கடும்போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட செமிஃபைனலை இந்திய வீரர்கள் அனாயாசமாகக் கையாண்டு, பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட்டார்கள். கிரிக்கெட் பண்டிட்கள்கூட இப்படி ஒரு பாக். annihilation-ஐ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 250-280 வரையான ஸ்கோரை மனதில் கொண்டு நிதானமாக ஆடத் துவங்கியது. 250 என்கிற ஸ்கோரை பாகிஸ்தான் எட்டினால், அது இந்தியாவுக்கு சவாலாக முடியும் என்று ஆரம்பத்திலிருந்தே வர்ணனையாளர்கள் உதிர்த்துவந்தார்கள்! துவக்க ஆட்டக்காரர் ஹைதர் அலியின் 56 மற்றும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்த பாக். கேப்டன் ரொஹெய்ல் நாஸிரின் 62 ஆகியவற்றைத் தவிர, இந்த 50-ஒவர் மேட்ச்சில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து காண்பிக்க ஒன்றுமில்லை! இந்திய பௌலர்கள் மிகவும் துல்லியமாக வீசி, பாக். பேட்ஸ்மன்களை நெருக்கிக்கொண்டே இருந்தார்கள். பாகிஸ்தான் தூக்கி அடிக்க முயல்கையில் அவர்கள் அவுட் ஆகி வெளியேறினார்கள். அருமையான இந்திய ஃபீல்டிங்கும் துணைநின்றது. சக்ஸேனாவின் ஒற்றைக் கை டைவிங் கேட்ச் டாப்-க்ளாஸ். திணறி, மூச்சுவாங்கிய பாகிஸ்தான், 172-ல் உயிரை விட்டது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட், அன்கொலேகர் மற்றும் ஜெய்ஸ்வால் தலா ஒரு விக்கெட் எனப் பாகிஸ்தானை சித்திரவதை செய்தார்கள்.

173 என்கிற இலக்குடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா (Divyaansh Saxena)வுடன், இந்தியா சவாலை ஏற்று ஆட ஆரம்பித்தது. பாகிஸ்தான் எடுத்தஎடுப்பிலேயே ஆக்ரோஷமாக வேகப்பந்து வீசி இந்திய துவக்கத்தை சிதைக்க முயன்றது. ஜாக்ரதையாக ஆடிய இந்திய துவக்க வீரர்கள், பிரதானமாக சிங்கிள்ஸ், அவ்வப்போது ஒன்றிரண்டு பௌண்டரி என கூலாக முன்னேறிக் கொண்டிருந்தது பாகிஸ்தானுக்குக் கடுப்பை ஏற்படுத்தியது. என்ன முட்டிமோதியும், விக்கெட்டோ விழுவதாயில்லை. பாக். கேப்டன் நாஸிர், வேகம், ஸ்பின் என மாற்றி மாற்றி வியூகம் அமைக்கப் பார்த்தார். பாச்சா பலிக்கவில்லை. அதற்குள் அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், தான் யாரென பாகிஸ்தானியருக்குக் காண்பிப்பதில் முனைந்தார். ஷார்ட்-பிட்ச் பௌலிங் போட்டு முகத்துக்கு நேராக பந்தை எகிறவைத்து எரிச்சலூட்டிய பாக். பௌலர் அப்பாஸ் அஃப்ரீதி (Abbas Afridi)யை, குறிவைத்துத் தாக்க ஆரம்பித்தார். போதாதற்கு ஸ்பின்னர் ஆமீர் அலியும் ஜெய்ஸ்வாலின் கோபத்திற்குப் பலியாக, பாக். ஃபீல்டிங் குழம்பித் தடுமாறியது. பௌண்டரி, சிக்ஸர் எனப் பறந்தன. அடுத்த முனையில் சக்ஸேனா அதிநிதானமாக தட்டிக்கொண்டே வந்து 50-ஐத் தொடுகையில், 80-ஐத் தாண்டி சீறினார் ஜெய்ஸ்வால். இறுதியில் ஜெய்ஸ்வாலின் ஒரு அனாயச சிக்ஸரில், இலக்கைத் தாண்டியது இந்தியா.
உலகக்கோப்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் சதம் இது : 105 ரன்கள், 8 பௌண்டரி, 4 சிக்ஸர்களுடன். ஆட்டநாயகன் விருதும் கையில் வந்தது. IPL 2020-க்காக இவரை வாங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் குஷியாகியிருக்கும்! கூட ஒத்துழைத்து பாக். பௌலர்களை மழுங்கவைத்த சக்ஸேனாவும் (59 நாட்-அவுட்) பாராட்டுக்குரியவர். இந்தியா விக்கெட் இழப்பு ஏதுமின்றி ஜெயித்து, பாகிஸ்தானை உலகக்கோப்பையைவிட்டு விரட்டிவிட்டது! பாகிஸ்தானின் கோச், மேனேஜர் முகங்கள் பார்க்க சகிக்கவில்லை. பாக். ரசிகர்கள் போன இடம் தெரியவில்லை. தங்களது நாட்டில், பாக். பௌலர்கள் கடும் விமரிசனத்துக்கு உட்படுவார்கள். கேப்டன் ரொஹெய்ல் நாஸிர், ஹைதர் அலி ஆகியோர் நன்றாக ஆடியவர்கள்; யாரும் குறை சொல்லமுடியாது.
நாளை (6-2-2020) நடக்கவிருக்கும் இரண்டாவது செமிஃபைனலில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியோடு இந்தியா, U-19 உலகக்கோப்பைக்கான ஃபைனலில் பிப்ரவரி 9 அன்று ஆடும். ஞாயிறு மதியம் 1.30 (IST) ’ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3’ நினைவிலிருக்கட்டும் !
**
முடிவைச் சொன்னதற்கு நன்றி. இன்று நியூஸிலாந்திடம் தோற்றது இந்தியா. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் சிக்ஸர் ஒன்றைப் பிடித்து அப்படியே உள்ளே எறிந்ததைப் பார்த்திருப்பீர்கள்!
LikeLiked by 1 person
நான் இந்திய அணியின் கடைசி சில ஓவர்களைப் பார்த்தேன். அதுக்காகவே அந்த சேனலைச் சேர்த்திருக்கிறேன். சக்சேனா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க பிரயத்தனப்பட்டிருந்தாரோ?
LikeLike
@ ஸ்ரீராம்: அந்த சிக்ஸர் தடுக்கப்பட்ட வீடியோவை நான் பார்த்தேன். சஞ்சு சாம்ஸனின் கமால் அது! இந்தமாதிரி ஃபீல்ட் செய்யக்கூடிய இன்னொரு இந்திய ஃபீல்டர் மனீஷ் பாண்டே. அவர் இன்று விளையாடவில்லை.
@ நெல்லைத்தமிழன் : சக்ஸேனா, ஜெய்ஸ்வால், தியாகி போன்றோர் இந்திய அணியில் நுழையலாம், கன்ஸிஸ்டென்ஸி காண்பித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆடினால். இன்னும் காலமிருக்கிறது அதற்கு. போன உலகக்கோப்பை கேப்டனான ப்ரித்வி ஷாவே இப்போதுதான் இந்திய டெஸ்ட் , ஒருநாள் அணிகளுக்குத் திரும்பியிருக்கிறார். வீரர்களிடையே நிறைய காம்பெட்டிஷன். அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் சக்ஸேனாவின் மந்த ஆட்டத்தை நக்கலடிக்கிறீர்கள் என்பது புரிகிறது!
LikeLike
மிக அருமையான விமர்சனம். நேரடி ஒளிபரப்பை இங்கு [ துபாய்] பார்க்க முடியாத குறையை நீங்கள் நிவர்த்தி செய்து விட்டீர்கள்! அன்பு நன்றி!
LikeLiked by 1 person
@ Mrs. Mano Saminathan :
துபாயில் நேரடி ஒளிபரப்பு இல்லையா! ஆச்சரியமாக இருக்கிறது.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள பிரதேசமாயிற்றே..
இன்று பங்களாதேஷுக்கெதிரான ஃபைனல் கடுமையாக இருக்க வாய்ப்புண்டு. அவர்களிடம் சில சிறந்த பேட்ஸ்மன்கள், ஸ்பின்னர்கள் உண்டு. பார்ப்போம்.
வருகை, கருத்துக்கு நன்றி
LikeLike