’வயசுதான் ஆகிக்கிட்டே இருக்கு.. இதுகூடத் தெரியல இன்னும்!’ என்றாள் அவரின் மனைவி. உண்மைதான். வயசு ஆகிக்கொண்டேதான் போகிறது. என்ன செய்வது? காலையில் காப்பி குடிப்பதற்கு முன்னேதான் இந்த திடீர் ஞானோதயமா என்ன? ஏற்கனவே தெரிந்த, ஆச்சரியப்படுத்தாத, மனதில் ஊறிப்போன விஷயம்தான். சிந்தனை ஊற்றெடுக்க, காலாற நடக்கலானார் மனிதர்.
எதற்குத்தான் ஆகவில்லை? மனிதன், மிருகம், பறவை, மரம், செடிகொடி, கல், மண், மலை, நதி, கடல், ஆகாயம் எல்லாவற்றிற்கும் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது வயசு. அதுபோலவேதான் நமக்கும். எப்போதிலிருந்து? பிறந்த கணத்திலிருந்தே, அதுமாட்டுக்கு ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. இப்போதும், இந்தக் கணத்திலும் ஆகிக்கொண்டிருக்கிறது. இனியும் ஆகும்.. எதுவரை ஆகவேண்டும் என இருக்கிறதோ, அதுவரை ஆகும். இதில் நம்முடைய முயற்சி என்ன? பங்கு என்ன? சாதனை என்ன? ஒரு மண்ணுமில்லை. அதுமாட்டுக்கு நடக்கிறது காரியம். நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும். மற்றவர்கள், சந்தர்ப்பத்துக்கேற்றபடி, அவ்வப்போது கிண்டலடிக்கவோ, குத்திக்காட்டவோ வழிசெய்கிறது, நமக்கு இப்படி ‘ஆகி’க்கொண்டிருக்கும் வயசு.
பேசுவதை, எழுதுவதை நிறுத்தலாம். ஏதாவது காரியம் செய்துகொண்டிருந்தால் அதை நிறுத்திப் பார்க்கலாம். இந்த பாழாய்ப்போன வயது ஆவதை ..? ம்ஹும். ப்ரயத்தனத்தில் அர்த்தம் இல்லை. நம் கையில் இல்லை.
இத்தகைய கலங்கிய மனநிலையில் ஒருவேளை, ஏதும் புதிதாக, மாறுதலாக செய்வதற்கு, சொல்வதற்கோகூட இல்லையா? அப்படி ஒரு சோர்வா? அடடா.. பிறகு? ’மலை சாய்ந்து போனால்.. சிலையாகலாம். இந்த மனம் சாய்ந்து போனால்.. என்ன செய்யலாம்?’ – என்று கேட்டுப்போனானே நம் கவிஞன். சாய்ந்துபோன மனதை வைத்துக்கொண்டு செய்வதறியாது புலம்பியிருப்பானோ அவனும்?
இத்தகு கவைக்குதவாத சித்தத்தில், ஒரு போக்கற்ற நிதர்சனத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை எனினும், ஏதாவது சொல்லிப் பார்க்கலாமா? ’கிருஷ்ணா..!’ எனலாம். புரந்தர தாசரைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார். அவர் இதையே பலவிதமாய்ச் சொல்லிச் செல்கிறார். மனம் குழம்பியிருக்கையில், தெளிவாயிருக்கையில், சந்தோஷமாயிருக்கையில், துக்கமாயிருக்கையில், ஒரு இடத்துக்கு நாம் காரியமாகப் போகையில், போய்விட்டுத் திரும்பி வருகையில், அங்குமிங்கும் நிலையின்றி அலைந்துகொண்டிருக்கையில், மூலையில் முடங்கிக் கிடக்க நேர்கையில், பூமியைப் பார்க்கையில், ஆகாசத்தைப் பார்க்கையில்.. ’கிருஷ்ணா..!’ எனலாமே. சாப்பிடுவதற்குமுன் சொல்லலாம். ரசித்து சாப்பிடும்போதும் சொல்லலாம். சாப்பிட்டுப் பசியடங்கிய திருப்தியிலும் கிருஷ்ணா எனலாம்தான். அற்பமானதோ, பெரியதோ – செய்யவேண்டிய செயல்களுக்கு முன்னே சொல்லாம், இடையேகூடச் சொல்லலாம், முடிந்தபின்னும் சொல்லலாம். தூங்குவதற்கு முன் சொல்லலாம். தூங்கி எழுந்தபின்னும் சொல்லலாம். தூக்கம் அகாலமாகக் கலைந்து, என்ன முயற்சித்தும் மேற்கொண்டு வராது அடம்பிடிக்கையில், இருட்டைப் பார்த்துக்கொண்டும் ‘கிருஷ்ணா..!’ என வாய்திறக்கலாம். கஷ்டத்திற்கிடையே சொல்லலாம். கஷ்டம் கலைந்தபின்னும் சொல்லலாம். விடாது தொடரும் நித்யப்பிரச்னைகளினூடேயும் அவ்வப்போது ’கிருஷ்ணா..’ எனலாம். ’வாயிருக்கிறது. வார்த்தையுமிருக்கிறது. கிருஷ்ணா என்று சொல்லப்படாதா!’ என்று சகமனிதர்களைப் பார்த்து அங்கலாய்ப்பார் புரந்தர தாசர்.
ஹரியே எங்கும், எதிலும் என நினைத்தவர், அவ்வாறே உணர்ந்தவர், அவனையே நினைந்து காலமெலாம் மருகினவர் தாசர். தென்னிந்தியாவில் ஹிந்துமத மறுமலர்ச்சி/ பக்தி இயக்கம் உச்சத்திலிருந்த காலகட்டம். 15-16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். செல்வந்தராய் இருந்தவர், ஒருநிலையில் எதையோ சடாரென உணர்ந்து, எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டு, பிச்சை எடுத்துப் புசித்து, அலைந்து திரிந்தவர். பொதுஜனங்களுக்கிடையே தெய்வத்தைப் பாடி, பழகி பக்திப் பரவசத்தை அருளிய ‘ஹரிதாசர்களில்’ பிரதானமானவராகக் கொண்டாடப்படுபவர் புரந்தர தாசர் (கன்னடத்தில் புரந்தர தாசரு). கேட்போர் உருக, அவர்தம் மாயை கருக, பாடித் திரிந்தார் ‘கிருஷ்ணா .. ராமா..’ என்றே. 18-19 ஆம் நூற்றாண்டில்தமிழ்நாட்டில் தியாகராஜர், தியாகப்ரும்மம் ‘ராமா’.. ராமா!’ என மகிழ்ந்து, நெகிழ்ந்து சிஷ்யர்களுடன் பாடிச் சென்றதுபோலவே.
கிருஷ்ணா என்பதில் மனதுக்குள் இவ்வளவு ஆறுதல் உருவாக்குமாறு பார்த்துக் கொண்டால் சுகம்தான். அந்த ஒரு வார்த்தைக்குள் இருக்கும் ஆயிரம் அர்த்தங்களை, ஏக்கங்களை, முறையிடல்களை, ஆசைகளை மனம் அறியும்.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
சில வார்த்தைகள் ஆசுவாசப்படுத்துபவை. அமைதிப்படுத்துபவை. ஆழத்திற்கு அழைத்துச் செல்பவை. சரிதான்.
LikeLike
ஏகாந்தன் அவர்களின் பதிவா? அல்லது லா.ச.ரா.வின் கதை எதையாவது பகிர்ந்திருக்கிறாரா? என்ற சந்தேகம் வந்தது. தாஸரின் கீர்த்தனைகளில் சொட்டும் பக்தி ரசம் அலாதி.
LikeLiked by 1 person
@ Bhanumathy V. :
லா.ச.ரா. ! பெரிய, பெரிய பெயரையெல்லாம் இங்கே கொண்டுவருகிறீர்களே!
புரந்தர தாசரை மொழியாக்கத்தில் படிக்கையிலேயே சுகமாக இருக்கிறது. கன்னடம் அறிந்திருந்தால்..!
LikeLike
இது ஏகாந்தன் அண்ணனின் ஜொந்தப் புலம்பல்:) யோகப்புலம்பலோ:))..
நமக்கு மட்டுமோ வயசாகுது எல்லோருக்கும்தானே என மனதைச் சாந்தப்படுத்துறீங்கள் போலும்:))… ஹா ஹா ஹா வயசில என்ன இருக்குது,
“எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி, மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”
LikeLiked by 1 person
@ சுவீட் சிக்ஸ்ட்டீன் அதிரா :
நான் எழுதுவது எல்லாமே ஜொந்தம்தான் ..! பின்னே ஓசி வாங்கியா புலம்பமுடியும்!
//..எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி, மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”//
அடடா.. ஞானரசம் !
LikeLiked by 1 person