வர, ஒரு ‘தொண்டு நிறுவனத்திடம்’ அவனை ஒப்படைத்து தையல் மெஷின் போன்றவைகளை வழங்கவைத்தது கேஜ்ரிவால் அரசு. ஏழையாம், திக்கற்றவனாம், எங்கே போவான், ‘டெய்லரிங் கடை’ வைத்துப் பிழைக்கட்டும்!’ என்பது தரப்பட்ட விளக்கம். நிர்பயா பெற்றோரோடு சேர்ந்து மக்களும் வெகுண்டெழ, தொண்டு நிறுவனம் டெல்லி அரசின் ஆலோசனைபேரில் வேறு ஏற்பாட்டைச் செய்தது.

அவனுக்கு யாரிடமிருந்தும், ஏதும் தீங்கு நிகழ்ந்துவிடக்கூடாதே? பாதுகாப்பாக வாழ ஒரு ’வழி’ செய்து கொடுக்க, பெயர் குறிப்பிடப்படாத அந்த ’தொண்டுநிறுவனம்’ அவனை டெல்லியிலிருந்து தூரத்துக்கு தள்ளிக்கொண்டு வந்தது. பாதுகாப்பான இடம்? ஆமாம். வேறு எது, நம்ம தென்னிந்தியாதான். நம்மவர்கள்தானே போக்கில்லாதவர்களுக்கும், போக்கிரிகளுக்கும் வாழ்வு கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள். இங்கே எங்கோ ஒரு நகரத்தில் -அது சென்னையாகவோ, பெங்களூராகவோ இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை- கொண்டுவந்து விட்டார்கள். சும்மா அப்படியே அல்ல. அவனது ’டெல்லி ரெகார்ட்’ வெளியே தெரியாதபடி, பெயரை, அடையாளத்தை மாற்றி ! ’தொண்டு’ நிறுவனம் என்றால் சும்மாவா? ’சப்பாத்தி, புரோட்டா செய்ய வடநாட்டுக்காரன் இருந்தால் தேவலையே’ – எனத் தேடிய உணவகத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டிருக்கிறார்கள். முதலாளிக்கும் ‘அவன்’ யாரென்று சொல்லப்படவில்லை! ’ஒரு தென்னிந்திய ரெஸ்ட்டாரண்ட்டில், பாதுகாப்பான வாழ்க்கை அவனுக்கு அமைத்துத் தரப்பட்டுவிட்டது. அனாமதேயமாக, ஆனந்தமாக வாழ்கிறான், இப்போது 23 வயதாகிவிட்ட அவன்’- என்கிறது 2017-ல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

இப்போது பார்த்து,  சிலர் கிளம்பியிருக்கிறார்களே, அந்த ஐந்தாவது மூர்க்கன் எங்கே, அவன் எப்படித் தப்பிக்கலாம் என்று …

**

7 thoughts on “அந்த ஐந்தாவது மூர்க்கன் ?

 1. ஐந்தாவது மூர்க்கன் – கொடுமையான விஷயம்.

  விடுதலை பெற வேண்டிய ஆளே இல்லை. ஆனாலும் இங்கே அரசியல் நிறைய விளையாடி இருக்கிறது. நான்கு பேருக்குக் கூட தண்டனை நிறைவேற இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறதே. ஏற்கனவே சில தொண்டு நிறுவனங்கள் நான்கு பேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளை கருப்பு நாள் எனச் சொல்லி இருக்கிறது.

  Like

 2. தூக்கிலிடப்பட்ட அந்த நான்கு அப்பாவிகளுக்காக நாடாளுமன்றத்தில் கண்ணீர் ததும்ப வாதாடிய தமிழக ‘பெண்’ எம் பி யை மறந்து விட்டீர்களா?

  Like

  1. யார் ஸ்ரீராம்? தன் பையனுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்கணும் என்று காரணம் காட்டி திகாரிலிருந்து தன்னை விடுதலை செய்யச் சொன்னவங்களா? இல்லை… திருச்சி சிவாவுக்கு தலைவாரிக்கொண்டிருந்தவரா?

   Like

 3. சார்.. நாட்டில் நீதித்துறையும் பொதுமக்களும் செலெக்டிவ் நீதிகளை வழங்குகின்றனர்…அதிலும் குறிப்பாக வாக்கு வங்கிக்காக அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியம் தாங்க இயலவில்லை.

  தமிழகத்தில் நாவரசை துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்றவனை, கிறித்துவப் பாதிரியாராக்கி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். நிர்பயா கேஸிலும் மதம் மற்றும் வாக்குகளுக்காக மொத்தமாக அனைவரையும் விடுதலை செய்யவும் துணிந்தனர். அந்த ஐந்தாவது நபருக்கு அனைவரும் அறிய எப்போது தண்டனை கிடைக்கிறதோ அப்போதுதான் பொதுமக்கள் மனது ஆறும்.

  Like

 4. @ Venkat Nagaraj , @ Sriram , @ Nellaithamizhan :
  குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது, அல்லது மதம், அரசியல் என்கிறப் ’ப்ரிஸம்களின்’ மூலமே குற்றங்கள் பார்க்கப்பட்டு, அவற்றை இழைத்தவர்களை எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என முயற்சிப்பது கொடுமை. ஆனால் அதுதான் சில அரசியல், மத அமைப்புகளின் விதவிதமான முயற்சிகளின் மூலம் நாட்டில் நடக்கிறது, நீதித்துறை, காவல் என மக்களைப் பாதுகாக்கும் துறைகள் பணம் விழுங்குகின்றன. எல்லோருக்கும் திடீர்க் கோடீஸ்வரர்களாக ஆசையிருக்கிறதே, என்ன செய்ய.
  கொடுமை இழைக்கப்பட்ட பெண், அல்லது அவரது பெற்றோரே தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் உ.பி.-யில். குற்றமிழைத்த அரசியல்வாதிகள் ‘உள்ளே’ இருக்கிறார்கள் எனினும் தப்பிவிடக்கூடாது. தூக்குத் தண்டனை அங்கே over-due. வங்கத்தில் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் காரண பலாத்காரங்கள், கொலைகள், தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் பல இடங்களில் நடந்த பெண்ணிற்கு எதிரான குற்றங்கள், கேரளத்தில் பாதிரியின் அளவிலா அட்டகாசம், இப்படி சொல்லலாம் நிறைய.

  அந்தத் தமிழ்நாட்டு பெண் எம்.பி. யார் என எனக்கும் தெரியவில்லை! இதுதான் அவரது ‘பெண் ஈய ‘ சிந்தனையின் வெளிப்பாடா?

  Like

 5. பெண்களைப் பாதுகாக்கத் தெரியாத நாடு ஒரு நாடா!…

  சாட்டையடி… ஆனாலும் சொரணை இராது..

  தப்பிப் பிழைத்த அந்தக் கொடூரன்
  மிக அருகிலா?…

  நினைக்கவே நெஞ்சம் பதறுகின்றது…

  சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் பள்ளிச் சிறுமியை அங்கு வேலை செய்தவனே சீரழித்தான் என்று செய்தி வந்தது..

  அதன் பின் அந்தப் பிரச்னை என்ன ஆனதோ தெரிய வில்லை…

  Like

  1. @ துரை செல்வராஜு:
   எங்கெங்கும் காணினும் குற்றமடா என்று ஆகிவிட்டதே எம் நாடு.. என துக்கித்து நிற்கும் மனது.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s