ICC T-20 Women’s World Cup : இந்தியாவின் அதிரடி ஆரம்பம்

மகளிர் டி-20 கிரிக்கெட்டின் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. உலகின்  9 முக்கிய கிரிக்கெட் தேசங்களோடு 10-ஆவது நாடாக, அதிசயமாக தாய்லாந்து!   இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிகின்றன. Group A: ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ். Group B: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தாய்லாந்து. இந்திய மகளிர் அணிக்கு  முன்னணி பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌர் (Harmanpreet Kaur) தலைமை தாங்குகிறார்.

இரண்டு நாள் முன்பு நடந்த முதல் மேட்ச்சில் நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆடிய ஆட்டம் கடுமையான மோதலை வெளிக்கொணர்ந்தது. ஸிட்னியில் (Sydney) முதன்முதலாக, பெண்கள் மேட்ச் ஒன்றிற்கு 18 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் வந்திருந்து அமர்க்களப்படுத்தினர். இந்திய மூவர்ணக்கொடிகளும், நீலச்சட்டைகளும் மினுமினுக்க, அரங்கெங்கும். ஆஸ்திரேலியர்கள் நிறையப்பேர்  தங்களது அணியைப் பெருமையுடன் ஊக்குவிப்பதைக் காணமுடிந்தது. பள்ளி சிறுவர்கள் அதிகமாக அமர்ந்து ஆர்ப்பரித்தது கோலாகலத்தைக் கூட்டியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியப் பெண்கள், இந்திய அணியை முதலில் பேட் செய்யச் சொன்னார்கள். இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷெஃபாலி வர்மா (Shefali Verma), ஸ்ம்ருதி மந்தனா அதிரடி பேட்டிங் செய்பவர்கள். அதிலும் ஷெஃபாலி சர்வதேசக் கிரிக்கெட் உலகில்  நுழைந்திருக்கும் ஒரு சிறுமி போன்றவர். 16-ஆவது வயதுக்குள் கடந்த மாதமே பிரவேசித்தவர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்யாமல் மீளப்போவதில்லை என கங்கணம் கட்டி நுழைந்திருந்தாரோ? மந்தனா வழக்கத்துக்கு மாறாக அமைதிகாக்க, ஷெஃபாலி சுழற்றினார் பேட்டை. 29 ரன்களில் அவுட்டானார் எனினும் அதில் 5 பௌண்டரி, 1 சிக்ஸ் ! ஷெஃபாலி அவுட்டானதும்தான் கொஞ்சம் ஆசுவாசமூச்சு விட்டது ஆஸ்திரேலியா. அதற்குப்பின் மந்தனா, கேப்டன் கௌர் என இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மன்களை சொற்ப ஸ்கோரில் வீட்டுக்கு அனுப்பியது. ஸிட்னியின் ஸ்லோ-பிட்ச்சிற்கு ஏற்றபடி ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா சிங்கிள்களாக ஓடி ரன் சேர்த்தனர். ஷெஃபாலி போனபின்பு இந்தியாவுக்கு ஒரே பௌண்டரிதான் வந்தது. இந்திய அணி 132 -க்கு 4 விக்கெட் என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. தீப்தி 49 நாட்-அவுட்.

Spin magician
Poonam Yadav

வலிமையான ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இது ஊதித்தள்ளிவிடக்கூடிய இலக்குதான். அப்படி ஒரு மலர்ந்த புன்னகையாக, பேட்டிங்கைத் துவக்கி நன்றாக ஆடியது ஆஸ்திரேலியா. 133 எடுத்தால் வெற்றி என்கிற நிலையில், ஒரு கட்டத்தில் 66/2 என இருந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 67 ரன்கள்தான் தேவை. 8 விக்கெட்கள் கைவசம். அப்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், இந்திய சுழல் மந்திரவாதி பூனம் யாதவிடம் கொடுத்தார்: போடுடி பந்தை! என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்..

ஆஸ்திரேலியாவின் விக்கெட்கீப்பர் ஹீலி (Alyssa Healy) அபாரமாக அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்தார். தன் முதல் ஓவரிலேயே அவரைத் தூக்கி வீசினார் பூனம்.  அடுத்த ஓவரில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். மூன்றாவது பந்திலும் விக்கெட் வந்திருக்கவேண்டியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் கார்ட்னரின் (Ashleigh Gardner) ஸ்டம்பை உரசி, பெயிலை விழவைத்தது. ஆனால் பந்து இரண்டு முறை பௌன்ஸ் (bounce) ஆனதாக அம்பயரால் தீர்ப்பளிக்கப்பட்டு நாட்-அவுட் என்றனர். பரவாயில்லை. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தைத் தாக்கிவிட்டார் பூனம். ஆட்டம் கண்ட நிலையில் 133-ஐ நோக்கி மெல்ல நகரப் பார்த்தது ஆஸ்திரேலியா. அதிரடி காட்டமுயன்ற கார்ட்னரை,  ஷிகா பாண்டே காலி செய்தார். பூனம் யாதவ் 4 ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 115 ரன்களில் பரிதாபமாகத் தோல்விகண்டது.(A. Healy 51, A.Gardner 34). மீடியம் பேசர் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளையும், இன்னொரு ஸ்பின்னரான ராஜேஷ்வரி கெய்க்வாட் (Rajeshwari Gaekwad) ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு ரன் அவுட்கள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் முகங்கள் உறைந்துபோய்விட்டிருந்தன.

பூனம் யாதவின் பௌலிங் சாகஸத்தை devilish spin என்கிறது, ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று. ஆறு வருஷங்களாக இந்திய அணிக்காக ஆடிவரும் சீனியர் வீராங்கனை. கடந்த வருடம் காயத்தினால் ஆடமுடியாது தவித்தார். உலகக்கோப்பைக்கு முன்னர்தான் தகுதிபெற்று அணியில் சேர்க்கப்பட்டவர்.

இந்திய அணியின் வலிமையான அம்சம் ஸ்பின் பௌலிங் (பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட்). ஸிட்னியைத் தவிர்த்து மற்ற மைதானங்களில் ஸ்பின் எடுபடாது போகலாம். அப்போது இந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி ஆகியோர் உழைக்கவேண்டியிருக்கும். பேட்டிங்கில் ஸ்ம்ருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues( மற்றும் தான்யா பாட்டியா (Tanya Bhatia)  ஆகியோரின் பங்களிப்பு டி-20 உலகில் ஆர்வமாகப் பார்க்கப்படும்.

ஒரு இனிய மகளிர் உலகக்கோப்பை ரசிகர்களுக்காக, கண்முன்  விரிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அடுத்த மேட்ச் பங்களா தேஷுக்கு எதிராக 24/2/2020 அன்று. ஸ்பின் பௌலிங்கும், பேட்டிங் திறமைகளும் போட்டிபோடலாம். ரசிப்போம்.  

**

2 thoughts on “ICC T-20 Women’s World Cup : இந்தியாவின் அதிரடி ஆரம்பம்

  1. ஆடவர் அணி நியூஸிலாந்திடம் நாயடி பொடி வாங்கிக்கொண்டிருக்க, மகளிர் அணி மனதுக்கு ஆறுதல் தருகிறதோ!மகளிர் அணியில் தமிழ்நாட்டின் சார்பாக யாரும் இல்லையா?

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம் : சற்றுமுன் கோஹ்லியின் இந்தியா நியூஸிலாந்திடம் மரண அடி வாங்கிவிட்டது..அதிகாலையில் டிவியைப் போட்டால் ஆட்டம் காலி!
      தமிழ்நாட்டிலிருந்து இந்திய மகளிர் அணியில் ஒரு ஆல்ரவுண்டர் இருக்கிறார்.. D. ஹேமலதா. இன்றைய மேட்ச்சில் (4.40 pm IST, Star Sports) ஆடுவாரா? பார்ப்போம்.

      Like

Leave a comment