மகளிர் கோப்பைக் கிரிக்கெட்டின் இரண்டு செமிஃபைனல் போட்டிகளும் இன்று(5/3/20) சிட்னியில் ஆடப்படவிருந்தன. முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்துடனும், இரண்டாவதில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுடனும் மோதுவதாக இருந்தது.
சிட்னியில் மழை பலமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை கூறியது. மழையினால் ஆட்டம் நின்றால், இன்னொரு நாளில் ஆட, ரிசர்வ் நாள் ஐசிசி-யினால் கொடுக்கப்படவில்லை. ஆட்டம் நடக்கவில்லையெனில் க்ரூப் ஸ்டேஜில் முதல் இடத்தில் இருந்த அணி, ஃபைனலுக்கு முன்னேறும் என்பது ஐசிசி டி-20 மகளிர் உலகக்கோப்பை விதி. காலையிலிருந்தே சிட்னியில் விளாசிய மழை முதல் செமிஃபைனல் ஆட்டத்தை நிதானமாக விழுங்கி ஏப்பம் விட்டது. வலிமையான Group ‘A’-யில் எல்லா மேட்ச்களையும் வென்று முதல் இடம் வகித்ததால், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி. இந்தியா மகளிர் டி-20 உலகக்கோப்பை ஃபைனலில் நுழைவது இதுவே முதல் முறை. அதுவும் எப்படி!
இந்தியாவுடனான செமிஃபைனல் ஆடமுடியாதுபோக, வெளியேற்றப்பட்ட இங்கிலாந்து ஒரே புலம்பல். ஐசிசி விதிமுறைகள் மாறவேண்டும் என்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், சரிதான். எந்த அணிதான் இப்படி வெளியேற்றப்படுவதை விரும்பும்? ஆனால் இத்தகு அசட்டுத்தனமான விதியை ஐசிசி மீட்டிங்கில் கொண்டுவந்தபோது, ஒத்துக்கொண்ட மெம்பர்-நாடுகளில் இங்கிலாந்தும்தானே இருந்தது? ஏன் எதிர்க்கவில்லை அப்போது?
இரண்டாவது செமிஃபைனலும் சிட்னி மைதானத்திலேயே நடந்தது. முதலில், ஆஸ்திரேலிய பேட்டிங்குக்குப்பின் இடையே மழை வந்து குழப்ப, ஆட்ட நேரம் /ஓவர்கள் குறைக்கப்பட்டன. மழைக்குப்பின் தொடர்ந்த ஆட்டத்தில் ஆவேசமாகப் போராடிய தென்னாப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா D-L முறைப்படி, 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஃபைனலில் பிரவேசித்திருக்கிறது.

ஞாயிறன்று (8/3/2020) மெல்பர்னில் நடக்கிறது மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம். ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் இந்தியா, மெக் லான்னிங் (Meg Lanning)-ன் தலைமையிலான வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்த்தாடும். நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளுமா? இல்லை, இந்தியா உலகக்கோப்பையை முதன்முறையாக வென்று வாகை சூடுமா?
இந்த உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய மகளிர் அணி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய ஸ்பின்னர்களும், batting sensation ஷெஃபாலியும். இந்தியாவின் இளம்புயல், தமிழ் மீடியாவினால் ’கபாலி ஷெஃபாலி’ என்றெல்லாம் புகழப்படும் பையன்போல் தோற்றம்தரும் 16 வயது வனிதை. சமீபத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 -டி-20 பேட்ஸ்மனாக ஆகியிருக்கும் ஷெஃபாலி, ஃபைனல் மேட்ச்சில் என்ன மாதிரி ஆட்டம் போடப்போகிறார் என்பதைப் பார்க்க கூட்டம் கூடும். அங்குமிங்கும் ஓடி, திரட்டி, ஏர்-டிக்கெட் வாங்கி ஆஸ்திரேலியாவுக்கே பறந்துவந்திருக்கிறார், ஆசை மகளின் ஆட்டத்தைப் பார்க்க, அருமை அப்பா. பெண்ணிற்கு சின்ன வயதிலிருந்தே சச்சின் டெண்டுல்கரின் சாகசக் கதைகளை சொல்லி வளர்த்த சஞ்சீவ் வர்மா.
**