மனோரஞ்சகமான
மரத்தடி மகாஅரட்டை
அனுபவித்து நாளாகிவிட்டிருந்தது
ஒவ்வொரு நாளாகத் தட்டிப்போக
ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடிவிட்டதே..
தேடிப்போனபோது மரத்தடி இருந்தது
பரவிக்கிடந்த நிழலின் அணைப்பில்
முதுகில் அழுத்தும் சுமையோடு
கையேந்தும் மொபைலாட
வாய் சிந்தும் புகையாட சிலர்
கப்பும் கையுமாக சலசலத்து வேறுசிலர்
இதுகளை இறக்கிவிட்டிருந்த
இருசக்கர வாகனங்கள் ஓரமாக சாய்ந்து
இழுத்துவிட்டுக்கொண்டிருந்தன மூச்சை
நண்பர் இன்னும் வரவில்லையே
நாமும் குடித்துவைப்போம் என நினைத்தவன்
அந்தக் கடைக்காரக் கன்னிகையை அணுக
அஞ்சு நிமிசமாகும் டீக்கு என்றாள்
அடுப்பின் மேல் கண்ணாக அவள்
மெல்லப் போடும்மா நல்ல டீயா..அவசரமில்லே
சொல்லிவிட்டு சாலையை நோட்டம்விட்டான்
மதியத்தைத் தாண்டி பொழுது சென்றாலும்
விதியாகிவிட்ட சாலைநெரிசல் போகாது
மரத்தடியைத் தேடிவந்தும்
மனுஷனைக் காணலியே
பேப்பர்கப் டீயோடு கைமாற
பேதையிடம் விஜாரித்தான் மெல்ல-
இன்னிக்கு வரலையே அவரு?
நாலஞ்சு நாளாக் காணலே இந்தப்பக்கம்
உடம்புகிடம்பு சரியில்லயோ என்னவோ..
சொடுக்கிப்போட்ட மர்மத்தில் திடுக்கிட்டான்
உலகத்தையே சில நிமிஷங்களில்
உலுக்கிக்கொட்டும் மனுஷனுக்கு
உடம்பு சரியில்லாமல் போயிடுச்சா
பக்கத்தில்தானே வீடு
பத்து எட்டுப் போய்
பார்த்துட்டுப் போயிடுவோம்..
அப்போது பார்த்து மனதில்
ஏற்கனவே கேட்டது எதிரொலித்தது
யாருக்காவது ஜலதோஷமோ,
இருமலோ, காய்ச்சலோ,
மூச்சுத் திணறலோ இருந்தால்…
ஐயோ சீனா… கொரோனா…
எச்சரிக்கை அவனைப் போட்டுக்கிழிக்க
எறிந்தான் கப்பைக் குப்பைத்தொட்டியில்
பணத்தைக் கொடுத்துவிட்டு
பம்மியவாறு நடந்தான்
தனது வீடு நோக்கி
அவசரக் கண்களினால்
அங்குமிங்கும் ஆராய்ந்தவாறே
**
போதாக்குறைக்கு மொபைல் திறந்து கால் செய்ய முற்பட்டாலே இருமத்தொடங்கி எச்சரிக்கிறார்களா, இன்று பஸ்ஸில் நான் இருமவும், அருகிலிருந்தஇரண்டுபேர் என்னை சந்தேகமாகப்பார்த்து தள்ளி நின்றார்கள்!
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்: ஒருவரை ஒருவ்ர் சந்தேகக் கண்ணோடு பார்க்கச் சொல்லிவிட்டது கொரோனா. நல்ல காலம், நல்ல வாழ்க்கை!
LikeLike
எங்கே பார்த்தாலும் கொரோனா பீதி! நெருங்கியவர்களைக் கூடத் தள்ளி இருக்கச் சொல்கிறது. விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்தனைகள்.
LikeLike
@ Geetha Sambasivam : வேகமாகப் பரவுவதால்தான் பீதி. ஐரோப்பிய நாடுகளே அடக்கத் தெரியாமல் மூச்சுவாங்குகின்றன. நமது நாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் ஆபத்து..
LikeLike