மறுபிறவிச் சிந்தனைகள், சுஜாதா ..

 

மறுபிறவி! அல்லது அடுத்த ஜென்மம். மரணத்திற்குப் பின் வரவிருப்பதாக நம்பப்படும், பல மதங்களிலும் சுட்டிக்காட்டி பயமுறுத்தப்படும் ஒரு ’பின்தொடரும் வாழ்க்கை’ (after-life). அப்படி ஒன்று இருக்க சாத்தியமிருக்கிறது என்று, எதற்கெடுத்தாலும் ப்ரூஃப் தேடும் விஞ்ஞானமே ஒத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. நம் நாட்டிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும் ஏதேதோ பேசுவதாகத் தோன்றிய சிறுகுழந்தைகள் சில, தங்கள் முன் ஜென்ம நிகழ்வுகள் சிலபற்றிப் பெற்றோரிடம் கூறியிருக்கின்றன. தத்ரூபமாக வர்ணித்துள்ள சில சம்பவங்கள், இடங்கள். இன்ன இடத்தில் நான் முன்பு இருந்தேன். இன்னார் என் கணவர், அல்லது உறவினர், இந்தக் காரணத்தினால் அல்லது இப்படித்தான் அப்போது இறந்தேன்.. முந்தைய வாழ்வில் வாழ்ந்த ஊர், வீடு பற்றிய விபரங்கள்.  மூன்று, நான்கு வயதிருக்கும் முன்ஜென்ம நினைவோடு வந்திருக்கும் இந்தக் குழந்தைகளை அதுகளின் பெற்றோர் அந்த ஊருக்கெல்லாம் அழைத்துச் சென்றதில்லை. சில இடங்கள்பற்றி அவர்களுக்கே தெரியாது. அதிர்ச்சி. அப்படி ஒரு ஊரில், இப்படி ஒரு வீடு,  அடையாளங்கள் உண்டா, இந்தப் பிள்ளை திருப்பித் திருப்பிச் சொல்லிவருகிறதே – எனப் போய்ப் பார்த்தால், அவை சரியாக இருந்திருக்கின்றன. சொந்த ஊரிலேயே அலைந்திராத  குழந்தைக்கு தொலைதூர ஊர்/இடம்பற்றி எப்படித் தெரிந்தது? விளக்க முடியாத, விளங்கிக்கொள்ளவும் தெரியாத விஞ்ஞானம், பகுத்தறிவு,  வசதியாக மாட்டிக்கொண்டு, திருதிருவென முழித்த சம்பவங்கள். அப்பொழுதும் இருந்தன. இனியும் வரும்..

சித்திரம் : மேதை சர் ஜான் டென்னியல் (நன்றி :கூகிள்)

மனிதன் தொன்றுதொட்டு இந்த மறுபிறவி அல்லது ‘அடுத்த வாழ்க்கை’ (after-life) பற்றி நினைத்து ஏங்கியிருக்கிறான், மருண்டிருக்கிறான், குழம்பியிருக்கிறான், பயந்தும் இருக்கிறான், அவனவனுடைய இந்த உலக வாழ்வின் அனுபவங்களின், மிரட்சிகளின் பின்னணியில். ‘’ ஒரே மயக்கம்.. அம்மம்மா.. போதும், போதும், ஏன் இனி மறுபிறவி..! ‘ என்கிற திரைப்பாடல் வரி வேற, நேரங்காலம் தெரியாமல்…

அது சரி, இதுபற்றி பல மேதைகள், அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கும்  ஏதேதோ அவ்வப்போது தோன்றியிருக்கிறதே, என்னதான் சொன்னார்கள்..

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் சொல்கிறார்: “இறப்புக்குப் பின்னான ‘மறுவாழ்க்கை’ நிச்சயம் உண்டு என நம்புகிறேன். இறந்தவர்களின் ஆத்மாக்கள் உலவுகின்றன..”

“தாதுப்பொருளாக இருந்திருக்கிறேன். பிறகு தாவரமாக ஆனேன். மறைந்தேன். மிருகமாக ஆனேன். இறந்தேன்,  மனிதனாகவும் ஆகியிருக்கிறேன். இறந்ததினால் எப்போது, என்ன குறைவு வந்தது எனக்கு? – பாரசீக, சுஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமி.

“இதற்குமுன் பல ஆயிரம் தடவை நான் இந்த உலகில் இருந்திருக்கிறேன் என்பதில் நம்பிக்கை உண்டு; மீண்டும் பலமுறை திரும்பவும் செய்வேன்..” கதே (Goethe, German philosopher, writer)

”நமது மூளை ஒரு கம்ப்யூட்டர் போன்றது. அதன் உறுப்புகள் தேய்ந்தபிறகு உடைகிறது, செயலற்றுவிடுகிறது. உடைந்துபோன கம்ப்யூட்டர்களுக்கு சொர்க்கமோ அடுத்த உலகமோ இல்லை – ஸ்டீஃபன் ஹாக்கின், பிரிட்டிஷ் இயற்பியல் மேதை, விண்ணாய்வாளர்.

Tropic of Cancer, Tropic of Capricorn போன்ற தடைசெய்யப்பட்ட நூல்களை எழுதி சர்ச்சைகளைக் கிளப்பிய கடந்த நூற்றாண்டின் அமெரிக்க எழுத்தாளரான ஹென்ரி மில்லர் என்ன இப்படிக் கூறியிருக்கிறார் : ”இறப்பா? அப்படியெல்லாம் ஒன்றில்லை! யாரும் இறப்பதில்லை.. வேறொரு தளத்தில்  ஒரு முழுமையான உணர்வுவெளியை, உங்களுக்குத் தெரிந்திராத ஒரு புது உலகை அடைந்துவிடுகிறீர்கள்..”

The Pilgrimage, The Alchemist போன்ற பிரபல நூல்களின் ஆசிரியரான ப்ரஸீலிய எழுத்தாளர் பால் கோயெல்ஹோவுக்கு?  எந்த சந்தேகமுமில்லை: “ அடுத்த பிறவி என்பது உண்டு. நிச்சயம்.”

அறிவியல் புதினங்களுக்காக உலகளாவிய மதிப்புபெற்ற ஐசக் அஸிமோவ்-வுக்கு இதில் நம்பிக்கையில்லையாம். அத்தோடு விடவேண்டியதுதானே. மறுபிறவி என்று ஒன்று இருந்துவிட்டால்.. என ஒருவேளை அவர் மனம் சிந்தித்திருக்குமோ? மேலும் சொல்கிறார்: ” நரகத்தின் சித்திரவதைகள் இருக்கட்டும். சொர்கத்தில் ஒரேயடியாக bore அடிக்குமே..!” உம்மை யார் ஐயா அங்கே கூப்பிட்டது!

’ஆப்பிள்’ நிறுவனத்தின் நிறுவனரும், PC எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பு/தயாரிப்புகளில் புரட்சிகள் செய்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் தன் உயிர் பிரிகையில், கண்கள் எங்கோ நிலைத்திருக்க,  முணுமுணுத்த வார்த்தைகள்..”Oh..wow.. Oh..wow..” என்ன நடந்திருக்கும்.. கதவு திறந்ததோ? காட்சி தெரிந்ததோ?

இன்னுமொரு எழுத்தாளரை, இந்த விஷயம் எப்படியெல்லாம் சீண்டியிருக்கிறது பாருங்கள் :

”  .. ஆனால் டி.என்.ஏ.(DNA) ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத, நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’ (agnostic)-ஆக, அதாவது, கடவுள் இருப்பைப்பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால், இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன், தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுதவேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல. வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்துவைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.”

இறப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன், ‘கற்றதும் பெற்றதும்’ தொடருக்கான ஒரு கட்டுரையில் சுஜாதா!

**

5 thoughts on “மறுபிறவிச் சிந்தனைகள், சுஜாதா ..

 1. நல்ல சிந்தனை.

  இயற்கை விவசாயத்தை ஆதரித்த நம்மாழ்வார் சொன்னது போல பூச்சி மருந்து என்று
  சொல்லி விஷத்தை கொண்டு பூச்சியையும் புழுவையும் கொன்று நாம் மட்டும் வாழ
  கற்றுக்கொண்டோம்.

  தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் அழிந்த்தபோது தோட்டங்களும் நசிந்துபோயின.

  மனிதனின் தேவைகள் அதிகரித்த போது நகரங்கள் விரிவடைந்தன. காடுகள் போராட
  முடியாமல் மண்ணில் புதைந்து போயின. உயரமான கட்டிடங்கள் அதன்மீது வலிமையாக
  உட்கார்ந்து கொண்டன.

  தாதுபொருட்களுக்காக பூமிக்கும் கடலுக்கும் கீழ் சென்று குடைந்து கிடைத்ததை
  எல்லாம் எடுத்து பூமியின் சம நிலையை தகர்த்து மனிதன் தான் மட்டும் தனக்கு
  மட்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

  மீண்டு வரமுடியாமல் போன மனிதல்லாத உயிரினங்கள் கடவுளால் மனிதனாக மறுபிறவியில்
  படைக்கபடுவதால் தானோ மக்கள் தொகை ஏழு பில்லியனையும் தாண்டி சென்று
  கொண்டிருக்கிறது.

  அத்தகைய மறுபிறவிகள் முன் ஜன்ம இடம் தேடி அலைந்தால் அவைகள் எங்கே போகும்.

  அன்புடன்
  ரமேஷ்
  மும்பை, இந்தியா

  On Thu, 27 Feb 2020 at 8:48 PM, ஏகாந்தன் Aekaanthan wrote:

  > Aekaanthan posted: ” மறுபிறவி! அல்லது அடுத்த ஜென்மம். மரணத்திற்குப் பின்
  > வரவிருப்பதாக நம்பப்படும், பல மதங்களிலும் சுட்டிக்காட்டி பயமுறுத்தப்படும்
  > ஒரு ’பின்தொடரும் வாழ்க்கை’ (after-life). அப்படி ஒன்று இருக்க
  > சாத்தியமிருக்கிறது என்று, எதற்கெடுத்தாலும் ப்ரூஃப் தேடும் விஞ்ஞா”
  >

  Liked by 1 person

  1. @ ரமேஷ் :
   மனிதரால் ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்ட உயிரினங்கள் மனிதர்களாக மறுபிறவி எடுப்பதா..! பயங்கரக் கற்பனை..
   அழிக்கும் மனிதன் அழிவை நோக்கி செல்கிறான்தான்.
   அதனால் சிறு, சிறு உயிரினங்களுக்கு பரிணாம வளர்ச்சியில் ப்ரொமோஷன் கிடைத்துவிடும் என்று அர்த்தமில்லை!

   Like

 2. ஸ்டீவ் ஜாப்ஸ் அப்படி என்னத்தைக்கண்டு புல்லரித்துப்போனாரென்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போயிருக்கலாம்!  சுஜாதாவின் அந்தக்கட்டுரை படித்திருக்கிறேன்.வாராவாரம் ஆர்வமாகப் படித்த பகுதி அல்லவா அது?  என்னுடைய கற்றதும் பெற்றதும் (ஒரே தொகுதியில் அனைத்தும்) என்னிடமிருந்து களவாடப்பட்டிருப்பதை சமீபத்தில்தான் கவனித்தேன்.வேறொன்று வாங்க வேண்டும்.

  Liked by 1 person

 3. இந்த ‘மரணத்துக்குப் பின்’ விவரங்கள் நான் அதிகம் படித்தது ‘ஒரு யோகியின் சுயசரிதை’ புத்தகத்தில். 
   
  என் அப்பா, என் அம்மா காலமான பிறகு அம்மா மேல் ஒரு புத்தகம் எழுதினர்.  பிறகு அம்மாவுடன் தொடர்பு கொள்ள வழி உண்டா என்று அலைந்து கொண்டிருந்தார்.   ரவிச்சந்திரன் புத்தகம், ஆவி அமுதா புத்தகம் எல்லாம் வாங்கிப் படித்தார்.  மரணத்துக்குப் பின் ஆராய்ச்சிக்காக நிறைய புத்தகங்கள் வாங்கிப் படித்தார்.  வெசாமிநாத சர்மா, ஆர் கே நாராயணன் போன்றவர்கள் எழுதிய அனுபவள் கதைகள் எல்லாம் வாங்கி வைத்திருந்தார்.  

  இப்போது அவரே மறைந்து விட்டார்.  அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பாரோ என்று பார்த்தேன்.  ஊ…ஹூம்.  எனக்கு என்ன வருத்தம் என்றால் அவருக்கு பிடித்த மாதிரியான வீடு இப்போது நாங்கள் வாங்கியிருப்பது.  அவர் இருந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பார்.

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:

   கற்றதும் பெற்றதும் காணாமற்போய்விட்டதா? ’மிஸ்டர் ஓசி’ யின் வேலையாக இருக்குமோ? சில ப்ரக்ருதிகளுக்குப் படிப்பதில் ஆசை. ஆனால் காசுகொடுத்து வாங்கிப் படிப்பதில் த்ரில் கிடைப்பதில்லை!

   உங்கள் அப்பாவின் ஏக்கம், தவிப்பு புரிகிறது. அவர் மனைவியுடன் தொடர்புகொள்ள புறமாக வழி தேடாமல், அகமாக ஆழ்ந்திருந்தால், ஆராய்ந்திருந்தால் சூட்சுமமாக ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கிடைத்திருக்குமோ.. some subtle response from the other world..?

   உங்கள் அப்பாவுக்குப் பிடித்தமான வகையில் உங்களின் புதுவீடு. அப்பா இருந்திருந்தால்.. என்கிற ஏக்கம் மனதில் எழுவது தவிர்க்கமுடியாதது.

   பாதி ஏக்கமும், மீதி – கலைந்துவிட்ட தூக்கமுமாய் மனித வாழ்க்கை..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s